என் மலர்tooltip icon

    கரூர்

    • விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
    • தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

    கரூர்:

    தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் நாளை(புதன்கிழமை) மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா நடைபெறுகிறது.

    விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி வரவேற்று பேசுகிறார்.

    பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    விழாவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மூத்த முன்னோடிகள் 6 பேருக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர், மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த விழாவுக்காக கோடங்கிபட்டி அருகில் 50 ஏக்கர் நிலத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் கடந்த 10 நாட்களாக நடந்தன. 200 அடி அகலம் 60 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இதில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஒரே மாதிரியான டீ சர்ட் சீருடையுலும், இளம்பெண்கள் ஒரே மாதிரியான சுடிதார் உடையிலும், பெண்கள் ஒரே மாதிரியான புடவையிலும், ஆண்கள் ஒரே மாதிரியான கட்சி வேட்டி சட்டையிலும் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவில் பங்கேற்கும் முதல்வர் நாளை காலை 10:30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கரூர் வருகை தருகிறார். கரூர் தான்தோன்றி மலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பின்னர் மாலை 4 மணிக்கு புறப்பட்டு முப்பெரும் விழா நடைபெறும் மேடைக்கு வருகை தர உள்ளார்.

    முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் வருகையை முன்னிட்டு கரூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வாழை தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. கட்சி கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு வருகின்றன. முதல்வரின் வருகையொட்டி கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • தீ விபத்தில் 20 மேற்பட்ட பேருந்து கூடுகள் தீயில் கருகி நாசமானது.
    • விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    கரூர் சின்னமநாயக்கன்பட்டியில் பழையப் பேருந்துகளின் கூடுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் 20 மேற்பட்ட பேருந்து கூடுகள் தீயில் கருகி நாசமானது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    • புலன் விசாரணையில் உள்ளூரை சேர்ந்த சிலர் கொள்ளையர்களுக்கு உதவியதாக இருந்தது தெரியவந்தது.
    • தலைமறைவாக உள்ள 3 கொள்ளையர்களையும் போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை காவேரி நகரை சேர்ந்தவர் கருணாநிதி (வயது70). இவர் திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாவித்திரி (65). குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    இவர்கள் குளித்தலை அருகே வை.புதூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 18-ந் தேதி கருணாநிதி மற்றும் அவரது மனைவி சாவித்திரி, இளைய மகள் அபர்ணா (40) ஆகிய மூன்று பேரும் குளித்தலை காவேரி நகரில் உள்ள வீட்டில் இருந்தபோது, அதிகாலை 3 மணியளவில் காரில் வந்த 3 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அவர்கள் 3 பேரையும் கட்டிப் போட்டு 40 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் ரொக்கம் மற்றும் 3 கைப்பேசிகளை கொள்ளையடித்து காரில் தப்பிச் சென்றனர்.

    இதைத் தொடர்ந்து கொள்ளையர்களைப் பிடிக்க குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் உள்ளூரை சேர்ந்த சிலர் கொள்ளையர்களுக்கு உதவியதாக இருந்தது தெரியவந்தது.

    அதை தொடர்ந்து கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருந்த குளித்தலையை அடுத்த பரளியைச் சேர்ந்த பிரகாஷ் (36), ரெங்கநாதன்(36), பார்த்திபன் (27), ரவிசங்கர் (26), திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த ஹரீஸ் (28), சிவகங்கையைச் சேர்ந்த கண்ணன் (35), பால் பாண்டி (32), அஜய் (28), கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்த முருகேஷ்(35) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் கொடுத்த தகவலின்படி தலைமறைவாக உள்ள 3 கொள்ளையர்களையும் போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

    இவர்களில் பிரகாஷ் காவலராக பணியாற்றி, பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

    இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு திட்டங்களை தீட்டி கொள்ளை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது, தலைமறைவாக உள்ள மூன்று நபர்களை பிடித்த பிறகு பல்வேறு உண்மை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வரும்.

    நகை, பணம் குறித்து வீட்டில் ஆயுதங்களால் தாக்கி கொள்ளை அடித்துச் சென்ற மூன்று நபர்களை கைது செய்த பிறகுதான் தகவல் தெரியும் என கூறப்படுகிறது.

    • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • குளித்தலை நகரின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி சாவித்திரி. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் குளித்தலை பகுதியில் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். அந்த பள்ளியில் தாளாளராகவும் உள்ளார். தற்போது இவர்கள் தங்களது வீட்டை புதுப்பித்து கட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கருணநிதி குடும்பத்துடன் வெளியூர் சென்றனர். பின்னர் நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டிற்கு வந்தனர். பின்னர் நள்ளிரவில் அனைவரும் தூங்கச் சென்றனர்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் இவர்களது வீட்டின் பின்பகுதி வழியாக மர்ம 3 நபர்கள் நுழைந்தனர். முகமூடி அணிந்திருந்த அவர்கள் வீட்டின் மேல் மாடிக்கு சென்றனர்.

    சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த அவரது இளைய மகள் பல் மருத்துவர் அபர்ணா விழித்து பார்த்தார். அப்போது 3 பேர் முகமூடி அணிந்தபடி ஆயுதங்களுடன் நிற்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். உடனே மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டினர். சத்தம் கேட்டு கருணநிதி, சாவித்திரி ஆகியோர் அங்கு வந்தனர். உடனே கொள்ளையர்கள் அபர்ணாவை அரிவாளால் தாக்கினர். உடனே தாய் சாவித்திரி தடுத்தார். இதில் அபர்ணா, சாவித்திரி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

    பின்னர் கொள்ளையர் கத்தி, அரிவாள் முனையில் அங்கு இருந்த ரூ. 9 லட்சம் மற்றும் 31 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். இது குறித்து மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க கூடாது என்பதற்காக அவர்கள் 3 பேரின் செல்போன்களையும் பறித்தனர். பின்னர் கொள்ளையர் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    இதுபற்றி கருணாநிதி அக்கம்பக்கத்தினர் மூலமாக குளித்தலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர் தாக்கியதில் காயம் அடைந்தசாவ்த்திரி, அபர்ணாவை போலீசார் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா விரந்து வந்து விசாரணை நடத்தி னார். கொள்ளையர்கள் குறித்து சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்திலிருந்து குளித்தலை மணப்பாறை ரயில்வே கேட் வரை மோப்பம் பிடித்தபடி சென்று நின்று விட்டது.

    குளித்தலை நகரில் ஆட்கள் நடமாட்டம் உள்ள மையப் பகுதியில் அதிகாலையில் வீடு புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    குற்றவாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குளித்தலை நகரின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

    • பாலம் வழியாக பெரும்பாலும் நடந்தும், மோட்டார் சைக்கிளிலும் பொதுமக்கள் சென்று வருவது வழக்கம்.
    • குறுக்கே உள்ள நடைபாலத்தை கடந்து செல்ல வேண்டும் என கூகுள் மேப் காட்டியது.

    குளித்தலை:

    குளித்தலை பஸ் நிலையம் அருகே தென்கரை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் மேல் பக்கவாட்டு சுவர் இல்லாத பாலம் ஒன்று உள்ளது.

    குளித்தலை நகரப்பகுதியில் இருந்து இந்த பாலம் வழியாக கரூர்-திருச்சி புறவழி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.

    இந்த பாலம் வழியாக பெரும்பாலும் நடந்தும், மோட்டார் சைக்கிளிலும் பொதுமக்கள் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் முகமது (வயது 50). இவர் காரில் கோவை சென்றுவிட்டு மீண்டும் கும்பகோணத்துக்கு நேற்று காரில் திரும்பினார்.

    கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் குளித்தலை அருகே தொழுகை நடத்துவதற்காக கூகுள் மேப் மூலம் பள்ளிவாசலை முகமது தேடியுள்ளார்.

    குறுக்கே உள்ள நடைபாலத்தை கடந்து செல்ல வேண்டும் என கூகுள் மேப் காட்டியது. இதையடுத்து, குறுகிய பாலத்தின் வழியே முகமது காரை இயக்கினார்.

    இதில் காரின் முன்சக்கரம் பாலத்தின் விளிம்பில் கீழே இறங்கி, அந்தரத்தில் தொங்கியது. வாய்க்காலில் அதிகளவில் தண்ணீர் செல்லும் நிலையில், அங்கிருந்தவர்கள் முகமதுவை காரில் இருந்து பத்திரமாக மீட்டனர்.

    வாய்க்கால் தண்ணீரில் கார் கவிழ்ந்து விழாமல் பாலத்தில் தொங்கியபடி நின்றதால் காரில் வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து கிரேன் மூலம் பாலத்தில் விபத்துக்குள்ளான கார் பத்திரமாக மீட்கப்பட்டது.

    • தகராறின் போது விஸ்ரூத் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார்.
    • மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான விஸ்ரூதை போலீசார் தேடி வருகின்றனர்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியை கத்தியால் குத்தி கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    குளித்தலை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த ஸ்ருதி(27)-யை அவரது கணவரான விஸ்ரூத் கத்தியால் 3 குத்தியதில் ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஏற்கனவே தகராறின் போது விஸ்ரூத் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான விஸ்ரூதை போலீசார் தேடி வருகின்றனர்.

    அதிகாலையில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்தனர். 

    • போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
    • ரவுடி பென்சில் தமிழரசன் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.

    கரூர்:

    கரூர் சின்ன ஆண்டான் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பென்சில் என்கிற தமிழரசன் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 18-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தமிழரசன் தனது கூட்டாளிகள் பிரகாஷ், ஹரிஹரன், மனோஜ் ஆகியோருடன் சேர்ந்து கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் மலையாளம் என்பவரை மரக்கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கரூர் டவுன் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிரகாஷ் ஹரிஹரன், மனோஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    முக்கிய குற்றவாளியான ரவுடி பென்சில் என்ற தமிழரசன் தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இதற்கிடையே கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரூர் அரிக்காரம் பாளையம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே ரவுடி தமிழரசன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே உஷாரான கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக் டர் மணி வண்ணன் மற்றும் போலீ சார் ஜீப்பில் சம்பவ இடம் விரைந்தனர். போலீசை கண்டதும் தமிழரசன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார்.

    ஆனால் போலீசார் விடாமல் அவனை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பி ஓடினார்.

    உடனே இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் துப்பாக்கியால் சுட்டார் இதில் அவனது காலில் குண்டு பாய்ந்தது. பின்னர் அவனைப் பிடித்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு ரவுடி தமிழரசனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கரூரில் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • லாரியை சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார்.
    • பின்னர் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றார்.

    கரூர்:

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கரூரில் இருந்து சேலம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். மண்மங்கலம் அருகே சென்றபோது அந்த வழியாக மணல் அள்ளி வந்த லாரியை பார்த்தார்.

    உடனே அந்த லாரியை பின்னால் காரில் துரத்தினார். சுமார் 18 கிலோமீட்டர் தூரம் பின் தொடர்ந்து சென்று நாமக்கல் மாவட்டம் எல்லையான வேலூர் போலீஸ் சோதனைச் சாவடியில் மடக்கி பிடித்தார்.

    பின்னர் அந்த லாரியை சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் என்பதால் அவர்கள் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    மணல் லாரியுடன் வேலாயுதம்பாளையம் சென்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகி சரவணனை புகார் கொடுக்குமாறு அறிவுறுத்திய எம்.ஆர்.விஜயபாஸ்கர் பின்னர் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றார்.

    போலீசார் விசாரணையில் மணல் லாரி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பிடிபட்டதால் அந்த லாரியை போலீசார் பரமத்தி போலீசாரை வரவழைத்து லாரியை ஒப்படைத்தனர்.

    • அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட ஒன்று.
    • தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

    திருச்சி:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்திற்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரீகம். 234 தொகுதிக்கும் இன்னும் 2 நாட்களில் கூட்டம் நடத்தப்பட்டு, பொறுப்பார்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அதில் எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை.

    இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுப்பதை விட வாக்குறுதி தான் முக்கியம் என்று எடப்பாடி பழனிசாமி எங்களிடம் தெரிவித்துள்ளார். 2026-ல் தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து விஜய் கட்சியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, இந்தக் கேள்விக்கு விடையை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதற்கு அவர் தான் பதில் சொல்லவேண்டும்.

    2026-ல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான். அப்போதுதான் தப்பு நடந்தால் ஒரு எதிர்க்கட்சியாக இருந்து சுட்டி காட்ட முடியும். கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை, 24 மணி நேரம் மது விற்பனை, கள்ள லாட்டரி விற்பனை, கனிமவளக் கொள்ளை அதிகமாக நடக்கிறது.

    இதை முதல்வர் சரி செய்ய வேண்டும். குறிப்பாக தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    • கோவில்பட்டியில் இருந்து வந்த சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் செம்மடை நாவல் நகர் அருகே ஆம்னி பேருந்து, சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர் திசையில் வந்த சுற்றுலா வேன் மீது மோதியதில் அதில் பயணித்த சிறுவன், சிறுமி, ஓட்டுநர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

    பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற பேருந்து முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி சாலை தடுப்புச்சுவரை தாண்டி எதிர்திசையில் கோவில்பட்டியில் இருந்து வந்த சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க?
    • சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக நேற்று அறிவித்தது. சண்டை நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தன.

    இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

    அப்போது, பிரதமர் மோடிக்குதான் திமுகவினர் நன்றி கூற வேண்டும், இந்திய ராணுவத்திற்கு அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான்.

    பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்" செல்லூர் ராஜு தெரிவித்தார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள்? என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், செல்லூர் ராஜூ பேச்சை கண்டித்து கரூரில் முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    எல்லை வீரர்களை விமர்சித்த செல்லூர் ராஜு தனது பேச்சை திரும்ப பெற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மீண்டும் அவர் தேர்தலில் நின்றால் அவருக்கு எதிராக அவரது தொகுதியில் பிரசாரம் செய்வோம் எனவும் அவர்கள் ஆவேசமாக வலியுறுத்தியுள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டன.
    • புகாரின் பேரில் 13 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    கரூர்:

    கரூரில் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக மேலக்கரூர் சார் பதிவாளர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். மேலும் கரூரில் இருந்து தலைமறைவானார்.

    இந்நிலையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டன. அதே நாளில் நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது புகார் அளித்தார்.

    இப்புகாரின் பேரில் 13 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ரூ.100 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வருகிற மே 23-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    ×