என் மலர்
கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள விழா மேடைக்கு முதலமைச்சர் வந்தார்.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
கிருஷ்ணகிரி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கிருஷ்ணகிரி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலமாக காலை ஓசூர் தனேஜா விமான ஓடு தளத்தை வந்தடைந்து அங்கிருந்து கார் மூலமாக கிருஷ்ணகிரிக்கு வந்தார்.
அங்கு சுங்கச்சாவடி அருகில் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராயக்கோட்டை மேம்பாலம் முதல் அண்ணா சிலை, பெங்களூரு சாலை, 5 ரோடு, சென்னை பை-பாஸ் சாலை வரையில் முதலமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது. அப்போது பொதுமக்களிடம் இருந்து மனுக்களை அவர் பெற்று கொண்டார்.
இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள விழா மேடைக்கு முதலமைச்சர் வந்தார். அங்கு காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து விழா மேடை அருகில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அங்கு நடைபெற்ற அரசு விழாவில் கலெக்டர் தினேஷ்குமார் வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2,885 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் மாவட்டத்தின் திட்டப்பணிகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பேசினார்.
- ஓசூர், வேப்பனஹள்ளி மற்றும் தளி ஆகிய மூன்று தொகுதிகளை சேர்த்து ஒரு புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும்.
- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைய தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அதனை பா.ம.க. வரவேற்கிறது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று நடைபெற உள்ள மேற்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சியின் மாநில தலைவர் டாக்டர் ராமதாஸ் நேற்று ஓசூர் வந்தார். பின்னர், ஓசூர் மூக்கண்ட பள்ளி பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓசூர், வேப்பனஹள்ளி மற்றும் தளி ஆகிய மூன்று தொகுதிகளை சேர்த்து ஒரு புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும், ஓசூர் மாநகராட்சியாக உள்ளது.
ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பல்வேறு காலகட்டத்தில் பா.ம.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும். அதே போல், ஓசூர் நகரத்திற்கு மெட்ரோ ரெயில் கண்டிப்பாக தேவை. நாளுக்கு நாள் ஓசூர் நகரம் வளர்ந்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைய தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அதனை பா.ம.க. வரவேற்கிறது.
தந்தை, மகன் பிரச்சனை குறித்த கேள்விக்கு கடந்த 10, மற்றும் 11-ந் தேதியுடன் தீர்ந்து விட்டது. நல்லவை மேலே போகும். தீயவை கீழே போகும் என்ற அவர், அதனை தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் மொழி பெயர்த்து கூறுமாறு ஜி.கே.மணி மற்றும் முனிராஜிடம் கூறினார்.
தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி வளர்ந்து வருகிறது. எங்கள் கட்சி, யாருடன் கூட்டணி என்பது குறித்து நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன். அதற்கான அதிகாரத்தை, கட்சியின் பொதுக்குழு எனக்கு அளித்துள்ளது.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
- கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
- ராமதாஸ் வருகையையொட்டி ஓசூர் நகரில் வழியெங்கும் கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் ஓசூரில் உள்ள சூடப்பா திருமண மண்டபத்தில் நடக்கிறது.
இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் மருத்துவர் ராமதாஸ் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
ராமதாஸ் வருகையையொட்டி ஓசூர் நகரில் வழியெங்கும் கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
- நீர்வரத்து முழுவதும் தென்பெண்ணை ஆற்றிலும், பாசன கால்வாய்களில் திறந்துவிடப்பட்டுள்ளது.
- அணை பகுதியை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி நீர்வரத்து 1697 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.15 அடியாக உள்ளதால், நீர்வரத்து முழுவதும் தென்பெண்ணை ஆற்றிலும், பாசன கால்வாய்களில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 2195 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆற்றில் சீறி பாய்ந்து அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக, தரைப்பாலம் வழியாக பூங்காவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தரைப்பாலத்தின் இருபகுதிகளிலும் கே.ஆர்.பி. அணை போலீசார் யாரும் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அணை பகுதியை பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல் ஆற்றங்கரை யோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ கூடாது என நீர்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
- ஓசூர், திறமையும் புதுமையும் சந்திக்கிற நகரமாக இருக்கிறது.
- திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டை பற்றி, தெரிந்து கொண்டு முதலீட்டாளர்கள், ஆர்வமாக வருகிறார்கள்.
ஓசூர்:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், 23,303.15 கோடி ரூபாய் முதலீட்டில், 44,870 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் 1003.85 கோடி ரூபாய் முதலீட்டில் 4,483 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில், 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆக மொத்தம், ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 250 கோடி ரூபாய் முதலீட்டில் 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 3 முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து, 1210 கோடி ரூபாய் முதலீட்டில் 7900 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன், நான்கு நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஜெர்மனி, லண்டன் போன்ற ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு 15,516 கோடி ரூபாய் முதலீட்டோடு தமிழ்நாட்டுக்கு திரும்பிய 3 நாளில் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக உங்களை சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் போய் விட்டு வந்த பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகள். இன்றைக்கு இங்கு ரூ.26 ஆயிரம் கோடி முதலீடுகள் கையெழுத்தாகி உள்ளது. நம்மோட சாதனையை நாம்தான் முறியடித்து வருகிறோம். அது மட்டுமல்ல 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 1,600 கோடி ரூபாய் முதலீட்டுக்கான 4 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறோம்.
ஓசூர், திறமையும் புதுமையும் சந்திக்கிற நகரமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வரைபடத்தில், தனித்த அடையாளம் பெற்ற நகரம் ஓசூர். வளர்ச்சியின் முகம்.
இந்தியாவை கடந்து உலகத்தை ஈர்க்கும் நகரகமாக ஓசூர் ஒளி வீசுகிறது. அப்படிப்பட்ட ஓசூரில் தமிழ்நாட்டில் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று வந்திருக்கக்கூடிய முதலீட்டாளர்கள் எல்லோரையும் வரவேற்கிறேன்.
தமிழ்நாடு தொழில்துறையில், இவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்றால், அதுக்கு முக்கிய காரணம் துடிப்பான, இளமையான அமைச்சராக இருக்கக்கூடிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, போன மாதம் தூத்துக்குடியில் வின்பாஸ்ட் நிறுவனத்தை தொடங்கி வைத்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டேன்.
இன்றைக்கு ஓசூரில் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, மாலை டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நியூ டெல்டா ஸ்பாட் உற்பத்தி மையத்தை திறந்து வைத்து உரையாற்ற இருக்கிறேன். அடுத்து வர இருக்கக்கூடிய மாதங்களுக்கும் 'டார்க்கெட்' கொடுத்திருக்கிறேன்.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் நாங்கள் 2030-க்குள் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய முடிவு செய்தோம். அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் அதற்கு தொழில் வளர்ச்சி தான் அடிப்படை.
அதனால்தான் அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மிகவும் சிறப்பான வகையில் உருவாக்கி, அவற்றை மேலும் மேலும் மேம்படுத்தி அது மூலமாக தொழில் செய்யக்கூடிய சூழலை வலுப்படுத்துகிறோம்.
அதனால்தான் தமிழ்நாட் டில் பொருளாதார வளர்ச்சி இந்தியாவில் எங்கேயும் இல்லாத வகையில் 11.19 சதவீதத்தை தொட்டுள்ளது. இந்த வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கத்தான் முதலீட்டாளர்கள் மாநாடுகளையும், முதலீட்டாளர்களிடம் சந்திப்புகளையும் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டு வருகிறோம்.
திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டை பற்றி, தெரிந்து கொண்டு முதலீட்டாளர்கள், ஆர்வமாக வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் தொழில் துறை அமைச்சரையும் அதிகாரிகளையும் சந்திக்கும்போது நான் சொல்வது ஒன்றுதான்.
அது என்னவென்றால் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்பதுதான். மகிழ்ச்சியாக சொல்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கையெழுத்திட்ட வகையில் 77 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. எங்களுடைய குறிக்கோள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவங்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும. அதைத்தான் செய்து காட்டிக் கொண்டிருக்கிறோம்.
கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரும் தொழில் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் ஓசூர் பார்த்துக் கொண்டு வருகிறது.
ஓசூர் உள்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான புதிய தொழிற்சாலைகளை இந்த 4 ஆண்டு காலத்தில் கொண்டு வந்திருக்கிறோம். ஒரு காலத்தில், சிறிய தொழில் நகரம் என சொல்லப்பட்ட ஓசூர் இன்று வளர்ச்சி அடைந்து பல தொழிற்சாலைகள் வரும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதாவது நாட்டின் தொழில் வளர்ச்சி முகமாக ஓசூர் மாறி உள்ளது.
இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும் ஓசூருக்கும் தமிழ்நாடு அரசு என்னென்ன செய்துள்ளது என்றால், முதலில் இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
ஓசூர் தொழில் வளர்ச்சிக்காக நாம் செய்ததில் முக்கியமானது சிப்காட் தொழிற்பூங்கா. 2092 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ஓசூர் சிப்காட்டில் 371 தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள்.
2-வது சிறப்பான உள்கட்டமைப்போடு அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்பூங்காவில் தடையில்லாமல் தண்ணீர் கிடைக்க டி.டி.ஆர்.ஓ. நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3-வதாக சொல்ல வேண்டும் என்றால் சிப்காட் நிறுவனம் 'போர்ட் இங்குபேட்டர்' அமைத்து உள்ளது.
4-வது சூளகிரி பகுதியில் 689 ஏக்கரில் ஒரு தொழிற்பூங்கா. 5-வது பர்கூரில் 1379 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலத்துடன் கூடிய தொழிற்பூங்கா.
6-வது குருவரப்பள்ளியில் 150 ஏக்கரில் தொழில் பூங்கா ஆகிய தொழிற்பூங்காக்களை சிப்காட் நிறுவனம் நிறுவி இருக்கிறது.
இன்றைக்கு திறந்திருக்கிற ரூ.210 கோடி மதிப்பில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய தொழிற்பூங்காவில் இதுவரை 22 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
7-வதாக 2728 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு பெறப்பட்டுள்ளது. 6,682 பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. 8-வது தேன்கனிகோட்டை வட்டம் நாகமங்கலம் கிராமத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டிட்கோவுடன் இணைந்து விடியல் ரெசிடென்ஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் மூலமாக பணியாளர்கள் தங்குவதற்கு 64 ஏக்கரில் தொழிலாளர் குடியிருப்பு கட்டி வருகிறார்கள்.
முதல் கட்டமாக 6 ஆயிரம் பேர் தங்கும் வகையில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது. இதன் மூலம் மகளிர் பாதுகாப்பு, வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. பணிபுரியும் மகளிர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். 9-வதாக ஐ.டி. நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர்தர ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றுக்கான மையமாக ஓசூரை உருவாக்க போகிறோம். மேலும் அறிவுசார் வழித்தட திட்டத்தையும் செயல்படுத்த போகிறோம்.
இதன்மூலம் அறிவுசார் பொருளாதாரம் பெருமளவு அதிகரிக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி நன்கு மேம்படும். 10-வது ஓசூரில் 5 லட்சம் சதுரடியில் ரூ.400 கோடி மதிப்பில் டைடல்பார்க் நிறுவப்படுகிறது. இதில் 6 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 11-வது இது எல்லாவற்றுக்காக ஓசூர் விமான நிலையத்தை உருவாக்க முக்கியத்துவம் தருவோம்.
ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த அதிநவீன கட்டமைப்பு வசதிகளுடன் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன்.
இந்த புதிய விமான நிலையத்தை அமைக்க ஓசூர் பகுதியை சுற்றி இருக்கக்கூடிய பொருத்தமான நிலப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அதை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை டிட்டோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த பன்னாட்டு விமான நிலையம் மற்றுமொரு புதிய வளர்ச்சிப் பாதையில் ஓசூரை பயணிக்க வைக்கும். இன்னும் பல திட்டங்களை செய்து கொண்டு வருகிறோம். அதனால்தான் மற்ற மாநிலங்களோடு போட்டிபோடும் வகையில் இன்றைக்கு முன்னேறி இருக்கிறது.
அடுத்ததாக அக்டோபர் 9, 10-ந்தேதி கோவையில் உலக புத்தொழில் மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப் ஸ்டீல் எனப்பொருள் என்பதால் உறுதியுடன் கூறுகிறேன்.
- நமது சாதனைகளை நாம் தான் முறியடித்துக் கொண்டு இருக்கிறோம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ஒரு காலத்தில் சிறிய தொழில் நகரம் எனக் கூறப்பட்ட ஓசூர் விருப்பமான நகரமாக உருவெடுத்தது.
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன.
* ஓசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.
* 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.400 கோடியில் ஐடி பார்க் அமைக்கப்பட உள்ளது.
* ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப் ஸ்டீல் எனப்பொருள் என்பதால் உறுதியுடன் கூறுகிறேன்.
* தொழிற்சாலைகள் ஓசூரை நோக்கி சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றன.
* ஓசூர் அறிவுசார் முனையத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
* வளர்ச்சியின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்க்கும் நகரமாக ஓசூர் இருக்கிறது.
* நமது சாதனைகளை நாம் தான் முறியடித்துக் கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு தொழில் துறையில் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது.
- 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என இலக்கு நிர்ணயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் மூலமாக தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
* தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் தனித்த அடையாளம் பெற்ற நகரமாக ஓசூர் திகழ்கிறது.
* தமிழ்நாடு தொழில் துறையில் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது.
* அடுத்து வரக்கூடிய மாதங்களுக்கும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு டார்கெட்.
* 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என இலக்கு நிர்ணயம்.
* தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
* கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் தொழில் வளர்ச்சியை ஓசூர் கண்டு வருகிறது.
* தி.மு.க. ஆட்சியில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாரதாம்மாள், லட்சுமணமூர்த்தி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
- மீனவர்கள் உதவியோடு ஜோதி, தீபிகாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி. அணையில் குதித்து 4 பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதில் 2 பேர் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் இன்று காலை சிறிய மதகுகள் அருகில் இருந்து 4 பேர் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்கள் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த சாரதாம்மாள் (வயது 75), அவரது மருமகன் லட்சுமணமூர்த்தி (50), மகள் ஜோதி (45), பேத்தி தீபிகா (20) என தெரியவந்தது.
மேலும் அவர்கள் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் சாரதாம்மாள், லட்சுமணமூர்த்தி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் அருகில் இருந்த மீனவர்கள் உதவியோடு ஜோதி மற்றும் தீபிகாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து கிருஷ்ணகிரி டேம் போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
- புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.
கிருஷ்ணகிரி:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (வியாழக்கிழமை) கிருஷ்ணகரி மாவட்டத்திற்கு வருகிறார். காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் உள்ள தனேஜா விமான ஓடு தளத்தை வந்தடைகிறார்.
அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து ஓசூரில் தளி சாலையில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸ் சென்றடைகிறார். அங்கு 11.30 மணிக்கு நடைபெற கூடிய தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
பின்னர் அங்கிருந்து 12.50 மணிக்கு எல்காட் தொழில்நுட்ப பூங்காவிற்கு செல்கிறார். அங்கு அமைய உள்ள நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் மதிய உணவை தொடர்ந்து மாலை 4 மணிக்கு ஓசூரில் இருந்து புறப்படுகிறார். மாலை 4.30 மணி அளவில் சூளகிரி பஸ் நிலையத்தை அடைகிறார்.
அங்கு பஸ் நிலையம் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மாலை 4.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு குருபரப்பள்ளி டெல்டா நிறுவனத்தை வந்தடைகிறார். அங்கு 5 மணிக்கு புதிய தொழிற்சாலை தொடங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 6 மணிக்கு கிருஷ்ணகிரியை வந்தடைகிறார். அங்கு சுங்கச்சாவடி அருகில் கட்சியினர் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து ரோடு ஷோவில் பங்கேற்கும் அவர் இரவு கிருஷ்ணகிரியில் தங்குகிறார்.
12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் பங்கேற்கிறார். அங்கு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் அவர், விழா மேடை அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார்.
பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து விழா மேடைக்கு வரும் முதலமைச்சர் கல்லில் உறைந்த வரலாறு கிருஷ்ணகிரியின் தொன்மையும் வரலாறும் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட புத்தகத்தை வெளியிடுகிறார்.
பின்னர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் திட்டப்பணிகள் குறித்த குறும்படத்தை திரையிடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
பின்னர் கார் மூலமாக ஓசூர் புறப்பட்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் முதலமைச்சர் சென்னை செல்கிறார்.
- டீஜே என்று அழைக்கப்படும் ஆட்டம்பாட்டத்துடன் இசை கொண்டாட்டம் உச்சக்கட்டத்தை தொடங்கியது.
- மாப்பிள்ளையின் நண்பர்கள் மதுபோதையில் மேடையில் ஏறி குத்தாட்டம் போட தொடங்கினர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் திருமண வைபோகம் காணவேண்டிய அந்த மண்டபத்தில் வரவேற்பு விழாவில் இருவீட்டாரும் மும்முரமாக இருந்தனர்.
மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படித்த இளம்பெண்ணுக்கும், ஓசூரில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் டிப்ளமோ படித்த வாலிபருக்கும் தான் இந்த திருமண வரவேற்பு மாலை 6 மணிக்கு தொடங்கியது. இரவு 9.30 மணி வரை எந்தவித பிரச்சனையும் இன்றி வரவேற்பு விழா நடந்தது. அதன்பிறகு தான் டீஜே என்று அழைக்கப்படும் ஆட்டம்பாட்டத்துடன் இசை கொண்டாட்டம் உச்சக்கட்டத்தை தொடங்கியது.
அப்போது அங்கு வந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் மதுபோதையில் மேடையில் ஏறி குத்தாட்டம் போட தொடங்கினர். ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையையும் அவர்கள் மேடைக்கு ஏற்றி ஆட வைத்தனர். அத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை என்ற ரீதியில் மாப்பிள்ளையின் நண்பர்களில் சிலர் மணமகளையும் மேடைக்கு வருமாறு வற்புறுத்தி குரல் எழுப்பினர்.
ஆனால் தனக்கு இதுபோன்று நடனம் ஆடி பழக்கம் இல்லை என்றும், பொது இடங்களில் நான் இதுபோன்று நடனம் ஆட விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் அவர் கூறுவதை காது கொடுத்து கேட்காத அந்த வாலிபர்கள் தொடர்ந்து வற்புறுத்திய நிலையில், மணமகளின் உறவினர்கள் சிலர், அப்படி எல்லாம் எங்கள் வீட்டு பெண் ஆட வரமாட்டாள் என்று வாலிபர்களை கண்டித்தனர்.
அதை சொல்ல நீங்கள் யார் என்று மாப்பிள்ளையின் நண்பர்களில் சிலர் மணமகளின் உறவினர்களுடன் திடீரென கைகலப்பில் ஈடுபட்டு உள்ளனர். என்ன நடக்கிறது என்று இரு வீட்டாரும் யோசித்து பார்க்கும் முன்பு இந்த கைகலப்பு தகராறாக முற்றியது.
இதை பார்த்த மணமகள், மாப்பிள்ளையின் குடிகார நண்பர்களின் அற்ப வேண்டுகோளையும், அதற்காக அவர்கள் தனது உறவினர்களை தாக்கியதையும் நினைத்து இனி இந்த மாப்பிள்ளையை நான் கட்ட மாட்டேன். திருமண ஏற்பாடுகளை நிறுத்துங்கள் என்று அதிரடியாக கழுத்தில் அணிந்திருந்த மாலையை கழற்றி வீசினார். இதனால் வரவேற்புடன் திருமணம் நின்றது.
உடனே மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பேனர்கள், அலங்கார வளைவுகள் போன்றவை அவசர, அவசரமாக இரவோடு இரவாக அகற்றப்பட்டு விட்டன. மேலும் மணமகன், மணமகள் வீட்டாரும் ஊருக்கு திரும்பினார்கள்.
- வீட்டில் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
- கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி அருகே உள்ள பாளேகுளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் வேலம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தெய்வானை. இவர் பாளேகுளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இருவரும் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கணவன்-மனைவி இருவரும் காலை பள்ளிக்கு சென்று மாலையில் தான் வீட்டிற்கு வருவார்கள். இவரது வீட்டில் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் காலை பள்ளிக்கு சென்ற தெய்வானை மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த நாய் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது.
பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 55 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் பணம் திருடுபோயி இருந்தது தெரியவந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கணவனுக்கு போன் செய்து தெய்வானை கத்தி கதறி உள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நாகரசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த ஆசிரியர் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் உதவியுடன் கொள்ளையர்களை தேடினர். ஆனால் நாய் சிறிது தூரம் சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் கொள்ளையர்களின் கைரேகை எதுவும் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தனர்.
வீட்டில் பகல் நேரங்களில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் நேற்று வீட்டில் பின்புற கேட்டின் வழியாக புகுந்துள்ளனர். அங்கு கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்துள்ளனர். அதில் இருந்த நகை, பணம் ஆகியவையை கொள்ளை அடித்து சென்றனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வீடுகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்புகள் வேண்டுமென போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் சிசிடிவி கேமரா பொருத்தவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலும் பகலில் ஆளில்லாதது நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பணம் நகை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் கொடுமை நடக்கிறது.
- தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுங்கள் என்று கூறி வருகிறோம்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நேற்று மாலை பா.ம.க. சார்பில் 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' நடைபயணம் நடந்தது. இதில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
இந்த நடைபயணத்தில் நோக்கம் தமிழக மக்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும். தி.மு.க. அரசை அகற்ற வேண்டும் என்பதுதான். தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை நலிந்து போயுள்ளது. போதை பழக்கம் அதிகரித்துள்ளது. இந்த ஆட்சியை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இஸ்லாமியர், பட்டியலினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அனைவரையும் தி.மு.க. அரசு வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டும்.
சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் கொடுமை நடக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு பெற்றோரும் பயந்து போய் உள்ளனர். இன்று சாதாரணமாக கஞ்சா எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கு சுதந்திரம் இல்லை. இதனால் மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுங்கள் என்று கூறி வருகிறோம். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். திராவிட மாடலுக்கு விடை கொடுப்போம்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.






