என் மலர்
கன்னியாகுமரி
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
- சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சபரிமலை சீசன் முடிந்த நிலையில் அவர்களது வருகை நாளுக்கு நாள் குறைந்த வண்ணமாக இருந்தது.
இருப்பினும் வாரத்தின் கடைசி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. அதன்படி விடுமுறைநாளான இன்று (சனிக்கிழமை) கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள், கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் திரண்டு இருந்தனர். இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் அதனை பார்த்து ரசித்தனர். அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். சுமார் 1 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துஉள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர். மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- வேலம்மாள் தன் மகள் கிருஷ்ணவேணி என்பவருக்கு வீடு கட்டி கொடுத்தது தெரியவந்தது.
- சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில்:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் வேலம்மாள். இவர் வி.கே.புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்ததையடுத்து நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசார் வேலம்மாள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வகையில் வருமானத்துக்கு அதிகமாக மொத்தம் ரூ.45.90 லட்சம் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று காலை அம்பாசமுத்திரத்தில் உள்ள வேலம்மாள் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் வேலம்மாள் தன் மகள் கிருஷ்ணவேணி என்பவருக்கு வீடு கட்டி கொடுத்தது தெரியவந்தது. மகள் வீடானது குமரி மாவட்டம் மருங்கூர் பகுதியில் உள்ளது.
இதையடுத்து மருங்கூரில் உள்ள அவரது மகள் கிருஷ்ணவேணி வீட்டில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் இன்று காலை 7 மணிக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் கிருஷ்ணவேணி, அவரது கணவர் சங்கர் மற்றும் உறவினர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வங்கியில் ரூ.10 லட்சம் வரை நிரந்தர வைப்பு தொகை போட்டு வைத்திருந்தது தெரியவந்தது. அது தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரணை நடத்தியபோது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார்.
- தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குஜராத் மாநிலம் காந்தி தாமிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத கற்கள் மீது மோதி நின்றது.
இது தொடர்பாக ரெயில்வே போலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மோப்பநாய் உதவியுடனும் சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
மேலும் ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரணை நடத்தியபோது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தண்டவாளங்களிலும் கண்காணிப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே பாலங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
- அய்யா வைகுண்டரின் அவதார தினம்.
- திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாகன பவனி.
நாகர்கோவில்:
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ஜெயந்தி நாளான மாசி 20-ந்தேதியை அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய நாள் ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் வாகன பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி 2-ந்தேதி திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து வாகன பேரணி தொடங்குகிறது. இந்த வாகன பேரணிக்கு வழக்கறிஞர் ஆனந்த் தலை மை தாங்குகிறார். பூஜிதகுரு தங்கபாண்டியன் முன்னி லை வகிக்கிறார்.
இந்த வாகன பேரணி திருவனந்தபுரம் பாறசாலை, நெய்யாற்றின்கரை, மார்த்தாண்டம், தக்கலை மற்றும் வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா திடல் வந்தடைகிறது.

அதேபோல் திருச்செந்தூர், செந்தூர் அவதார பதியில் இருந்து மற்றொரு வாகன பவனி நாகர்கோவிலை நோக்கி புறப்படுகிறது. இந்த வாகன பவனிக்கு என்ஜினீயர் அரவிந்த் தலைமை தாங்குகிறார். பூஜிதகுரு சாமி முன்னிலை வகிக்கிறார்.
இந்த வாகன பவனி திருச்செந்தூர், சீர்காய்ச்சி, கூடங்குளம், செட்டிகுளம், அம்பலவாணபுரம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.
இதற்கிடையே 2-ந்தேதி மாலை ஆதலவிளை வைகுண்ட மாமலையில், சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து தீபம் கொண்டு சென்று ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சாமி தோப்பு பதியில் இருந்து பூஜிதகுரு ராஜசேகர் தீபம் ஏற்றி கொடுக்கிறார். ஆதல விளை மாமலையில் வழக்கறிஞர் அஜித் தீபம் ஏற்று கிறார்.
திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் வாகன பேரணி 2-ந்தேதி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள நிழல் தாங்கல்களிலிருந்து அவதார தின ஊர்வலத்தில் கலந்துகொள்ள நடை பயணமாக வரும் பக்தர்கள் வருகிற 2-ந்தேதி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகின்றனர்.
பின்னர் நாகராஜா கோவில் மண்டபத்தில் அய்யாவழி சமய மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கு பூஜிதகுரு ராஜசேகரன் தலைமை தாங்குகிறார். ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
அய்யா வைகுண்டசாமி 192-வது அவதார தின விழா ஊர்வ லம் 3-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பை நோக்கி புறப்படுகிறது.
ஊர்வலத்திற்கு பூஜிதகுரு. சாமி தலைமை தாங்குகிறார். ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். நாகராஜா திடலில் இருந்து தொடங்கும் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம் பாறை, ஈத்தங்காடு, வடக்குத்தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலை மைப்பதியை வந்தடைகிறது. ஊர்வலத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி 2-ந்தேதி மதியம் முதலே சாமிதோப்பு பதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அய்யா வைகுண்டர் அவதார தின மான 3-ந்தேதி காலையில் சாமிதோப்பு முழுவதும் அய்யாவழி பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். எனவே பதி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப் படை வசதிகள் செய்யப் பட்டு வருகிறது.
- குளச்சல் சட்டமன்ற தொகுதிகளின் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம்.
- நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் ஊராட்சி, செக்கடி கிராமத்தில் பொதுமக்களின் வீடுகளை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சந்தித்து அவர்களின் நியாயமான கோரிக்கையை அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண ஆவன செய்வேன் என உறுதி அளித்தார்.

கன்னியாகுமரி காங்கிரஸ் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளின் பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் சுசீந்திரம் மற்றும் திங்கள் நகரில் நடைபெற்றது.
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி. உதயம் தலைமையில் நடந்த இந்த கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் எம்எல்ஏ, குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், நிர்வாகிகள் பஞ்சாயத்து கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்து கொண்டனர்.

இதனிடையே சவுதி அரேபியாவில் உடல் நல குறைவால் காலமான குமரி மாவட்டம் பள்ளம் பகுதியை சேர்ந்த சகாய சுபீன் இல்லத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து அவரது உடலை விரைவாக கொண்டு வர மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
- ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரித்த போது 6 மர்மநபர்கள் அந்த பகுதியில் சுற்றிந்திரிந்ததாக தெரிவித்தார்.
- சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நெல்லைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று இரவு நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் பகுதியில் வந்த போது தண்டவாளத்தில் பெரிய கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்த என்ஜின் டிரைவர் ரெயிலை சாமர்த்தியமாக நிறுத்த முயன்றார். ஆனால் தண்ட வாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது ரெயில் பயங்கர சத்தத்துடன் மோதியது. பின்னர் டிரைவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார். தண்ட வாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது குறித்து ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் இரணியல் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தண்டவாளத்தில் மாட்டின் தலை, கொம்பு மற்றும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரெயில் தண்டவாளத்தில் கற்களை அடுக்கி வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரித்த போது 6 மர்மநபர்கள் அந்த பகுதியில் சுற்றிந்திரிந்ததாக தெரிவித்தார். ரெயில் கற்கள் மீது மோதிய பிறகு அந்த நபர்கள் அங்கிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றதாக கூறினார்.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தண்ட வாளத்தில் கற்களை எதற்காக அடுக்கி வைத்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வாலிபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் இது பற்றிய தகவல் வந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற் கொண்டார்.
இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். இன்று காலையிலும் சம்பவம் நடந்த பகுதியில் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
மதுபோதையில் வாலிபர்கள் கற்களை தூக்கி வைத்தார்களா? ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்று கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மாசி கொடை விழா அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது.
- பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடைவிழா அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கோவில் தங்கும் விடுதி வளாகத்தில் தனிப்பந்தலில் ராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 87-வது இந்து சமய மாநாடு நடக்கிறது. மாநாட்டு பந்தலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஜனை, 8.30 மணிக்கு மாநாடு கொடியேற்றம், தொடர்ந்து நடக்கும் சமய மாநாட்டை மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்து உரையாற்றுகிறார்.
விழா நாட்களில் 3-ம் நாள் விழா முதல் 10-ம் திருவிழா வரை காலை, இரவில் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் 2-வது நாள் அதிகாலை 5.30 மணிக்கு லலிதா சகஸ்ர நாம மற்றும் விஷ்ணு சகஸ்ரநாம வேள்வி, காலை 7 மணிக்கு ஸ்ரீமத்பாகவத மாகாத்மிய பாராயணம், 10 மணிக்கு மகாபாரத விளக்கவுரை, நண்பகல் 12 மணிக்கு சமய மாநாடு, மாலை 5 மணிக்கு பரத நாட்டியம், 3-வது நாள் மாலை 5.30 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, இரவு 10.30 மணிக்கு கதைகளி நடக்கிறது.
4-ம் நாள் காலை 11 மணிக்கு அகவல் பாராயணம், இரவு 10 மணிக்கு இன்னிசை கச்சேரி, 5-ம் நாள் மாலை 6.30-க்கு ஆன்மிக சிறப்புரை, இரவு 10.30 மணிக்கு நாட்டிய நடனம், 6-ம் நாள் காலை 9 மணி முதல் பஜனை போட்டி, இரவு 10.30 மணிக்கு குரு சிவச்சந்திரனின் ஆன்மிக அருளுரை, நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை பூஜை நடைபெறும்.
7-ம் நாள் மற்றும் 8-ம் நாள் காலை 8 மணி முதல் சொற்பொழிவு போட்டி, ஏழாம் நாள் மாலை 4 மணிக்கு சங்க வருடாந்திர மகா சபைக் கூட்டம், இரவு 8 மணிக்கு மாதர் மாநாடு, இரவு 10.30 மணிக்கு புராண நாடகம் நடக்கிறது.
8-ம் நாள் பிற்பகல் 3.30 மணிக்கு யோகா, இரவு 8 மணிக்கு அகிலத்திரட்டு விளக்கவுரை, இரவு 10 மணிக்கு கர்நாடக இன்னிசை, 9-ம் நாள் பிற்பகல் 3.30 மணிக்கு வில்லிசை, இரவு 7 மணிக்கு சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல், இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும், 10.30 மணிக்கு வேடம் புனைந்த விசாரணை மன்றமும் நடைபெறுகிறது.
நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்குபூஜை நடக்கிறது. பின்னர் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
- விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
- பத்மநாபபுரம் கோர்ட்டில் விஜில் ஜோண்சை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தக்கலை:
குமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியை சேர்ந்தவர் விஜில்ஜோண்ஸ் (வயது 40). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பெங்களூருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் விஜில் ஜோண்ஸ் முகநூலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ் ஆகியோரை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி அமைப்பாளர் ஜோசப்ராஜ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். ஆனால் புகார் கூறப்பட்ட விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரம் தொடாபாக மதுரை ஐகோர்ட் கிளையிலும் ஜோசப் ராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். அங்கு அவரை கைது செய்தனர்.
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட விஜில் ஜோண்ஸ் இன்று தக்கலைக்கு அழைத்து வரப்பட்டார்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி முகநூலில் அவதூறு கருத்துகள் வெளியிட்டது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் பத்மநாபபுரம் கோர்ட்டில் விஜில் ஜோண்சை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெற்ற மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
- மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த சகாய ஆன்டனி, ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தை சேர்ந்த இன்பன்ட் விஜய் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த நிடிஸோ ஆகியோர் குவைத் நாட்டில் தனியார் நிறுவனத்தில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு ஊதியம் வழங்காமல் இந்த நிறுவனம் இவர்களை வைத்து வேலை வாங்கி வந்தனர். சம்பளம் கேட்ட போது இவர்களை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்தனர்.
மேலும் இவர்கள் பாஸ்போர்ட்டை இந்த நிறுவனம் கையகப்படுத்தி இவர்கள் ஊருக்கு திரும்ப விடாமல் செய்து விட்டனர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வேதனைக்கு உள்ளான இந்த மீனவர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேறு வழி இல்லாமல் அங்கிருந்த ஒரு படகில் ஏறி இந்தியாவிற்கு வந்தனர். மும்பை கடற்கரை பகுதியினுள் ஒதுங்கிய இவர்களை கொலாபா போலீஸ் கைது செய்தனர்.
இந்த செய்தியை அறிந்து மும்பையில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் உதவியுடன் ஒரு வழக்கறிஞரை நியமித்து
அவர்களது விடுதலைக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முயற்சிகள் மேற்கொண்டார்.
முயற்சிகளின் பலனாக நேற்று இவர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து சிறையிலிருந்து விடுதலை பெற்ற இவர்களை விமானம் மூலம் குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்து விஜய் வசந்தின் நாகர்கோவில் அலுவலகத்தில் காத்திருந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெற்ற மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மத்திய பாரதிய ஜனதா அரசினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் விலைவாசி உயர்வினையும் மகளிர் வீடு வீடாக சென்று மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். பெண்களுக்கான சுதந்திரமும் பாதுகாப்பும் நிலைநாட்டிட பாரதிய ஜனதா கட்சியை தோற்கடித்தே ஆக வேண்டும்.
மகளிர் காங்கிரஸ் மாவட்டத் தலைவி ஷர்மிளா ஏஞ்சல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பினுலால் சிங், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 592 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 36 திருக்கோவில்களில் கட்டப்படவுள்ள புதிய இராஜகோபுரம், திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பல்நோக்கு மண்டபம், வசந்த மண்டபம் போன்ற 43 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், அறநிலையத்துறை அதிகாரிகள், பேரூராட்சி தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
- காசி மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார்.
- இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக பழகி அதை வீடியோவாக பதிவு செய்வதோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமானது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி (வயது 29). இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் குமரி மாவட்ட போலீசார் காசியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக பழகி அதை வீடியோவாக பதிவு செய்வதோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமானது.
காசி மீது கோட்டார், வடசேரி மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் பாலியல் வழக்கு, கந்துவட்டி வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் பதிவானது. பின்னர் இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் காசி மீது தொடரப்பட்ட ஒரு பாலியல் வழக்கில் காசிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து மீதமுள்ள 3 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொடுத்த பாலியல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள 1-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 900 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
- ஆணையர் ராமதிலகத்தை விஜய் வசந்த் சந்தித்து கழிப்பறையை திறக்க ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
- முன்னாள் வட்டார தலைவர் சதீஷ் உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மார்த்தாண்டம் சந்திப்பு பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பயோ கழிப்பறை உபயோகிக்க முடியாமல் இருப்பதை மக்கள் சுட்டி காட்ட உடனடியாக குழித்துறை நகராட்சி அலுவலகம் சென்று ஆணையர் ராமதிலகத்தை விஜய் வசந்த் சந்தித்து கழிப்பறையை திறக்க ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பின் போது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங், குழித்துறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தின குமார், முன்னாள் வட்டார தலைவர் சதீஷ் உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- நீதிபதி டாக்டர் ஜோதிமணி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
- நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் சங்க கொடி ஏற்றி வைத்தார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது நாடார் சேவை மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நீதிபதி டாக்டர் ஜோதிமணி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் சங்க கொடி ஏற்றி வைத்தார்.






