என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியின் கவுரவத்தலைவர் சீனிவாசன் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த கட்சி தலைவர் சரத்குமார் இன்று புதுக்கோட்டை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பெண் பேராசிரியை மாணவிகளிடம் நடத்திய சர்ச்சைக்குரிய உரையாடல் வழக்கில் கவர்னர் ஏன்? இவ்வளவு அவசரம் காட்டுகிறார் என்று தெரியவில்லை.
தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் அவர் அவசரம் காட்டுவது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அரசு பேராசிரியை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியுள்ளது. எல்லா வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று கூறுவது தவறான வாதம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் மட்டுமே காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். ஆனால் கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா? என்பது சந்தேகமே. அதன் பிறகும் அமையுமா? என்பதும் கேள்விக்குறியே.
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் காவிரி பிரச்சனையில் ஒருமித்த கருத்தோடு போராடி வருகிறது. வருகிற 25-ந்தேதி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காவிரி பிரச்சனைக்காக சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் பாலியல் தொந்தரவுகளும் அதிகரித்து வருகிறது. அதில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்தால் மட்டுமே குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி தேவையில்லை என்று கூறுவது தவறானது. அது போன்ற கல்வி இருந்தால் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கட்டு மாவடியில் திராவிடர் கழக பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் ராவணன் தலைமை தாங்கினார். திராவிடர் கழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் சாமி, கடவுள் எதுவும் கிடையாது என்று பேசினர்.
இதையறிந்த கட்டுமாவடி, கணேசபுரம், செம்பியன் மகாதேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பா.ஜ.க.வினர், இந்து முன்னணியினர் அங்கு திரண்டு சென்றனர். அப்போது அங்கிருந்த திராவிட கழக நிர்வாகிகளிடம், நீங்கள் இந்து கடவுள்களை மட்டுமே விமர்சித்து பேசுகிறீர்கள் என்று கூறி தட்டிக்கேட்டனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசினர். பதிலுக்கு திராவிடர் கழகத்தினரும் நாற்காலிகளை தூக்கி வீசினர். இதனால் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் இருந்து வெளியேறியவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசியும் தாக்கி கொண்டனர். திராவிட கழகத்தினருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அங்கு திரண்டு வந்தனர்.
இதனிடையே திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
இந்த மோதல் சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கோட்டைப்பட்டினம் போலீஸ் டி.எஸ்.பி. காமராஜ், மணமேல்குடி இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தினால் அங்கு பதற்றம், பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
காஷ்மீர் சிறுமி ஆசிபாவை படுகொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்டதமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க மாவட்ட செயலாளர் கிரீன்முகமது தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஜெகதை செய்யது முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்ட த்தில் திருச்சி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி துணைச் செயலாளர் ஹுமாயூன்கபீர் , மார்க்சிஸ்டு கம்யூ கட்சி மாவட்டச் செயலாளர் கவிவர்மன், இந்திய கம்யூ. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் திருமாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறுமி ஆசிபாவை பாலியல் பலாத் காரம் செய்து, படுகொலை செய்தவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கோட்டை அபுசாலிகு, நகரச் செயலாளர் பைசல், நகர துணைச் செயலாளர் முகமது ரபீக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பா. ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி பிரச்சினை இவ்வளவு தூரம் விசுவரூபம் எடுத்ததற்கு தி.மு.க.தான் காரணம். செய்த தவறை மறைப்பதற்காக தான் மு. க.ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டார். மோடியை திரும்பி போக சொன்னவர்கள் கவர்னரை சந்தித்து, பிரதமரை சந்திப்பதற்கு நேரம் கேட்டது ஏன்?
வைகோவின் நடவடிக்கைகளை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். தேனியில் நடைபயணம் மேற்கொண்டு இருந்தவர், பிரதமர் வந்த போது திடீரென சென்னைக்கு வந்தது ஏன்? ஏதும் திட்டத்தோடு வைகோ சென்னைக்கு வந்தாரா? என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும்.
திராவிட கட்சிகள் தமிழகத்தை விட்டு வெளியேறினால் மட்டுமே தமிழக பிரச்சினைகள் தீரும். இனி ஒரு காலத்திலும் தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது.
நதிகள் என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. மத்திய அரசு இதில் தலையிட முடியாது. நடுவர் மன்ற தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு 4 மாநில பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் தங்களுடைய பிரதிநிதிகளின் பட்டியலை மத்திய அரசிடம் அளித்தால், மத்திய அரசு தங்களுடைய பிரதிநிதிகளை சேர்த்து உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் வன்முறையை தூண்டி வருகின்றனர். ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக போராடியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Cauveryissue
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நல்லாண்டார்கொல்லை, நெடுவாசல், வாணகன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் மத்திய அரசு ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனை கண்டித்து நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 2 கட்டங்களாக 200 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அப்போது மாவட்ட நிர்வாகம் நெடுவாசல் உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் குழாய்களை 2017 டிசம்பர் மாத இறுதிக்குள் அப்புறப்படுத்துவதாக உறுதியளித்தது.
ஆனால் 1 வருடம் கடந்த நிலையில், இதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மீண்டும் நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது ஏப்ரல் 12 முதல் தொடர் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
தற்போது தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ போன்ற திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருவதால் நேற்று முதல் நடைபெற இருந்த ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 3-ந்தேதி இயற்கை எரிவாயு எடுப்பதற்கான டெண்டர் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் டெண்டரில் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் நாளை மறுநாள் அடுத்த கூட்டம் நெடுவாசலில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்த தகவல்கள், போராட்டத்தின் மூலம் அரசின் கவனத்தை ஈர்ப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
இது குறித்து நெடுவாசல் போராட்டக்குழு உறுப்பினரும் தமிழர் நல பேரியக்கத்தின் மாநில பொதுச்செயலாளருமான நெடுவை பழ.திருமுருகன் கூறியதாவது:-
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிப்பு கடந்த ஏப்ரல் 3-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நகல் கிடைத்ததும் அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் நாளை மறுநாள் 15-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக் கப்படும்.
தற்போது காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போராட்டம் நடத்தினால் எங்கள் மீது அரசின் கவனம் திரும்பாது.
அதனால் தமிழக அரசு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த உள்ளோம். அவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்தால் எங்களுக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவு கிடைக்கும் என நினைக்கிறோம்.
எனவே நாளை மறுநாள் நடைபெறும் கலந்தாலோசனை கூட்டத்தில் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்தும் தேதி அறிவிக்கப்பட்டு மீண்டும் தொடர் போராட்டம் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Hydrocarbon #protest
தமிழகத்தில் பிரபலமான நிஜாம் பாக்கு நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று புதுக்கோட்டையில் உள்ள நிஜாம் பாக்கு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மாலை 3 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நீடித்தது. அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நிஜாம் பாக்கு தயாரிப்பு நிறுவனம் மற்றும் அலுவலகம், உரிமையாளர் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சோதனை முடிந்து சென்ற அதிகாரிகள் இரவு புதுக்கோட்டையிலேயே தங்கினர். இன்று 2-வது நாளாக காலை 9 மணியில் இருந்து சோதனையை தொடங்கினர். புதுக்கோட்டை ராஜகோ பாலபுரம், மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள நிஜாம்பாக்கு தயாரிப்பு நிறுவனங்கள், நிஜாம் காலனியில் உள்ள உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதே போல் சென்னை அமைந்தகரை மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள நிறுவனங்கள், உரிமையாளர்களின் வீடுகளிலும், மதுரையில் உள்ள நிறுவனம், வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இன்று நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3 கோடி பணம் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
புதுக்கோட்டையில் உள்ள நிறுவனத்திற்கு சென்ற அதிகாரிகள் உட்புறமாக அலுவலகம் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் கதவுகளை பூட்டிக் கொண்டு சோதனை நடத்தி வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஒரு ஆண்டிற்குள் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை சோதனைகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.






