என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சீபுரத்தில் அரசு பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டதில் அறையில் வைக்கப்பட்டு இருந்த 9 ஆயிரம் புத்தகபைகள், 3 ஆயிரம் இலவச காலணிகள் மற்றும் இலவச சீருடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் வைகுண்டபுரம் தெருவில் டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    பள்ளி வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகமும் ராணி அண்ணாதுரை மகளிர் பள்ளியும் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை பள்ளி வளாகத்தில் உள்ள அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை கண்ட பொதுமக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    காஞ்சீபுரம் கோட்ட தீயணைப்பு அலுவலர் மனோகரன், நிலைய அலுவலர் நடராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் முற்றிலும் அணைக்கப்பட்டது. எனினும் அறையில் வைக்கப்பட்டு இருந்த 9 ஆயிரம் புத்தகபைகள், 3 ஆயிரம் இலவச காலணிகள் மற்றும் இலவச சீருடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.

    மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது நாசவேலை காரணமா என்று விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பள்ளி திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டிய இலவச பைகள், சீருடைகள், காலணிகள் போன்றவை ஏன் வழங்கப்படாமல் அறையில் வைத்து பூட்டப்பட்டது என்று அப்பகுதி மக்களும் மாணவ-மாணவியர்களின் பெற்றோர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    பெருங்களத்தூரில் பஸ் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    தூத்துக்குடியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 21) பெருங்களத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். பெருங்களத்தூர் நாகாத்தம்மன் கோவில் தெருவில் வீடு எடுத்து தங்கியிருந்தார்.

    இன்று காலை ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டார். கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது அதே கல்லூரிக்கு சொந்தமான பஸ் மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்தது.

    பஸ்சில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த கல்லூரி நண்பர்களிடம் பேசியபடியே ஆறுமுகம் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அப்போது மோட்டார் சைக்கிள் சறுக்கியதில் ஆறுமுகம் கீழே விழுந்தார். அவர் மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறியதில் பலத்த காயம் அடைந்தார்.

    உடனடியாக அவரை சேலையூரிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தமிழக மக்களுக்கு எந்தவித நல்ல திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தின் ஆட்சியை நடத்திக் கொண்டு இருப்பவர் மோடி தான் என்று முன்னாள் எம்.எல்.ஏ.வுமான காடு வெட்டி ஜெ.குரு கூறினார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் விழுப்புரத்தில் நடக்கும் சமூக நீதி மாநாடு குறித்த விளக்க பொதுக்கூட்டம் காஞ்சீபுரம் செவிலி மேட்டில் நடந்தது.

    வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் வ.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளர் பொன்.கங்காதரன், மேற்கு மாவட்ட செயலாளர் பெ. மகேஷ்குமார், மாநில துணை அமைப்பு செயலாளர் வ.உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான காடு வெட்டி ஜெ.குரு கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் இனி நடிகர்கள் நாடாள முடியாது. தமிழகத்தில் ஆட்சி நடத்திக் கொண்டு இருப்பவர்கள் ஊழலில் சிக்கிக்கொண்டு தங்களை காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

    தமிழக மக்களுக்கு எந்தவித நல்ல திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தின் ஆட்சியை நடத்திக் கொண்டு இருப்பவர் மோடி தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சக்திகமலாம்மாள், மேற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார்,வன்னியர் சங்க மாவட்ட தலைவர் வரதராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்த சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவான்மியூர்:

    மேடவாக்கத்தை அடுத்த பள்ளிக்கரணை ராஜலட்சுமி தெருவை சேர்ந்தவர் கார்த்திக், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சங்கீதா (வயது 22).

    மனைவியின் நடத்தையில் கார்த்திக் சந்தேகம் அடைந்தார். இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணி அளவில் எழுந்த கார்த்திக் திடீரென அருகில் கிடந்த கத்தியால் தூங்கிக் கொண்டிருந்த சங்கீதாவின் கழுத்தை அறுத்தார்.

    ரத்தவெள்ளத்தில் இதில் அவர் அலறிதுடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டுவந்தனர். உடனே கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    உயிருக்கு போராடிய சங்கீதாவை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அதே பகுதியில் பதுங்கியிருந்த கார்த்திக்கை பள்ளிக்கரணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை கிண்டியில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா நடத்தி வரும் பள்ளியின் வாடகை தொகையை செலுத்தாததால் அப்பள்ளிக்கு உரிமையாளர் பூட்டு போட்டதால் மாணவர்கள் பரிதவித்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா நடத்தும் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வந்தது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். வாடகை கட்டிடத்தில் இந்த பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளிக்கு கடந்த 2009-ம் ஆண்டு முதல் வாடகை பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்டிட உரிமையாளர் வெங்கடேஷ் வரலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருதரப்பினரையும் அழைத்து நீதிபதி சமரசம் செய்தார். ரூ. 11 கோடி அளவுக்கு வாடகை பாக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. அவ்வளவு தொகையை உடனடியாக கொடுக்க முடியாது என்பதால் ரூ. 2 கோடி கொடுக்கும்படியும், மாதம் ரூ. 5½ லட்சம் வாடகை என்பதை ரூ. 10 லட்சமாக உயர்த்திக் கொடுக்கும்படியும் நீதிபதி மத்தியஸ்தம் செய்து வைத்தார். இது தொடர்பான ஆவணத்தில் வெங்கடேஷ்வரலு தரப்பினர் கையெழுத்து போட்டு விட்டனர்.

    ஆனால் லதா தரப்பினர் இதுவரை கையெழுத்து போடாமல் இழுத்தடித்து வந்தனர். இதனால் இதுவரை ரூ. 1 கோடி ரூபாய் கூட கொடுக்கவில்லை. வாடகையும் கொடுக்கவில்லை.


    தற்போது பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்டிட உரிமையாளர் வெங்கடேஷ்வரலு நேற்று மாலை பள்ளியின் உட்புறம் பூட்டு போட்டு பூட்டினார்.

    இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு மாணவ- மாணவிகளும், ஆசிரியர்களும் வந்தனர். அப்போது பள்ளி மூடப்பட்டிருந்ததால் அவர்கள் வெளியே நின்றபடி தவித்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவ-மாணவிகளையும், ஆசிரியர்களையும் வேளச்சேரியில் உள்ள மற்றொரு பள்ளிக்கு அழைத்து சென்றனர்.
    பேசிக்கொண்டே இருக்காதீர்கள் களத்திற்கு வாருங்கள் என்று நடிகர் கமல்ஹாசனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
    தாம்பரம்

    ஊழல் செய்தவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும், அதற்கு அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை என கமல்ஹாசன் கூறுவது வெறும் பேச்சுதான் என்று சீமான் கூறினார்.

    சென்னையை அடுத்த தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

    முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக ‘நீட்’ தேர்வில் ஓராண்டு காலத்துக்கு மத்திய அரசிடம் விலக்கு கேட்பதற்கு காரணம் இருக்கிறது. அதே காரணம் அடுத்த ஆண்டும் இருக்கும். அதனால் தான் அதற்கு நிரந்தர விலக்கு கேட்கிறோம்.

    சாதி வேண்டாம் என்று சொல்கிற ஒருவர் இருந்தால் சொல்லுங்கள், நான் தலைமை ஏற்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அதே இடத்தில் வைக்க கமல்ஹாசன் குரல் கொடுப்பேன் என்று சொல்லட்டும். அவருடன் சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன்.

    ஊழலை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டம் செய்வோம் என கமல்ஹாசன் தெரிவிக்கட்டும். நாங்கள் அதில் கலந்து கொள்ள தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் ஊழல் செய்தவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கு அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை என கமல்ஹாசன் கூறுவது வெறும் பேச்சுதான். ராஜினாமா செய்ய இங்கு யாரும் காமராஜர் போல் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தவர் உள்பட இரண்டு வாலிபர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மாமல்லபுரம்:

    சேலத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 17). ஸ்டவ் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் குடும்பத்துடன் மாம்மல்லபுரத்துக்கு சுற்றுலா வந்திருந்தார்.

    அனைவரும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலை கார்த்திக்கை கடலுக்குள் இழுத்து சென்றது. உறவினர்களால் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இந்த நிலையில் பட்டிப்புலம் அருகே கார்த்திக் பிணமாக கரை ஒதுங்கினார். அவரது உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரத்தை அடுத்த சேலையூரை சேர்ந்தவர் முகமது சலீம் (34). இவர் நண்பர்களுடன் மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்தார். பின்னர் கடலில் குளித்தார். ராட்சத அலையில் சிக்கிய முகமது சலீம் தண்ணீரில் மூழ்கி பலியானார். அவரது உடல் கடற்கரை கோவில் அருகே கரை ஒதுங்கியது.

    தொடர் விடுமுறை காரணமாக மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. கடலில் குளிப்பவர்கள் தண்ணீரில் மூழ்குவதை தடுக்க கடலோர பாதுகாப்பு படை நீச்சல் வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    பாலவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சென்னை பல்கலைக்கழக ஊழியர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவான்மியூர்:

    பாலவாக்கம், பல்கலை நகரை சேர்ந்தவர் ஜோசப் (வயது 28). சென்னை பல்கலைக்கழகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு அவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சுதீசுடன் திருவான்மியூரில் இருந்து பாலவாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    கிழக்கு கடற்கரை சாலை வி.ஜி.பி.-லேஅவுட் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜோசப் பலியானார். சுதீசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈஞ்சம்பாக்கத்தில் நேற்று மாலை நின்று கொண்டு இருந்த மாநகர பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

    அவர்களை பற்றிய விபரம் இதுவரை தெரியவில்லை. மோட்டார் சைக்கிளில் சாவி இல்லை. வயர் துண்டிக்கப்பட்டு அதனை ஓட்டி வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து பலியான 2 வாலிபர்களும் பழைய குற்றவாளிகளா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் அருகே டிராக்டர் கவிழ்ந்து 20 பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டிச்சத்திரம் அருகே உள்ள பெரும்பாக்கத்தைச் சேர்ந்த 20 பெண்கள் இன்று காலை விவசாய பணிக்கு டிராக்டரில் சென்றனர்.

    அப்போது சாலையோர பள்ளத்தில் சிக்கி டிராக்டர் கவிழ்ந்தது. இதில் 20 பெண்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    டி.டி.வி.தினகரன் நடத்தும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. (அம்மா) அணியின் மூத்த தலைவருமான தம்பிதுரை கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. (அம்மா) அணியின் மூத்த தலைவருமான தம்பிதுரை நேற்று டெல்லி செல்ல சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோது, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அ.தி.மு.க.வில் உள்ள அனைவருமே சின்னத்தை மீட்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.

    எல்லா அரசியல் கட்சிகளிலுமே அணிகள் உள்ளன. எல்லா அணிகளிலுமே சின்னம் மீட்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    அ.தி.மு.க.வில் பிளவு என்பது இல்லை. பிளவு ஏற்பட்டிருந்தால் தேர்தல் வந்திருக்கும். அந்த நிலை வரவில்லை. நீட் தேர்வில் விலக்கு பெற வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் எண்ணம். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.



    மு.க.ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார். நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போதே சட்டமன்றத்தில் ஸ்டாலின் செய்தது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.

    அப்போதே அவர்கள் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து விட்டார்கள். தற்போது மீண்டும் கொண்டு வருவோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

    எந்த கட்சியையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அந்த நிலை உருவாகவில்லை. உருவாகாது. அ.தி.மு.க. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கட்சி. அதை எவராலும் கலைக்க முடியாது.

    இவ்வாறு தம்பிதுரை கூறினார்.

    ‘டி.டி.வி.தினகரன் நடத்தும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பீர்களா?’ என்று கேட்டதற்கு, ‘நான் டெல்லி செல்கிறேன். இதனால் எந்த கூட்டத்திலும் பங்கேற்க மாட்டேன். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை எல்லோரும் கொண்டாடலாம்’ என்று தம்பிதுரை கூறினார். 
    சென்னையில் இருந்து 450 பேருடன் ஹஜ் புனித பயணத்திற்காக முதல் விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த பயணிகளை அமைச்சர் நிலோபர் கபில் வழியனுப்பி வைத்தார்.
    ஆலந்தூர்:

    சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் மேற்கொள்வது முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று ஆகும். அதன்படி உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் ஆண்டுதோறும் துல்ஹஜ் மாதத்தில் இந்த பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்தும் ஆண்டுதோறும் ஏராளமான முஸ்லிம்கள் இந்த புனித பயணத்தை மேற்கொள் கிறார்கள்.



    இதற்கான நபர்களை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தேர்வு செய்து வருகிறது. இந்த ஆண்டுக்கான புனித பயணத்துக்கு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 3,468 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பயணத்திற்காக சென்னையில் இருந்து 11 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    3 பகுதிகளில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டவர்களில் 221 பெண்கள் உள்பட 450 பேர் கொண்ட முதல் குழு நேற்று ஹஜ் புனித பயணத்திற்காக புறப்பட்டு சென்றனர். இந்த குழுவினர் அடங்கிய முதல் விமானம் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு புறப்பட்டு சென்றது.

    ஹஜ் பயணம் சென்றவர்களுக்கு தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் ஆகியோர் சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் இந்திய ஹஜ் கமிட்டி குழு உறுப்பினர் முகமது இர்பான் அகமது, தமிழக அரசு செயலாளர்கள் முகமது நஜிமுத்தீன், கார்த்திக் உள்பட ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    இது குறித்து அமைச்சர் நிலோபர் கபில் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதை உயர்த்துவது குறித்து மத்திய அரசிற்கு கடிதம் எழுதி உள்ளோம். ஹஜ் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.

    கடந்த 3 ஆண்டுகளாக ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்து, வாய்ப்பு கிடைக்காதவர்கள், 70 வயது கடந்தவர்கள் என 2200-க்கும் மேற்பட்டோர் குலுக்கல் இல்லாமல் நேரடியாக இந்த ஆண்டு தேர்ந்து எடுக்கப்பட்டதாக கூறிய அப்துல் ஜப்பார், ஹஜ் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி கடமையை நிறைவேற்ற தமிழக அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஹஜ் புனித பயணிகளின் வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் சிறப்பு பகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன்படி 3-வது நுழைவு வாயில் வழியாக செல்ல ஹஜ் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் விமான நிலைய ஆணையகம், விமான நிலைய போலீசார், சுங்க இலாகா, குடியுரிமை அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. மழை நீர் தேங்கியதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகினர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் நகரில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை கனமழை பெய்தது. காந்திரோடு, காமராஜர் சாலை, பஸ்நிலையம், இரட்டை மண்டபம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகினர்.

    தொடர் மழையின் காரணமாக காஞ்சீபுரம் ராஜாஜி மார்கெட்டில் மழைநீர் தேங்கியது. இதனால் வியாபாரம் பெரிதளவு பாதிக்கப்பட்டது.

    சாலை ஓர வியாபாரமும் முற்றிலும் முடங்கியது. விடுமுறை நாளான இன்று நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து குறைவாக இருக்கும் நிலையில் தொடர் மழையின் காரணமாக இன்று இரு சக்கர வாகனப் போக்குவரத்தும் பெருமளவு இல்லை. இன்று காலை பலத்த மழை கொட்டியது.

    இதேபோல் மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மழையின் அளவு

    (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    காஞ்சீபுரம் - 5.2

    செங்கல்பட்டு - 1.4

    தாம்பரம் - 7.4

    கேளம்பாக்கம் - 7.8

    செய்யூர் - 21.5

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒட்டு மொத்த மழை அளவாக 93.3 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

    திருவள்ளூரில் இன்று காலை மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.
    ×