என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் தேசியக் கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை நகலை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    ஒரே தேசம், ஒரே மொழி, ஒற்றை  கலாச்சாரத்தை முன்னிறுத்தி இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையிலும், ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை காவுவாங்கும் விதத்திலும் தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை உள்ளதால் இந்திய மாணவர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. 

    இதையடுத்து மாநிலம் முழுவதும் தேசியக் கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை நகலை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஓவியா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் நித்திஸ், சந்தோஷ், அகத்தியன், ராஜி, கார்த்திகா உள்ளிட்ட 22 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
    கறம்பக்குடி அருகே ஒரு ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்களை தனி ஆளாக நடவு செய்து கல்லூரி மாணவி சாதனை படைத்தார். மாணவியின் ஆர்வத்தை விவசாயிகள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள அக்கரை வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் ராஜலெட்சுமி (வயது 19). இவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தாடு அரசு பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே விவசாயத்தில் ஆர்வம் உள்ள அவர், அவ்வப்போது பெற்றோருக்கு உதவியாக விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் அவர்களுக்கு சொந்தமான வயலில் ஆழ்குழாய் பாசனம் மூலம் அந்த பயிர்களை நடவு செய்வதற்காக தொழிலாளர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து தனி ஆளாக நடவு பணியை மேற்கொள்வது என முடிவு செய்தார். இதற்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

    அதைதொடர்ந்து கடந்த 3 நாட்களில் ஒரு ஏக்கர் நிலத்தில் தானே நெற் பயிர்களை நடவு செய்தார். கல்லூரி மாணவியின் இச்செயலை கண்டு அக்கம் பக்கம் இருந்த விவசாய தொழிலாளர்கள் அவருக்கு உதவ முன்வந்தபோதும், அன்புடன் அதை தவிர்த்தார். மாணவியின் இந்த முயற்சியை அப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஈடுபாடு கொண்ட இளைஞர்கள் வெகுவாக பாராட்டினர்.

    விவசாயம் குறித்தும், விவசாயிகள் படும் இன்னல்கள் குறித்தும், பரவலாக பேசப்படும் இச்சூழலில் விவசாயம் குறித்து ஆர்வமும், விழிப்புணர்வும் ஏற்படும் வகையில், தனி ஆளாக நடவு செய்த கல்லூரி மாணவிக்கு சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 
    அறந்தாங்கியில் போதை மயக்கத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த தொழிலாளி இரவு முழுவதும் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நேரு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 40). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அவ்வப்போது அறந்தாங்கி அக்ரஹாரம் தெருவில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணற்றின் தடுப்பு சுவரில் அமர்ந்து மது அருந்துவது வழக்கம். அது போல் நேற்றிரவு அவர் கிணற்றின் தடுப்புசுவரில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.

    போதை தலைக்கேறவே, திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்தார். 80அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 20அடி வரை தண்ணீர் இருந்தது. தண்ணீருக்குள் விழுந்த அவர், தன்னை காப்பாற்றும்படி கூக்குரலிட்டார். இருப்பினும் இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. மேலும் ராஜா எழுப்பிய சத்தமும் அந்த பகுதியில் யாருக்கும் கேட்கவில்லை.

    தண்ணீரில் மூழ்கியதால் போதை தெளிந்த அவர் ஒரு வழியாக போராடி கிணற்றில் இருந்த கல்லில் ஏறி அமர்ந்தார். தன்னை யாரும் காப்பாற்ற வராததால் என்னசெய்வதென்று தெரியாமல் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை கல்லிலேயே தூங்காமல் அமர்ந்திருந்தார். இன்று அதிகாலை விடிந்ததும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் என்பதால் ராஜா மீண்டும் சத்தம் போட்டு பொதுமக்களை அழைத்தார்.

    அந்த வழியாக சென்ற பொதுமக்கள், உடனே கிணற்றுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கிணற்றுக்குள் உள்ள கல்லில் ராஜா அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு அவரை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் 80 அடி ஆழ கிணறு என்பதால் அவரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதையடுத்து அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். முதலில் கயிறு மூலம் அவரை மீட்பதற்கான முயற்சி நடந்தது. ஆனால் அதில் சிக்கல் ஏற்படவே, ஏணி மூலம் தீயணைப்பு வீரர்கள் ராஜாவை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றப்பிறகு ராஜா வீடு திரும்பினார். போதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்த தொழிலாளி இரவு முழுவதும் தவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அம்மா இரு சக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
    புதுக்கோட்டை:

    2018-19-ம் ஆண்டுக்கான அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் மூலம் பெண்கள் பணிபுரியும் இடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு செல்ல இரு சக்கர வாகனங்கள் 50 சதவீதம் மானிய விலையில் வாங்க நகரப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் வசிக்கும் கீழ்காணும் தகுதியுடைய பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு கல்வித்தகுதி 8-ம் வகுப்பு ஆகும். 18 வயது முதல் 40 வயது வரை, ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கு மட்டும் இரு சக்கர வாகனம் வழங்கப்படும். ஆதரவற்ற விதவை, பெண்ணை குடும்ப தலைவராக கொண்டவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருமணம் ஆகாத 35 வயதுக்கு மேற்பட்ட முதிர் கன்னிகள், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனம், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர், சமுதாய சுகாதார பணியாளர் மற்றும் சுய தொழில் புரிவோர், வாழ்வாதார செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    வயது சான்றிதழ், அஞ்சல் வில்லை அளவிலான புகைப்படம், இருப்பிட சான்று, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது, இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம், வருமான சான்று, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தால் துறை தலைவர் சுய சான்று, வேலை பார்ப்பதற்கான பணிச்சான்று, தொடர்புடைய நிறுவன துறை தலைவரால் வழங்கப்பட்ட ஊதிய சான்று, தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவராக இருந்தால் அதற்கான சான்று, 8-ம் வகுப்புக்கான கல்வி சான்று, மாற்று சான்றிதழ், முன்னுரிமை பெற தகுதி உள்ளவர்கள் அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளி எனில், தேசிய அடையாள அட்டை இணைக்க வேண்டும். இந்த திட்டத்தில் 50 சதவீதம் மானியம் அரசும், மீதமுள்ள தொகையை பயனாளிகளும் செலுத்த வேண்டும். பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட மானிய தொகை ரூ.25 ஆயிரத்திற்கு பதிலாக தற்போது ரூ.31 ஆயிரத்து 250 வழங்கப்படும்.

    பேரூராட்சி பகுதியெனில் பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி எனில் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையரிடமும், ஊரக பகுதி எனில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோரிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் வருகிற ஜூலை மாதம் 4-ந் தேதி மாலை 5 மணிக்குள் தொடர்புடைய அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    அதற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பித்த நபர்கள் அரசு விதிமுறைகள் மற்றும் கள ஆய்வு அடிப்படையில் இறுதி செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    சித்தா படிப்புக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விலக்கு பெறுவது என்பது சவாலாக உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை :

    தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆண்டு சித்தா படிப்புக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த பதிலும் பெறப்படவில்லை. சித்தா படிப்புக்கு விலக்கு பெறுவது என்பது சவாலாக உள்ளது.

    அம்மா காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசு இதுவரை ரூ.5,900 கோடி செலவு செய்துள்ளது. அதில் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.2,200 கோடி திரும்ப வந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான கட்டமைப்பு வசதிகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பதால் இங்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கேரள மாநில எல்லையோர மாவட்டங்களில் தமிழக அரசு மிக கவனமாக கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் அதிக அளவு பணியாற்றினாலும் கூட அம்மாநிலத்தில் பரவியுள்ள மூளைக்காய்ச்சல் நோய் இங்கு பரவவில்லை. இனி மேலும் பரவ வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. 2 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படும் காவிரி நீரும் கடந்த 3 மாதமாக சரியாக வினியோகம் செய்யப்படவில்லை.

    இதனால் குடிநீரின்றி தவித்த பொதுமக்கள் 2, 3 கிலோ மீட்டர் நடந்து சென்று விவசாய மோட்டார்களில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த மோட்டார்களும் தற்போது செயல்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மழையூர் பகுதி பொதுமக்கள் நேற்று மழையூர் கடைவீதி பகுதியில் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவிரி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

    தலைமையாசிரியை பணிக்கு வராததை கண்டித்து தொடக்கப்பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கொல்லன் வயல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 33 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் கிருஷ்ணவேணி என்ற தலைமை ஆசிரியையும், அவருக்கு உதவியாக ஒரு ஆசிரியரும் பணிபுரிந்து வருகின்றனர். கிருஷ்ணவேணி பள்ளிக்கு தொடர்ந்து சரியாக வருவதில்லை. தினமும் கால தாமதமாக வருகிறார். இதனால் பள்ளி மாணவர்களின், பெற்றோர்கள் தலைமை ஆசிரியையிடம் பலமுறை நீங்கள் எதற்கு காலதாமதமாக வருகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், எனக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் தான் நான் பள்ளிக்கு சரிவர வர முடியவில்லை என்று கூறி உள்ளார். இதுதொடர்பாக மாணவர் களின் பெற்றோர், கல்வி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பலமுறை புகார் தெரிவித்தனர். மேலும் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்தும் பள்ளி தலைமை ஆசிரியை பள்ளிக்கு சரிவர வருவதில்லை. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். ஆனால் பள்ளிக்கு வரவேண்டிய ஆசிரியர்கள் 2 பேரும் வராத காரணத்தினால் மாணவர்கள் பள்ளி வாசலிலேயே அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர் முத்துகுமார், அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேறு பள்ளியில் இருந்து கூடுதலாக இப்பள்ளிக்கு ஒரு ஆசிரியர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து பள்ளி வழக்கம் போல் செயல்பட்டது.
    ஆலங்குடி அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணவால்குடி பகுதியில் ஆண்டிக்குளம் உள்ளது. இந்த குளத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் குத்தகைக்கு எடுத்து தாமரை பூக்களை பறித்து வருகிறார். நேற்று வழக்கம்போல் பூக்களை பறிக்க சென்றார். அப்போது குளத்தில் சுமார் 60 வயது மதிக்கதக்க ஒருவர் பிணமாக மிதந்தார். 

    இதுகுறித்து  தகவல் அறிந்ததும் ஆலங்குடிபோலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று பிணத்தை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்து  கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகிறார்கள்.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள காத்தான்விடுதியைச் சேர்ந்தவர் சின்னையா (வயது 76). விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள தனது வயலுக்கு நேற்று முன்தினம் தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை வயலுக்கு சென்று பார்த்த  போது அங்கு சின்னையா மர்மமானமுறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல்அறிந் ததும் ஆலங்குடி  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னையா  உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக் காக புதுக்கோட்டை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    புதுக்கோட்டையில் குடிதண்ணீருக்காக தோண்டப்பட்ட குழியில் மூழ்கி 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கும், விவசாயிகள், விவசாயம் செய்வதற்கும் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவுவதால் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அங்கும், இங்கும் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், போதுமான அளவு குடிநீர் கிடைக்காததால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் குழாய் அருகே பெரிய குழியை தோண்டி அதில் கிடைக்கும் சிறிதளவு தண்ணீரை பிடித்து வடிகட்டி பயன்படுத்தி வந்தனர்.

    நேற்று முன்தினம் வைத்தூர் பகுதியில் பெய்த மழையால் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கி நின்றது. மழை நின்ற பிறகு அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரின் மகள் பவதாரணி (வயது 3) அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றாள். பின்னர், அவள் மீண்டும் வீடு திரும்பவில்லை. பவதாரணியின் உறவினர்கள், அவளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே பவதாரணி கையில் வைத்திருந்த பை குடிநீருக்காக தோண்டப்பட்ட குழியின் அருகே கிடந்தது. சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் அந்த குழியில் இறங்கி பார்த்தபோது, பவதாரணி குழிக்குள் மயங்கிய நிலையில் கிடந்தாள். உடனே, சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு பவதாரணியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    குடிநீருக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். மேலும் குடிநீருக்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும் என்றனர்.
    கடலில் பிடிக்கப்படும் மீன்கள் கெட்டு போகாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் ஐஸ் பார்கள் தேவையான அளவு கிடைக்காததால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன.

    இங்கிருந்து விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

    மீன்பிடி தடைக்காலம் முடிந்ததை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றுவிட்டு நேற்று காலை கரை திரும்பினர். மீனவர்கள் வலையில் ஏராளமான மீன்கள், நண்டுகள் சிக்கின.

    கடலில் பிடிக்கப்படும் மீன்கள் கெட்டு போகாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் ஐஸ் பார்கள் தேவையான அளவு கிடைக்காததால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஒருமுறை மட்டும்தான் கடலுக்கு சென்று வந்துள்ளோம்.

    மீண்டும் கடலுக்கு சென்று பிடிக்கும் மீன்கள் கெட்டுப்போகாமல் வைப்பதற்கு பயன்படுத்தும் ஐஸ் பார்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை.

    தற்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாலும், அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுவதாலும் ஐஸ் பார்களை தயார் செய்ய முடியவில்லை. இதனால், கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என்றனர்.
    கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு தெருவை சேர்ந்த தங்கராசு மகன் மனோஜ் (வயது 20). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து விட்டு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் விடுமுறையில் மனோஜ் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அதே பகுதி சடையன்தெரு சாலையில் மோட்டார் சைக்கிளை ஒட்டி சென்றார். அப்போது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மனோஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை அருகே தொழிலதிபர் வீட்டில் 35 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள முத்துடையான் பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், தொழிலதிபரான இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் கொள்ளை போயிருந்தது. 35 பவுன் நகைகள் வரை கொள்ளை போயிருக்கலாம் என தெரிகிறது.

    வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
    ×