என் மலர்tooltip icon

    மதுரை

    • விவசாயிகள், வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
    • தமிழக அரசும் இந்த திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டது.

    இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்லுயிர் தளமான அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் சுற்றுச்சூழல், விவசாயம் பாதிக்கும் என கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

    மேலும் விவசாயிகள், வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த மாத தொடக்கத்தில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மேலூரில் இருந்து லட்சக்கணக்கானோர் மதுரைக்கு பேரணியாக புறப்பட்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தமிழக அரசும் இந்த திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. இதற்கிடையில் மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கூறி தற்போது வரை அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக தங்களது கோரிக்கைகளை மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிசான் ரெட்டியை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி அந்த பகுதியை சேர்ந்த விவசாய சங்க பிரமுகர்கள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் புறப்பட்டனர்.

    இந்த குழுவில் ஒருங்கிணைப்பாளர்களாக பா.ஜனதாவை சேர்ந்த மகா சுசீந்திரன், பேராசிரியர் ராம சீனிவாசன், ராஜ சிம்மன், பாலமுருகன் ஆகியோர் செயல்பட்டனர்.

    இவர்களுடன் கிராம விவசாயிகள் மகாமுனி அம்பலம், ஆனந்த், போஸ், முருகேசன், முத்துவீரனன், சாமிக்கண்ணு, ஆனந்த் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர்.

    • எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதியில் மின்னல் வேகத்தில் மோதியது.
    • காரின் முன்பகுதி அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்தது.

    மேலூர்:

    சென்னையை சேர்ந்தவர் தொழிலதிபர் முத்துக்குமார். இவர் தனது மகன், மனைவி மற்றும் உறவினர்கள் 5 பேருடன் தூத்துக்குடி அருகேயுள்ள முருகன்காடு கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு காரில் புறப்பட்டார்.

    காரை சென்னையை சேர்ந்த ராமஜெயம் என்பவர் ஓட்டி வந்தார். அவர்கள் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற லாரியை கார் டிரைவர் ராமஜெயம் முந்திச் செல்ல முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதியில் மின்னல் வேகத்தில் சென்ற கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்தது.

    மேலும் இடதுபுறம் முன் இருக்கையில் அமர்ந்து வந்த முத்துக்குமாரின் மகன் பரத் பிரசன்னா (வயது 18) இடி பாடுகளுக்குள் சிக்கி காருக்கு உள்ளேயே பிணமானார்.


    மேலும் பின்புறத்தில் அமர்ந்து வந்த முத்துக்குமார், அவரது மனைவி, உறவினர்கள், டிரைவர் உள்பட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் கருங்காலக்குடி பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு மதுரை, மேலூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் பலியான பரத் பிரசன்னா உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜல்லிக்கட்டு போட்டியில் பட்டியலின சமூகத்தினரின் காளைகள் அவிழ்க்க தடை விதிக்கப்பட்டது.
    • ஜல்லிக்கட்டு போட்டியில் ஊர் காளைகள் பிடிக்கப்பட்டாலும் பரிசுகள் வழங்கவில்லை.

    பொங்கல் திருவிழாவை ஒட்டி மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை புறக்கணித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    பாலமேடு ஜல்லிக்கட்டில் புறக்கணிப்பட்டதாக எஸ்.பி. அலுவலகத்தில் அம்பேத்கர் பறையர் உறவின்முறை தலைவர் சந்தானம் புகார் அளித்துள்ளார். அவரது புகார் மனுவில்,

    * மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக வந்த பட்டியலினத்தவர் காளைகள் புறக்கணிக்கப்பட்டன.

    * ஜல்லிக்கட்டில் எங்களது சமூகத்தவர்களின் கோவில் காளைகளுக்கு மரியாதை அளிக்கவில்லை.

    * ஜல்லிக்கட்டு போட்டியில் பட்டியலின சமூகத்தினரின் காளைகள் அவிழ்க்க தடை விதிக்கப்பட்டது.

    * ஜல்லிக்கட்டு சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டதாக மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர்.

    * ஜல்லிக்கட்டு போட்டியில் ஊர் காளைகள் பிடிக்கப்பட்டாலும் பரிசுகள் வழங்கவில்லை.

    ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிய பாகுபாட்டுடன் மாடுபிடி வீரர் தமிழரசன் அனுமதிக்காத நிலையில் விழா கமிட்டியிடம் கேட்டபோது போலீசார் அடித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சாதிய பாகுபாட்டுடன் ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த சிறுவன் சொந்த ஊரான சங்கம்பட்டிக்கு வந்துள்ளார்.
    • 17 வயது நிரம்பிய சிறுவனை ஆறு வயது சிறுவனின் காலில் விழ வைத்து உள்ளனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் செல்லம்பட்டி அருகேயுள்ள சங்கம்பட்டி கிராமத்தில் 17 வயது பட்டியலின சிறுவன் புரட்டாசி மாதம் நடைபெற்ற திருவிழாவின்போது, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளது.

    அப்போது இரு பிரிவினரும் மோதிக்கொண்டனர். இதையடுத்து அந்த சிறுவன் கடந்த சில மாதங்களாக வீட்டிற்கு வராமல் மதுரை விக்கிரமங்கலத்தில் வசித்து வந்தார். அப்போது எதிர்பிரிவை சேர்ந்த சிலர் பயங்கர அயுதங்களுடன் விக்கிரமங்கலம் கிராமத்திற்கு சென்று தேடியுள்ளனர்.

    இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த சிறுவன் சொந்த ஊரான சங்கம்பட்டிக்கு வந்துள்ளார். இதனை அறிந்த மாற்று சமூகத்தை சார்ந்த 6 பேர் அவரை கடத்திச் சென்று ஊர் கண்மாய் அருகே வைத்து செல்போனை பறித்து, அடித்து சித்ரவதை செய்ததோடு அனைவரின் காலிலும் விழச்செய்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

    மேலும் 17 வயது நிரம்பிய சிறுவனை ஆறு வயது சிறுவனின் காலில் விழ வைத்து உள்ளனர். தொடர்ந்து அச்சிறுவனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதே கிராமத்தைச் சார்ந்த கிஷோர், உக்கிரபாண்டியன், மணிமுத்து, பிரேமா, சந்தோஷ், நித்தீஸ் ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    • தமிழகத்தில் 2026-ல் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்.
    • தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும் என்றார்.

    மதுரை:

    மதுரையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    த.வெ.க. தலைவர் விஜய்யை சமீபத்தில் திராவிட கட்சித்தலைவர் ஒருவர் கூட்டணிக்கு அழைத்தார்.

    தற்போது செல்வப்பெருந்தகை இந்தியா கூட்டணியில் சேருங்கள் என அழைத்துள்ளார்.

    அவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை தயவுசெய்து ராகுல் காந்தி மீது வையுங்கள் என அறிவுரை கூறுவது எனது கடமை.

    பா.ஜ.க. யாரையும் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.

    திமுக பிறக்கும் முன்பே திருவள்ளுவர் திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் சொல்லி வந்திருக்கிறார். அதனை வள்ளுவர் ஆரிய கைக்கூலியாக இருந்துகொண்டு திருவள்ளுவர் கருத்துகளை திணித்துள்ளார் என பெரியார் கடுமையாக சாடினார். அவரது வழியில் வந்த திமுகவினர் வள்ளுவரை பற்றி பேச அருகதை இல்லை. குறிப்பாக முரசொலிக்கு அருகதை இல்லை.

    திருப்பரங்குன்றம் மலை மீது நடக்கும் பிரச்சனைக்கு தி.மு.க. அரசு பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் செயலை செய்கிறது. அதற்கு கண்டனங்களைத் தெரிவித்து கொள்கிறேன்.

    2026-ல் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும் என தெரிவித்தார்.

    • விமானத்தில் முதன் முதலாக பயணம் மேற்கொள்ள இருந்த மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
    • 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அவர்களது வாழ்வில் மறக்க முடியாத ஒரு வித்தியாசமான அனுபவத்தையும், புதிய உயரத்தையும் அளிக்கும்.

    மதுரை:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 95 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் 20 மாணவர்களும், 5 ஆசிரியர்களும் 2 நாள் கல்வி சுற்றுலாவாக மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்தனர்.

    பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு "ரைட் பிரதர்ஸ்" பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, விமானத்தில் போக ஆசையாக இருப்பதாக தலைமை ஆசிரியரிடம் மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ் விமானத்தில் அழைத்து செல்ல திட்டமிட்டார். இதற்காக அவரது துபாய் நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் உதவியுடன் நிதி திரட்டினார்.

    இதைத்தொடர்ந்து 20 மாணவ-மாணவிகள், 5 ஆசிரியர்களுடன் இன்று காலை அவர்கள் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டனர். விமானத்தில் முதன் முதலாக பயணம் மேற்கொள்ள இருந்த மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

    சென்னைக்கு செல்லும் அவர்கள் அங்கு பிர்லா கோளரங்கம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், எழும்பூர் அருங்காட்சியகம், சட்டமன்றம், தலைமைச் செயலகம், சென்னை உயர்நீதிமன்றம், வள்ளுவர் கோட்டம், தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என பல இடங்களை சுற்றி பார்த்துவிட்டு நாளை (19-ந் தேதி) ஞாயிறு இரவு பொதிகை ரெயிலில் தென்காசிக்கு திரும்புகிறார்கள்.

    இதுகுறித்து கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ் கூறும்போது, இந்த விமானப் பயண வாய்ப்பு கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு அதுவும் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அவர்களது வாழ்வில் மறக்க முடியாத ஒரு வித்தியாசமான அனுபவத்தையும், புதிய உயரத்தையும் அளிக்கும்.

    இம்மாதிரியான விமான பயணத்திற்கு அரசு பள்ளி மாணவர்களையும் அழைத்துச் செல்ல முடியும் என்பதற்கு உதாரணமாக அமைகிறது. இதற்காக ஒரு நபருக்கு ரூ.7 ஆயிரம் விமான டிக்கெட், 2 நாள் ரெயில் பயண டிக்கெட் மற்றும் இதர செலவுகள் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 91 ஆயிரம் செலவு செய்து உள்ளோம் என்றார்.

    இதுகுறித்து 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் கூறுகையில், விளையாட்டாக தலைமை ஆசிரியரிடம் கூறினோம். உண்மையிலேயே அழைத்துச் செல்வதாக கூறியவுடன் ரொம்ப சந்தோசமாக இருந்தது. முதல் முறையாக விமானத்தில் பயணித்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றனர்.

    • ரெயில் நாளை காலை 10.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மதுரை வந்தடையும்.
    • ரெயில் திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ந்தேதி முதல் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. அரசு விடுமுறை நாட்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் வழக்கமான பணிகள் தொடங்கி உள்ளது. இருந்த போதும் வார இறுதி நாட்களை கணக்கில் வைத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை எடுத்துள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து மதுரை வரை முன்பதிவில்லா மெமூ ரெயில் இயக்கப்படுகிறது.

    ஏற்கனவே ரெயிலில் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பஸ், அரசு பஸ் மற்றும் வாகனங்கள் மூலம் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் நாளை காலை 10.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மதுரை வந்தடையும். மறுநாள் 19-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, 20-ந்தேதி காலை 9.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்தடையும்.

    இந்த ரெயில் திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் அனைவரும் மறந்து விட்டோம்.
    • 2026-சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்.

    மதுரை:

    மதுரையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி கே.கே.நகர் ரவுண்டானா பகுதியில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனுபவி ராஜா அனுபவி, இருக்கும்போதே அனுபவி என ஆட்சியில் இருக்கும் போதே அனைத்தையும் அனுபவிப்பதில் கலைஞர் குடும்பம் சிறந்த குடும்பம். மக்கள் வறுமையிலும், வறட்சியிலும் இருந்தபோது தள்ளாத வயதில் மானாட மயிலாட பார்த்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று சைக்கிள் ஓட்டி விளம்பரம் செய்கிறார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு தனது மகனோடு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பெண் அதிகாரியான மாவட்ட கலெக்டரை இருக்கையில் இருந்து எழ வைத்திருக்கிறார். இந்த ஆட்சியில் அதிகாரிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

    உலகத் தமிழ் மாநாடு தி.மு.க. நடத்திய போது உலகத்திலிருந்து வந்த அறிஞர்கள் எல்லாம் கீழே அமர வைக்கப்பட்டார்கள். கலைஞர் குடும்பம் மட்டும் மேடையில் அமர வைக்கப்பட்டார்கள். அனுபவிக்கிறார்கள், அனுபவிக்கட்டும். இன்னும் ஒரு வருடம் தான். அதற்கடுத்து மக்கள் இவர்களை எங்கே வைப்பார்கள் என்று தெரியாது. ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் அனைவரும் மறந்து விட்டோம்.

    எம்.ஜி.ஆரை யாரும் வென்றது கிடையாது. கடவுளை யாரும் கண்டது கிடையாது. 2026-சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்தாண்டு இதே ஜல்லிக்கட்டு அரங்கில் நடந்த போட்டியிலும் அபிசித்தர் முதலிடம் பிடித்திருந்தார்
    • 14 காளைகளை அடக்கி பொதும்பு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் 2 ஆம் இடம் பிடித்தார்.

    பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறுகிறது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் துவங்கிய ஜல்லிக்கட்டு, மாட்டுப் பொங்கல் தினத்தில் பாலமேட்டில் நடைபெற்றது.

    அந்த வரிசையில், உலகளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று துவங்கியது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 989 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, 490 காளையர்கள் களம் கண்டனர்.

    9 சுற்றுகளாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பூவந்தி பகுதியை சேர்ந்த அபிசித்தர் 20 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அபிசித்தருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி சார்பில் சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு, ஹூட்சன் தமிழ் இருக்கை வழங்கும் நாட்டு பசுவும் கன்றும் கூடுதல் பரிசாக வழங்கப்பட்டது. .

    கடந்தாண்டு இதே ஜல்லிக்கட்டு அரங்கில் நடந்த போட்டியிலும் அபிசித்தர் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    13 காளைகளை அடக்கி பொதும்பு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் 2 ஆம் இடம் பிடித்தார். அவருக்கு ஆட்டோ பரிசாக வழங்கப்பட்டது.

    மடப்புரம் விக்னேஷ் 10 காளைகளை அடக்கி 3 ஆம் இடம் பிடித்தார். இவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. ஏனாதி அஜய் 9 காளைகளை அடக்கி 4 ஆம் இடம் பிடித்தார். அவருக்கு TVS XL பரிசாக வழங்கப்பட்டது.

    சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட சேலம் பாகுபலி மாட்டின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

    • பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்.
    • இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026-ம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்

    மதுரை:

    மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்களும் துணை முதலமைச்சரின் மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களும் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

    இந்நிலையில் துணை முதலச்சரின் மகனின் நண்பர்களுக்காக மாவட்ட ஆட்சியரை அவமானப்படுத்துவதா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம்.

    முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?

    துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026-ம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்.

    என்று அண்ணாமலை கூறினார்.

    • மலேசியாவில் அதிகளவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.
    • வரும் காலத்தில் மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

    சிவகங்கை மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இலங்கையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் ஆர்வமிக்கவர்.

    சிவகங்கையில் உள்ள இவரது தோப்பில் 10-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறார். தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் காளைகளை பங்கேற்க செய்து வருகிறார். காளைகளுக்காக தனி கேரவன் வசதியும் செய்துள்ளார். உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவரது காளைகள் களம் கண்டு வெற்றி வாகை சூடியது.


    ஜல்லிக்கட்டை பார்வையிட்ட செந்தில் தொண்டமான் கூறுகையில், தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டை காண்பதற்காக வெளிநாட்டில் இருந்து அதிகளவில் வருகை தருகிறார்கள். மலேசியாவில் அதிகளவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். வரும் காலத்தில் மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

    • அசைவ உணவு மதியம் முதல் இரவு வரையில் திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
    • மலர் தட்டு ஊர்வலத்தின் முன்பு ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுற்றியபடி வந்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனியாண்டி சாமி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு மறுநாளான மாட்டுப் பொங்கல் அன்று இந்த கோவிலில் பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விருந்து நிகழ்ச்சி நடைபெறும். இந்தாண்டு கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் 62-வது பொங்கல் திருவிழா மற்றும் அசைவ அன்னதான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கேளரா, கர்நாடகா, மும்பை, புதுச்சேரி மற்றும் மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளி நாடுகளில் உள்ள மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் பலரும் இந்த திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம். அதன்படி நேற்று கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 250 பெண்கள் பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து முனியாண்டி சாமிக்கு குடம்குடமாக அபிஷேகம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100 ஆட்டு கிடாய்கள், 150 கோழிகளை கொண்டு கமகம அசைவ அன்னதானம் தயாரிக்கப்பட்டது. 60 மூட்டை அரிசியில் தயாரான அசைவ உணவு மதியம் முதல் இரவு வரையில் திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கோபாலபுரம், செங்கபடை, புதுப்பட்டி, குன்னத்தூர், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த அசைவ அன்னதானத்தில் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.

    இதற்கிடையே மாலை 5 மணியளவில் கோபாலபுரம் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து சாமிக்கு அபிஷேகம் செய்ய மலர்தட்டு ஊர்வலம் புறப்பட்டது. கோபாலபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தினை சேர்ந்த பொதுமக்கள், முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களின் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கில் இதில் கலந்து கொண்டனர். தாம்பூல தட்டில் தேங்காய், பூ, பழம் வைத்து வீட்டிலிருந்து ஊர்வலமாக கோவில் நோக்கி கிளம்பினர். இந்த மலர் தட்டு ஊர்வலத்தின் முன்பு ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுற்றியபடி வந்தனர்.

    பல பெண்கள் சாமியாடியபடியே ஊர்வலகத்தில் பங்கேற்றனர். மலர் பூந்தட்டு ஊர்வலம் மாலை 6 மணிக்கு முனியாண்டி கோவிலை அடைந்தது. அங்கு பக்தர்கள் கொண்டு வந்திருந்த தேங்காயை உடைத்து முனியாண்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    ×