என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பணத்தை தவறவிட்டவர் குளச்சல் பகுதியை சேர்ந்த சந்திர போஸ்கோ என்பது தெரியவந்தது.
    • சந்திர போஸ்கோ கேரள மாநிலம் கொல்லத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    நாகர்கோவில்:

    பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தது. அப்போது முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கிழிந்த நிலையில் துணிப்பை ஒன்று கிடந்தது.

    அதே ரெயிலில் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த போலீஸ்காரர் ஷாஜகான் அந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அப்போது பைக்குள் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த பணப்பையை அவர் நாகர்கோவிலில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் ஒப்படைத்தார்.

    ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அதில் பணத்தை தவறவிட்டவர் குளச்சல் பகுதியை சேர்ந்த சந்திர போஸ்கோ என்பது தெரியவந்தது. இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    நேற்று கொல்லத்திலிருந்து சந்திர போஸ்கோ வீட்டிற்கு வருவதற்காக பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்துள்ளார். ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்திற்கு வந்ததும் அவர் ரெயில் பெட்டியை விட்டு இறங்கி சென்றுவிட்டார். வீட்டுக்கு சென்ற பிறகு பார்த்த போது தான் தன் கையில் இருந்த ரூ.4 லட்சம் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    உடனே அவர் பணத்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த நிலையில் நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் வந்து விசாரித்தபோது அவரது பணம் போலீசில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணைக்கு பிறகு அந்த பணத்தை ஒப்படைத்தனர். அனாதையாக கிடந்த பணத்தை எடுத்து ஒப்படைத்த போலீஸ்காரர் ஷாஜகானுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

    • திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா.
    • பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.

    நாகர்கோவில்:

    தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலையில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டனர்.

    காவடி ஊர்வலம், புஷ்ப காவடி, பன்னீர் காவடி, எண்ணெய் காவடி, வேல் காவடி, பறக்கும் காவடி என விதவிதமான காவடிகளுடன் பக்தர்கள் பயபக்தியுடன் புறப்பட்டனர். இரணியல் சுற்று வட்டார பகுதி, மார்த்தாண்டம், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டன.

    அந்த வகையில் மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து வேல்காவடி, பறக்கும் காவடி புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, கணபதிபுரம், ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.

    இதுபோல் வடக்கன் பாகம் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்பக்காவடி மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று பின்னர் திரும்பி கோவில் வந்தடைந்தது.

    தொடர்ந்து அன்னதானமும், மாலை 4 மணிக்கு காவடிகள் வடக்கன்பாகம் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டது. மேலும் சேரமங்கலம் ஆழ்வார் சுவாமி கோவிலில் இருந்து பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்பக்காவடிகள் சேரமங்கலம், படர்நிலம், பிள்ளையார்கோவில் மணவாளக்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது.

    குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடிகள், வேல் காவடிகள், குளச்சல் அண்ணா சிலை பகுதிக்கு வந்து அங்கிருந்து திங்கள் சந்தை வழியாக திருச்செந்தூர் சென்றன.

    மேலும் குளச்சல் புளியமூட்டு விளைமுத்தாரம்மன் கோவிலில் இருந்து 6 பெரிய காவடிகளும், 6 சிறுவர் காவடிகளும், சிறு குழந்தைகள் முருகன் வேடம் அணிந்தபடியும் சென்றனர்.

    செக்காலத் தெரு முத்தாரம்மன் கோவிலில் இருந்து 6 அடி வேல் காவடி, காவடியும், கள்ளியடப்பு கோவிலில் இருந்து பறக்கும் காவடியும், நுழக்குடி சிவன் கோவில் இருந்து பறக்கும் காவடியும், மகாதேவர் கோவிலில் இருந்து பறக்கும் காவடியும் புறப்பட்டு சென்றன.

    • பள்ளியாடி மற்றும் குழித்துறை மேற்கு ரெயில் நிலையங்களில் நிறுத்தம் தேவை என்று கோரிக்கையை முன்வைத்தார்.
    • ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் குறித்தும் கோரிக்கை வைத்தார்.

    சென்னையில் தென்னக ரெயில்வேயின் முதன்மை இயக்க மேலாளர் ஸ்ரீகுமாரை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து, மதுரை - புனலூர் விரைவு ரெயில் மற்றும் நாகர்கோவில் - கோட்டயம் ரெயில்களுக்கு நாகர்கோவில் டவுன், பள்ளியாடி மற்றும் குழித்துறை மேற்கு ரெயில் நிலையங்களில் நிறுத்தம் தேவை என்று கோரிக்கையை முன்வைத்தார்.


    இதேபோல் தலைமை வணிக மேலாளர் நீனு அட்டெரயாவை விஜய் வசந்த் சந்தித்து நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் குறித்தும் கோரிக்கை வைத்தார்.

    • காதல் ஜோடியினர் ஒருவரை ஒருவர் கரம் கோர்த்தபடியும், தோளில் கை போட்டபடியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர்.
    • காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரியிலும் இன்று காதல் ஜோடிகள் குவிந்தனர். கன்னியாகுமரி கடற்கரையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரைப் பகுதியில் உள்ள சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைப் பகுதி, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காதல் ஜோடியினர் இன்று காலையிலிருந்தே வந்து குவிய தொடங்கினர்.

    காதல் ஜோடியினர் ஒருவரை ஒருவர் கரம் கோர்த்தபடியும், தோளில் கை போட்டபடியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர். கடற்கரையில் நின்றவாறு காதல் ஜோடிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையின் பின் பகுதியை கவர் செய்து தாங்கள் கன்னியாகுமரிக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் செல்போன் மூலம் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கன்னியாகுமரி கடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரை சாலை, சன்னதி தெரு, விவேகானந்தராக் ரோடு, ஆகிய பகுதிகளில் உள்ள சங்கு கடைகளில் காதலர்கள் பலரும் கூடி நின்று தங்கள் பெயர்களை கடல் சங்கில் பதிவு செய்து வாங்கிச் சென்றனர்.

    இதேபோல ஒரே அரிசியில் காதல் ஜோடியினர் இருவர் பெயரையும் பதிவு செய்தனர். அவற்றை ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர். இதனால் பரிசுப்பொருட்கள் கடைகளில் காதல் ஜோடி கூட்டம் அலைமோதியது.

    கடற்கரையிலுள்ள காட்சி கோபுரம் மற்றும் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களிலும் காதலர்கள் பலர் ஜோடியாக அமர்ந்து கடலின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து இன்று ஏராளமான காதல் ஜோடிகள், மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் கடற்கரை சாலையில் ரேஸ் செய்தபடி வலம் வந்தனர்.

    மறைவான இடங்களில் அமர்ந்து அத்துமீறிய சில காதல் ஜோடிகளை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஒரு சில காதல் ஜோடிகள் மறைவான இடங்களில் அமர்ந்து தங்கள் காதல் லீலைகளை அரங்கேற்றினர். கடற்கரை பகுதியில் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்தனர். காதல் ஜோடியினர் ரோஜா மலர்களை ஒருவருக்கொருவர் பரிமாறி காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி.மகேஷ்குமார் தலைமையில் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவிலும் காதல் ஜோடிகள் அதிகமானோர் வந்திருந்தனர்.

    • மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.
    • பதினெட்டாம் படி ஏறுவதற்காக இருமுடியுடன் காத்திருந்தனர்.

    மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்றுமாலை திறக்கப்பட்டது. இதையடுத்து சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் திரண்டனர். பதினெட்டாம் படி ஏறுவதற்காக இருமுடியுடன் காத்திருந்தனர்.

    • ரேசன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • நிகழ்ச்சியில் தோவாளை காங்கிரஸ் வட்டார கமிட்டி தலைவர் முருகானந்தம், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் ஊராட்சி பகுதியில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அவர்கள் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், தோவாளை காங்கிரஸ் வட்டார கமிட்டி தலைவர் முருகானந்தம், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • ஒரு நிகழ்ச்சி வாயிலாக நான் வெறும் 2 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளது.
    • நிறுவனத்திற்கு கடிதம் வாயிலாக அந்த தவறான செய்தியை திருத்தி உண்மையை சொல்ல வேண்டும்.

    கன்னியாகுமரி:

    நிதி தொடர்பாக தவறாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சிக்கு விஜய் வச்ந்த் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கன்னியாகுமரி தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் அரசு ஒதுக்கிய 17 கோடி ரூபாய் முழுவதும் (100%) மக்கள் நல திட்டங்களுக்காக செலவு செய்துள்ள நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒரு நிகழ்ச்சி வாயிலாக நான் வெறும் 2 கோடி மட்டுமே செலவு செய்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளது.

    இன்று அந்த நிறுவனத்திற்கு கடிதம் வாயிலாக அந்த தவறான செய்தியை திருத்தி உண்மையை சொல்ல வேண்டும் என கேட்டு கொண்டேன்.

    தவறும் பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

    • பூங்கா அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் ஒதுக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் வெள்ளிமலை பேரூர் காங்கிரஸ் தலைவர் தயனேஷ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வெள்ளிமலை பேரூராட்சிக்குட்பட்ட சாத்தன்விளை முத்தாரம்மன் கோவில் அருகே சிறுவர் பூங்கா அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து பூங்காவை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.


    இந்த நிகழ்ச்சியில் வெள்ளிமலை பேரூர் காங்கிரஸ் தலைவர் தயனேஷ் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
    • காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மார்த்தாண்டம், ஞாறான்விளையில் நடைபெற்ற குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியிருப்பிதாவது:-

    வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்ய இளைஞர்கள் அதிகமாக பங்களிப்பு அளிக்க வேண்டும். ராகுல் காந்தியை பிரதமராக்க உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.


    மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் ஒதுக்கப்பட்டது.
    • தோவாளை காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம், ஊராட்சி தலைவர் திருமதி. சந்தியா சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் பீமநகரி ஊராட்சிக்கு உட்பட்ட CMC நகர் பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அவர்கள் கோரிக்கை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம்  ஒதுக்கப்பட்டது.

    அதற்கான பூமி பூஜையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் தோவாளை காங்கிரஸ் வட்டார தலைவர் முருகானந்தம், ஊராட்சி தலைவர் திருமதி. சந்தியா சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர்.
    • பெரும்பாலான மக்கள் எங்களை மிகவும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    நாகர்கோவில்:

    ஆண்-பெண் என்ற இருபாலத்தினருக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தவர்களாக திருநங்கைகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அரசு வாய்ப்பு வழங்கி வருகிறது.

    மேலும் சாதாரண மக்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து நலத்திட்டங்களும் இவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர்.

    அவர்கள் சுயதொழிலில் ஈடுபடுவது மட்டுமின்றி, மத்திய-மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர், ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    இதன்மூலம் தென்னக ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பையும் அவர் பெற்றிருக்கிறார். நாகர்கோவிலை சேர்ந்த அவரது பெயர் சிந்து. வாழ்க்கையில் உயர கல்வியே முக்கியம் என்பதை உறுயியாக நம்பிய சிந்து, பி.லிட் தமிழ் இலக்கியம் படித்தார்.

    பின்னர் கடந்த 2003-ம் ஆண்டு தெற்கு ரெயில்வேயில் பணியில் சேர்ந்தார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரெயில்வே பணியாற்றிய அவர், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு பணி மாறுதலாகி வந்தார். மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் ரெயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினார்.

    இந்நிலையில் ஒரு சிறிய விபத்தில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் தொழில்நுட்ப பிரிவில் சிந்துவால் பணியாற்ற முடியவில்லை. தொழில்நுட்பம் இல்லாத பணியில் தொடர முடியுமா என்று அவரிடம் ரெயில்வே துறையினர் கேட்டனர்.

    அதற்கு அவர் சம்மதித்தது மட்டுமின்றி, டிக்கெட் பரிசோதகராக பணிபுரிய விரும்புவதாக தெரிவித்தார். அதன்பேரில் திருநங்கை சிந்து, திண்டுக்கல் ரெயில் நிலையத்திலேயே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக்கெட் பரிசோதகராக அவர் பணியில் சேர்ந்தார்.

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த தான், டிக்கெட் பரிசோதகராகி இருப்பது சிந்துவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சிந்து கூறியதாவது:-

    டிக்கெட் பரிசோதகராக பணியில் சேர்ந்திருப்பது எனது வாழ்நாளில் மறக்க முடியாக நிகழ்வு. நான் டிக்கெட் பரிசோதகராக பணியாற்ற சில சவால்கள் இருந்தன. ஆனால் அது எனது கனவாக இருந்தது. தற்போது அந்த கனவு நனவாகிவிட்டது.

    இது எனக்கு மட்டுமல்ல. திருநங்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் என்பதால் என்னை சுற்றியிருந்தவர்கள் என்னை எப்படி பார்ப்பார்கள் என்று நான் மிகவும் கவலைப் பட்டேன். இருப்பினும் தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியனும், அதன் அலுவலக பணியாளர்களும் எனக்கு ஆதரவளித்தனர்.

    என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். திருநங்கையான எனது சாதனைக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருந்ததை கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். தற்போது பெரும்பாலான மக்கள் எங்களை மிகவும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது.
    • மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் மற்றும் வடசேரி பகுதி மீன் மார்க்கெட்களில் கெட்டுப்போன, பார்மலின் கலந்து கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட்ட பார்மலின் கெமிக்கல் மனம் கொண்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.

    அந்த புகார் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நாகர்கோயில் மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமார பாண்டியன், சங்கரநாராயணன், மீன்வளத்துறை ஆய்வாளர் மரிய பிரான்ஸ்கோ விவின் மற்றும் மேற்பார்வையாளர் கார்த்தீபன், நாகர்கோவில் மாநகர மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சத்யராஜ், மாதேவன் பிள்ளை ஆகியோர் கொண்ட குழுவினர் கணேசபுரம்-வடசேரி மீன் சந்தையில் விற்பனை செய்யப்படும் மீன்களை இன்று ஆய்வு செய்தனர்.

    விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது. மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு சில வியாபாரிகள் உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற மீன்களை விற்பனை செய்திருந்தது தெரியவந்தது.

    அந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை மினி டெம்போவில் ஏற்றி கொண்டு சென்றனர். உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற கெட்டுப்போன சுமார் 230 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த மீன்களை சுண்ணாம்பு தூள் மற்றும் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு மாநகராட்சி உரக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களில் பார்மலின் கெமிக்கல் தடவப்பட்ட மீன்கள் எதுவும் இல்லை என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×