search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் அவதி"

    • ஊராட்சி தலைவரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
    • விரைவில் நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு அதே இடத்தில் சின்டெக்ஸ் மின் டேங்க் அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கொடமாண்டப்பட்டி ஊராட்சியில் உள்ள கீழ்சந்தம்பட்டி கிராமத்தில், 80க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளது.

    இக்கிராமத்தில் 2013ம் ஆண்டு 30,000 கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    கடந்த ஓராண்டிற்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேற்பகுதியில் உள்ள மேற்கூரை முற்றிலும் இடிந்து விழுந்தது.

    அதை அப்புறப்படுத்திய ஊராட்சி நிர்வாகம், புதிய மேற்கூரை போடாமல் தார்பாய் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மூடி வைத்து, குடி தண்ணீர் வினியோகம் செய்து வந்தது.

    தற்போது தார்பாய் முற்றிலும் கிழிந்து நீர்த்தேக்க தொட்டியினுள் தொங்கியபடி உள்ள நிலையில், பறவைகள் அதன் எச்சங்கள், பறவைகள் தூக்கிக்கொண்டு வரும் கழிவுகள் இத்தொட்டியினுள் விட்டு செல்வதால், தொட்டியினுள் புழுக்கள் உருவாகி சுகாதாரம் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பற்ற குடி தண்ணீரை ஊராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.

    கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக சுகாதாரமற்ற தண்ணீரையே இக்கிராம வேறு வழியின்றி பருகி வருகின்றனர். ஊராட்சி தலைவரிடம் பல முறை முறையிட்டு ஒரு நாள் கூட நேரில் வந்து பார்க்கவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பாதுகாப்பற்ற முறையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், காகங்கள் எச்சில்கள், கழிவுகளை போட்டு விட்டு செல்கிறது.

    அதனால் பூச்சி, புழுக்கள் உருவாகிறது. அந்த தண்ணீரை கிராம மக்களுக்கு குழாய்கள் மூலம் வினியோகிக்கும்போது வேறு வழியின்றி பூச்சி, புழுக்கள் இருக்கும் குடி நீரை வடிகட்டி குடிப்பதால் அடிக்கடி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும், ஊராட்சி தலைவரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினர்.

    இதுகுறித்து கொடமாண்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி சுந்தரவடிவேல் அவரிடம் கேட்டதற்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் பழுதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், விரைவில் நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு அதே இடத்தில் சின்டெக்ஸ் மின் டேங்க் அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.

    மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி அவரிடம் கேட்டதற்கு, பழுதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருப்பதாகவும், விரைவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு மாற்று வழியில் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். கடந்த ஓராண்டாக சுகாதாமற்ற குடிநீர் வழங்கி வருவது குறித்த கேட்டபோது, அவர் பதில் அளிக்கவில்லை.

    ×