என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை, மதுரை, புதுக்கோட்டையில் 2-வது நாளாக நிஜாம் பாக்கு நிறுவனங்களில் ஐ.டி.ரெய்டு
    X

    சென்னை, மதுரை, புதுக்கோட்டையில் 2-வது நாளாக நிஜாம் பாக்கு நிறுவனங்களில் ஐ.டி.ரெய்டு

    புதுக்கோட்டை நிஜாம் பாக்கு நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.3 கோடி பணம் சிக்கியது.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் பிரபலமான நிஜாம் பாக்கு நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று புதுக்கோட்டையில் உள்ள நிஜாம் பாக்கு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    மாலை 3 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நீடித்தது. அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நிஜாம் பாக்கு தயாரிப்பு நிறுவனம் மற்றும் அலுவலகம், உரிமையாளர் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    சோதனை முடிந்து சென்ற அதிகாரிகள் இரவு புதுக்கோட்டையிலேயே தங்கினர். இன்று 2-வது நாளாக காலை 9 மணியில் இருந்து சோதனையை தொடங்கினர். புதுக்கோட்டை ராஜகோ பாலபுரம், மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள நிஜாம்பாக்கு தயாரிப்பு நிறுவனங்கள், நிஜாம் காலனியில் உள்ள உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    இதே போல் சென்னை அமைந்தகரை மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள நிறுவனங்கள், உரிமையாளர்களின் வீடுகளிலும், மதுரையில் உள்ள நிறுவனம், வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இன்று நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3 கோடி பணம் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

    புதுக்கோட்டையில் உள்ள நிறுவனத்திற்கு சென்ற அதிகாரிகள் உட்புறமாக அலுவலகம் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் கதவுகளை பூட்டிக் கொண்டு சோதனை நடத்தி வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஒரு ஆண்டிற்குள் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை சோதனைகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×