search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா இரு சக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
    X

    அம்மா இரு சக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்

    அம்மா இரு சக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
    புதுக்கோட்டை:

    2018-19-ம் ஆண்டுக்கான அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் மூலம் பெண்கள் பணிபுரியும் இடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு செல்ல இரு சக்கர வாகனங்கள் 50 சதவீதம் மானிய விலையில் வாங்க நகரப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் வசிக்கும் கீழ்காணும் தகுதியுடைய பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு கல்வித்தகுதி 8-ம் வகுப்பு ஆகும். 18 வயது முதல் 40 வயது வரை, ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கு மட்டும் இரு சக்கர வாகனம் வழங்கப்படும். ஆதரவற்ற விதவை, பெண்ணை குடும்ப தலைவராக கொண்டவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருமணம் ஆகாத 35 வயதுக்கு மேற்பட்ட முதிர் கன்னிகள், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனம், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர், சமுதாய சுகாதார பணியாளர் மற்றும் சுய தொழில் புரிவோர், வாழ்வாதார செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    வயது சான்றிதழ், அஞ்சல் வில்லை அளவிலான புகைப்படம், இருப்பிட சான்று, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது, இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம், வருமான சான்று, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தால் துறை தலைவர் சுய சான்று, வேலை பார்ப்பதற்கான பணிச்சான்று, தொடர்புடைய நிறுவன துறை தலைவரால் வழங்கப்பட்ட ஊதிய சான்று, தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவராக இருந்தால் அதற்கான சான்று, 8-ம் வகுப்புக்கான கல்வி சான்று, மாற்று சான்றிதழ், முன்னுரிமை பெற தகுதி உள்ளவர்கள் அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளி எனில், தேசிய அடையாள அட்டை இணைக்க வேண்டும். இந்த திட்டத்தில் 50 சதவீதம் மானியம் அரசும், மீதமுள்ள தொகையை பயனாளிகளும் செலுத்த வேண்டும். பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட மானிய தொகை ரூ.25 ஆயிரத்திற்கு பதிலாக தற்போது ரூ.31 ஆயிரத்து 250 வழங்கப்படும்.

    பேரூராட்சி பகுதியெனில் பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி எனில் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையரிடமும், ஊரக பகுதி எனில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோரிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் வருகிற ஜூலை மாதம் 4-ந் தேதி மாலை 5 மணிக்குள் தொடர்புடைய அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    அதற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பித்த நபர்கள் அரசு விதிமுறைகள் மற்றும் கள ஆய்வு அடிப்படையில் இறுதி செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×