என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அறந்தாங்கி அருகே நடந்து சென்ற தொழிலாளி மீது டிராக்டர் மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்து போனார்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கியை அடுத்த நாகுடியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 49). தொழிலாளி. இவர் நேற்று தனது வீட்டில் இருந்து கடைத் தெருவிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மூர்த்தி மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த மூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக் கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து நாகுடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருந்து வரும் புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இருந்து திருக்கட்டளை செல்லும் சாலையில் 13 ஏக்கர் பரப்பளவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் தினந்தோறும் நகராட்சி துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் கரும் புகை மூட்டம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான லாரிகள், 3 பொக்லைன் எந்திரம் உதவியுடன் நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில், தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து நகராட்சி பணியாளர்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோடை காலமாக இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு என்பது நகராட்சியில் நிலவி வருவதால் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    மேலும் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளியாகும் புகையினால் காந்தி நகர், போஸ் நகர், லட்சுமி குமரப்பா நகர், திருக்கட்டளை உள்ளிட்ட பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் அவ்வப்போது குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிவதும், தீயணைப்பு துறையினர் அணைப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    புதுக்கோட்டையில் ரூ.25 லட்சத்தில் புதிதாக திறக்கப்பட்ட நகராட்சி பூங்காவை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சியில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு நகராட்சி பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், புதுக்கோட்டை நகராட்சி, சாந்தநாதபுரத்தில் 2 சிறுமின் விசை இறைப்பான்கள், ராஜகோபாலபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.11 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம், புதுக்கோட்டை சார்லஸ்நகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நகராட்சி பூங்கா என மொத்தம் ரூ.39 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    புதிதாக திறக்கப்பட்ட நகராட்சி பூங்காவில் பெரியவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் 8 வடிவ நடைபாதை, குழந்தைகள் விளையாட நவீன விளையாட்டு உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் நலனுக்கான வளர்ச்சித்திட்ட பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். எனவே பொதுமக்கள் இதனை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதில் எம்.எல்.ஏ.க்கள். ஆறுமுகம், ரத்தினசபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கந்தர்வகோட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு சுற்றுச்சுவர் பணிக்கான பூமி பூஜையும் தொடங்கி வைத்தார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபின் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாது:-

    தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. குழந்தைகள் நலன், விபத்து சிகிச்சைப் பிரிவு, தொற்றுநோய் மற்றும் தொற்றா நோய்கள் பிரிவு, 108 ஆம்புலன்ஸ் சேவை, மனநல மருத்துவம் உள்ளிட்ட முக்கியமான சுகாதாரத்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் முழுகவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையில் இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் 2 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் ஒரு திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதலுடன் ரூ.2 ஆயிரத்து 884 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டத்தை முதல்-அமைச்சர் அடுத்த மாதம் தொடங்கி வைக்க உள்ளார்.

    தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் 2 என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ஆலங்குடி அருகே கோவில் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கீழகாயம் பட்டியைச் சேர்ந்தவர் வேலு (வயது 55) விவசாயி. இவர் கடந்த 4ந்தேதி வீட்டில் வி‌ஷமருந்து குடித்து விட்டு மயக்க நிலையில் கிடந்தார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேலுவின் மகன் சுரேஷ் என்பவர் சம்பட்டிவிடுதி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் எனது தந்தை மனஉளைச்சல் காரணமாக வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    எனவே தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். உடனே போலீசார் இது குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

    விசாரணையில், மேலகாயம்பட்டியில் புதிதாக கருப்பர்கோவில் கட்டுவதில் பிரச்சினை இருந்து வந்ததும், இதனால் கீழகாயம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் சக்திவேல் (40) ஆகிய 2 பேர் வேலுவிடம் தகராறுசெய்து வந்ததும் தெரியவந்தது.

    இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்தது கொண்டது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து சம்பட்டி விடுதி போலீஸ் இன்ஸ் பெக்டர் அலாவூதீன் வழக்குபதிவு சுப்பிரமணியன் மற்றும் சக்திவேலை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விலகலால் விரக்தியடைந்த புதுக்கோட்டை நிர்வாகிகள் 9 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் அவர் பதவியில் தொடர வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ராஜினாமாவை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் தங்களது பதவியையும் ராஜினாமா செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் புதுக்கோட்டை நகர தலைவர் இப்ராஹிம் பாபு தலைமையில் நிர்வாகிகள் 9 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    கறம்பக்குடி அருகே குடிசை வீடு எரிந்து நாசம் ஆனது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலங்குடி:

    கறம்பக்குடி அருகேயுள்ள அம்புக்கோவில் கனடியன்பட்டி  தெருவைச்சேர்ந்தவர் பாலையா(52). விவசாயி. இவர் நேற்று வீட்டில்  தூங்கினார். அப்போது திடீரென அவரது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. 

    இது குறித்து தகவல் அறிந்ததும் கறம்பக்குடி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் குடிசை வீடு முழுவதும் எரிந்து நாசம் ஆனது. 

    இது குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    புதுக்கோட்டையில் ரெயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
    புதுக்கோட்டை:

    மானாமதுரையில் இருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் ரெயில் புதுக்கோட்டை வழியாக செல்கிறது. இந்த ரெயில் மானாமதுரையில் இருந்து புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு காலை 7.40 மணிக்கு வந்து, பின்னர் மீண்டும் 3 நிமிடத்தில் திருச்சிக்கு செல்வது வழக்கம். இந்த ரெயிலில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்பட பலர் பயணம் செய்து வந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களாக இந்த ரெயில் வழக்கமான நேரத்தைவிட சுமார் 15 நிமிடம் முன்னதாக வந்து சென்று விடுகிறது. இதனால் பயணிகள் ரெயிலை பிடிக்க முடியாமல் தவற விட்டு விடுகின்றனர். இதனால் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை.

    இதுகுறித்து பயணிகள் பலமுறை ரெயில் நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் ரெயில் சரியான நேரத்திற்கு வந்து செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் நேற்றும் இதே போல் வழக்கத்தைவிட முன்னதாகவே ரெயில் வந்தது. இதையடுத்து அங்கிருந்த பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் புதுக்கோட்டை போலீசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்து அனைவரும் கலைந்து மீண்டும் அதே ரெயிலில் ஏரி சென்றனர். இதனால் ரெயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
    ஆலங்குடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மதுவிற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு அனுமதியின்றி மதுவிற்கப்படுவதாக தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து மது விலக்கு பிரிவு இன்ஸ் பெக்டர் லதா தலைமையில் போலீசார் ஜெகதாப்பட்டினம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது அதே பகுதி செல்லனேந்தல் கம்மாக்கரை பகுதியை சேர்ந்த ராமாயி (58) என்ற பெண்அனுமதியின்றி வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்து விற்பது தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து போலீசார் ராமாயியை கைது செய்தனர். அவரிடமிருந்து 304 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

    இதைப்போல் அறந்தாங்கி- பட்டுகோட்டை சாலை அண்ணாசிலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரில் வெளிமாநில மதுபானங்கள் 33 இருப்பது தெரிய வந்தது. 

    இதைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த அறந்தாங்கி அண்ணா நகரை சேர்ந்த சுப் பிரமணியன் (32) என்பவரை கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் மீதும் ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    கராத்தே தியாகராஜன் கட்சி விதிமுறைகளை மீறி சில கருத்துக்களை தெரிவித்ததால் வெளியேற்றப்பட்டார். அவர் வருத்தம் தெரிவித்தால் மீண்டும் உறுப்பினராக சேர வாய்ப்பு உள்ளது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறுவதும், மற்றொரு கட்சி தோற்பதும் சகஜமானது. ஆனால் பல மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்த காங்கிரஸ், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் ஓட்டுச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தொடர வேண்டும் என்பது தான் காங்கிரசின் விருப்பம். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ராகுல் காந்தி பதவியில் தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் கார்டு என்று கூறி இந்தியாவை பிளவுப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளதை ஏற்கமாட்டோம்.

    தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. ஆனால் பற்றாக்குறை இல்லை என்று தமிழக அரசு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறது. பொய் தகவல்களை தொடர்ந்து கூறி கொண்டிருக்காமல் அதற்கு தீர்வு காண அமைச்சர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை. இந்த கூட்டணி உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர் பார்ப்பு.


    கராத்தே தியாகராஜன் கட்சி விதிமுறைகளை மீறி சில கருத்துக்களை தெரிவித்ததால் வெளியேற்றப்பட்டுள்ளார். அதற்கு அவர் வருத்தம் தெரிவித்து மீண்டும் உறுப்பினராக சேர வாய்ப்பு உள்ளது. எனவே இதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எல்லை தாண்டி வந்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கி விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 500-க்கும் அதிகமான விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று காலை மீன்துறை அலுவலகத்தின் அனுமதியுடன் மீன் பிடிக்க சென்றனர். இதில் கார்த்திக் (வயது 25), குட்டியாண்டி (25), ராசு (65), மனோகர், ஆனந்த் (48) ஆகிய 5 பேரும் இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல் மின்னல் வேகத்தில் வந்தது. இதைப்பார்த்த புதுக்கோட்டை மீனவர்கள் பீதியடைந்தனர். உடனே வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள்.

    ஆனால் மீனவர்களின் படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அதில் தாவிக்குதித்தனர். பின்னர் புதுக்கோட்டை மீனவர்களிடம் இது எங்கள் நாட்டு எல்லை, நீங்கள் விதிகளை மீறி சர்வதேச எல்லையை தாண்டி வந்து ஏன் மீன் பிடிக்கிறீர்கள் என்று கேட்டனர்.

     

    இலங்கை கடற்படை கப்பல் மோதி மீனவர்களின் விசைப்படகு சேதம்

    பின்னர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இரால் உள்ளிட்ட மீன்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் மீனவர்களின் வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் மீனவர்களை மரக் கட்டைகளாலும், இரும்பு கம்பிகளாலும் சரமாரியாக தாக்கினர்.

    மேலும் தங்களது ரோந்து கப்பல் மூலம் மீனவர்களின் விசைப்படகு மீது பல முறை மோதி அதன் முன்பகுதியை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதில் குட்டியாண்டி தவிர மற்ற 4 மீனவர்களும் கை, கால், தோள்பட்டைகளில் பலத்த காயம் அடைந்தனர். பெரும் சிரமத்திற்கு இடையே சேதம் அடைந்த படகுடன் அவர்கள் கரை சேர்ந்தனர். காயங்களுடன் கரை சேர்ந்த அவர்களை மற்ற மீனவர்கள் மீட்டு மணல்மேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தங்கள் மீதான தாக்குதல் குறித்து அவர்கள் மீன்துறை அலுவலகத்தில் புகார் செய்தனர். கடந்த சில மாதங்களாக மீனவர்கள் மீதான தாக்குதல்கள், சிறைப்பிடிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதற்கிடையே ஜெகதாப்பட்டினத்தில் இருந்து ரமேஷ் என்பவருக்கு சொந்தமான படகில் ராமதேவன் (49), குமரவேல் (48), பாலமுருகன் (46), தமிழ்ச்செல்வன் (50) ஆகிய 4 பேரும் வங்கக்கடல் பகுதியில் ஜெதாப்பட்டினத்தில் இருந்து 14 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தில் மீனவர்களின் விசைப்படகு தள்ளாடியது. சிறிது நேரத்தில் படகுக்குள் தண்ணீர் புகுந்து மூழ்க தொடங்கியது. தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக மீனவர்கள் 4 பேரும் கடலில் குதித்து தத்தளித்தனர். அப்போது அந்த வழியாக வந்த மற்ற மீனவர்கள் கடலில் தத்தளித்த 4 பேரையும் மீட்டு பத்திரமாக கரை சேர்த்தனர்.

    ஒரே நாடு ஒரே ரே‌சன் கார்டு திட்டம் தேவையற்றது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது :-

    தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி வருகிற 2-ந்தேதி தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழகத்தில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்சினை, 7 பேர் விடுதலை தொடர்பான பிரச்சினை, நீட் தேர்வு தொடர்பான பிரச்சினை ஆகியவற்றிற்கு தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விளக்க வேண்டும்.

    காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டும், கர்நாடக அரசு இதை செயல்படுத்த மறுக்கிறது. கர்நாடகா தமிழகத்தை வடிகாலாகத்தான் பயன்படுத்துகிறது. காவிரி மேலாண்மை வாரியத்திற்கு அதிகாரம் உள்ளதா? என்பதே தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தமிழகத்தில் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட்டால் குற்றங்களை தடுக்க முடியும்.மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ள ஒரே நாடு ஒரே ரே‌சன் என்ற திட்டம் தேவையற்றது. தற்போது உள்ள தேர்தல் நடைமுறைகளை மாற்ற வேண்டும். விகிதாச்சார முறையில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, விகிதாச்சார முறையில் எந்தெந்த கட்சி எவ்வளவு வாக்கு சதவீதம் வாங்கி உள்ளது என்பதை பார்த்து அரசுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். உண்மையான ஜனநாயகம் மலர வேண்டும் என்றால் இத்தகைய முறையைத்தான் பின்பற்ற வேண்டும்.

    சட்டமன்ற தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த மு.க.ஸ்டாலினே தற்போது வலியுறுத்தவில்லை என கூறியுள்ளார். மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவானது தமிழக அரசுக்கு ஏதோ ஒரு வகையில் பின்விளைவை ஏற்படுத்தக் கூடும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுக்கோட்டை அருகே தண்டவாளத்தின் அருகில் நின்று ‘செல்பி ’ எடுக்க முயன்றபோது ரெயில் மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    புதுக்கோட்டை:

    தகவல் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட சாதனங்கள் இன்று தவறான பயன்பாட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் செல்போன்கள் மூலம்தான் அதிகம் பாதிப்புகள் ஏற்படுகிறது. செல்போன் மூலம் செல்பி, டிக்-டாக் போன்றவை தற்போது அதிக அளவு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூரில் டிக்-டாக் மோகத்தில் கணவன் கண்டித்ததால் மனமுடைந்த மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார். அவர் வி‌ஷம் குடிப்பதையும் டிக்-டாக்கில் பதிவு செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

    இந்தநிலையில் புதுக்கோட்டை அருகே செல்பி மோகத்தால் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ரெயில் முன்பு நின்று செல்பி எடுத்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்தவர் குமாரவேல். ஓய்வு பெற்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி ரேவதி. புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள். இதில் 2-வது மகன் மணிகண்டன் (வயது 19). இவர் புதுக்கோட்டை அருகே சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மணிகண்டனின் நண்பருக்கு பிறந்தநாள். இதை உற்சாகமாக கொண்டாட முடிவு செய்திருந்தனர். இதற்காக நேற்று முன்தினமே பீர்பாட்டில்களை வாங்கி வைத்திருந்தனர். நேற்றுக் காலை வழக்கமாக செல்லும் பூசத்துறை வெள்ளாற்று ரெயில்வே பாலம் அருகில் பிறந்தநாளை கொண்டாடினர். ரெயில் தண்டவாளம் அருகே நண்பர்களுடன் பீர் அருந்திக்கொண்டு இருந்த மணிகண்டனுக்கு ரெயில் வரும் சத்தம் கேட்டதும், அதன் அருகில் நின்று செல்பி எடுக்கும் ஆசை ஏற்பட்டது.

    ‘செல்பி ’ மோகத்தால் ரெயில் மோதி பலியான கல்லூரி மாணவர்

    அப்போது அந்த வழியாக மானாமதுரை-மன்னார்குடி பயணிகள் ரெயில் வந்தது. உடனே மணிகண்டனும் அவரது நண்பர் மகேந்திரனும் செல்போனில் செல்பி எடுக்க முயன்றனர். ரெயில் தண்டவாளத்தின் மிக அருகில் போதையில் நின்று கொண்டு செல்பி எடுத்தபோது எதிர்பாராதவிதமாக ரெயில் மணிகண்டன், மகேந்திரன் ஆகியோர் மீது மோதியது. இதில் செல்போனுடன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதைப் பார்த்த மற்ற நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அப்பகுதி பொதுமக்களுடன் 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக நேற்று மாலை இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர்.

    மகேந்திரனுக்கு தொட ர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்று செல்பி மோகத்தால் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செல்போன்களிலேயே பேஸ்புக்கில் இதுபோன்று செல்பி எடுக்கும்போது மலையில் இருந்து தவறி விழுந்து இறப்பவர்கள், அருவி முன்பு நின்று செல்பி எடுக்கும்போது உயிரிழந்தவர்கள், விலங்குகள் முன்பு நின்று செல்பி எடுக்க நினைத்து காயமடைந்தவர்கள், ரெயில் முன்பு செல்பி எடுக்க நினைத்து மரணத்தை தழுவியவர்கள் என காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. ஆனாலும் இது போன்று ஆபத்தான செல்பிகளை தொடர்ந்து இளைஞர்கள் எடுக்க நினைத்து ஆபத்தில் சிக்குவது அப்பாவி பெற்றோர்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

    மணிகண்டன் நண்பர்களுடன் செல்பி எடுக்க நினைத்த இடம் மிகவும் ஆபத்தான இடமாகும். அங்கு தனிமையான பகுதி என்பதால் பொதுமக்கள் யாரும் அதிகம் செல்வது இல்லை. மாணவர்கள், போதை ஆசாமிகள், தண்டவாளம் அருகில் அமர்ந்து இதுபோன்று உற்சாக பானம் அருந்தி பொழுதை கழித்து வருகிறார்கள். அப்போது பலர் இதுபோன்று செல்போன்களில் ரெயில் அருகில் நின்று படம் எடுப்பது, பாலத்தின் மீது ஏறி நின்று படம் எடுப்பது என்று அபாயகரமான விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். அவர்களை அவ்வப்போது போலீசாரும், பொதுமக்களும் எச்சரித்தும் இளங்கன்று பயம் அறியாது என்பது போல் ஆபத்தோடு விளையாடுகிறார்கள். அந்த விளையாட்டு இன்று ஒரு மாணவரின் உயிரை பறிக்கும் அளவிற்கு சென்று விட்டது. எனவே இது போன்ற சம்பவங்களுக்கு பிறகாவது இளைஞர்கள், இளம்பெண்கள் ஆபத்தான செல்பி, டிக்-டாக் மோகத்தை கைவிட வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மாணவர்கள் போதையில் இருந்ததால் ரெயில் வேகமாக வருவதை சரியாக கணிக்க முடியாமல் இருந்ததே உயிரிழப்புக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். மாணவர் இறந்ததும் சக நண்பர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். தற்போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மணிகண்டனுடன் உடனிருந்த மாணவர்கள் யார், யார்? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ×