என் மலர்
ஈரோடு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடக்கிறது.
இதற்காக பந்தல் அமைக்கும் பணி நடந்தது. இதனை அமைச்சர் கே.சி. கருப்பணன் இன்று பார்வையிட்டார். அப்போது கே.வி. ராமலிங்கம் எம்.எல்.ஏ., கே.எஸ். தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.
அமைச்சர் கே.சி. கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து நாளை வீரப்பன் சத்திரத்தில் ஈரோடு மாநகர், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடக்கிறது.
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமை தாங்குகிறார். நான் முன்னிலை வகிக்கிறேன். எம். எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.
கமல்ஹாசன் போன்றவர்கள் மக்களை போராட்டத்துக்கு தூண்டுகிறார்கள்.
தீவிர விசாரணை நடத்தி மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு தீங்கு தரக்கூடிய எந்த திட்டத்துக்கும் அரசு அனுமதி வழங்காது. நியூட்ரினோ, ஓ.என்.ஜி.சி. திட்டத்துக்கும் மத்திய அரசு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறினார். #Tamilnews
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மகளிர் கலாசார பாதுகாப்பு மற்றும் இளைஞர் எழுச்சி கூட்டம் நடந்தது.
இதில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நம்பியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மிக வறட்சியான பகுதி. இப்பகுதியில் அத்திகடவு- அவிநாசி நீர் திட்டம் மிக அவசியமானது. அரசு சார்பில் வெறும் வெற்று அறிவிப்பு மட்டும் வந்து கொண்டுள்ளன.
கடந்த வருடம் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வந்தது இந்த வருடமும் அதையே கூறியுள்ளனர். எங்களுக்கு தேவை அறிவிப்பு இல்லை குடிநீர். இதற்கு உடனடியாக அடிக்கல் நாட்டி பணிகளை துவங்க வேண்டும். காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் செயல்படுத்த ஆளும் மத்திய அரசு மறுத்து வருகிறது.
இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இதுவரை எந்த கருத்தையும் கூறவில்லை. இரண்டு தேசிய கட்சிகளும் கர்நாடகா தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. தமிழக மக்கள் யாரும் விரும்பாத நீயூட்ரினோ திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்.
இதில் தமிழகம் இத்திட்டத்தை விரும்பவில்லை என்றால் வேறு மாநிலத்தில் செய்து கொள்கிறோம் என கூறிய மத்திய அரசு தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த வேகம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டை சுடுகாடு ஆக்காமல் இவர்கள் விட மாட்டார்கள். நடிகர்கள் ரஜினி, கமல் மட்டும் இல்லை நயன்தாரா வந்தால் கூட தான் கூட்டம் வரும். அந்த கூட்டத்தால் எந்த மாற்றத்தையும் கொடுக்க முடியாது.
கேரளாவின் மருத்துவ மற்றும் இதர கழிவுகளை கோவை மற்றும் சுற்று பகுதியில் கொட்டி செல்கின்றனர். இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது சம்பந்தமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்ய உள்ளோம்.
கூட்டுறவு சங்க தேர்தல் அந்நியமான ஜனநாயகம் இங்கு நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல்செய்த அன்றே மாலையே வெற்றியாளர் பட்டியல் ஒட்டுகின்றனர். ஆளும் கட்சியின் இச்செயல் வருத்தமளிக்கிறது.
இவ்வாறு ஈஸ்வரன் கூறினார். #Tamilnews
ஈரோடு:
பிப்ரவரி 14-ந் தேதி கிறிஸ்தவர்களால் சாம்பல் புதன் கடைப் பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவகாலம் மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து கடந்த 25-ந் தேதி குறுதோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து பெரிய வியாழன், புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இயேசு பிரான் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள்.
இதையொட்டி இன்று நள்ளிரவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைனகளும், ஆராதனைகளும் நடந்தது.
ஈரோடு ஸ்டேட் பேங்க் ரோட்டில் உள்ள புகழ் பெற்ற புனித அமல அன்னை ஆலயத்தில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பிராத்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இயேசு பிரான் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்த காட்சிகள் தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கு தந்தை அருண், உதவி பங்கு தந்தை சிஜீ, அருள் தந்தை ஜான் கெனடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று பிரப் ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ.ஆலயம், ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள ஆலயம், அக்ரஹாரத்தில் உள்ள லூர்து மாதா ஆலயம் மேலும் கோபி, சத்தி, அந்தியூர், பவானி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிராத்தனை நடந்தது.
ஈரோடு:
ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவரது மனைவி சரோஜினி (வயது70). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தினமும் காலையில் சரோஜினி நடைபயிற்சி மேற்கொள்வாராம்.
வழக்கம்போல இன்று காலையிலும் நடை பயிற்சிக்கு சென்றார். அப்போது ரங்கம்பாளையம் ரெயில்வே தண்டவாளத்தை சரோஜினி கடக்கும் போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
திருப்பூர் வசந்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவரது மகன் மனோஜ்குமார் (வயது 21).
மனோஜ்குமார் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு படிப்பு சரியாக வராததால் அவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இதனால் மனோஜ்பிரபு திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அங்கும் அவர் சரியாக வேலைக்கு போக வில்லையாம்.
இந்த நிலையில் அவர் மாயமாகி விட்டார். அவரை அவரது தந்தையும் மற்றொரு மகனும் பல இடங்களில் தேடினர்.
இந்த நிலையில் பெருந்துறை வெள்ளோடு ரோட்டில் மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்ற மனோஜ்பிரபு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு கருங்கல் பாளையம், ராஜாஜிபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 25). கூலி தொழிலாளி. இவரது மனைவி மீனா. இவர்களுக்கு தர்ணிகா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.
நேற்று மதியம் மீனா சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பாட்டிலில் மண்எண்ணெயை எடுத்து வைத்திருந்தார். பின்னர் அதை அப்படியே கீழே வைத்து சென்று விட்டார்.
வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை தர்ணிகா பாட்டில் இருந்த மண்எண்ணெயை தண்ணீர் என நினைத்து தவறுதலாக எடுத்து குடித்து விட்டாள்.
பின்னர் சிறிது நேரத்தில் தர்ணிகா மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தர்ணிகாவை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தர்ணிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி தர்ணிகா பரிதாபமாக இறந்தாள். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் அழுதது பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு ரெயில் நிலையத்தில் அடிக்கடி வெளியூர் பயணிகள் ரெயில் முன் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரெயில் பெட்டியில் தண்ணீர் நிரப்பப்படாததால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மும்பையிலிருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் பெட்டியில் நிரப்பப்பட்ட தண்ணீர் தீர்ந்து விட்டது. ஆந்திரா மாநில எல்லையில் இருந்து வரும்போதே அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் தண்ணீர் இல்லை என்ற கூறி உள்ளனர். அதற்கு அந்த ரெயிலில் வந்த என்ஜின் டிரைவர்கள் வழியில் கண்டிப்பாக நிரப்பப்படும் என்று கூறி சமாளித்துக் கொண்டே வந்தனர்.
நேற்று இரவு அந்த ரெயில் ஈரோடு வந்ததும் இங்கு எப்படியும் தண்ணீர் நிரப்புவார்கள் என எதிர்பார்த்திருந்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனால் ரெயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வேகமாக இறங்கி அந்த ரெயில் என்ஜின் முன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயணிகள் பலர் ‘‘வேண்டும் வேண்டும் தண்ணீர் வேண்டும்’’ ‘‘நிரப்பு நிரப்பு ரெயில் பெட்டியில் தண்ணீர் நிரப்பு’’ என கோஷமிட்டனர்.
‘‘ஈரோட்டில் தண்ணீர் நிரப்புங்கள் நாங்கள் கடந்த 2 நாட்களாக தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். கழிவறைக்கு கூட போக முடியவில்லை. தண்ணீர் நிரப்பாவிட்டால் ரெயிலை மேலும் எடுக்க விடமாட்டோம் என்று கூறினர்.
மறியல் செய்த பயணிகளிடம் என்ஜின் டிரைவரும் நிலைய அதிகாரிகளும் சமரசம் செய்தனர். ‘‘நேரம் இல்லை திண்டுக்கல் ரெயில்வே நிலையம் சென்றதும் தண்ணீர் நிரப்பப்படும்’’ என்று சமாதானம் செய்தனர்.
பயணிகள் அந்த சமாதானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. தண்ணீர் இல்லாமல் எங்களால் ரெயிலில் ஏற முடியாது என்று விடாப்படியாக கூறி விட்டனர்.
இதை தொடர்ந்து நிலைய அதிகாரிகள் ரெயில் பெட்டியில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்தனர். அதன் பிறகே பயணிகளும் மறியலை கைவிட்டு ரெயிலில் ஏறினர்.
பயணிகளின் இந்த மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் ரெயில் தாமதமாக ஈரோடு ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது. #tamilnews
ஈரோடு ரெயில் நிலையத்தில் இரவில் ரெயில் முன் மறியல் போராட்டம் நடத்திய பயணிகள்.
ஈரோடு:
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருந்தது. அந்த 6 வார காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. எனினும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.
இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்ட களத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர். பா.ம.க. சார்பில் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.நீதிமன்றம் விதித்த காலகெடுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பா.ம.க. சார்பில் முதற்கட்டமாக வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டம் நடத்த வேண்டும் என்று அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று ஈரோடு மாநகரில் வில்லரசம்பட்டி பனங்காடு, பெரியசேமூர், அக்ரஹாரம், வண்டியூரான் கோவில், வளையக்கார வீதி,தண்ணீர்பந்தல் பாளையம், வெண்டிபாளையம், மூலப்பாளையம், ஆர்.என்.புதூர், சூரம்பட்டி அணைக்கட்டு பகுதி, கலைஞர் நகர், முத்துசாமி காலனி, அம்மன்நகர் உள்பட பகுதியிலும் நூற்றுக்கணக்கான வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதே போல் சத்தியமங்கலம், கோபி, அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, பெருந்துறை, விஜய மங்கலம், கவுந்தப்பாடி, சிவகிரி, கொடுமுடி, அரச்சலூர், மொடக்குறிச்சி உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடியேற்றி பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஈரோடு வில்லரசம்பட்டி பனங்காடு பகுதியில் மாநில துணை பொதுச்செயலாளர் பொ.வை. ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மாநில துணை பொதுச் செயலாளர் வேலுசாமி, மாவட்ட செயலாளர் கிருபாகரன், மாவட்ட துணை தலைவர் சேகர், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில துணை செயலாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tmailnews
திருப்பூர் எம்.பியாக இருப்பவர் சத்யபாமா. ஈரோடு மாவட்டம் கோபியில் வசித்து வருகிறார். இவரது கணவர் வாசு. கணவர்-மனைவி இடையே ஏற்கெனவே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சத்யபாமா எம்.பி. கோபி வந்திருந்தார். இவரை பார்க்க இவரது தம்பி சண்முகபிரபு (39) வந்திருந்தார்.
சத்யபாமா எம்.பி.யின் வீட்டு முன் சண்முக பிரபு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு எம்.பி.யின் கணவர் வாசு ஸ்கூட்டரில் வந்தார். வீட்டு முன் சண்முகபிரபு நின்று கொண்டிருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்தார். பிறகு ஸ்கூட்டரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து “ஏண்டா நீ இங்கு வந்தாய்? என் குடும்ப பிரச்சினைக்கு நீதான் காரணம்” என்று கூறி அரிவாளுடன் பாய்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதை கண்ட சத்யபாமா எம்.பி மற்றும் அவரது மகன் ஆகியோர் அவரை தடுத்தனர். அவர்களுக்கும் வாசு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
அப்போது அங்கு வந்த சிலர் இந்த மோதலை தடுத்தனர். பிறகு இது குறித்து எம்.பி.யின் சகோதரர் சண்முக பிரபு கோபி போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்கு பதிவு செய்து எம்.பி.யின் கணவர் வாசுவை கைது செய்தார். இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
ஊஞ்சலூர் அருகே உள்ள வெள்ளோட்டாம் பரப்பு வேலப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் தேவபிரசாத் (வயது16). இவர் கொடுமுடியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார்.
இவர் கடந்த மாதம் 21-ந்தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டுசென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. அவர் மாயமானது குறித்து மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணி புகார் செய்தார்.
மேலும் அவர் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார். இதையடுத்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் தேவபிரசாத்தை தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று மலையம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தேவபிரசாத் வந்தார். அவருடன் அவரது தோழி ஜெகதீஸ்வரி என்ற பூமிகாவும் (16) வந்திருந்தார்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தோழியின் திருமணத்தை தடுக்கவே அவருடன் சேர்ந்து தேவபிரசாத் தலைமறைவானது தெரிய வந்தது.
ஊஞ்சலூர் அருகேஉள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர்தான் ஜெகதீஸ்வரி, இவரும் தேவபிரசாத்தும் தோழர்களாக இருந்தனர். இந்த நிலையில் ஜெகதீஸ்வரிக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர்.
ஆனால் திருமணம் செய்து கொள்ள ஜெகதீஸ்வரிக்கு விருப்பம் இல்லை. எனவே திருமணத்தை தடுக்க தனது நண்பர் தேவபிரசாத்தின் உதவியை ஜெகதீஸ்வரி நாடினார்.
தன்னை நெல்லையில் உள்ள தனது தோழி சோனா வீட்டுக்கு கொண்டு சென்று விடுமாறு தேவபிரசாத்திடம் ஜெகதீஸ்வரி கூறினார். எனவே ஜெகதீஸ்வரியுடன் தேவபிரசாத் நெல்லைக்கு சென்றார்.
ஆனால் சோனா வீட்டில் இல்லை. எனவே தன்னை மணப்பாறை அருகே உள்ள கருப்பூரை சேர்ந்த மற்றொரு தோழி தீபிகா வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு தேவபிரசாத்திடம் ஜெகதீஸ்வரி கூறினார். எனவே ஜெகதீஸ்வரியுடன் தேவபிரசாத் மணப்பாறைக்கு சென்று கருப்பூரில் தீபிகாவின் வீட்டில் ஜெகதீஸ்வரியை விட்டார்.
பின்னர் அங்கிருந்து தேவபிரசாத் புறப்பட்டார். ஆனால் நீ ஊருக்கு சென்றால் உன்னை வைத்து நான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடுவார்கள். எனவே நீ ஊருக்கு செல்ல வேண்டாம் என்று தேவபிரசாத்திடம் ஜெகதீஸ்வரி கூறினார்.
எனவே கருப்பூரிலேயே தேவபிரசாத் இருந்துள்ளார். ஆனால் மலையம்பாளையம் போலீசார் அவர் இருக்கும் இடத்தை அறிந்து அவர்களை நெருங்கினர். எனவே நேற்று ஜெகதீஸ்வரியுடன் தேவபிரசாத் மலையம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று தேவபிரசாத்தை கொடுமுடி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால் வருகிற திங்கட்கிழமை தேவபிரசாத் சென்னை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
ஈரோட்டில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நியூட்ரினோ, ஓ.என்.ஜி.சி. திட்டங்களுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. அந்த திட்டங்கள் அமையும் இடங்களில் உள்ள மக்களிடம் இது பற்றி கருத்து கேட்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழு அறிக்கை தயார் செய்து வழங்கும். அதன் அடிப்படையில் தமிழக அரசு முடிவு செய்யும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒரு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஸ்டெர்லைட்டால் என்ன பாதிப்பு? என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், அரசு செயலர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் ரூ. 100 கோடி நிதி வழங்கி உள்ளனர். அந்த நிதி வட்டியுடன் ரூ. 135 கோடி உள்ளது. அதன் மூலம் மக்களுக்கு தேவையானவற்றை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது பற்றி அந்த மாவட்ட கலெக்டர் முடிவு செய்வார்.
தமிழகத்தில் காற்று மாசுபாடு இல்லை. சென்னை கோயம்பேட்டில் மட்டும் மாசுபாடு ஏற்படுகிறது. அதுவும் சிறிது நேரத்தில் சரியாகிவிடுகிறது.
ஆலைகளில் கழிவு நீர் வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது 68 ஆலைகள் புகார் அடிப்படையில் மூடப்பட்டு உள்ளன. மேலும் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார். #tamilnews
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி கேர்மாளம் அடுத்த கூத்தான புரத்தை சேர்ந்தவர் சிவண்ணா (வயது 30). இவரது மனைவி ராஜம்மாள் என்கிற ராஜாமணி (26). இவர்களுக்கு அபி ( 8), சிந்து (6) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
இவர்கள் குடும்பத்துடன் கார்நாடக மாநிலம் கொள்ளேகால் அருகே உள்ள அங்க குருவன் தொட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அங்கு நடந்த கோவில் விழாவில் கலந்து கொண்டு சொந்த ஊருக்கு நேற்று மாலை புறப்பட்டனர்.
ஊருக்கு செல்லும் பஸ்சை இவர்களால் பிடிக்க முடியவில்லை. அந்த பஸ் முன் கூட்டியே புறப்பட்டு சென்று விட்டது.
இதனால் அவர்கள் தங்கள் கிராமத்துக்கு போக காட்டுப்பகுதியில் உள்ள குறுக்கு வழியில் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தனர்.
கேர்மாளம் அருகே பைலூர் காளையங்கோவில் அருகே வந்தபோது புதர் மறைவில் இருந்து ஒரு யானை வெளியே வந்தது. யானையை கண்டதும் அவர்கள் நடுங்கினர். பிறகு ஆளுக்கொரு பக்கம் சிதறி ஓடினர். சிவண்ணா தனது 2 குழந்தைகளையும் பிடித்துக் கொண்டு ஓட.. பின்னால் அவரது மனைவி ராஜம்மாளும் ஓடினார்.
ஆனால் யானை அவர்களை விரட்டியது. இதில் அந்த யானை ராஜம்மாளை துதிக்கையால் தூக்கி வீசியது. பிறகு மிதித்தது.
இதில் படுகாயம் அடைந்து அவர் அலறி துடித்தார். அதன் பிறகு அந்த யானை அடர்ந்த காட்டுக்குள் புகுந்தது.
ஊர் பகுதிக்குள் ஓடிய சிவண்ணா பொதுமக்களிடம் விஷயத்தை சொல்ல அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வனத்துறையினரும் பொதுமக்களும் விரைந்து சென்றனர். அங்கு எழுந்திருக்க முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜம்மாளை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ராஜம்மாள் பரிதாபமாக இறந்து விட்டார். அவரது உடல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்று பிரேத விசாரணை நடக்கிறது.
அவரது உடலை பார்த்து கணவர் சிவண்ணாவும் குழந்தைகளும் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.
யானை தாக்கி பலியான ராஜம்மாள் குடும்பத்துக்கு வனத்துறையினர் சார்பில் முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. #tamilnews






