என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களின் எண்ணத்தை யாரும் கணிக்க முடியாது. மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப வியூகங்கள் அமைத்தும் வேட்பாளர் தேர்வு செய்தும் , தேர்தல் பணியாற்றினால் வெற்றி பெறலாம். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்பதால், சட்டமன்ற தேர்தலிலும் நமக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணி விட முடியாது.
இன்னும் பல போர்க் களங்களை நாம் காண வேண்டியது உள்ளது. அதற்கு நாம் தயாராக வேண்டும். முதலில் நாம் காணவிருப்பது உள்ளாட்சி தேர்தல். அதன் பிறகு சட்டமன்ற தேர்தல். உள்ளாட்சி தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று சபதம் ஏற்று பணியை தொடங்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் நாம் ஒற்றுமையாக இருந்து பாடுபட்டால் 200 இடங்களில் நம்முடைய கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப் பேற்பது உறுதி.

தமிழகத்தைப் பொறுத்த வரை இந்திரா காந்தி காலத்தில் தி.மு.க.விடம் தொடங்கிய கூட்டணி தற்போது வரை வலிமையான கூட்டணியாக இருந்து வருகிறது. தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இல்லாததே பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 49). பாச்சிக்கோட்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் பங்குதாரரான இவர், பாச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் கல்வி மேலாண்மை குழு தலைவராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மழையூரை சேர்ந்த குமார் மற்றும் கருப்பட்டிப்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த அன்பழகன் ஆகிய 2 பேரும் கணேசனை தாக்கியுள்ளனர்.
பொது இடத்தில் வைத்து தாக்கியதால் அவமான மடைந்த கணேசன் விஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கறம்பக்குடி, திருமயம், பொன்னமராவதி, கீரனூர், ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, மணமேல்குடி, இலுப்பூர், விராலிமலை உள்ளிட்ட தாலுகாக்களில் சுமார் 140 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகளில் தினமும் ரூ.1 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகளின் அருகே அரசின் உரிமம் பெற்ற டாஸ்மாக் பார்களும் செயல்பட்டு வந்தன. கடந்த சில மாதங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 10-க்கும் குறைவான பார்களேஅரசின் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன.
பிற டாஸ்மாக் கடைகளின் அருகே தற்போது தமிழக அரசின் உரிமம் இன்றி பார்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு உரிமம் இன்றி செயல்படும் பார்களால் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.1 கோடி வரை தமிழக அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு உரிமம் இன்றி செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களில் அதிகாலை முதல் இரவு வரை நேரடியாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெறுகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை வடக்குராஜவீதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் முன்பு நேற்று 2-வது முறையாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முதல் முறையாக கடந்த மாதம் (மே) 3-ந் தேதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், வடக்கு ராஜவீதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே உள்ள பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இது குறித்து பொதுமக்கள் சார்பில், பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், போலீசாரிடமும் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் எனக்கூறினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி தண்ணீர் விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த பிரச்சனையை எதிர்க் கட்சியினர் பார்த்துக்கொள்வார்கள் என்று பேசியது பொறுப்பற்ற பேச்சு. அ.தி.மு.க.வில் நிலவும் ஒற்றை தலைமை, இரட்டைத் தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய போவதை இது காட்டுகிறது.

கட்சி, இயக்கம், அமைப்பு என்றாலே இதுவரை ஒரு தலைமை மட்டுமே செயல்பட்டு வந்திருக்கிறது. இரட்டை தலைமை என்பது ஒத்து வராது. தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கர்நாடகாவில் மேகதாது அணை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுவோம் என்று கூறவில்லை. தவறான தகவலை தொடர்ந்து தமிழக முதல்வர் பேசி வருகிறார். இந்த பிரச்சினையில் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ராகுல்காந்தி மீது பழியை போடுகிறார்.
தமிழகத்தில் இந்த ஆண்டாவது குறுவை சாகுபடி நடைபெறும் என்று விவசாயிகள் நம்பியிருந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் வேதனை அடையச் செய்துள்ளது. ஆணைய உத்தரவுப்படி 9 டிஎம்சி தண்ணீரை தமிழக அரசும் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை, மத்திய அரசும் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை.
அதற்கு பதிலாக அவர்கள் தங்களுடைய கட்சி தலைமை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆட்சியை கலைத்தாலும் புதுச்சேரியில் செயல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஆனால் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் மெளனம் காப்பது ஏன்? மக்களுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்த நினைக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும் சரி, 8 வழிச்சாலை திட்டமாக இருந்தாலும் சரி மக்களுக்கு எதிரான செயல்பாட்டையே அரசு எடுத்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளிலும் அரசு ஆய்வு செய்து முறையாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மின்சார வயர்கள் அறுந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன.
கடைகள், வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் விளம்பர பதாகைகள் காற்றில் பறந்தன. கீரனூரை அடுத்த உறவிக்காடு கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் ஜல்லிக்கட்டு காளை வீட்டுக்கு அருகில் கட்டப்பட்டு இருந்தபோது, மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தது.
மேலப்புது வயலை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சங்கரன் (வயது 45) பலத்த இடி சத்தம் கேட்ட அதிர்ச்சியில் பரிதாபமாக இறந்தார். கண்ணங்குடியை சேர்ந்த தொழிலாளி ஆரோக்கியதாஸ் (49) மற்றும் மலர் (47), வசந்தா (45) ஆகிய 3 பேரும் காயம்பட்டியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தனர். பலத்த மழை பெய்ததால், ஆரோக்கியதாஸ் உள்பட 3 பேரும் கட்டிடத்தின் அருகே ஒதுங்கி நின்றனர். அப்போது மின்னல் தாக்கியதில் ஆரோக்கியதாஸ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். மலர், வசந்தா இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதே போல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திடீரென சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. சுமார் 30 நிமிடம் பெய்த பலத்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுக்கோட்டை வந்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வால் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்தால் மனம் தளராது இருக்க வேண்டும்.

பின்னர் அவரிடம் புதுச்சேரி கவர்னராக பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணிய சாமி நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளதே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அவர், புதுச்சேரி கவர்னராக சுப்ரமணிய சாமியை முதலில் மத்திய அரசு நியமிக்கட்டும். அதன் பிறகு நான் பதில் கூறுகிறேன். இந்தி திணிப்பை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இருமொழிக் கொள்கை தான் எங்களுடைய நிலைப்பாடு என்றார்.






