என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் முட்டைகோஸ் விலை குறைந்ததால் முட்டைகோஸ் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 அடி உயரத்தில் உள்ளதால் குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலவுகிறது.

    இதனால் இப்பகுதி விவசாயிகள் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டைகோஸ், பீட்ருட் உள்பட காய்கறிகளை பயிரிடுகின்றனர். இங்கு விளையும் காய்கறிகள் மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கேரள மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    தாளவாடி சுற்றுவட்டார கிராமங்களான எரஹனள்ளி, திகினாரை, ஜீரஹள்ளி, கல்மண்டிபுரம், அருள்வாடி, கெட்டவாடி, தமிழ்புரம், நெய்தாளபுரம், தலமலை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நீலகிரி, சேன்டேஸ், கணேஸ் போன்ற பல்வேறு ரக முட்டைகோஸ் சாகுபடி செய்துள்ளனர். விளைச்சல் அதிகமாகி உள்ளது. தற்போது முட்டைகோஸ் விவசாயிடமிருந்து கிலோ ரூ.1 முதல் ரு.2 க்கு வியாபாரிகள் வாங்கிச்செல்வதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து தாளவாடி பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    முட்டைகோஸ் 3 மாத கால பயிராகும். ஒரு ஏக்கருக்கு 25000 முதல் 30000 நாற்றுக்கள் நடவு செய்யப்படுகிறது. உழவுக்கூலி, நடவுப்பணி, களையெடுத்தல், பூச்சிமருந்து தெளித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.45000 செலவாகிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.7 முதல் 12 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது.

    தற்போது வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.1 முதல் ரு.2 வரை தான் வாங்கி செல்கின்றனர். இதனால் முட்டைகோஸ் பயிரிட்டுள்ள விவசாயிகள் செலவினத்தொகை கூட ஈட்டமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக பயிரிடப்படும் பயிருக்கு தேவையான விதை மற்றும் உரம் வாங்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஒருசில விவசாயிகள் அறுவடை செய்யும் கூலிக்கு கூட கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டுள்ளதால் முட்டைகோஸ் பயிரில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.

    முட்டைகோஸ் பயிரில் நஷ்டம் ஏற்பட்டுள்ள விவசாயிகளை கணக்கெடுப்பு செய்து அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.# tamilnews

    அரசியலுக்கு வந்துள்ள நடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவரையும் மக்கள் நம்ப வேண்டாம் என்று நடிகர் சத்யராஜ் பேசியதற்கு பார்த்திபன் பதிலடி கொடுத்துள்ளார்.
    ஈரோடு:

    சென்னை சைதாப்பேட்டையில் நடந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசும் போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்தியாகிவிட்டது. பிரபல நடிகர்கள் என்பதால் அவர்கள் (ரஜினி, கமல்) எல்லாம் தெரிந்தவர்கள் என்று மக்கள் நம்பிவிட வேண்டாம். அவ்வாறு நினைப்பது தவறு. அவர்களை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறினார்.

    சத்யராஜ் பேச்சுக்கு பதிலடி கொடுத்து நடிகர் பார்த்திபன் பேட்டி அளித்துள்ளார். ஈரோட்டில் சினிமா பட தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண வரவேற்பு விழாவில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் ரஜினியும், கமலும் நேரில் சந்தித்து பேசி இருப்பது அவர்களின் ஆரோக்கிய அரசியலை காட்டுகிறது. அவர்களை சினிமாக்காரர்கள் என்று யாரும் எண்ணி ஒதுக்கி விடக்கூடாது.

    அவர்கள் நடித்து சம்பாதித்து சேர்த்த பணம் எல்லாம் மக்கள் கொடுத்தது. அந்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார்கள். இதனால் அவர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள்.


    அவர்களை நம்பலாம். அதற்காக இவருக்கு ஓட்டு போடுங்கள் என்று நான் சொல்லமாட்டேன். நான் யாருக்கு ஆதரவு எனவும் இப்போது சொல்ல மாட்டேன். தேர்தல் வரும் சமயத்தில் அதை தெரிவிப்பேன்.

    தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மக்கள் பிரச்சனையை சந்தித்து கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்துக்கு உண்டான காவிரி தண்ணீரை குறைத்து விட்டார்கள். கர்நாடகாவை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

    மனிதாபிமானத்தோடு தமிழகத்துக்கு தண்ணீர் தாருங்கள். தமிழக மக்கள் என்றும் உங்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் கொலை- கொள்ளை அதிகரித்து கொண்டே வருகிறது. இதை தடுக்க வேண்டும்.

    தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்க்காத அரசியல் கட்சியினர் அரசியல் நடத்தி வருவது எதற்கு?

    இவ்வாறு நடிகர் பார்த்திபன் கூறினார்.

    விழாவில் நடிகர்கள் பிரபு, ஜெய், சிவா, நடிகை சுகன்யா, டைரக்டர் செல்வ மணி, சித்ரா லட்சுமணன் உள்பட திரைப்பட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
    மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப்லைன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
    அப்போது அவர் கூறியது:-

    பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க பிப்ரவரி 19-ம் தேதி முதல் ஹெல்ப் லைன்திட்டம் தொடங்கப்படும். 24 மணி நேரமும் செயல்படும் இந்த ஹெல்ப்லைன் திட்டத்தினால், மாணவர்களின் தற்கொலையை தடுக்க முடியும்.

    புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 72 பாடத்திட்டங்கள் மூலம் 12-ம் வகுப்பு படித்த உடனே வேலை கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக திருப்பூரில் பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளி மாணவர்களும் தேடி வந்து அரசுப் பள்ளியில் படிக்கும் வகையில் உலகத்தரத்தில்  தமிழக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றார். #tamilnews
    பெருந்துறை அருகே அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலம், கொங்கம்பாளையம் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் வெட்டியெடுப்பதாக பெருந்துறை தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது.

    பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி தலைமையிலான வருவாய்த்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுஅந்த வழியாக வந்த கிராவல் மண்லோடு ஏற்றிய டிப்பர் லாரி ஒன்றினை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டு அந்த லாரியின் டிரைவர் சென்னிமலை காளிக்கா வலசுபகுதியை சோந்த செல்வராஜிடம் மேற்கொண்ட விசாரணையில் விஜயமங்கலம் அருகேயுள்ள தாசம்பாளையம் பகுதியை சேர்ந்த வேலுமணி என்பவருக்கு சொந்தமான லாரி என்பதும், அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து சென்றதும் தெரிய வந்தது.

    இந்த லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் பெருந்துறை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதே போல் பெருந்துறை, பெத்தாம்பாளையம் ரோடு, சீலம்பட்டி பகுதியல் பெருந்துறை துணை தாசில்தார் முருகேசன் அந்த வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டார். அந்த லாரிகள் திங்களூர் அருகேயுள்ள சிறுவலூர் பகுதியில் உள்ளகுட்டையில் இருந்துகிராவல் மண் வெட்டி எடுத்து வந்ததும், லாரியின் உரிமையாளர்கள் அந்தியூர் பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த கணேசன் மற்றும் விஜயகுமார் ஆகியோருக்கு சொந்தமானது என்றும் லாரியின் டிரைவர்கள் தினேஷ்குமார்மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து பெருந்துறை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். #tamilnews

    திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் கொண்டடையன் காட்டு வலசு பகுதியை சேர்ந்த அம்மணியம்மாள் என்பவரது மகன் ராஜேந்திரன் (வயது 38).

    இவர் காஞ்சிக்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் ரைஸ் மில்லில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும் அன்னூர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கவிதா (20) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். நேற்று மதியம் ராஜேந்திரன் வீட்டிற்கு சாப்பிட வந்து விட்டு மீண்டும் ரைஸ் மில்லிற்கு சென்றுள்ளார். ராஜேந்திரனின் தாயார் அம்மணியம்மாள் அருகில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட் டார்.

    பின்னர் இரவு 7 மணியளவில் அம்மணியம்மாள் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக தாழிட்டு இருந்தது. அவர் கதவை தட்டி னார். ஆனால் வீட்டிற்குள் இருந்த கவிதா கதவை திறக்காததால் அருகில் உள்ள உறவினர் மோகன் குமாரிடம் இது குறித்து கூறினார்.

    மோகன்குமார் அங்கு வந்து கதவை தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு கவிதா தனது சேலையால் மேற் கூரையில் உள்ள பேனில் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    இதனைக்கண்டு அதிர்ச்சி யடைந்த அவர்கள் உடனடி யாக கவிதாவை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கவிதாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில் கவிதா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடக்கிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

    சட்டசபையில் வீரப்பன் மற்றும் ஆட்டோ சங்கர் படத்தையும் திறப்பார்கள் என்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். #TNAssembly #Elangovan

    ஈரோடு:

    ஈரோடு பி.பி.அக்ர காரத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் முன்னிலை வகித்தார்.

    இந்த பொது கூட்டத்தில் காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் பிரச்சினையை கண்டு கொள்வதில்லை அரசு பஸ் போக்குவரத்து கழகத்தை லாபகரமாக இயக்க தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அறிக்கை வழங்கி உள்ளார். இதை அவர் கொஞ்சம் கவனிப்பார் என நினைக்கிறேன் அதில் உள்ள ஊழலை ஒழித்தாலே போதும் பஸ் கட்டணத்தை பாதியாக குறைத்து விடலாம்.

    போக்குவரத்துதுறையில் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்துதான் பதவி உயர்வு வாங்கி உள்ளனர். பொறுப்புக்கு வரும் போதே லஞ்சம் கொடுத்து வருபவர்கள் தொடர்ந்து எந்த துறையாக இருந்தாலும் ஊழல்தானே செய்வார்கள்?

    நமது முதல் அமைச்சருக்கே 14 தனியார் பஸ்கள் உள்ளன. இதேபோல் இன்னும் எத்தனை அமைச்சர்களுக்கு சொந்தமாக பஸ்கள் ஓடுகிறதோ... இல்லையென்று அவர்கள் மறுக்கட்டும் பார்க்கலாம். தைரியம் இருந்தால் வழக்குகள் வட போடட்டும். ஜெயலலிதா என் மீது போட்ட வழக்கை கூட தைரியமாக துணிச்சலாக சந்தித்தவன் நான்.

    அம்மா ஸ்கூட்டர் என்ற திட்டத்தை தொடங்கி பகல் கொள்ளையடிக்கிறார்கள். 25 ஆயிரம் ரூபாய் மானியம்ம கொடுப்பதாக அறிவித்துள்ளனர். 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டரை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி மானியம் தருவதாக கூறி கொள்ளையடிக்கிறார்கள்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனை கிடையாது. இன்னும் சொல்லப்போனால் திருச்செங்கோடு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி போட்டு போட்டியிட்ட அவருக்கு நானே ஓட்டு போட்டுள்ளேன். அவரது ஊழல் ஆட்சியை இப்போது எதிர்க்கிறேன். இந்த ஊழல் ஆட்சி இனியும் தொடரக் கூடாது வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

    சுப்ரீம் கோர்ட்டால் ஊழல் குற்றவாளி என அறிவித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவ படத்தை சட்ட சபையில் திறந்து இருப்பது ஏற்புடையது அல்ல. இது சரி என்றால் இனி சட்டசபையில் ரவுடிகள் படத்தையும் திறப்பார்கள். சத்தியமங்கலம் வனப்பகுதியில் பல வருசமாக பல பேரை கொன்று குவித்து கோலோச்சி வந்த சந்தன கடத்தல் வீரப்பன் படத்தையும், பல பேரை கொன்று குவித்த ஆட்டோ சங்கர் படத்தையும் திறப்பார்கள். இதற்கு வாய்ப்பு இருக்கிறது என நம்பலாம்.

    சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்க ஆதரவு தெரிவித்த எங்கள் கட்சி எம்.எல்.ஏ. விஜயதரணியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    அவர் மீது காங்கிரஸ் தலைமையகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார். #TNAssembly #Elangovan #tamilnews

    ஆளும் கட்சியாக இருந்தாலும் திட்டங்களை பெற போராட வேண்டிய சூழ்நிலை உள்ளதாக தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசும்போது மாவட்ட நிர்வாகிகளையும் ஆட்சியையும் கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை நாம் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து கொடுத்து உள்ளார். கேட்காமலேயே கொடுப்பவர் அவர்.

    ஆனால் இப்போது பெருந்துறை தொகுதியில் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாம் ஒன்று கேட்டால் அவர்கள் வேறு ஒன்று செய்கிறார்கள்.

    ஆளும் கட்சியாக இருந்தாலும் திட்டங்களை பெற போராட வேண்டிய சூழ்நிலை உள்ளது. எதிர்கட்சி போல் நம்மை பார்க்கிறார்கள்.

    குறிப்பாக கொடிவேரி கூட்டுகுடிநீர் திட்டம் அரசு பள்ளிகள் தரம் உயர்வு போன்றவைகளை நாம் போராட வேண்டியது உள்ளது. தொகுதியில் நான் குறிப்பிட்ட பள்ளியை தரம் உயர்த்த வலியுறுத்தி இருந்தேன். நீண்ட நாட்களாகவே மக்கள் கோரிக்கையைத் தான் கல்வி துறையிடமும் கல்வி அமைச்சரிடமும் வலியுறுத்தி இருந்தேன். நான் கேட்டதற்கு மாறாக வேறு ஒரு பள்ளியை தரம் உயர்த்தி உள்ளனர். அப்படியானால் ஆளுங்கட்சியாக இருந்தாலும் நமக்கு என்ன மரியாதை உள்ளது என்றல்லவா கேட்க தோன்றுகிறது?

    வருங்காலத்தில் இதுபோல் இல்லாமல் மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் அப்போது தான் வரும் தேர்தல்களில் முழுமையான வெற்றி பெற வேண்டும். ஆளுங்கட்சியாக இருந்த போதிலும் திட்டங்களை போராடி பெற வேண்டிய சூழ்நிலை மாற வேண்டும். மாவட்ட நிர்வாகிகள் எல்லா தொகுதிகளையும் தனது தொகுதியாக நினைத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    தற்போது இங்குள்ள நிலைமையை சென்னையில் நடக்கும் தலைமை கழக கூட்டத்திலும் எடுத்துரைப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
    பவானி அருகே விபத்தில் இளம்பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஏர்பட்டி காந்தி தெரு பகுதியை சேர்ந்தவர் பட்சியப்பன். இவரது மனைவி சித்ரா (வயது 20).

    கணவரும் மனைவியும் கோவையில் நடந்த விஷேசத்தில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பவானி அருகே வந்த போது பின்னால் வந்த அரசு டவுன் பஸ்சும் மோட்டார் சைக்கிளும் மோதின. விபத்து நடந்ததும் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் அத்தாணியை சேர்ந்த கோபால்சாமி (40) பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார்.

    பஸ் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து பட்சியப்பனும், சித்ராவும் தூக்கி வீசப்பட்டனர். கீழே விழுந்த சித்ரா அரசு பஸ்சின் பின் பக்க சக்கரத்தில் சிக்கினார்.

    பட்சியப்பனின் கண் எதிரே அவர் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சித்ரா பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் சித்ராவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி அரசு பஸ் டிரைவர் கோபால்சாமியை தேடி வருகிறார்.

    தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் வைத்ததால் புனிதம் கெட்டு விட்டது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். #ramadoss #jayalalitha #tnassembly

    ஈரோடு:

    ஈரோட்டில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டசபையில் இன்று ஊழல் குற்றவாளி ஜெயலலிதா உருவ படத்தை அவசர அவசரமாக திறந்துள்ளனர். உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு இன்று விசாரணை நடைபெற உள்ளது. அதற்குள் அவசர அவசரமாக திறந்துள்ளனர். இன்று ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்திருப்பார்.

    ஊழல் செய்ததற்காக அவர் 2 முறை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். மேலும் 2 முறை சிறைக்கும் சென்றுள்ளார். ஊழலின் மொத்த உருவமாக இருந்த ஜெயலலிதாவின் உருவ படத்தை சட்டபையில் திறந்து வைத்தது ஏற்புடையது அல்ல. அதனை பா.ம.க. கண்டிக்கிறது.

    சட்டசபையில் காந்தி, அம்பேத்கார், பெரியார், ராஜாஜி, திருவள்ளுவர், காமராஜர், அண்ணா, முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் படம் இடம் பெற்றுள்ளது. அப்படி இருக்கும்போது ஜெயலலிதா படத்தை அங்கு வைத்ததால் சட்டசபையின் புனிதம் கெட்டு விட்டது.


    ஒன்று ஜெயலலிதா படத்தை அங்கு இருந்து அகற்ற வேண்டும் இல்லா விட்டால் அந்த தலைவர்கள் படத்தை அகற்றுங்கள். அவர்களது படத்துடன் ஜெயலலிதா படம் இருக்கக் கூடாது.

    தமிழ்நாட்டின் பெருமைக்கு குந்தகம்விளைவிக்கும் வகையில் பினாமி எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. 25 வகை ஊழல் குறித்து ஆளுனரிடம் நாங்கள் மனு கொடுத்து உள்ளோம். ஆனால் நடவ டிக்கை இல்லை. நினைவூட்டும் கடிதம் ஆளுனருக்கு அனுப்ப உள்ளோம்.அவரை சந்தித்து பேசவும் உள்ளோம்.

    பாரதியார் பல்கலைக் கழக துணை வேந்தர் கணபதி சிக்கியதால் பல் கலைக்கழகம் என்றாலே ஊழல் என்றாகிவிட்டது.

    சமீபத்தில் கூட பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் முன்னாள் துணை வேந்தர் சுவாமிநாதனுக்கு பேராசிரியர் நியமனத்துக்காக பலரிடம் பணம் வாங்கி கொடுத்ததாக கூறி உள்ளார். ஆனால் இதுவரை சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை. எப்.ஐ.ஆரும் போடவில்லை. இதற்கு முக்கிய காரணம் என்ன வென்றால் அவ்வாறு அவரிடம் முறைப்படி விசாரணை நடத்தினால் முன்னாள், இன்னாள் கல்வி அமைச்சர்கள் சிக்குவார்கள் என்பதுதான்.

    இன்னும் பல பல்கலைக் கழகங்களில் ஊழல் நடக்கிறது. எனவே பல்கலைக் கழக ஊழல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

    மத்தியஅரசு 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் போவதாக கூறி இருந்தது. அதன்படி தமிழகத்தில் 5 இடங்களில் அமையும் என்றும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தனர். இதற்காக செங்கல்பட்டு, தஞ்சாவூர், மதுரை, பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை கட்டுமான பணிகள் நடக்கவில்லை.

    மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது.பஞ்சாப், இமாசல பிரதேச மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வாகி பணிகள் நடந்து வருகிறது. எனவே மத்திய அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சமையல் கியாஸ் லாரிகள் வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    தி.மு.க., அ.தி.மு.க. தவிர பா.ம.க. தலைமையை ஏற்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி ஏற்க தயார்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பேட்டியின் போது பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர்கள் பொ.வை.ஆறுமுகம், வேலுசாமி, மாநில துணை தலைவர்கள் வடிவேலு, எஸ்.எல். பரமசிவம், மத்திய மாவட்டசெயலாளர் கிருபாகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துக்குமார் மாநகர் மாவட்ட செயலாளர் அருள்மொழி உள்பட பலர் உடன் இருந்தனர். #tamilnews #ramadoss #jayalalitha #tnassembly

    தமிழ்நாட்டில்தான் சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று ரஜினி கூறிய கருத்துக்கு பதில் சொல்ல அவசியமில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #ministersengottaiyan #rajinikanth

    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பரிமளம் மகாலில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மதியம் நடந்தது. இந்த கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சாதனை- சரித்தரத்தை கவுரவிக்கும் வகையில் நாளை சட்டசபையில் அவரது உருவப்படத்தை சபாநாயகர் திறந்து வைக்கிறார்.

    மேலும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஈரோடு மாவட்டம் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும்.

    இப்போது புதிய புதிய கட்சிகள் தொடங்கியும், தொடங்கப்பட்டும் வருகிறது. அவர்கள் கேட்கும் கேள்விக்கும், அவர்கள் பேசும் பேச்சுக்கும் என்னால் பதில் கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    அரசியலில் தீவிரமாக இறங்கி உள்ள ரஜினிகாந்த் கூறும்போது, தமிழ்நாட்டில் தான் சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று கூறி உள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு செங்கோட்டையன் கூறும்போது, “இதைத்தான் முதலில் கூறிவிட்டேனே, தமிழ்நாட்டில் சிறிய சிறிய அளவில் பல கட்சிகள் வருகிறது. அவர்களுக்கெல்லாம் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க அரசையும், அ.தி.மு.க கட்சியையும், யாராலும் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது” என்று கூறினார். #tamilnews #ministersengottaiyan #rajinikanth

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் எங்கும் ஊழல் நிறைந்து காணப்படுகிறது என்று பெருந்துறையில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார்.
    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள கோவை மெயின் ரோடு, சரளை பகுதியில் வருகிற மார்ச் 24 மற்றும் 25-ந் தேதி தி.மு.க. மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை கவனிக்க 20 குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த குழுவினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இந்த பணிகளை பார்வையிடுவதற்காக கட்சியின் முதன்மை செயலாளர் துரை முருகன் நேற்று மாநாடு நடைபெறும் திடலுக்கு வந்திருந்தார். அவரை மாநாட்டுத் தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையிலான மாநாட்டு பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.

    மாநாட்டிற்கான நிதியாக நிதிக்குழுத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி ரூ.25 லட்சமும், கோவை வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம் ரூ.10 லட்சமும், கரூர் பரணி மணி ரூ.10 லட்சமும் வழங்கினர்.

    இதன் பின்னர் துரை முருகன் மாநாட்டு திடலில் மாநாட்டு மேடை அமையும் இடத்தை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-


    செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் முதன் முதலாக இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை வரலாறு காணாத வெற்றியாக மாற்றி காட்டுவது நமது கடமை. இந்த மாநாட்டிற்காக இங்கு 300 ஏக்கர் பரப்பரளவில் மாநாட்டுத்திடல் அமையவுள்ளது.

    இந்த மாநாட்டில் சுமார் 7 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 10 லட்சத்திற்கும் மேல் தொண்டர்கள் இங்கு வந்து குவிந்து விடுவர் என்பது எனது கருத்து.

    ஏனென்றால் நமது கட்சியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் நடைபெறும் மாநாடு இது. இந்த மண்டல மாநாடு மாநில மாநாட்டையே மிஞ்சும் அளவில் இருக்கப் போகிறது.

    தற்போது தமிழகத்தில் ஆட்சி என்ற பெயரில் ஒரு கும்பல் கொள்ளையடித்து வருகிறது. அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு அந்தந்த துறை பற்றிய அறிவு இல்லை, அவர்கள் அனைவரும் கமி‌ஷன் வந்தால் போதும் என்று நினைக்கும் கட்டிங் பார்ட்டிகள்.

    தமிழகத்தில் எங்கும் ஊழல் நிறைந்து காணப்படுகிறது. தற்போது உள்ள தமிழகத்தின் தண்ணீர் தேவையை கூட கணக்கிடாமல் கர்நாடகாவில் போய் தண்ணீர் கேட்போம் என்று கூறுகின்றனர்.

    இங்கு நடைபெறும் இந்த மண்டல மாநாடு தமிழகத்தில் நடைபெறவுள்ள திருப்பு முனை மாற்றத்திற்கான அச்சாரமாக இருக்கும் என்று கூறினார். #Tamilnews
    கோபி அருகே இன்றுகாலை சுற்றுலா வேன் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.
    கோபி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கருப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மைசூரில் குருமிளகு பறிக்கப் புறப்பட்டனர். அவர்கள் சுமார் 20 பேர் சுற்றுலா வேன் பிடித்து சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை சக்திவேல் (28) ஓட்டிச் சென்றார்.

    அந்த வேன் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையம் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் வேன் டிரைவர் சக்திவேல், வேனில் இருந்த தொழிலாளர்கள் கணேசன் (24), சீத்தா(25), பார்வதி (37), ராமையாள் (40), கனகா (26), சடையன் (30), பாப்பாயி (40), சடச்சி (45), நதியா (28) உள்பட 12 பேர் காயம் அடைந்தனர்.

    விபத்து ஏற்பட்டதும் அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்த காயம் அடைந்தவர்களை மீட்டனர். காயம் அடைந்த 12 பேரும் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×