என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    திருப்போரூர் முருகன் கோவிலில் 2 மாதத்தில் ரூ.35 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்தன.
    திருப்போரூர்:

    திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் நேற்று எண்ணப்பட்டது. வேலூர் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் (நகை சரி பார்ப்பு) தனபாலன், கோவில் செயல் அலுவலர் நற்சோனை, கோவில் ஆய்வாளர் கோவிந்தராஜ், மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டது.

    இதில் 35 லட்சத்து 38 ஆயிரத்து 485 ரூபாய் ரொக்கம் மற்றும் சில்லரையாகவும், 335 கிராம் தங்கமும், 2750 கிராம் வெள்ளியும், சில வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைத்தன.

    மேலும் செல்லாத சில பழைய ரூபாய் நோட்டுகளும் இருந்தன. உண்டியல் பணம் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சென்னை கோபிகா ரமணா தனியார் அமைப்பு தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். அவர்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை ஈடுபட்டனர். இதையொட்டி திருப்போரூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடைசியாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி அனைத்து உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டது.
    காஞ்சீபுரம் அருகே கால்வாயில் பெண் பிணமாக கடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள கால்வாயில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதிமக்கள் காஞ்சீபுரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் வெற்றி செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே அவர் சுற்றிவந்தததை சிலர் பார்த்து உள்ளனர். பணம் பறிக்கும் முயற்சியில் மர்மநபர்கள் அவரை கடத்தி கால்வாய் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும், உடனடியாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று நல்லாட்சி அமைய வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர் பார்க்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தான உடனே சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டப்படவில்லை.

    எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் சபாநாயகரை சந்தித்து சட்டசபையை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினோம். இப்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது.

    ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.


    ஆனால் அ.தி.மு.க. கட்சியின் சூழ்நிலையை பார்த்தால் அவை நடைபெறுமா? என்ற சந்தேகம் உள்ளது.

    தி.மு.க. எப்போதுமே மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும். இந்த கூட்டத்தொடரிலும் மக்கள் பிரச்சனையை தெளிவாக எடுத்து கூறுவோம்.

    இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும், உடனடியாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று நல்லாட்சி அமைய வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

    எவ்வளவு சீக்கிரம் இந்த ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதோ அவ்வளவு சீக்கிரம் மக்களுக்கு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    செம்மஞ்சேரியில் தண்ணீர் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    செம்மஞ்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சின்னையா. அவரது நண்பர் ரங்கநாதன். நேற்று இரவு இருவரும் கேளம்பாக்கத்தில் இருந்து செம்மஞ்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வளைவில் திரும்பியபோது மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதியது. இதில் சின்னையா பரிதாபமாக இறந்தார். ரங்கநாதன் படுகாயம் அடைந்து சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் கருப்பையா என்பவரை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம் அருகே மது போதையில் தாயை தாக்கியதால் தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த பிள்ளையார்பாளையம், மாதனபாளையம் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45) கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு சந்தோஷ்குமார் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    மதுபழக்கத்துக்கு அடிமையான கண்ணன் தினமும் மதுகுடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவும் அதேபோல் மது போதையில் வந்த கண்ணன் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது அவரை மனைவி ஜெயா கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் மனைவியை தாக்கினார்.

    இதனை கண்டு ஆத்திரம் அடைந்த சந்தோஷ்குமார் அருகில் கிடந்த கட்டையால் தந்தை கண்ணனை தாக்கினார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து சிவகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தந்தையை மகனே அடித்து கொன்ற சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கேளம்பாக்கம் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த கழிப்பட்டூர், சமத்துவ நகர் 5-வது தெருவில் வசித்து வருபவர் லோகநாதன். இவரது மகன்கள் சீனிவாசன், கோபால். லோகநாதனின் மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த மேகநாதன் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது.

    இதனை அறிந்த லோகநாதனின் மகன்கள் 2 பேரும் நேற்று இரவு மேநாதனின் தம்பியான வீரசிங்கத்தை (36) அழைத்து கண்டித்தனர்.

    இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சீனிவாசன், கோபால் மற்றும் அவர்களது நண்பர் நவீன்குமார் ஆகியோர் வீரசிங்கத்தை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சீனிவாசன் உள்பட 3 பேரை தேடி வருகிறார்கள்.

    தி.மு.க.வுடன் இணைந்து மதவாத சக்திக்கு எதிராக போராட தயாராக இருக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த பையனூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊழலை விடவும், மது விடவும் கொடியது வகுப்புவாத வெறி. மதவாத அரசியலை வேரோடு களைய வேண்டிய தேவை இருக்கிறது.

    எனவே தி.மு.க.வுடன் இணைந்து மதவாத சக்திக்கு எதிராக போராட தயாராக இருக்கிறோம்.

    நாங்கள் எந்தவித குறிப்பிட்ட சமூகத்துக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆகவே தலித் அல்லாத அனைத்து தரப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து பொறுப்புகளை பெறலாம்.

    வகுப்புவாத அரசியலை எதிர்த்து களம் காண வேண்டிய சூழல் நிலவுகிறது. அதற்கேற்ப தோழமை கட்சிகளுடன் இணைந்து செயல்படும் நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கேளம்பாக்கம் அருகே தையூர் இளவந்தாங்கல் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருமாவளவன் பேசுகிறார்.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கம் அருகே தையூர் இளவந்தாங்கல் பகுதியில் காஞ்சி கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    மாவட்ட செயலாளர் சூ.ர. ராஜ்குமார் தலைமை தாங்குகிறார். திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ப.விடுதலைநெஞ்சன் வரவேற்று பேசுகிறார். இதில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    சூ.க. விடுதலை செழியன், சிறுத்தை வி. கிட்டு. பாசறை, அ. செல்வராஜ் மற்றும், மாவட்ட, ஒன்றிய , நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர். பொதுக் கூட்டத்திற்கு வருகை தரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு திருப்போரூர் வடக்கு ஒன்றியம் மற்றும் திருப்போரூர் நகரம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கபடுகிறது.

    போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என்று தெரிவித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னையில் மின்சார பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
    தாம்பரம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 1-9-2016 முதல் அமலுக்கு வரவேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 8-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று காலை சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடந்தது.

    பேச்சுவார்த்தைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் பி.டபிள்யூ.தேவிதார், நிதி துறை கூடுதல் செயலாளர் ஆனந்தகுமார், நிதித்துறை துணை செயலாளர் கிருஷ்ணன் உண்ணி மற்றும் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள், 47 தொழிற்சங்கங்களை சேர்ந்த 94 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சுமார் 2½ மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    போக்குவரத்து கழகத்தில் கிட்டத்தட்ட 15 ஆண்டு காலமாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதை முதல்-அமைச்சரிடம் எடுத்து கூறினேன். அதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.750 கோடி நிதி வழங்கப்பட்டு விட்டது. மீதம் உள்ள ரூ.500 கோடிக்கு உண்டான அரசு ஆணைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    செப்டம்பர் மாதம் இறுதியில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மீதம் உள்ள தொகையை வழங்க முதல்- அமைச்சர் ஒப்புக்கொண்டு உள்ளார். அதோடு அவர்களின் நிலுவைத்தொகை வழங்கப்பட்டு விடும்.

    இன்னும் ஓரிரு பேச்சுவார்த்தையில் சம்பள பேச்சுவார்த்தை முடிவுற்று 13-வது ஊதிய ஒப்பந்த உடன்பாடு ஏற்பட்டு விடும். 12 அல்லது 13-ந் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். எனவே போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என நம்புகிறோம்.

    போக்குவரத்து துறையை நவீனப்படுத்த முதல்-அமைச்சரிடம் கலந்து பேசினோம். சென்னையில் மின்சார பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதிரி ஓட்டம் நடத்த 2 நிறுவனங்களிடம் பேசி இருக்கிறோம். கூடிய விரைவில் மாதிரி ஓட்டம் சென்னையில் நடத்தப்படும். இது சென்னை மாநகரத்தில் ஓடக்கூடிய பஸ்சாக இருக்கும்.

    படுக்கை வசதிகளுடன் கூடிய பஸ்களை இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து கழகத்தில் சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளோம். இதர வழிகளிலே வருவாயை பெருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சி.ஐ.டி.யு., தொ.மு.ச. உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் சார்பில் தொ.மு.ச. செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேச்சுவார்த்தையில் தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதாக கூறினார்கள். நிறைவேற்றப்படாமல் மீதம் உள்ள ஒப்பந்தங்களை எப்படி நிறைவேற்றப்படும் எனவும் கேட்டு உள்ளோம்.

    கூட்டத்தில் ஊதிய உயர்வு, நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை பற்றி பேச துணை குழு நியமித்து, பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், அடுத்தகட்டமாக அமைச்சருடன் பேசலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆதம்பாக்கத்தில் கடையை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோட்டில் சித்திரை என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் கடையின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    அங்கு பணப்பெட்டியை உடைத்து அதில் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர் இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆதம்பாக்கத்தில் சில நாட்களாக தொடர்ந்து கொள்ளை மற்றும் வழிப்பறி நடக்கிறது. இது குறித்து போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது, இரவு ரோந்து பணிக்கு போதிய போலீசார் இல்லை” ஏன அவர் தெரிவித்தார்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 108 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 375 போலீசாரை பணி இட மாற்றம் செய்து மாவட்ட சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், வண்டலூர், மதுராந்தகம் ஆகிய 6 காவல் துணை கோட்டங்களின் கீழ் 39 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

    கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்யும் போலீசார் இடமாறுதல் கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.

    இந்த நிலையில் 108 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 375 போலீசாரை பணி இட மாற்றம் செய்து மாவட்ட சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவிட்டு உள்ளார்.
    சசிகலா உறவினர் பாஸ்கரன் மீது ரூ.7 கோடி மோசடி புகார் கூறப்பட்டது. இந்நிலையில் 500-க்கு மேற்பட்டோர் நீலாங்கரையில் உள்ள பாஸ்கரன் வீட்டை முற்றுகையிட்டனர்.
    திருவான்மியூர்:

    சசிகலாவின் உறவினர் பாஸ் என்கிற பாஸ்கரன். நடிகரான இவர் ‘தலைவன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

    இவர் தனது பெயரில் ரசிகர் மன்றம் வைத்துள்ளார். மன்றத்தை சேர்ந்த ரசிகர்கள், நிர்வாகிகளிடம் படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாகவும், தனது படம் வெற்றி பெற்றால் லாபத்தில் பங்கு தருவதாகவும் கூறி கோடிக்கணக்கில் பணத்தை வாங்கியுள்ளதாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் நீலாங்கரை போலீசில் புகார் கூறியுள்ளனர்.

    பாஸ்கரன் சொன்னபடி படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுக்கவில்லை என்றும், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ரூ.7 கோடி வரை மோசடி செய்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

    இன்று அவரது ரசிகர் மன்ற தலைவர் பூவை அசோகன், சந்திர மோகன் தலைமையில் 500-க்கு மேற்பட்டோர் நீலாங்கரையில் உள்ள பாஸ்கரன் வீட்டை முற்றுகையிட்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து பாஸ்கரன் பெயரிலான ரசிகர்மன்றத்தை கலைத்து விட்டனர்.
    ×