என் மலர்
ஈரோடு
காங்கயம் அடுத்த விஜயரங்கன் வலசில் வசித்து வந்தவர் தியாகராஜ் (வயது 33). இவர் காங்கயம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை துறையில் தொழில்நுட்ப பிரிவு மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி ஒரு மாதமே ஆகிறது. மனைவி பெயர் திலகவதி (28). கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தியாகராஜன் வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அதிகாலையில் வீட்டில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விவசாய அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் கல்விதுறை சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 25 ஆயிரத்து 255 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக மாட்ட முழுவதும் 83 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுத மாணவ- மாணவிகள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே தயாராகி விட்டார்கள். இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் இரவு-பகல் பாராமல் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் படித்து வருகிறார்கள்.
பரீட்சை எழுத மாணவர்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்- ஆசிரியைகள் தயார்படுத்தி வருகிறார்கள். மேலும் சிறப்பு பயிற்சியும் அளித்து வருகிறார்கள்.
பிளஸ்-2 பரீட்சைக்கான வினாத்தாள்கள் வந்து அவை பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளது. வினாதாள் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
பரீட்சை ஹாலில் எவ்வாறு பணிபுரிய வேண்டும்? என ஆசிரியர்- ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கவும் பிடிக்கவும் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் திடீர்..திடீரென பரீட்சை நடக்கும் ஹாலுக்கு வந்து ஆய்வு நடத்த உள்ளனர்.
பொது தேர்வு என்றாலே ஈரோடு மாவட்ட மாணவர்கள் தான் தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்று வந்தார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டாக பின்னுக்கு சென்று விட்டார்கள். இந்த ஆண்டு மீண்டும் ஈரோடு மாவட்ட மாணவர்கள் முதலிடம் பிடிப்பார்களா? என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் மற்றும் கனிம மண் அள்ளப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கிராவல் மணல் அள்ளியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், சேனாபதி, சுப்பிரமணி ஆகியோருக்கு 8 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #tamilnews
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டியில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் சந்தேகங்களை போக்கிடவும், புதியதாக கல்லூரிகளில் சேர்வது, தேர்வு முறைகள் உள்ளிட்ட எந்தவொரு கேள்விகளுக்கும் 24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில் 14417 என்ற ஹெல்ப்லைன் வசதி விரைவில் தொடங்கப்படும்.
மாணவர்கள் மன அழுத்தத்தை போக்கவும் தற்கொலை எண்ணங்கள் தோன்றாமல் தவிர்க்க சிநேகா என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களின் வீட்டிற்கே சென்று கவுன்சிலிங் அளிக்கப்படும்.
புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவாக முதற்கட்டமாக 500 ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். தேர்வு முடிந்தவுடன் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை அளிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை தயார்நிலையில் உள்ளது. கோடைக்காலம் தொடங்குவதால் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களை கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Tamilnews
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் கீழ்பவானி வாய்க்காலிலும் மற்றும் கருங்காடு என்ற இடத்திலும் ஒரு கும்பல் மணலை அள்ளி கடத்தி கொண்டு வந்தது.
மணல் கடத்தல் கும்பல் மணலை திருட்டுத்தனமாக அள்ளி மூட்டைகளில் கட்டி பிறகு அதனை வாகனங்களில் கடத்தி சென்றனர்.
இதுபற்றி பல புகார்கள் வருவாய்துறையினருக்கு சென்றது. இந்த நிலையில் வருவாய் அதிகாரிகள் திடீரென அப்பகுதியில் ரோந்து சென்றனர். அதிகாரிகளை கண்டதும் அங்கு மணல் கடத்த மூட்டைகளில் மர்ம கும்பல் மணலை அள்ளி கட்டிக் கொண்டிருந்தனர்.
அதிகாரிகளை கண்டதும் அந்த கும்பல் மணல் மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டது.
கடத்தலுக்கு தயாராக வைத்திருந்த 100-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இது பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த அளவுக்கு மணல் மூட்டைகளை கடத்தும் முக்கிய புள்ளி யார்? என்று விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஏழூர் மேடு பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் (வயது 24), ஸ்ரீதர் (18) இவர்கள் எலக்ட்ரீசியன் வேலை பார்த்தனர். இவர்களின் நண்பர் ஸ்ரீதர் (18). இவர் டி.என்.பாளையம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர்கள் 3 பேரும் நேற்று இரவு 10 மணியளவில் ஏழூரில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சக்திவேல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல பின்னால் 2 பேரும் உட்கார்ந்து சென்றனர்.
ஏழூர் பஸ் நிறுத்தத்தில் அரசு டவுன் பஸ் ஒன்று பயணிகளை இறக்கி கொண்டிருந்தது. பயணிகள் இறங்கியதும் அந்த பஸ் மீண்டும் புறப்பட்டது.
அப்போது எதிர்பாராத வகையில் பஸ்சின் பின்புறம் மோட்டார் சைக்கிள் ‘டமார்’ என்ற சத்தத்துடன் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல், ஸ்ரீதர் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மகேந்திரனும் பலியானார். விபத்தில் 3 இளைஞர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
ஈரோடு:
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நடிகர் கமல்ஹாசன் பொதுக்கூட்டம் கூட்டி கட்சி ஆரம்பித்து நல்ல விதமாக தோடங்கி இருக்கிறார். தெளிவாகத் தான் பேசியும் உள்ளார்.
ஆனால் அவர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அழைத்த பேச வைத்தது தவறு. கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியையும், திராவிட கட்சிகளையும் தாக்கி பேசி உள்ளார். இது கெஜ்ரிவாலுக்கு தேவையற்றது.

பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்திருந்தார். ஆனால் அவர் காவிரி மேலாண்மை பற்றி எதுவும் பேசவில்லை. உடனடியாக காவிரி மேலாண்மை அமைக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழ்நாட்டுக்கு திட்டங்களை அறிவித்து இருப்பார். ஆனால் அவர் ஊர் சுற்றும் நாடோடியாக இருப்பதால் அவரால் தமிழ் நாட்டுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்த முடியவில்லை.
அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலை பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு விதமாக கூறப்பட்டு வருகிறது. ஜெயலலிதா சிலைக்கு கீழே இது தான் ஜெயலலிதா சிலை என்று பெயர் பலகையை அ.தி.மு.க. வினர் வைத்தால் நன்றாக இருக்கும்.
பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஸ்கூட்டருக்கும் எவ்வளவு கமிஷன் அடித்தார்கள்? என்பது இனி தான் தெரியவரும்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.#tamilnews #ammascooty #evkselangovan #kamal
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஐரிங் (வயது50). எலக்ட்ரீசியன். இவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த சித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சைனி(9), லைலோனி(12) என 2 மகள்கள் உள்ளனர்.
ஐரிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்ரா கணவரை பிரிந்து கோவையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். ஐரிங் தனது 2 மகள்களுடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவரது மகள்கள் தாயை பார்க்க வேண்டும் என்று ஐரிங்கிடம் கூறி அழுது உள்ளனர். இதையடுத்து அவர் பெங்களூருவில் இருந்து தனது 2 மகள்களையும் அழைத்து கொண்டு பொள்ளாச்சிக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.
அந்த பஸ் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வந்த போது ஐரிங்குக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் பெருந்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நள்ளிரவில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஐரிங் அனுமதிக்கப்பட்டார்.
நள்ளிரவு 11 மணிக்கு சிகிச்சையில் இருந்த ஐரிங் திடீரென வெளியே ஓடி வந்தார். அவரது பின்னால் அவரது இரண்டு மகள்களும் அழுது கொண்டே ஓடி வந்தனர். திடீரென ஐரிங் அந்த பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் வேகமாக ஏறினார்.
இதை பார்த்த பொது மக்கள் ஏதோ விபரீதம் ஏற்பட போகிறது என்று கருதி உடனடியாக மின் ஊழியர்களுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட மின்ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கியது. இரவு நேர சினிமா காட்சியை முடித்து கொண்டு வந்தவர்கள் இந்த காட்சியை அதிர்ச்சியுடன் உறைந்து நின்றனர்.

ஐரிங் மின்கம்பி அங்கும் இங்குமாக மாறி மாறி நடந்து கொண்டு தொங்கிய படி போலீசுக்கு போக்கு காட்டி கொண்டு இருந்தார். இவ்வாறாக அவர் சுமார் 2 மணி நேரம் போலீசுக்கும், பொது மக்களுக்கும் போக்கு காட்டி வந்தார்.
ஒரு வழியாக அதிகாலை 1 மணி அளவில் ஐரிங்கை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்ட னர். பின்னர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் ஐரிங் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது. இது குறித்து ஐரிங்கின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு ஈரோடுக்கு வந்தனர்.
அவர்களிடம் ஐரிங் மற்றும் அவரது 2 மகள்களும் ஒப்படைக்கப்பட்டனர். ஐரிங்கை உறவினர்கள் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி பகுதியில் பி.எஸ்.என்.எல். டவர் உள்ளது.
இந்த டவரில் கேபிள், பேட்டரிகள் திருடப்பட்டு இருந்தன. ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள இந்த கேபிள், பேட்டரி திருடப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது.
எனவே இது குறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பவானி கோட்ட பி.எஸ்.என்.எல். துணை மேலாளர் மூர்த்தி புகார் செய்தார். கேபிள், பேட்டரி திருடியவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகு மார் மற்றும் போலீசார் செம்புளிச்சான்பாளையம் பகுதியில் உள்ள முருகன் கிணறு என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் அந்தியூர் மொடக்குறிச்சானூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (31), கொமராபாளையம் தட்டான் குட்டையை சேர்ந்த சங்கர் (25) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் தொடர்ந்து விசாரித்தபோது ஸ்ரீதரும், சங்கரும் பி.எஸ்.என்.எல். டவரில் கேபிள், பேட்டரி திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பி.எஸ். என்.எல். டவரில் இருந்து திருடிய பேட்டரி, கேபிள் ஆகியவற்றை பழைய இரும்புக்கடையில் விற்றுள்ளனர்.
ஸ்ரீதர் ஏற்கனவே பழைய இரும்புக்கடை நடத்தி வந்தவர். அவரது கடையில் சங்கர் வேலை பார்த்தார். அந்த பழக்கத்தை தொடர்ந்து அவர்கள் இப்போது திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
சங்கர் கடந்த 2014-ம் ஆண்டில் திருட்டு வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
ஈரோடு ரெயில் நிலையத்தில் தினமும் 150-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன.
இதில் எக்ஸ்பிரஸ் ரெயில்களும், பயணிகள் ரெயில்களும் உண்டு. பெரும்பாலும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளுக்கு தேவையான தண்ணீர் வசதி இல்லாமல் போய் விடுகிறது.
இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வரும்போது பயணிகள் கீழே இறங்கி தண்ணீர் கேட்டு ரெயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் நேற்று மாலை ஈரோடு ரெயில் நிலையம் வந்தது.
ரெயிலில் தண்ணீர் இல்லாததால் அதில் பயணம் செய்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். ஈரோடு ரெயில் நிலையத்தில் நிற்கும்போது தண்ணீர் நிரப்புவார்கள் என பயணிகள் உறுதியாக நம்பி இருந்தனர்.
ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு நடக்காமல் போய் விட்டது. தண்ணீர் நிரப்பாமல் ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
இதனால் ரெயில் புறப்பட்ட சில நிமிடங்களில் ஈரோடு ரெயில் நிலையத்திலேயே நின்றுவிட்டது. ரெயில் நின்றதும் அனைத்து பெட்டிகளில் இருந்தும் பயணிகள் கீழே இறங்கினர்.
‘‘வேண்டும் வேண்டும் தண்ணீர் வேண்டும்’’, ‘‘நிரப்பு நிரப்பு ரெயிலில் உடனே எங்களுக்கு தண்ணீரை நிரப்பு’’ என்று கோஷமிட்டனர். பயணிகளின் தண்ணீர் போராட்டத்தால் ஈரோடு ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக ரெயில்வே அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். பயணிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பயணிகள், ‘‘குடிக்க கூட தண்ணீர் காசு கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் கழிவறையில் தண்ணீர் இல்லாமல் என்ன செய்ய முடியும்? என ஆவேசமாக கூறினர்.
‘‘தவிர்க்க முடியாத சூழ் நிலையால் தண்ணீர் நிரப்ப முடியவில்லை. சேலத்தில் ரெயில் நிற்கும்போது கண்டிப்பாக தண்ணீர் நிரப்பப்படும். அதுவரை பொறுமையாக இருங்கள். போராட்டத்தை கைவிட்டு ரெயிலில் ஏறுங்கள்’’ என்று கூறினர்.
அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை பயணிகள் ஏற்றுக்கொண்டு மீண்டும் ரெயிலில் ஏறினர். இதைத் தொடர்ந்து மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. #Tamilnews
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியிருப்பதாவது:-
புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையவிருப்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல உலக முழுவதும் பரவி வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை சேர்க்க கூடியதாகும்.
தமிழ் இருக்கை அமைப்பதற்கு பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வரும் நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பங்களிப்பும் அதில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.
மரியாதை பண்புமிக்க கொங்கு தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இது அமையும் என நம்புகிறோம். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக ரூ.10 லட்சத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக வழங்க கட்சியின் ஆட்சிமன்ற குழு ஆலோசனையில் தீர்மானிக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள கீழ்வானி இந்திரா நகரை சேர்ந்தவர் பூசம்மாள் (வயது 70).
பூசம்மாள் இரவு வீட்டின் கதவை சாத்தி கொண்டு வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தார். அப்போது முகத்தை மறைத்துக் கொண்டு 2 முகமுடி கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர்.
உள்ளே தூங்கி கொண்டிருந்த பூசம்மாள் கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதேபோல் நேற்று இரவு அதே 2 முகமூடி திருடர்கள் அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவரது வீடடின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
முகமூடி கொள்ளையர்களை கண்டதும் அழகர்சாமி சத்தம் போட்டார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த 2 முகமூடி கொள்ளையர்களும் தப்பி ஓடி விட்டனர்.
தொடர்ந்து 2 இடங்களில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #tamilnews






