என் மலர்
கிருஷ்ணகிரி
- காவிரியை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.
- மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, ஒரு போதும் அ.தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும் இடம் தர மாட்டார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்றது.
பாகலூர் பஸ் நிலையத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்டக்குழு உறுப்பினருமான ரவிகுமார் தலைமை தாங்கினார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தம்பிதுரை எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல், தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல். தமிழகத்தில், நான்கரை ஆண்டுகாலம் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை தந்தார். தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்தது. சாதாரண தொண்டராகிய எடப்பாடி பழனிசாமியை மக்கள் நம்ப வேண்டும். அவர், உங்களில் ஒருவர். நம்மில் ஒருவர். அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு தர வேண்டும்.
தமிழகத்தில், பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, கூட்டுறவு சங்கம்... என எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் மட்டும்தான் போட்டியாக இருக்கும். காவிரியை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். மேகதாது அணை கட்டுவது பயனற்றது. அங்கு, அணை கட்டாமலேயே பெங்களூரு மாநகரத்திற்கு தேவையான 18 டிஎம்சி தண்ணீரை கே.ஆர்.எஸ். அணையிலிருந்து எடுத்துக் கொள்ளட்டும். அதற்கு, அதிமுக சார்பில் எந்த ஆட்சேபணையும் இல்லை. இதுதான் அதிமுகவின் கருத்து மற்றும் கொள்கையாகும். மேகதாதுவில் அணை கட்டுவது தேவையற்றது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, ஒரு போதும் அ.தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும் இடம் தர மாட்டார். மக்கள் இதை நம்பலாம். இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்படும்.
இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.
மேலும், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமைக்கழக பேச்சாளர் சாரதா ஆகியோர் கூட்டத்தில் பேசினர். இதில், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், பாகலூர் ஊராட்சி தலைவர் வி.டி. ஜெயராமன் நன்றி கூறினார்.
- கடையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடி சென்றுள்ளனர்.
- இருவர் மீது வழக்கு பதிவு ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள உப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி அன்று மளிகை பொருட்கள் வாங்குவதாக 2 பேர் வந்து மளிகை பொருட்கள் வாங்கிச் சென்றனர்.
அப்போது கடையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடி சென்றுள்ளனர். இது குறித்து மாதையன் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் ஊத்தங்கரை டி.எஸ்.பி பார்த்தீபன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து செல்போன் திருடிய நபர்களை சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து தனிப்படை போலீஸார் தேடி வந்துள்ளனர்.
இதில் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் தலைமை காவலர்கள் வடிவேல், பிராபாகரன், மணிவேல் அடங்கிய தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி சென்று சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து விசாரணை செய்து வந்தனர்.
விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முகமதுஅலி வயது (22), அதே பகுதியைச் சேர்ந்த ஜாபர்பாஷா (22) ஆகியோர் செல்போனை திருடியது தெரிய வந்தது. 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்ததுடன் இருவர் மீது வழக்கு பதிவு ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
- விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.
- விபத்தால் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சூளகிரி:
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த கார் சூளகிரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது ஒரு நாய் குறுக்கே வந்தது. அந்த நாய் மீது மோதாமல் இருக்க அந்த காரை ஓட்டி வந்தவர் திடீரென்று பிரேக் போட்டார். அப்போது காரின் பின்னால் திருச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த கண்டெய்னர் லாரியும் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.
இதனை சற்று எதிர்பாராத பின்னால் வந்த கிருஷ்ணகிரி -ஓசூர் செல்லும் அரசு பஸ் ஒன்று கண்டெய்னர் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.
இந்த விபத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர்களான அரசு பஸ் டிரைவர் திம்மராயன் (வயது50), கண்டக்டர் சிங்கமாதவன் (51), பஸ்சில் பயணம் செய்த அரசு பள்ளி ஆசிரியை கலா உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- குன்னத்தூர்-ஆதாலியூர் என்ற இடத்தில் பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து எம்.பி. வந்த காரை வழிமறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
- உடனடியாக மதுபான கடையை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதாக செல்லகுமார் எம்.பி. கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த, குன்னத்தூர் அருகே உள்ள சென்னானூர் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது.
இந்த கடையினால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் மதுகுடித்து விட்டு சிலர் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளிடம் ரகளையில் ஈடுபட்டு வருவதால், வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக இருப்பதாலும், பெண்கள் தனியாக நடந்து கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக்கூறி அதிகாரிகளிடம் குற்றம்சாட்டி வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரிகிறது.
இந்த நிலையில் சென்னானூர் கிராமத்தில் பூமி பூஜைக்காக கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமார் வந்தார்.
அப்போது , குன்னத்தூர்-ஆதாலியூர் என்ற இடத்தில் பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து எம்.பி. வந்த காரை வழிமறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் எம்.பி.யிடம் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் மதுபான கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கூறினர்.
அதன்பின்னர் தங்களது கோரிக்கை மனுவை எம்.பி.யிடம் பொதுமக்கள் கொடுத்தனர். உடனடியாக மதுபான கடையை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதாக டாக்டர் செல்லகுமார் எம்.பி. கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- எருது விடும் விழாவில், சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற, 20 பேர் காயமடைந்தனர்.
- சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் எருதாட்டத்தை கண்டு கழித்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே தியாகரசனப்பள்ளியில், எருது விடும் விழா நடந்தது. சூளகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் மொத்தம், 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.
விழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, கிடா வெட்டி சிறப்பு. பூஜை நடந்தது. அதன்பின் விழா திடலில் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.
அவற்றை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த தடுக்குகளை இளைஞர்கள் எடுத்தனர்.
காளைகள் சீறிப்பாய்ந்த போது, அடக்க முயன்ற இளைஞர்கள் மற்றும் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என, 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அவர்கள், சூளகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் எருதாட்டத்தை கண்டு கழித்தனர்.
விழாவில், 20,000க்கும் மேற்பட்டோர் திரண்டதால், சூளகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- சீட்டு முடிந்தும் பணத்தை திருப்பித்தரவில்லை. இது தொடர்பாக போலீசிடம் புகார் செய்துள்ளோம்.
- பாதிக்கப்பட்ட 305 பேருக்கும் பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், வி.மாதேப்பள்ளி கூட்ரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணத்தை தரவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி சமாதானப்படுத்தி கலெக்டரிடம் அழைத்துச் சென்றார்.
கலெக்டர் சரயுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வி.மாதேப்பள்ளி கூட்ரோட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கிருஷ்ண மூர்த்தி என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.
அவரிடம் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் 2 லட்சம், 5 லட்சம், 10 லட்சம் ரூபாய் என 13 கோடி ரூபாய்க்கு மேல் 305 நபர்கள் ஏலச் சீட்டுக்கு பணம் கட்டியுள்ளனர்.
ஆனால் சீட்டு முடிந்தும் பணத்தை திருப்பித்தரவில்லை. இது தொடர்பாக போலீசிடம் புகார் செய்துள்ளோம். இதுவரை எங்களுக்கு பணத்தை பெற்று தரவில்லை.
பாதிக்கப்பட்ட 305 பேருக்கும் பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
- 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர்
- நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர். நாட்டில் அனைவரும் சகோதரத்துடன் வாழ வேண்டுமென இந்துக்களும் இஸ்லாமியர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இந்த பழமையான கோயிலை சுமார் 7 கோடி ரூபாய் செலவில் புரணமைக்கும் பணிகளில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வந்தனர். அதன்படி கோயில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த 17-ம் தேதி முதல் வரும் 19-ம் தேதி வரை கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாகலூர் பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை பொருள்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இதில், ஒரு லட்சம் ரூபாய் பணம், பட்டுச்சேலை, பழங்கள், இனிப்புகள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருள்களை தாம்பூலத் தட்டில் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் அதனை கோயில் நிர்வாகத்தினரிடம் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர். பாகலூர் பகுதியில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமையாக இருப்பதை போல நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டனர்.
- வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
- இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை நேற்று முன்தினம் ஊருக்குள் புகுந்து தேர்பேட்டை டி.ஜி தொட்டி பகுதியில் குடியிருப்பு தெருக்களில் வழியாக உலா வந்தது.
இதை பார்த்த மக்கள் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஒளிந்து கொண்டனர். இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே தேன்கனிக்கோட்டை வன ஊழியர்கள் விரைந்து வந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானையை பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் அதிக ஒலி எழுப்பியும் காட்டுப் பகுதிக்கு விரட்டியடித்தனர்.
இதனால் ஒற்றை யானை வனப்பகுதிக்கு சென்றதாக நினைத்து கொண்ட தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் பொதுமக்கள் வழக்கம் போல் காலையில் எழுந்து தோட்ட வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி வசந்தம்மா (வயது33) கூலித்தொழிலாளியான இவர் இன்று அதிகாலை தோட்ட வேலைக்கு செல்வதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தார்.
அப்போது அங்கு வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
இதனை கண்ட வசந்தம்மா அங்கிருந்து தப்பி ஒட முயன்றார். இதனை கண்ட அந்த ஒற்றை யானை வசந்தம்மா தூக்கி வீசி தாக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் வசந்தம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த யானையை விரட்டியடித்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த ஒற்றை யானை அங்கிருந்து புறப்பட்டு தளி அருகே உள்ள தாசர்பள்ளி அருகே சென்றது. அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வந்தம்மா என்ற கூலித் தொழிலாளி இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டை வெளியே வந்தார். அப்போது அவரை யானை தாக்கியது. இதில் அஸ்வந்தம்மாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேன்கனிக்கோட்டையில் ஒற்றை யானை அடுத்தடுத்து 2 பெண்களை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீப் போல் பரவியது.
வசந்தம்மாவின் உறவினர்கள் மற்றும் அன்னி யாளம் கிராம பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சோதனை சாவடி முன்பும், தாசர்பள்ளி கிராம மக்கள் அதே பகுதியிலும் திடீரென்று திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் வனத்துறையினர் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடவேண்டும் என்றும், யானை தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து அந்தந்த பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதன்காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.
- கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்தில் உறுதியான நிலை எடுத்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு வேதனையையும், கவலையும் அளித்துள்ளது.
- மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அமையும் என்று ஊடகங்களில் வரும் உறுதியான செய்தியை நான் படித்து, பார்த்து வருகிறேன்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட த.மா.கா தலைவர் கேசவரெட்டியின் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்கவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும், கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன், நேற்று மாலை ஓசூர் வந்தார்.
பின்னர், அவர் நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜி.கே.வாசன் கூறியதாவது:
"பெங்களூரு முதல் ஓசூர் வரையிலான மெட்ரோ ரெயில் நீட்டிப்பு மிகவும் அவசியம் மற்றும் இந்த பகுதி மக்களுக்கு அவசர தேவையாகும். இதனை அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். எனவே, இரு மாநில மக்களின் அவசிய, அவசர தேவையை புரிந்து கொண்டு, தமிழக அரசும், கர்நாடக அரசும் இணைந்து விரைவில், மெட்ரோ நீட்டிப்புக்கான உறுதியான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்தில் உறுதியான நிலை எடுத்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு வேதனையையும், கவலையும் அளித்துள்ளது. எனவே, தமிழக அரசு, இது சம்பந்தமாக கர்நாடக அரசுடன் கண்டிப்புடன் பேசி, தமிழக விவசாயிகளின் எண்ணங்களை பிரதிப லிக்கும் அரசாக செயல்பட வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை, கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை செய்து விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும்.
மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அமையும் என்று ஊடகங்களில் வரும் உறுதியான செய்தியை நான் படித்து, பார்த்து வருகிறேன். அதனை நம்புகிறேன். "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை த.மா.கா. வரவேற்கிறது. இதன் மூலம் மிச்சமாகும் பணத்தை, மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், த.மா.காவை பலப்படுத்தும் பணிகள் தீவிரபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
அப்போது கேசவரெட்டி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- நோய்த்தொற்று அறிகுறி உள்ள நபர்களை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மருத்துவ குழுவினருக்கு, நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடகா மாநிலத்திற்கு சென்று வந்தவர்களுக்கு குரங்கு காய்ச்சல் நோய் அறிகுறி உள்ளதா? என்பதை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கியாசனூர் பாரஸ்ட் வன நோயால்(குரங்கு காய்ச்சல்), சமீபத்தில் கர்நாடக மாநிலம் சிமோகா, உத்திரகனடா, சிக்மங்களூர் ஆகிய மாவட்டத்தில், 53 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் உயிரி ழந்துள்ளதாக தெரிகிறது. மனிதர்களுக்கு இந்நோய் பாதிக்கப்பட்ட குரங்கின் உண்ணி கடி மூலம் பரவுகிறது. குறிப்பாக காட்டில் வசிக்கும் வைரசால் பாதிக்கப்பட்ட குரங்குகளிடம் இருந்து பரவுகிறது.
அவ்வாறு பாதிக்கப்பட்ட அல்லது சமீபத்தில் உயிரிழந்த குரங்குகளிடமிருந்து ஆடு மற்றும் மாடுகளுக்கு பரவி, அவ்வழியே மனிதர்களுக்கும் நோய் பரவும்.
ஆனால், மனிதர்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இந்த நோய் பரவாது. அத்துடன், உண்ணி கடித்த 3 முதல் 8 நாட்களுக்கு பிறகு காய்ச்சல், தலைவலி, குளிர், உடல் வலி ஏற்படும். அதிலிருந்து 3 நாட்களுக்குப் பிறகு ரத்த அணுக்கள் குறையலாம். சிலருக்கு இது 2 வாரங்கள் வரை நீடிக்கும்.
பெரும்பாலோனோர் இதிலிருந்து குணம் அடைந்து விடுவார்கள். சிலருக்கு இரண்டாம் முறை காய்ச்சல் தலைவலியுடன் உடல் நடுக்கம், பார்வை மங்குதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும். போதுமான அளவிற்கு நீர் ஆகாரம் வழங்க வேண்டும். மேலும், உண்ணி கடி ஏற்படாமல் இருக்க, முழு நீள ஆடைகளை அணிய வேண்டும். ஆடு, மாடு ஆகியவற்றுக்கு உண்ணி பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வன அலுவலர்கள் காட்டில் குரங்கு இறந்துள்ளதா என்பதையும், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கால்நடை துறையினரும் கண்காணிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் ஓசூர், தளி, கெலமங்கலம் மற்றும் சூளகிரி வட்டாரங்களில், கர்நாடக மாநிலம் சென்று வந்தவர்களுக்கு, நோய் அறிகுறி உள்ளதா என்பதை சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் நோய்த்தொற்று அறிகுறி உள்ள நபர்களை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ குழுவினருக்கு, நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பா.ஜனதாவுடன் அதிமுக கட்சி கூட்டணியில் இல்லை என ஏற்கனவே 25.06.2023-ல் தெரிவித்துவிட்டோம்.
- எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் பத்திரிகை, ஊடகங்களில் தவறான செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.
மாற்று கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
* பா.ஜனதாவுடன் இவர்கள் (அதிமுக) மறைமுக உறவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனச் சொல்கிறார்கள்.
* பா.ஜனதாவுடன் அதிமுக கட்சி கூட்டணியில் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இல்லை என தீர்மானத்தின் மூலம் ஏற்கனவே 25.09.2023-ல் தலைமைக் கழகத்தில் இருந்து தெரிவித்துவிட்டோம்.
* ஆனால் அதன்பின் ஐந்து மாதங்களாக எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் பத்திரிகை, ஊடகங்களில் தவறான செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.
* உறுதியாக சொல்கிறோம்... இறுதியாக சொல்கிறோம். அதிமுக பா.ஜனதா கூட்டணியில் இல்லை. இல்லை.. இல்லை...
* பத்திரிகையாளர், ஊடகங்களை சேர்ந்தவர்கள் இனி எந்த இடத்திலும் இந்த கேள்வியை கேட்காதீர்கள்.
* சரியான நேரத்தில் கூட்டணியை அமைப்போம்.
* திமுக கூட்டணி பேச்சுவார்த்தை என்று சொன்னீர்கள். எங்கே முடிந்தது?. அந்த கூட்டணியில் இழுபறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
* 10 நாட்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட இடங்களை மீண்டும் கொடுக்க மறுக்கின்ற கட்சிதான் திமுக.
* அந்த கூட்டணியில் எந்த கட்சிகள் இருக்கும், இல்லை என்பது 10 நாட்களில் தெரிந்து விடும்.
* திமுகவை பொறுத்தவரை கூட்டணியை நம்பி இருக்கிறது. மக்களை நம்பி இல்லை.
* அதிமுக-வை பொறுத்தவரை மக்களை நம்பிக் கொண்டிருக்கிறது. மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் முடிவுதான் இறுதியானது. மக்கள்தான் வாக்களிக்கிறார்கள். அவர்களைத்தான் நாங்கள் எஜமானர்களாக எண்ணுகின்றோம்.
* வாக்களித்த மக்கள் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும். அதற்காகத்தான் அதிமுக.
- பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
- பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, நாட்டில் என்னென்ன நடக்கப் போகிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஓசூர்:
ஓசூரில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், முருகன், சாந்தன் ஆகியோர் இன்னும் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களை விடுவித்து, அவர்கள் விரும்பும் பகுதிகளுக்கு சென்று நிம்மதியாக வாழ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த 30 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், இலங்கை அரசுடன் பேசி தமிழர்கள் கொல்லப் படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த பின்னர், கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டத்தை கூட்டி, எங்களின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, நாட்டில் என்னென்ன நடக்கப் போகிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






