என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி காவல்துறையினர் 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • மொழி புரிதல் இல்லாததாலும், தவறான புரிதல் உள்ளிட்டவையால் தாக்குதல் சம்பவம் நடந்துவிட்டது

    கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூர் மற்றும் மாதப்பட்டி பகுதியில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவர்களை சந்தித்த ஊர் மக்கள், தவறான புரிதலால் தாக்கிவிட்டதாகவும், எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சிகிச்சைக்குத் தேவையான பணம் மற்றும் பழங்களையும் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

    "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செம்படமுத்தூர், துறிஞ்சிப்பட்டி மற்றும் தாளாப்பள்ளி கிராமத்தில் கடந்த 6-ம் தேதியன்று குழந்தைகள் கடத்த போவதாக வதந்தி பரவியது. இதனை அடுத்து, வடமாநிலத்தவர்கள் 5 பேரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.

    இதையடுத்து காவல்துறையினர் 5 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த கமல் ஹூசைன்(30), நிசாம் அலி(26), முகம்மது மெசுதீன்(30), ஆஷ் முகமது(27) சோகித் அலி என தெரிந்தது. இவர்கள் 5 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரத்தில் தங்கி, ஆட்டோவில் சென்று குப்பை, மது பாட்டில்களை சேகரித்து, அதில் கிடைக்கும் வருமானம் மூலம் வாழ்ந்து வந்தது தெரிந்தது.

    வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி காவல்துறையினர் 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து தொடர்புடைய 10 பேரை கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில் பெரியதாளப்பள்ளி ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் ஆகியோர் நேற்று இரவு (மார்ச் 8) கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி, காவல் ஆய்வாளர் குலசேகரன் மற்றும் காவல்துறையினருடன் , கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் வடமாநில இளைஞர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    அப்போது, "மொழி புரிதல் இல்லாததாலும், தவறான புரிதல் உள்ளிட்டவையால் தாக்குதல் சம்பவம் நடந்துவிட்டது. உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் அச்சம் அடைய வேண்டாம். இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது உங்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம்" என ஆறுதல் கூறினர். மேலும், சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களுக்கு நிதி உதவியும், பழங்கள் போன்றவற்றை அவர்கள் வழங்கினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, " இது போன்ற போலியான செய்திகளை கேட்டறிந்து வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீதும், போலியான செய்திகளை வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    அவ்வாறு சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் பொதுமக்களுக்கு தெரியவந்தால், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். எனவே, பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்பி தாக்குதல் நடத்தக் கூடாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜயகாந்த் பற்றாளர்கள் இன்று விழாவிற்கு வந்திருந்தனர்.
    • அனைத்து மக்களும் கேப்டனின் அருள் பெற வேண்டுமென்ற நோக்கத்தில், அவருக்கு கோவில் வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டதாக கீதா தெரிவித்தார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த காட்டாகரம் கிராமத்தில் காலஞ்சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருஉருவ சிலைக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. காட்டாகரம் கிராமத்தை சேர்ந்தவர் கீதா. இவர் இக்கிராமத்தில் ஓம்சக்தி ஆலயம் கட்டி அதனை பராமரித்து வருகிறார்.

    யூ டியூபில் விடியோ பதிவிட்டு, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். இந்நிலையில் இவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல் கொண்ட பற்று காரணமாக அவரின் 5 அடி திருஉருவ சிலை நிறுவி, இன்று அச்சிலைக்கு கும்பாபிஷேகம் செய்தார்.

    காட்டாகரம் பகுதியில் விஜயகாந்துக்கு திருஉருவ சிலை அமைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரது உருவ சிலைக்கு கும்பாபிஷேகம் செய்து அதனை யூடியூபில் மட்டுமே வெளியிட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜயகாந்த் பற்றாளர்கள் இன்று விழாவிற்கு வந்திருந்தனர்.

    திருப்பூர், வேலூர், சேலம் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.

    கும்பாபிஷேக விழா மேள தாளங்களுடன் நிறைவடைந்த நிலையில், விஜயகாந்துக்கு கற்பூர தீபாராதனை செய்து தொண்டரகள் வழிபட்டனர். அனைத்து மக்களும் கேப்டனின் அருள் பெற வேண்டுமென்ற நோக்கத்தில், அவருக்கு கோவில் வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டதாக கீதா தெரிவித்தார்.

    • போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்குவரத்து இடையூறாக நின்றுக் கொண்டும், படுத்துக் கொண்டும் இருந்தார்.
    • சுசீலாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள நகைக்கடையின் பின்புறம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு ஓட்டை போட முயற்சித்துள்ளனர்.

    கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சி அடிப்படையில் பழைய போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெகநாதன், விக்னேஷ் மற்றும் கண்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் பழைய போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த சுசிலா (வயது55) என்பவர் மது போதையில் போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்குவரத்து இடையூறாக நின்றுக் கொண்டும், படுத்துக் கொண்டும் இருந்தார். வாகன ஓட்டிகள் மீறி செல்ல முயன்றால் அவர்களை மிரட்டி வாகனத்தை தடுத்து நிறுத்தினார்.

    இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. விபரம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் சுசீலாவை சமாதானம்பபடுத்த முயன்றனர். அப்போது எனது மகன்களான ஜெகநாதன், விக்னேஷ் மற்றும் எனது மருமகன் கண்ணன் ஆகிய 3 பேர் மீது பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பியதாக வாதாடினார். மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோரை போலீசார் கைது செய்ததால் அவ்வப் போது மதுபோதையில் போலீஸ் நிலையம் சென்று வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு வந்த நிலையில் போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் போக்கு வரத்துக்கு இடையூறாக செயல்பட்டார். பின்னர் சுசீலாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயிலில் பயணம் செய்த சுஜன்புடியல் கால் தவறி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மத்தூர்:

    கோவை எக்ஸ்பிரஸில் அசாம் மாநிலம் பகுதியை சேர்ந்த சுஜன் புடியல் வயது (35). இவரது தந்தை பகத்புடியல். இவர்கள் இருவரும் அசாமில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு செல்ல கோவை எக்ஸ்பிரஸில் பயணம் செய்துள்ளனர். அப்போது நேற்று மாலை 5 மணியளவில் ரெயில் சாமல்பட்டி அருகே உள்ள கே.எட்டிப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில் ரெயிலில் பயணம் செய்த சுஜன்புடியல் கால் தவறி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். அதில் அவர் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுஜன்புடியல் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இறப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உடன் இருந்த அவரது தந்தை பகத் புடியலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேமரா பொருத்தி கண்காணித்ததில் பல்வேறு முயற்சிகளால் சிறுத்தை நடமாட்டம் உறுதியானது.
    • சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கு மாறும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே நாய்களை கொன்று சாப்பிட்டு சுற்றித்திரியும் சிறுத்தை, ஊருக்குள் புகுந்து ஆட்டை கவ்வியதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அடவிசாமிபுரம் மதனகிரி பகுதியில், முனீஸ்வரசாமி கோவிலையொட்டி, சனத்குமார நதி ஓடுகிறது. மழை காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். தற்போது போதிய நீரோட்டமின்றி, வறண்டு புதர்மண்டி கிடக்கிறது.

    இந்நிலையில், கோவில் பின்புறம் சனத்குமார நதியின் கரையில், கடந்த 4 மாதங்களாக சிறுத்தை ஒன்று பாறை இடுக்குகளில் மறைந்து கொண்டு, அப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் மற்றும் அருகில் உள்ள தெரு நாய்களை அடிக்கடி கவ்விக் கொண்டு செல்வது வாடிக்கையாக இருந்தது. இதனால், கிராம மக்கள் பீதிக்குள்ளான நிலையில், தேன்கனிகோட்டை வனத்துறையினர், கூண்டு வைத்து, சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்தனர்.

    ஆனால், சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள பண்ணையில் செயல்படும் தனியார் ஓட்டலில் இருந்து கொட்டப்படும் கழிவுகளை சாப்பிடுவதற்காக வரும் நாய்களை கடித்து தின்றவாறு, அப்பகுதியில் சிறுத்தை முகாமிட்டதை கேமரா பொருத்தி கண்காணித்ததில் பல்வேறு முயற்சிகளால் சிறுத்தை நடமாட்டம் உறுதியானது.

    இதையடுத்து, அப்பகுதியில் சிறுத்தை தப்பியதால், சலிப்படைந்த வனத்துறையினர், கடந்த சில நாட்களாக தேடும் பணியை கைவிட்டிருந்தனர்.

    இந்நிலையில், நேற்று மாலை, அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த அடவிசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தண்டரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் துரைசாமி என்பவரின் ஆட்டை சிறுத்தை கவ்வியுள்ளது. அதனைக் கண்டு அவ்வழியாக சென்ற பெண் கூச்சலிட்டு உள்ளார். இதனால், ஆட்டை விட்டு விட்டு சிறுத்தை தப்பிச் சென்றது.

    இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு துரைசாமி தகவல் தெரிவித்தார். இதன்பேரில், வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். ஆனால், அதற்குள் பாறை இடுக்குகளில் சென்று சிறுத்தை மறைந்து கொண்டது. இன்று 2-வது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுவரை 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை அடித்து தின்றுள்ளதாவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பு, நவீன கூண்டு அமைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கு மாறும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • எருது விடும் திருவிழாவை காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
    • 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த, அத்திகானூரில் 71-ம் ஆண்டு எருது விடும் விழா நடந்தது. இந்த விழாவை ஊர்கவுண்டர் சங்கர், ஊர் செட்டியார் ராஜேந்திரன் மற்றும் முனுசாமி செட்டியார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட காளைகளை இந்த விழாவிற்கு அழைத்து வந்திருந்தனர்.

    குறிப்பிட்ட துாரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் காளைக்கு முதல் பரிசாக ரூ.2.22 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.1.77 லட்சமும், 3-ம் பரிசாக ஒரு லட்சமும் என 50-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவை காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    • நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் போடவில்லை.
    • தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிப்பு செய்தவர் யாராக இருந்தாலும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஓசூர்:

    ஓசூரில் ரெயில் நிலையத்தை நவீனப்படுத்தும் அரசு நிகழ்ச்சியில் செல்லக்குமார் எம்.பி. பங்கேற்றார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் போடவில்லை.

    நிகழ்ச்சிக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தொடங்கியிருக்க வேண்டும்.

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிப்பு செய்தவர் யாராக இருந்தாலும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    • காவிரியை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.
    • மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, ஒரு போதும் அ.தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும் இடம் தர மாட்டார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்றது.

    பாகலூர் பஸ் நிலையத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்டக்குழு உறுப்பினருமான ரவிகுமார் தலைமை தாங்கினார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தம்பிதுரை எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல், தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல். தமிழகத்தில், நான்கரை ஆண்டுகாலம் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை தந்தார். தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்தது. சாதாரண தொண்டராகிய எடப்பாடி பழனிசாமியை மக்கள் நம்ப வேண்டும். அவர், உங்களில் ஒருவர். நம்மில் ஒருவர். அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு தர வேண்டும்.

    தமிழகத்தில், பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, கூட்டுறவு சங்கம்... என எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் மட்டும்தான் போட்டியாக இருக்கும். காவிரியை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். மேகதாது அணை கட்டுவது பயனற்றது. அங்கு, அணை கட்டாமலேயே பெங்களூரு மாநகரத்திற்கு தேவையான 18 டிஎம்சி தண்ணீரை கே.ஆர்.எஸ். அணையிலிருந்து எடுத்துக் கொள்ளட்டும். அதற்கு, அதிமுக சார்பில் எந்த ஆட்சேபணையும் இல்லை. இதுதான் அதிமுகவின் கருத்து மற்றும் கொள்கையாகும். மேகதாதுவில் அணை கட்டுவது தேவையற்றது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, ஒரு போதும் அ.தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும் இடம் தர மாட்டார். மக்கள் இதை நம்பலாம். இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.

    மேலும், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமைக்கழக பேச்சாளர் சாரதா ஆகியோர் கூட்டத்தில் பேசினர். இதில், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், பாகலூர் ஊராட்சி தலைவர் வி.டி. ஜெயராமன் நன்றி கூறினார்.

    • கடையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடி சென்றுள்ளனர்.
    • இருவர் மீது வழக்கு பதிவு ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள உப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி அன்று மளிகை பொருட்கள் வாங்குவதாக 2 பேர் வந்து மளிகை பொருட்கள் வாங்கிச் சென்றனர்.

    அப்போது கடையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடி சென்றுள்ளனர். இது குறித்து மாதையன் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் ஊத்தங்கரை டி.எஸ்.பி பார்த்தீபன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து செல்போன் திருடிய நபர்களை சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து தனிப்படை போலீஸார் தேடி வந்துள்ளனர்.

    இதில் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் தலைமை காவலர்கள் வடிவேல், பிராபாகரன், மணிவேல் அடங்கிய தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி சென்று சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முகமதுஅலி வயது (22), அதே பகுதியைச் சேர்ந்த ஜாபர்பாஷா (22) ஆகியோர் செல்போனை திருடியது தெரிய வந்தது. 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்ததுடன் இருவர் மீது வழக்கு பதிவு ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.
    • விபத்தால் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த கார் சூளகிரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது ஒரு நாய் குறுக்கே வந்தது. அந்த நாய் மீது மோதாமல் இருக்க அந்த காரை ஓட்டி வந்தவர் திடீரென்று பிரேக் போட்டார். அப்போது காரின் பின்னால் திருச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த கண்டெய்னர் லாரியும் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.

    இதனை சற்று எதிர்பாராத பின்னால் வந்த கிருஷ்ணகிரி -ஓசூர் செல்லும் அரசு பஸ் ஒன்று கண்டெய்னர் லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.

    இந்த விபத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர்களான அரசு பஸ் டிரைவர் திம்மராயன் (வயது50), கண்டக்டர் சிங்கமாதவன் (51), பஸ்சில் பயணம் செய்த அரசு பள்ளி ஆசிரியை கலா உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • குன்னத்தூர்-ஆதாலியூர் என்ற இடத்தில் பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து எம்.பி. வந்த காரை வழிமறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • உடனடியாக மதுபான கடையை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதாக செல்லகுமார் எம்.பி. கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த, குன்னத்தூர் அருகே உள்ள சென்னானூர் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது.

    இந்த கடையினால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் மதுகுடித்து விட்டு சிலர் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளிடம் ரகளையில் ஈடுபட்டு வருவதால், வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக இருப்பதாலும், பெண்கள் தனியாக நடந்து கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக்கூறி அதிகாரிகளிடம் குற்றம்சாட்டி வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரிகிறது.

    இந்த நிலையில் சென்னானூர் கிராமத்தில் பூமி பூஜைக்காக கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமார் வந்தார்.

    அப்போது , குன்னத்தூர்-ஆதாலியூர் என்ற இடத்தில் பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து எம்.பி. வந்த காரை வழிமறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் எம்.பி.யிடம் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் மதுபான கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கூறினர்.

    அதன்பின்னர் தங்களது கோரிக்கை மனுவை எம்.பி.யிடம் பொதுமக்கள் கொடுத்தனர். உடனடியாக மதுபான கடையை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதாக டாக்டர் செல்லகுமார் எம்.பி. கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • எருது விடும் விழாவில், சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற, 20 பேர் காயமடைந்தனர்.
    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் எருதாட்டத்தை கண்டு கழித்தனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே தியாகரசனப்பள்ளியில், எருது விடும் விழா நடந்தது. சூளகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் மொத்தம், 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.

    விழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, கிடா வெட்டி சிறப்பு. பூஜை நடந்தது. அதன்பின் விழா திடலில் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.

    அவற்றை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த தடுக்குகளை இளைஞர்கள் எடுத்தனர்.

    காளைகள் சீறிப்பாய்ந்த போது, அடக்க முயன்ற இளைஞர்கள் மற்றும் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என, 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    அவர்கள், சூளகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் எருதாட்டத்தை கண்டு கழித்தனர்.

    விழாவில், 20,000க்கும் மேற்பட்டோர் திரண்டதால், சூளகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×