என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு, பழைய பாளையம், குமரன் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது48). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சரவணன் சொந்தமாக தறிபட்டறை வைத்து நடத்தி வந்தார். சரவணனுக்கு பூர்வீக சொத்து வர உள்ளது. அது கிடைக்கும் பட்சத்தில் தனது இரண்டு மகள்கள் திருமணத்தை நடத்தி முடித்துவிடலாம் என்று நினைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் எதிர்பார்த்தது போல் சரவணனுக்கு சொத்து கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சரவணன் மனவேதனையில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்த சரவணன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
கோபி:
கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் கருப்ப மூப்பன். இறந்துவிட்டார். இவரது மனைவி தவமணி (வயது 60). இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள். மூத்த மகனுக்கும், 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. ஆனால் இளைய மகனான செல்வராஜிக்கு (32) திருமணமாக வில்லை.
கூலி தொழிலாளியான செல்வராஜிக்கு குடிப்பழக்கம் இருந்தது. சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.
மேலும் தனக்கு திருமணம் ஆகிவில்லையே என்று கூறி புலம்பியபடி இருந்தாராம். இந்த நிலையில் நேற்று வீட்டில் செல்வராஜ் தனியாக இருந்தார்.
விரக்தியில் இருந்த அவர் வீட்டிலுள்ள பனைமர சட்டத்தில் லுங்கியால் தூக்குபோட்டுக்கொண்டார். அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் அவரை மீட்டனர்.
சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள நகலூர், பெருமாபாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. பூசாரியாக சின்னத் தம்பி பாளையத்தை சேர்ந்த தவகுரு என்பவர் உள்ளார்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறும். மேலும் வெள்ளிக்கிழமையும், பவுர்ணமி தினத்திலும் பூஜை நடைபெறும்.
மற்ற நாட்களில் மக்கள் வழிபாடு செய்ய கோவில் திறந்திருக்கும். ஆனால் கருவறை கதவு மூடப்பட்டு இருக்கும். பக்தர்கள் கருவறைக்கு வெளியே நின்று வழிபாடு செய்வார்கள்.
அதேபோல நேற்று மாலை வழிபாடு செய்ய காயத்ரி என்ற பெண் சென்றார். அப்போது கோவில் கருவறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை அவர் பார்த்தார்.
இது தொடர்பாக தகவல் அந்த பகுதியில் பரவியது. கோவில் தர்ம கர்த்தா அர்த்தநாரிக்கும் இது பற்றி தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு வந்த பார்த்தார்.
பின்னர் இது தொடர்பாக அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் சோதனையிட்ட போது கோவில் சுவரில் பதிக்கப்பட்டிருந்த உண்டியலில் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
யாரோ மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கருவறை கதவை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
ஆனால் அவர்களுக்கு அங்கு ஒன்றும் சிக்க வில்லை. உண்டியல் பணத்தை மட்டும் அவர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஆண்டு தோறும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாவின்போதுதான் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படும். கடந்த முறை திறந்து எண்ணப்பட்டபோது ரூ. 50 ஆயிரம் இருந்ததாம்.
அந்த வகையில் பார்க்கும்போது தற்போது உண்டியலில் ரூ. 20 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த அந்தியூர் போலீ சார் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியையொட்டி உள்ள பர்கூர் மலையில் பெஜலட்டி என்ற வன கிராமம் உள்ளது. இந்த மலை கிராமத்தையொட்டி ஒரு பள்ளம் உள்ளது. அதில் 2 ஆண் காட்டு யானைகள் ஆக்ரோஷமாக மோதி கொண்டன.
ஒன்றோடு ஒன்று வளர்ந்த கூரிய தந்தங்களால் மோதின. 2 யானைகளின் பிளிறல் சத்தம் பெஜலட்டி கிராமத்திலும் எதிரொலித்தது. இதனால் கிராம மக்கள் திரண்டனர்.
இதில் சிலர் சத்தம் வந்த இடத்தை நோக்கி சென்ற போது 2 யானைகளும் கடும் ஆக்ரோஷமாக சண்டை போட்டு கொண்டிருந்தது.
இதில் தந்தம் குத்தி ஒரு யானையின் வயிற்றில் இருந்து ரத்தம் கொட்டியது. அந்த யானை அடுத்த நிமிடம் சாய்ந்து விழுந்த பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து கிராமமக்கள் பர்கூர் வனத்துறையிருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினரும் விரைந்து வந்தனர். அங்கு ஒரு யானை இறந்து கிடந்ததை கண்டனர்.
அப்போது இருட்டி விட்டதால் திரும்பி சென்றுவிட்டனர். இந்த யானையின் உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிறகு வனப்பகுதியிலேயே யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கு இரையாக போடப்பட்டது.
பவானி:
பவானி அடுத்த ஜம்பை பெரியமோளபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் தமிழ்செல்வன் (வயது 20). இவர் சித்தோடு அருகே கங்காபுரத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தாய் பூங்கொடியுடன் வசித்து வந்தார். இவரது தந்தை முருகன் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழ் செல்வன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நைலான் கயிறு மூலம் திடீரென தூக்கு போட்டு கொண்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். தமிழ்செல்வன் எதற்காக தூக்குபோட்டு இறந்தார் என உடனடியாக தெரிய வில்லை. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
பெருந்துறை அருகே கோவை நெடுஞ்சாலையோரம் தி.மு.க. மண்டல மாநாடு நடக்கிறது. மார்ச் மாதம் 24,25 ஆகிய 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டை சிறப்பாக நடத்த 25 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநாடு சிறப்பாக நடக்க தினமும் ஈரோடு மாவட்ட கட்சி தலைவர்கள் மாநாட்டு திடலுக்கு சென்று ஆலோசனை கூட் டம் நடத்தி வருகிறார்கள்.
மாநாட்டு வரவேற்பு குழு தலைவரும் முன்னாள் அமைச்சருமான முத்துசாமி கூறியதாவது:-
மாநாடு சிறப்பாக நடக்க செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்ட மாநாட்டை வெற்றி மாநாடாக தமிழ்நாடே ஏன் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு நடத்தி காட்டி இனிமேல் தி.மு.க.வில் எந்த மாநாடும் எங்கு நடந்தாலும் ஈரோடு மண்டல மாநாடு முன்னுதாரணமாக இருக்கும். திருப்புமுனை மாநாடாக இந்த மாநாடு அமையும்.
இந்த மாநாட்டில் இளைஞர் எழுச்சி நாள், தளபதி பிறந்த நாளையொட்டி 100-க்கும் மேற்பட்ட சுயமரியாதை இலவச திருமணத்தை மு.க. ஸ்டாலின் நடத்தி வைக்கிறார். #Tamilnews
நாமக்கல் மாவட்டம் சோழ சிராமணி பகுதியிலிருந்து 6 டாரஸ் லாரிகளில் அனுமதியின்றி மணல் கடத்தி சென்றனர்.
பாசூர் பெருந்துறை வழியாக இந்த 6 லாரிகளும் கோவைக்கு சென்று கொண்டிருந்தது. மொடக்குறிச்சி அடுத்த பட்டாசு பாலி என்ற இடத்தில் இந்த லாரிகள் வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மொடக்குறிச்சி தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் அந்த லாரிகளை மடக்கினர்.
அதை சோதனை செய்த போது அனுமதியின்றி மணல் கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.
இதையொட்டி அந்த 6 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஆர்.டி.ஓ. வந்து பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர். #tamilnews
காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோபியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சாடி பேசினார். “இப்பகுதியில் கல்வித்துறை அமைச்சர் என ஒருவர் இருக்கிறார். அவர் அரசியல் பேச மாட்டாராம். அவருக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது” என்று கூறினார்.
இந்நிலையில் இன்று கோபியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையனிடம், இளங்கோவன் உங்களுக்கு அரசியல் தெரியாது என்று கூறி உள்ளாரே...என்று நிருபர்கள் கேட்டதற்கு செங்கோட்டையன் கூறியதாவது.-
அவர்(இளங்கோவன்) பேசிய பேச்சுக்கு எல்லாம் என்னால் பதில் கூற முடியாது. அப்படி அவரது பேச்சுக்கு நான் கருத்து கூறினால் நான் வகிக்கும் கல்வித்துறையே மங்கி போய் விடும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, ‘‘தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் எங்கெல்லாம் காலி பணியிடங்கள் உள்ளதோ அங்கு எல்லாம் காலி இடங்கள் நிரப்பப்படும். மாணவர்களின் கல்வி தரம் உயர்த்தப்படும்.
பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்க அவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்க மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள்கள் அந்தந்த பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதை படித்து மாணவர்களை பொதுத்தேர்வுக்கு சிறந்த முறையில் தயார்படுத்த வேண்டும்’’ என்று கூறினார். #Tamilnews
பவானி அருகே உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவி தனலட்சுமி (வயது 45).
இவர் தனது தாய் மற்றும் தந்தை இருளப்பன் (70) ஆகியோருடன் வசித்து வந்தார். தனலட்சுமி கடந்த மாதம் 30-ந் தேதி வீட்டின் அருகே உள்ள குப்பைமேட்டில் கரிக்கட்டையான நிலையில் பிணமாக கிடந்தார்.
அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக தளவாய்பேட்டையை சேர்ந்த தமிழ்செல்வன் (40) போலீசில் சிக்கினார். அவர் தனலட்சுமியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் அவர் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனக்கும், எனது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவள் என்னிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து வாங்கி குழந்தைகளுடன் தனியாக சென்றுவிட்டாள்.
நான் பழைய இரும்புகளை வாங்கி அதை வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தேன். அப்போது தனலட்சுமியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம்.
அப்போது தனலட்சுமி பணம் கேட்பாள். நானும் பணம் கொடுத்து வந்தேன். ஒரு கட்டத்தில் என்னிடம் பணம் அதிகமாக கேட்டாள். அதற்கு நான் மறுத்து வந்தேன். இதனால் அவள் என்னை தொந்தரவு செய்து வந்தாள்.
மேலும் அவள் என்னிடம் உல்லாசமாக இருக்கவும் மறுத்து வந்தாள். அதுமட்டுமின்றி வேறு நபருடன் கள்ளத்தொடர்பு அவள் வைத்திருந்ததும் எனக்கு தெரியவந்தது. இது எனக்குள் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவளை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
சம்பவத்தன்று அவளுடைய வீட்டுக்கு நான் வழக்கம்போல் சென்றேன். அவளை நான் உல்லாசத்துக்கு வரும்படி அழைத்தேன். ஆனால் அவள் வரவில்லை. இதனால் எனக்கும் அவளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தனலட்சுமி கோபித்தபடி வீட்டை விட்டு வெளியே சென்றாள்.
உடனே நான் வெளியே ஓடிச்சென்று நான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனலட்சுமியை பிடித்து அவளின் மார்பு, வயிறு பகுதியில் என மாறி மாறி குத்தினேன். சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தாள். வீட்டு வாசலில் ரத்தக்கறை படிந்திருந்தது. அதை மறைக்க மண்ணை போட்டு மூடினேன்.
பிணத்தை வீடு அருகே உள்ள குப்பைமேட்டுக்கு இழுத்து சென்றேன். அங்கு கிடந்த மரப்பலகை, வைக்கோல், தென்னங்கீற்றுகளை அடுக்கி வைத்து அவற்றின் மீது பிணத்தை போட்டு எரித்தேன்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறினார். #Tamilnews
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள பெத்தாம்பாளையம் பேருராட்சி, நரிப்பாளையம் பிரிவு அருகேயுள்ள பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 52).
பவர் லூம் தறிப்பட்டறை உரிமையாளரான இவர் அதே பகுதியில் தனது மனைவி பூங்கொடி (46), மகள்கள் ஷியாமளா(19), கல்பனா(16) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தங்கவேலின் தாயார் மாராயம்மாள் (78) தனியாக வசித்து வந்தார். இவர்களது வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தின் அருகே உறவினரான ஆறுமுகம்(60) தனது மனைவி ஜெயமணி, மகன் கோவிந்தசாமி மற்றும் மகள் சுகுணாவுடன் வசித்து வந்தார்.
விவசாயியான ஆறுமுகம் கடந்த சில மாதங்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.இது தொடர்பாக ஆறுமுகத்தின் குடும்பத்தினர் தங்கவேலுவிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் ஆறுமுகத்தை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்க தங்கவேல் உதவி செய்தார்.
சிகிச்சை பெற்ற ஆறுமுகம் வீடு திரும்பினார். அவர் தன்னை மனநல ஆஸ்பத்திரியில் சேர்த்து தன்னை பைத்தியக்காரன் என்று அனைவரும் சொல்லும் அளவிற்கு செய்து விட்ட தாக கூறி தங்கவேலிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
நேற்று காலை அவர் தங்கவேலின் வீட்டிற்கு சென்றார். தங்கவேல் வீட்டின் பின்பகுதியில் பால் கறந்து கொண்டிருந்தார். தங்கவேல் வீட்டில் இல்லை என்று நினைத்து ஏமாற்றமடைந்த ஆறுமுகம் அருகில் கிடந்த தறிப்பட்டறைக்கு பயன்படுத்தும் இரும்பு ராடை எடுத்துக்கொண்டு தங்கவேலின் தாயார் மாராயம்மாள் வீட்டிற்குள் சென்றார்.
அங்கு கட்டிலில் படுத்திருந்த மாராயம்மாளை இரும்பு ராடால் தாக்கினார். மாராயம்மாள் சத்தம் போடவே அருகில் உள்ள பவர் லூம் தறிப்பட்டறையில் வேலை பார்த்த நபர்கள் மற்றும் தங்கவேலின் குடும்பத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
அவர்களை கண்ட ஆறுமுகம் தனது கையில் இருந்த இரும்பு ராடை வீட்டின் வாசலில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். வீட்டின் உள்ளே ரத்த வெள்ளத்தில் கிடந்த மாராயம்மாளை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே மாராயம்மாளை தாக்கிவிட்டு தப்பி சென்ற ஆறுமுகத்தை சிலர் துரத்திச் சென்று பிடித்தனர்.
பின்னர் அருகிலுள்ள தென்னை மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். இதில் ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து காஞ்சிக் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆறுமுகத்தை அடித்து கொன்றது தங்கவேல் மற்றும் அவரது பவர் லூம் தறிப்பட்டறையில் வேலை பார்த்து வரும் தண்டபாணி மற்றும் கார்த்தி என்பது தெரியவந்தது.
எனவே அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு தங்கவேல், கார்த்தி, தண்டபாணி ஆகிய 3 பேரும் போலீசில் சிக்கினர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
ஈரோடு:
கோவை விமானப்படை பிரிவில் ஊழியராக இருப்பவர் அசோக்குமார். இவரும் இவரது மனைவியும் சென்னைக்கு சென்றனர்.
பிறகு சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் புளு மவுண்டன் ரெயிலில் மீண்டும் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் வந்த ஏ.சி. பெட்டியில் கூடலூரை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரும் வந்து கொண்டிருந்தார்.
ரெயில் சேலம் அருகே வந்து கொண்டிருந்தபோது சந்திரசேகர் விமானப்படை ஊழியர் மனைவியிடம் திடீரென செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதை விமானப்படை ஊழியரும், அவரது மனைவியும் கண்டித்தனர்.
அந்த ரெயில் இன்று அதிகாலை 2.45 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது. ரெயிலில் இருந்து அசோக்குமாரும், அவரது மனைவியும் இறங்கினர். ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு சென்ற அவர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்ட சந்திரசேகர் மீது புகார் செய்தனர்.
இதற்கிடையே அந்த ரெயிலில் பயணம் செய்த சந்திரசேகர் கோவைக்கு சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசார் கோவைக்கு விரைந்தனர்.
அங்கு சந்திரசேகரை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள பெரிய அக்ரகாரம் ஜோசப் தோட்டத்தை சேர்ந்தவர் சிராஜூதீன் (வயது 30). இவரது நண்பர்கள் சிவக்குமார், பழனி. இவர்கள் 3 பேரும் ஈரோடு ரெயில் நிலையத்தில் டீ வியாபாரம் செய்து வருகிறார்கள்.
இவர்கள் நேற்று இரவு ஒரு ஆட்டோவில் அரச்சலூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அசோகபுரத்தில் வந்த போத ஒரு லாரி எதிரே வந்தது. திடீரென அந்த லாரி எதிர்பாராத வகையில் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து உள்ளே இருந்த 3 பேரும் வெளியே ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர்.
அப்போது மோதிய லாரியின் சக்கரம் சிராஜூதீன் மீது ஏறி நசுக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் சிவக்குமார் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மற்றொருவரான பழனி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews






