என் மலர்
மதுரை
- செலவின தொகைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்யவேண்டும்.
- தற்பொழுது கொடிக்கம்பங்களுக்கு அனுமதி கோரிய இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
மதுரை:
மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த சித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் அ.தி.மு.க. பிரமுகராக உள்ளேன். அ.தி.மு.க.வின் 53-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மதுரை கூடல்புதூர் பகுதியில் உள்ள எங்கள் கட்சிக்கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதே போல மதுரை, பை-பாஸ் ரோடு பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி கதிரவன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, தமிழகத்தில் கட்சி கொடி கம்பங்கள் தொடர்பாக 114 வழக்குகள் பதிவாகியுள்ளன. கொடிக்கம்பங்கள், பிளக்ஸ் பேனர்களை பொறுத்தவரையில் தடையில்லா சான்றிதழ் மட்டுமே வழங்க போலீசாருக்கு அதிகாரம் உள்ளது.
மாநகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் தடையில்லா சான்றிதழ்கள் பெற்று இவை வைக்கப்படுகின்றன. தற்காலிக நடவடிக்கைகளாகவே இதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்து இருந்தார்.
அதற்கு நீதிபதி, கட்சி கொடிக்கம்பத்தை நிரந்தரமாக வைப்பதற்கு அனுமதி வழங்குவது யார்? எவ்விதமான வழிகாட்டுதல்களும், விதிகளும் இல்லாத நிலையில், பல அடி உயரத்துக்கு கட்சிக்கொடி கம்பங்கள் எதன் அடிப்படையில் நிரந்தரமாக வைக்கப்படுகின்றன? இவ்வாறு வைக்கப்படும் கம்பங்களுக்கு ஏன் வாடகை செலுத்தக் கூடாது?
பொது இடங்களில் தான் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட வேண்டுமா? அரசியல் கட்சி அலுவலகங்களிலோ, வீடுகளிலோ, பட்டா நிலங்களிலோ கொடிக்கம்பங்களை வைத்துக் கொள்ளலாமே. ஆங்காங்கே கட்சி கொடி கம்பங்கள் நடுவதற்கு தேவைப்படும் இடத்தை கிரையம் செய்து நட்டு வைத்துக் கொள்ளலாமே?
ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் அருகிலும் பல்வேறு கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. பொது இடம் என்பது நாம் அனைவருக்கும் சொந்தமானது. இங்கு இங்கெல்லாம் சிறுநீர் கழிப்பது, கம்பம் நடுவது, பொதுமக்களுக்கு இடையூறாக எதையாவது செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் நீதிபதி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி இருந்தார்.
அனைத்து தரப்பு விசாரணையும் முடித்த நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதி இளந்திரையன் இன்று பிறப்பித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-
பொது இடங்களில் கட்சி, இயக்கம், மதம், சாதி சம்பந்தமான கொடிக்கம்பங்களை நட்டு வைப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது மட்டுமல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறுகளும், விபத்தும் ஏற்படுவதற்கும் கொடிக்கம்பங்கள் காரணமாக அமைகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் உருவாகிறது.
மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக உயரங்களிலும் கட்சி கொடி கம்பங்களை அமைத்து வருவது ஏற்கத்தக்கதல்ல. இதனை கருத்தில் கொண்டு கொடிக்கம்பங்கள் நடும் விவகாரத்தில் இந்த கோர்ட்டு கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறது.
அதாவது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள், மத ரீதியான அனைத்து கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாத பட்சத்தில் அரசே பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான செலவின தொகைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்யவேண்டும்.
மேலும் எதிர் காலங்களில் பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைப்பதற்கு வருவாய்த்துறையினர் அனுமதிக்க கூடாது.
பட்டா இடங்களில் கம்பங்கள் அமைப்பது குறித்து அரசு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும். பொதுக் கூட்டங்கள் மற்றும் தேர்தல் நேரங்களில் கட்சி கொடிக்கம்பங்கள் வைப்பதற்கு உரிய வழிகாட்டுதலை வழங்க அனுமதி வழங்கலாம். அவ்வாறு வழங்கும் பட்சத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்ற உறுதிமொழியையும் வைப்புத் தொகை மற்றும் வாடகை தொகையும் வசூல் செய்திருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து அவ்வப்போது அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவை தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உடனடியாக அனுப்ப வேண்டும்.
நீதிமன்ற உத்தரவு முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உறுதிப்படுத்த வேண்டும். தற்பொழுது கொடிக்கம்பங்களுக்கு அனுமதி கோரிய இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறி இருந்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வல்லாளப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார்.
- டங்ஸ்டன் திட்டம் ரத்து தொடர்பாக திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தினர்.
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்தான நிலையில் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வல்லாளப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார்.
அப்போது அவர் உரையாற்றியதாவது:-
மக்களின் அன்பு கட்டளையை ஏற்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இந்த பாராட்டு விழா உங்களுக்கானது.
டங்ஸ்டன் திட்டம் ரத்து நமது போராட்டத்திறகு கிடைத்த வெற்றி. போராட்டத்தை முன்னெடுத்த மக்களுக்கு தான் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும்.
மக்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவாக தான் நான் பார்க்கிறேன். எனக்கு எதற்கு பாராட்டு விழா ? அது எனது கடமை.
மக்களின் மகிழ்ச்சி, எழுச்சியை பார்க்கும்போது இங்கேயே நிற்கலாம் போல உள்ளது.
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம் தான்.
மக்களுக்கு விரோதமான செயல்களை மத்திய பாஜக அரசு செய்கிறது. தமிழக அரசின் அனுமதியின்றி ஏலம் நடத்த மத்திய அரசு இயற்றியது.
விவசாயிகள் போராட்டம் 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் டங்ஸ்டன் போராட்டம் 3 மாதத்தில் முடிவுக்கு வந்துள்ளது.
மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து அதிமுக பேசவில்லை. டங்ஸ்டன் திட்டத்தை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தோம்.
டங்ஸ்டன் விவகாரத்தில் நமக்கு கிடைத்தது மிகப் பெரிய வெற்றி. இதை நான் அரசியல் பிரச்சினையாக பார்க்கவில்லை, நமது பிரச்சினையாக பார்க்கிறேன்.
பதவியை பற்றி எனக்கு கவலை இல்லை. மக்களை பற்றி தான் எனக்கு கவலை.
டங்ஸ்டன் தீர்மானத்தை ஆதரித்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி. என்றுமே உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அரிட்டாப்பட்டி மக்களின் அழைப்பை ஏற்று பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மதுரை புறப்பட்டார்.
- சென்னையில் குடியரசு தின விழாவை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை புறப்பட்டார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, அ.வல்லாளபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு இருந்தது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேலூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்த அரிட்டாபட்டி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றினார். அப்போது, நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராது என உறுதி அளித்தார்.
பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மதுரைக்கு நான்கு வழிச்சாலை வழியாக பேரணியாக நடந்து வந்து போராட்டம் நடத்தியது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் அரிட்டாபட்டி பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கிராம மக்கள் பிரதிநிதிகள் 18 பேர், அமைச்சர் மூர்த்தியுடன் நேற்று சென்னைக்கு சென்றனர். அங்கு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து, பாராட்டு விழா நடத்த உள்ளதாகவும் அதற்கு அரிட்டாபட்டி மற்றும் அ.வல்லாளபட்டிக்கு வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 'உங்கள் அன்பை ஏற்க அரிட்டாபட்டிக்கு வருகிறேன்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இதைதொடர்ந்து, சென்னையில் குடியரசு தின விழாவை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை புறப்பட்டார்.
அரிட்டாப்பட்டி மக்களின் அழைப்பை ஏற்று பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மதுரை புறப்பட்டார்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி கிராமத்திற்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
காரில் அரிட்டாப்பட்டி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையில் திரண்டு நின்று பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
- சிறந்த காவல் நிலையமாக முதலிடம் பிடித்த மதுரை.
- இன்ஸ்பெக்டர் காசியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை:
தமிழகத்திலேயே சிறந்த காவல் நிலையமாக முதலிடம் பிடித்த மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கான கோப்பையை இன்ஸ்பெக்டர் காசியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கான கோப்பையை இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடமும், 3-வது இடத்தை பிடித்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திருத்தணி காவல் நிலையத்திற்கான கோப்பையை இன்ஸ் பெக்டர் மதியரசனிடமும் வழங்கினார்.
- உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன்
- அ.வள்ளாலப்பட்டி கிராமத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்திக்கிறார்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்துக்கு உட்பட்ட அரிட்டாபட்டி மற்றும் மதுரை கிழக்கு வட்டத்துக்கு உள்பட்ட மீனாட்சிபுரம் ஆகிய கிரா மங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பள உள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறி வித்தது.
தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமான இந்த பகுதிகள் கழுகுமலை, கழிஞ்சமலை, நாட்டார்மலை, ராமாயி மலை, ஆப்டான் மலை, தேன்கூடு மலை, கூகைகந்தி மலை ஆகிய 7 சிறிய குன்றுகளை கொண்டுள்ளது.
அதேபோல் 2,200 ஆண்டுகளுக்கு முந்தய தமிழி கல்வெட்டுகள், சமணர் படுகைகள், சங்ககால கற்ப டுக்கைகள், குடைவரைக் கோவில்கள் என தனித்துவமான அடையாளங்களும் அரிட்டாபட்டியில் அமைந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீரால் இப்பகுதியில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் ஒருபோக பாசன விவசாயமும் நடைபெறுகிறது.
இந்தநிலையில் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக் கர்பட்டியை மையமாக கொண்டு அந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து கனிமவளம் எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த திட்டத்துக்கு அரிட்டாபட்டி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல் வெளியானது.
அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள தெற்குத் தெரு, முத்து வேல்பட்டி, குளனிப்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், வெள்ளாளப்பட்டி, சிலீப்பியாபட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி, செட்டியார்பட்டி, சண்முகநாதபுரம் என 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பகுதியில் இந்த திட்டத்தை அமல்படுத்த வேதாந்தா குழுமத்தை சேர்ந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.
இது தொடர்பான அறி விப்பை மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சகம் கடந்த ஆண்டு நம்பவர் 7-ந்தேதி வெளியிட்டது. இதனால், அதிருப்தியடைந்த மேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஜனவரி 7-ந்தேதி நடைபெற்ற பிரமாண்ட போராட்டத்தில் மேலூர் மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேர வையில் டிசம்பர் 9-ந்தேதி தமிழக அரசு சிறப்பு சட்ட மன்றத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியது.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் முதலமைச்சராக இருக்கும் வரை நிச்சயமாக டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்கமாட்டேன் என சூளுரைத்தார்.
இருந்தபோதிலும் மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்யாமல் அரிட்டாபட்டி பல்லுயிர் சூழல் தளத்திற்கு உட்பட்ட 500 ஏக்கர் நிலத்தை தவிர மீதமுள்ள 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் சுரங்கம் அமைக்கப்படுவதற்கு இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மறுவரையறை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. எனவே பொது மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது.
இந்தநிலையில் டெல்லி சென்ற போராட்டக் குழுவி னர், டங்ஸ்டன் கனிம சுரங்கத்தால் மேலூர் வட்டத்தில் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகளையும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், நிலத்தடி நீர் சீர்கேட்டையும் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியிடம் விளக்கி கூறினர். இதையடுத்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 11 கிராம மக்கள் சந்தித்துப் பேசினர்.
அப்போது அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு அத்திட்டம் ரத்து செய்யப்பட காரணமாக இருந்தமைக்காக முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இன்று அரிட்டாபட்டியில் முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாகவும், அதற்கு வருகை தரும்படியும் பொதுமக்கள் அழைப்பு விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன்," என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி இன்று சென்னையில் குடியரசு தின விழாவை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு மதுரை வந்தடைகிறார்.
விமான நிலையத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் சங்கீதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரவேற் கிறார்கள். பின்னர் தனியார் ஓட்டலில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 4.30 மணிக்கு காரில் மேலூர் செல்கிறார்.
தொடர்ந்து அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெறும் பாராட்டு விழா கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதையடுத்து அ.வள்ளாலப்பட்டி கிராமத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்திக்கிறார்.
48 கிராம மக்கள் ஒருங்கிணைந்து நடத்த இருக்கும் இந்த பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் அவரை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள்.
- தமிழகத்தில் கிராம ஊராட்சிகள் சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்.
- கிராம சபை கூட்டம் நடைபெறும்போது, கிராம மக்கள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தால், அதை ஏற்க வேண்டும்.
மதுரை:
திருச்சி துறையூரை சேர்ந்த குருநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் கிராம ஊராட்சிகள் சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். 7 நாளுக்கு முன்னதாக, கிராம சபை கூட்டம் நடைபெறும் நாள், இடம் குறித்து தொடர்புடைய விபரங்கள் கிராம ஊராட்சிகளில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
கிராம சபை கூட்டம் நடைபெறும்போது, கிராம மக்கள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தால், அதை ஏற்க வேண்டும். இந்த பணிகளை அந்த பகுதி தாசில்தார் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.
மேலும் இது குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், இந்த உத்தரவை அதிகாரிகள் முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை. எனவே, தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டீக்காராமன், விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், அனைத்து கிராம சபை கூட்டமும் உரிய விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா? என தாசில்தார்கள் ஆய்வு செய்கிறார்களா? என தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு அரிட்டாப்பட்டி உள்ளிட்ட 48 கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
- தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த மாதம் மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்லுயிர் தலமான அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் திட்டம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் மற்றும் ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மேலூர் மற்றும் 48 கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கடையடைப்பு, பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவற்றை பொதுமக்கள் தொடர்ந்து நடத்தினர். தமிழக சட்டசபையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது என்று திட்டவட்ட மாக தெரிவித்தார். கிராம மக்களின் தொடர் போராட்டத்துக்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கிராம மக்களுக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு அரிட்டாப்பட்டி உள்ளிட்ட 48 கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார். டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க இன்று காலை அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 32 பேர் அமைச்சர் மூர்த்தி தலைமையில் சென்னை சென்றனர். இந்த குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரை அல்லது அரிட்டாப்பட்டியில் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கவுரவிக்கப்படுகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாராட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் 48 கிராம மக்கள் சார்பில் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டங்ஸ்டன் அரிய வகை தாதுப்பொருள்.
- டங்ஸ்டன் போராட்டத்தை திசை திருப்ப முயன்றும் மக்கள் உறுதியுடன் போராடினர்.
மதுரை:
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 60 நாட்களாக மேலூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அரிட்டாபட்டி சென்ற பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு நிச்சயமாக டங்ஸ்டன் திட்டத்தை கொண்டு வராது என உறுதி அளித்து இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை விவசாயிகள் ஏழு பேர் கொண்ட குழுவினர் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் தலைமையில் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினர். இதனைத் தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்து மத்திய மந்திரி கிஷன் ரெட்டி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இது மேலூர் பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் டெல்லி சென்ற விவசாயிகள் இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர். அவர்களுக்கு பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் அரிட்டாபட்டி கிராம மக்கள் மாலை அணிவித்து பட்டம் சூட்டி உற்சாக வர வேற்பு அளித்தனர். பின்னர் ராம.சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
டங்ஸ்டன் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கிறது. மத்திய மந்திரி மூலமாக டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கொடுத்த அனுமதி ஏலம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த முடிவுக்கு அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எந்தெந்த மாநிலங்களில் கனிம வளங்கள் உள்ளது என நாடு முழுவதும் ஜியாலஜிகல் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. டங்ஸ்டன் அரிய வகை தாதுப்பொருள். அதை தற்போது வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் இருப்பதால்தான் தமிழக அரசிடம் பேசி ஏலம் விட தயாரானபோது மாநில அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. விவசாயிகளுடன் கலந்தாலோசித்தபோது தான் இங்கிருக்கும் பாதிப்புகள் எங்களுக்கு தெரிய வந்தது. மக்கள் தெரிவித்த கருத்துக்களை மத்திய மந்திரி ஏற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த அரசு இருக்கும். இதற்காக மோடியிடம் பேசி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தார்.
டங்ஸ்டன் போராட்டத்தை திசை திருப்ப முயன்றும் மக்கள் உறுதியுடன் போராடினர். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ததை தொடர்ந்து டெல்லி சென்ற விவசாயிகள் கிஷன் ரெட்டிக்கு அரிட்டாபட்டி வர விவசாயிகள் அழைப்பு விடுத்ததாகவும், அவரும் வருவதாக ஒத்துக்கொண்டுள்ளாதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக பாடுபட்ட அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோருக்கும், எல்லாவற்றிற்கும் காரணமான பிரதமர் மோடிக்கும் நன்றி.
தமிழக அரசின் நடவடிக்கையால்தான் மோடி அரசு பணிந்து திட்டத்தை ரத்து செய்துவிட்டது என தமிழக முதல்வர் தெரிவித்தது குறித்து இந்த விவகாரத்தை நான் அரசியலாக பார்க்கவில்லை. அதற்காக அனைத்து கட்சியினருமே போராடி உள்ளனர். ஆனால் இந்த விஷயத்தை அரசியலாக இப்போது பேச விரும்பவில்லை அதற்காக தனியாக நான் பதில் கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மேலூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் கவலையோடு இருந்தார்கள். மிகப்பெரிய சவாலாக இருந்தது. மதுரை நோக்கி மிகப்பெரிய நடைபயணம் மேற்கொண்டு இருந்தோம். இந்தப் போராட்டத்தின் விளைவாக மிகப்பெரிய வெற்றி பரிசு கிடைத்திருக்கிறது. எங்கள் கிராமத்திற்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வந்து, டங்ஸ்டன் திட்டம் கிராமத்திற்கு வராது என உறுதி அளித்தார்.
அதை ஏற்றுக்கொண்டு டெல்லி சென்று மத்திய அமைச்சரிடம் டங்ஸ்டன் விவகாரம் பற்றி தெரிவித்தோம். எங்களிடம் விளக்கம் கேட்ட மத்திய மந்திரி தொடர்பாக பிரதமரிடம் பேசிவிட்டு சொல்வதாக கூறினார். நாங்கள் முடிவு தெரியாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறினோம்.
அடுத்த அடுத்த நாள் டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்ட ஆணையை எங்களிடம் வழங்கினார்கள். இத்திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கும், மத்திய மந்திரி கிஷன் ரெட்டி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் அனைவருக்கும் கிராமத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.
- அரிட்டாப்பட்டி போராட்டக் குழுவினர் நேற்று , பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சென்று மத்திய அமைச்சரை டெல்லியில் சந்தித்து பேசினர்.
- விரிவான ஆலோசனைக்கு பிறகு டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்லுயிர் தளமான அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் சுற்றுச்சூழல், விவசாயம் பாதிக்கும் என கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
மேலும் விவசாயிகள், வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த மாத தொடக்கத்தில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மேலூரில் இருந்து லட்சக்கணக்கானோர் மதுரைக்கு பேரணியாக புறப்பட்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அரசும் இந்த திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. இதற்கிடையில் மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கூறி அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
இதைதொடர்ந்து, டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக தங்களது கோரிக்கைகளை மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிசான் ரெட்டியை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்து, அந்த பகுதியை சேர்ந்த விவசாய சங்க பிரமுகர்கள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று டெல்லிக்கு புறப்பட்டனர்.
இந்த குழுவில் ஒருங்கிணைப்பாளர்களாக பா.ஜனதாவை சேர்ந்த மகா சுசீந்திரன், பேராசிரியர் ராம சீனிவாசன், ராஜ சிம்மன், பாலமுருகன் ஆகியோர் செயல்பட்டனர்.
இவர்களுடன் கிராம விவசாயிகள் மகாமுனி அம்பலம், ஆனந்த், போஸ், முருகேசன், முத்துவீரனன், சாமிக்கண்ணு, ஆனந்த் ஆகியோரும் சென்றனர்.
இந்நிலையில், மதுரை டங்ஸ்டன் திட்டம் முழுமையாக முழுமையாக கைவிடப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விரிவான ஆலோசனைக்கு பிறகு டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய முடிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளது.

- நமது பாரத நாடு மதச்சார்பற்ற நாடு, எல்லோரும் அவரவர் வழிபாட்டில் சரியாக இருக்க வேண்டும்.
- கச்சத்தீவை திரும்ப பெற்று விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மதுரை:
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
"நமது பாரத நாடு மதச்சார்பற்ற நாடு, எல்லோரும் அவரவர் வழிபாட்டில் சரியாக இருக்க வேண்டும். மற்றவர்கள் வழிபாட்டில் தகராறு செய்யக்கூடாது. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது ராஜதந்திரம் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார். அது அவருக்கு ராஜதந்திரமாக இருக்கலாம். தமிழர்களை கொன்றது தான் ராஜ தந்திரமா? லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தார்கள்.
அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தானே தமிழர்களை இந்திய ராணுவத்தை அனுப்பி கொன்றது. இது ராஜ தந்திரமா? வெளிநாட்டில் இருந்து வந்தவர்களும் நம் சகோதரர்கள் தான். மத விவகாரத்தில் எல்லோரும் எல்லாவற்றையும் அனுசரித்து தான் செல்ல வேண்டும்.
கச்சத்தீவு கொடுத்ததை எப்படி வாங்க முடியும்? கொஞ்சம் கொஞ்சமாக தான் அதை செய்ய முடியும். ஒரு நாட்டிற்கு தாரை வார்த்து கொடுத்ததை சுலபமாக வாங்க முடியுமா? 60 வருடங்களுக்கு முன்பே கொடுத்து விட்டார்கள். 10 வருடமாக தான் மோடி பிரதமராக உள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக தான் செய்ய முடியும். கச்சத்தீவை திரும்ப பெற்று விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது"
இவ்வாறு அவர் கூறினார்.
- டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த அரசாணையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
- எதிர்க்க வேண்டியதை எதிர்க்கிறோம். வரவேற்க வேண்டியதை வரவேற்கிறோம்.
மதுரை:
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த அரசாணையை மத்திய அரசு வெளியிட வேண்டும், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை எப்போதும் போல டங்ஸ்டன் விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்கிறார். திருப்பரங்குன்றம் மலைக்கோவில் வழிபாடு நடவடிக்கை எடுக்க வேண்டும், விவாகரத்தில் மதப்பிரச்சனை வராத அளவிற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் சார்ந்த பிரச்சனைகளில் விஜய் கவனம் செலுத்துவதில் நாங்கள் வரவேற்கிறோம். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் நிலைப்பாடு, சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஏப்ரல் 6-ந் தேதி மதுரையில் நடைபெறும் 24-வது அகில இந்திய மாநாட்டில் முடிவு செய்வோம்.
3 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளா கண்ணூரில் நடைபெற்ற 23-வது அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து வருகிறோம். தி.மு.க.வின் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கவில்லை. எதிர்க்க வேண்டியதை எதிர்க்கிறோம். வரவேற்க வேண்டியதை வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மொத்தம் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
- வீட்டிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற என்ஜினீயராக பாரதிகண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது வாடிக்கையாளருக்கு சொந்தமாக பரமக்குடியில் உள்ள நான்கு வீட்டு மனைகளுக்கு நகராட்சியில் திட்ட ஒப்புதல் பெறுவதற்கு கட்டணமாக ரூ.76 ஆயிரத்து 850-ஐ கடந்த வாரம் செலுத்தி இருந்தார்.
இந்த நிலையில் இதுதொடர்பாக நகராட்சியில் நகரமைப்பு திட்ட அலுவலராக பணிபுரியும் பர்குணன் என்பவரை சந்தித்து பாரதிகண்ணன் விவரம் கேட்டார். அப்போது ஒரு வீட்டு மனைக்கு ரூ.5 ஆயிரம் வீதம் நான்கு வீட்டுமனைகளுக்கு மொத்தம் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு என்ஜினீயர் பாரதிகண்ணன், நகராட்சிக்கு கட்ட வேண்டிய அரசு பணத்தை முழுவதும் செலுத்தி உள்ளேன். ஆகையால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஆனாலும் நகராட்சி அதிகாரி பர்குணன் லஞ்சம் கொடுத்தால் மட்டும் அடுத்த கட்ட பணிகள் நடக்கும் என்றும், திட்ட ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வேறு வழியின்றி தவித்த பாரதி கண்ணன் லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டு விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்து சென்றார்.
இருந்தபோதிலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத பாரதி கண்ணன், இது குறித்து ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, இன்று காலை 'கூகுள்பே' மூலமாக நகராட்சி அதிகாரி பர்குணன் செல்போன் எண்ணிற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சப் பணத்தை அனுப்பினார்.
அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லஞ்சம் பெற்ற பர்குணனை செல்போனுடன் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இதுபோன்று வேறு யாரிடமாவது ஆன் லைன் பரிவர்த்தனை மூலம் லஞ்சம் பெற்றுள்ளாரா? என்று விசாரணையை தொடங்கியுள்ள போலீசார் அவரது வீட்டிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
பரமக்குடி நகராட்சியில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






