என் மலர்
கிருஷ்ணகிரி
- லாரியை ஓட்டி வந்த வாகனத்தின் டிரைவர் போலீசாரை கண்டவுடன் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
- வழக்கு பதிவு செய்த சூளகிரி போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகே சூளகிரி காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாரியை ஓட்டி வந்த வாகனத்தின் டிரைவர் போலீசாரை கண்டவுடன் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
அந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்த போது, அதில் இரும்பு தகரம் மூலம் தடுப்பு ஏற்படுத்தி தனியறை அமைத்து மறைத்து வைத்திருந்த 150 மூட்டைகளில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
அதனை கைப்பற்றிய போலீசார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரியை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த சூளகிரி போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.
- மறியலால், பெட்டமுகிலாளம் சாலையில் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலளாம் மலைபகுதி, கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் அடி உயரமான மலை கிராமம் என்பதால், பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் அப்பகுதியில் நிலங்களை விலைக்கு வாங்கி ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் கட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால், தேன்கனிக்கோட்டை அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது. விவசாயிகள் தங்கள் நிலங்களில், ஆயிரம் அடிவரை அழ்துளை கிணறு அமைத்தும், தண்ணீர் கிடைப்பதில்லை.
இந்நிலையில், பெட்டமுகிலாளம் மலை பகுதி, காவேரி வடக்கு உயிரின சரணாலய பகுதியாக உள்ளதால், மண் வளம், வன உயிரினங்களை பாதுகாக்க, ஆழ்துளை கிணறு அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பெட்டமுகிலாளம் மலை பகுதிக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதோடு, பயிர்கள் கருகி பாதிக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க முடியாததால், பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், நேற்று அய்யூர்- பெட்ட முகிலாளம் சாலையில் உள்ள வனத்துறை விடுதி அருகே, அரசு டவுன் பஸ்சை மறித்து சாலை மறியல் செய்தனர். மேலும், அவர்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த மறியலால், பெட்டமுகிலாளம் சாலையில் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வேலன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த எர்ரஅள்ளி கருகன்சாவடி சேர்ந்தவர் வேலன் (வயது42).
இவர் குடிநீர் தொட்டி டேங்க் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று மாலை 5 மணிக்கு காவேரிப்பட்டணத்தில் ஏழுஜடை முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள ஏரி அருகேமின் மோட்டார் அணைக்க சென்றார்.
அங்கு அதே பகுதியை சார்ந்த முனியப்பன் என்பவர் மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து வேலன் முனியப்பனுக்கு இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த முனியப்பன் அங்கிருந்த மீன் வெட்டும் கத்தியால் வேலனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்து ரத்தம் அதிகமாக வெளியேறி சம்பவ இடத்திலேயே வேலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அந்த பக்கம் சென்றவர்கள் வேலன் கீழே பிணமாக இருப்பதை பார்த்து உடனடியாக காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து வேலனின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வேலன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த ஏரியில் இருந்த மீன் ஷெட்டுக்கு தீ வைத்தனர்.
இதனால் மீன்பிடிக்கும் செட்டுக்குள் இருந்த இரு சக்கர வாகனம் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்தது.
பின்பு பாலக்கோடு ரோட்டில் சாலை மறியல் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து செல்லும்படி கூறினர். பின்பு அவர்கள் அங்கிருந்து காவேரிப்பட்டணம்-சேலம் மெயின் ரோடு, பாலக்கோடு பிரிவு சாலையில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலை செய்தவனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பேப்பருக்கு தீவைத்து கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி உட்கோட்ட போலீஸ் துணை கண்காணிப்பாளர் அவர்களை சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. அப்பொழுது அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். இதனை அடுத்து வேலனை கொலை செய்த முனியப்பன் தருமபுரிக்கு தப்பி வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ரமணன் மற்றும் போலீசார் உடனே விரைந்து வந்து தருமபுரி பஸ் நிலையத்தில் தலைமறைவாக இருந்த முனியப்பனை நேற்று இரவு கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த 3 மணி நேரத்துக்குள்ளாகவே கொலையாளி முனியப்பனை போலீசார் கைது செய்ததால் அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
இந்த பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது.
மேலும் 24 மணி நேரமும் அந்த பகுதியில் உள்ள ஒரு சந்து கடையில் மது பானங்கள் விற்கப்படுகிறது.
குறிப்பாக பாலக்கோடு ரோட்டில் உள்ள சந்து கடையில் 24 மணி நேரமும் கிடைக்கிறது. இதனால் இப்பகுதியில் குடித்துவிட்டு ரோட்டில் செல்பவர்களை குடித்துவிட்டு வீண் தகராறுகள் ஏற்பட்டு தற்போது நடந்த கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது என்றனர்.
எனவே இப்பகுதியில் உள்ள சந்துகடைகளில் 24 மணிநேரமும் நடைபெறும் மது விற்பனையை உடனடியாக அதிகாரிகள் தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- விண்ணப்பம் செய்ய ரூ.150 முதல் 200 வரை வசூல் செய்யப்பட்டு டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டது.
- உமா மகேஸ்வரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெனிபர், ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடி புகைப்படத்துடன் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று தருவதாக நோட்டீஸ் ஆங்காங்கே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், ஓசூர் தாலுகா அலுவலக சாலை அருகே சந்திரசூடேஸ்வரர் நகரில் உள்ள ஒரு தையற் கடையில், பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் ராம்குமார் ஆகிய இருவரும் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில், ரூ. 1 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறியதால், அங்கு ஏராளமான பெண்கள் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்ய திரண்டனர்.
பின்னர், அங்கு விண்ணப்பம் செய்ய ரூ.150 முதல் 200 வரை வசூல் செய்யப்பட்டு டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து, சப்- கலெக்டரும், தேர்தல் அலுவலருமான பிரியங்கா அங்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர், எந்தவித அனுமதியின்றியும் மத்திய அரசின் திட்டத்தில் கடனுதவி வாங்கி தருவதாக பொதுமக்களுக்கு விநியோகித்த விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள், கணினிகளை பறிமுதல் செய்தும், மேலும், அங்கு தேர்தல் பறக்கும் படையினரை வரவழைத்து டோக்கன் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், இது குறித்து தேர்தல் அலுவலர் பிரியங்கா கூறுகையில்:-
"தேர்தல் நடத்தை முறைகள் அமலில் இருந்தாலும், மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தை பெறுவதற்கு பயனாளிகள் இ-சேவை மையத்தில் விண்ணப்பம் செய்யலாம், ஆனால் இங்கு உரிய அனுமதி பெறாமல் தையற் கடையில் வைத்து சிலர், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் வரை வங்கி கடன் பெற்று தருவதாக பொதுமக்களிடம் பணம் வாங்கி டோக்கன் வழங்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது போன்ற செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இந்த திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பொது மக்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என கூறினார்.
உமா மகேஸ்வரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெனிபர், ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- பா.ஜ.க. ஏற்பாடு செய்த போராட்டத்தில் மத்திய மந்திரி ஷோபா தமிழர்கள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்தார்.
- அவரது இந்தக் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி:
தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று மத்திய மந்திரி ஷோபா பேசினார். பா.ஜ.க. சார்பில் பெங்களூரில் நடந்த போராட்டத்தின் போது அவர் இந்த சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும் மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்துள்ளது.
இதற்கிடையே, கிருஷ்ணகிரியில் பயிற்சி பெற்ற பெங்களூரு உணவக குண்டுவெடிப்பில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து மட்டுமே எனது கருத்து இருந்தது. தமிழ்நாட்டில் யாரேனும் எனது கருத்தால் வருத்தம் அடைந்திருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது கருத்தை வாபஸ் பெறுகிறேன் என மத்திய மந்திரி ஷோபா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார் கூறியதாவது:
அமைதியாக வளர்ச்சியை நோக்கிச் செல்லும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பற்றி மத்திய மந்திரி ஷோபா கரந்தலஜே கூறியது கடும் கண்டனத்திற்கு உரியது.
அமைதியை விரும்பும் கிருஷ்ணகிரி மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வேலையாகவே பா.ஜ.க. மந்திரியின் இந்த செயலை நான் பார்க்கிறேன்.
அன்று கோட்சே எப்படி தேசத்தந்தை காந்தியை கொலை செய்து நாட்டில் கலவரத்தைத் தூண்ட முயற்சித்தானோ, அதே திட்டத்தை தான் இன்று பா.ஜ.க. எனது கிருஷ்ணகிரி தொகுதியில் திட்டமிட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை
- சிறுமி காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள பட்வாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் காமாட்சி தம்பதியின் மகளான ஸ்பூர்த்தி (வயது 16) பாகலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர்களது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். இந்நிலையில் 15-ம் தேதி பட்டவாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் சிறுமி சடலமாக மிதந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிறுமி அந்த வாலிபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாணவியை மீட்டு மீண்டும் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிறுமி காணாமல் போன நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை யாரோ துண்டை போட்டு மூடியுள்ளனர். இதனையடுத்து நடந்த விசாரணையில் அந்த சிறுமியின் பெற்றோரே அவரை கொலை செய்தது தெரியவந்தது.
மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் மகளை கண்டித்துள்ளனர். ஆனால் மாணவி காதலை கைவிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மகளை தாக்கி, ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து மாணவியின் தந்தை பிரகாஷ், தாயார் காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- கைதான மீத்லேக்குமாரை போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பேரிகை காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாசன்புரம் கிராமத்தில் அமைந்த தனியார் கல்குவாரி கிரசர் தொழிற் சாலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒம்கார் மண்டேல் மகன் மீத்லேக்குமார் (வயது 24) என்பவர் லாரி டிரைவராக வேலைக்கு சேர்ந்தார்.
இவருக்கு திருமணமாகி ராஜில்குமாரிஸ் (22) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் காமன் தொட்டியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பமாக இருந்து கொண்டு மீத்லேக்குமார் தினமும் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் அவரது மனைவி வீட்டின் அருகே உள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபரிடம் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்த தகவல் மீத்லேக்குமாருக்கு தெரிய வந்து, தனது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை கண்டித்து வந்தார். அதை பொருட்படுத்தாத ராஜில்குமாரிஸ் மீண்டும் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் தனது மனைவியை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்த மீத்லேக்குமார் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியிடம் அன்பாக பேசி தான் வேலை செய்யும் கிரசர் தொழிற்சாலைக்கு லாரியில் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு கணவன், மனைவியும் இருவரும் லாரியை விட்டு இறங்கி பேசிகொண்டே சென்றனர். அப்போது மீத்லேக்குமார் வண்டியில் இருந்து இரும்பு கம்பியை எடுத்து மனைவி நெத்தியிலும் தலையிலும் அடித்து கொலை செய்தார்.
இறந்த தனது மனைவியின் உடலை தரதரவென இழுத்து சென்று தொழிற்சாலையில் உள்ள 400 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் போட்டு விட்டு அங்கிருந்து எதுவும் நடக்காதது போல் சாதாரணமாக வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் அவர் மறுநாள் காலை தனது நண்பரிடம் தனது மனைவியை காணவில்லை என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மீத்லேக்குமார் தனது நண்பருடன் சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் செய்தனர். அப்போது போலீசார் மாயமான ராஜில்குமாரிஸ் குறித்து அவரது கணவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரித்தனர்.
இதில் மீத்லேக்குமார் தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கொலை செய்து விட்டு தொழிற்சாலையில் உள்ள பள்ளத்தில் உடலை போட்டு விட்டதாக கூறினார்.
உடனே போலீசார் மீத்லேக்குமாரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு ராஜில்குமாரிசின் உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கைதான மீத்லேக்குமாரை போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பாரத ஸ்டேட் வங்கி. சிட்கோவில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் இதில் வங்கி கணக்குகள் வைத்துள்ளன.
- சேதாரத்தின் மதிப்பு குறித்து வங்கி உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின் கணக்கீடு செய்து தான் சொல்ல முடியும்.
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சிட்கோ பகுதியில் அமைந்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. சிட்கோவில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் இதில் வங்கி கணக்குகள் வைத்துள்ளன. அது மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களும் சேமிப்பு கணக்குகள் வைத்துள்ளனர்.
எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் வங்கி இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் வங்கிக்குள் புகை வருவதை கண்ட வாட்ச்மேன் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
மேலும் துவாக்குடி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து திரு வெறும்பூர், பெல், நவல்பட்டு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.
இதில் வங்கியிலிருந்து அனைத்து கம்ப்யூட்டர்களும் எரிந்து சேதமாகிவிட்டது. இதுகுறித்து வங்கி மேலாளர் பிரசாந்த் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சேதாரத்தின் மதிப்பு குறித்து வங்கி உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின் கணக்கீடு செய்து தான் சொல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர்.
வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தெரிய வரவும் ஒவ்வொருத்தரும் தங்களது கணக்கின் நிலை தங்கள் நகை அடகு வைத்ததுடன் நிலை கண்டு அச்சம் தெரிவித்துள்ளனர்.
- தி.மு.க. நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பேரிகை ஊராட்சி பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 38). இவர் தி.மு.க. முன்னாள் நிர்வாகி.
இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
தொழில்அதிபரும், உறவினருமான கர்நாடகா மாநிலம் அனிகிரிப் பள்ளியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கார்த்திக்கின் உறவினருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரதாப் (30) என்கிற இளைஞருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததது.
இந்த நிலையில் கார்த்திக் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று மாலை 5 மணி அளவில் பேரிகைக்கு திரும்பும்போது ஓசூர் அடுத்த சூலகுண்டா என்னும் கிராமத்தில் உள்ள ஏரிக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது கார்த்திக்கை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பிரதாப் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். உடனே பிரதாப் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்து துடிதுடித்து கொண்டிருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பேரிகை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திக் உடலை மீட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை சம்பவம் குறித்து தகலவறிந்த மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தங்கராஜ் மற்றும் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் ஒரு தனிப்படையும், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தலைமையிலும் என 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் கொலையாளிகள் 3 பேரும் கர்நாடகா மாநிலத்தில் பதுக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படை தனிப்படையினர் விசாரணைக்காக பெங்களூருவுக்கு விரைந்துள்ளனர்.
தி.மு.க. நிர்வாகி நிலத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பேரண்டப்பள்ளி, சூளகிரி, சுற்று வட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட எருதுகள் களத்தில் விடப்பட்டது.
- 500 மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களத்தில் இறங்கி சீரி பாய்ந்த காளைகளுடன் மள்ளு கட்டி மடக்கி பிடித்தனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் , சூளகிரி தாலுகா - சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட தோரிப்பள்ளி ஊராட்சிக்கு சேர்ந்த கல்லுக்குறுகி கிராமத்தில் அமைந்த முனீஸ்வரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு அப்பகுதி ஊர் கவுண்டர் குள்ளப்பா தலைமை தாங்கினார்.
விழாவிற்கு தோரிப்பள்ளி, கல்லுக்குறுக்கி அட்ட குறுக்கி, காமன்தொட்டி, வெங்கடேசப்புரம், அத்திமுகம், பேரிகை, பேரண்டப்பள்ளி, ஓசூர், சூளகிரி, சுற்று வட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட எருதுகள் களத்தில் விடப்பட்டது.
500 மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களத்தில் இறங்கி சீரி பாய்ந்த காளைகளுடன் மள்ளு கட்டி மடக்கி பிடித்தனர். அதில் சிலருக்கு காயங்கள் எற்பட்டது . அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க பேரிகை, அத்திமுகம் அரசு மருத்துவமணையில் சேர்த்தனர்.
இந்த விழாவில் பேரிகை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த எருது விடும் விழாவை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர்.
- பால்வண்ணன் என்பவர் கடந்த 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை ஊத்தங்கரை அறநிலையத்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
- அரசு அதிகாரியை அரசுக்கு எதிராக கையாடல் செய்திருப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்துக்கு எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி எதிரே இயங்கி வரும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பால்வண்ணன் என்பவர் கடந்த 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை ஊத்தங்கரை அறநிலையத்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
அப்போது ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதியில் உள்ள 43 கோவில்களுக்கான வழங்கப்பட்ட அரசு நிதியையும் கோவில் அறநிலையத்துறை உண்டியல் பணங்களையும் அறநிலையத்துறை வங்கிக் கணக்கானது ஆய்வாளர் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வந்ததாக தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இவர் மோசடி செய்யும் நோக்கத்தோடு வங்கி கணக்கு புத்தகங்களில் அளித்தல் மற்றும் மாறுதல் செய்து அரசு ஆவணங்களை சரிவர பராமரிக்கப்படாமல் அரசு பணம் ரூ.86,06,026 பணத்தை எடுத்து கையாடல் செய்ததாக தெரியவந்தது.
மேலும் அரசு சொத்தினை ஏமாற்றி பணத்தைக் கையொப்பமிட்டு அரசு முத்திரையும் பயன்படுத்தி வஞ்சித்துள்ளதாகவும் பால்வண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஜோதி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதியப்பட்ட வழக்கினை விசாரணை அதிகாரி சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், முன்னாள் அறநிலையத்துறை அலுவலர் பால்வண்ணன் மீதான வழக்கினை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு அதிகாரியை அரசுக்கு எதிராக கையாடல் செய்திருப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தற்போது பால்வண்ணன் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் அறநிலையத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
- ரெயில் வந்ததை அறியாத மூதாட்டி மீது திடீரென்று ரெயில் மோதியது.
- மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி ரெயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தை மூதாட்டி ஒருவர் கடந்து சென்றார்.
அப்போது ரெயில் வந்ததை அறியாத அந்த மூதாட்டி மீது திடீரென்று ரெயில் மோதியது. இதில் மூதாட்டி உடல் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்ததில் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த மூதாட்டி வைத்திருந்த பையில் அவரது வங்கி புத்தகம், ஆதார் அட்டை இருந்துள்ளது.
மேலும், இறந்த மூதாட்டி ஆனந்தூர் அருகே உள்ள ரெட்டிபட்டி கிராமப்பகுதியைச் சேர்ந்த வெங்கட்டன் மனைவி மூக்கியம்மாள் என்பதும், அவர் அரசு வங்கியில் தனது முதியோர் உதவித்தொகை பணத்தை எடுப்பதற்காக ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மூக்கியம்மாள் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






