என் மலர்tooltip icon

    ஈரோடு

    புஞ்சைபுளியம்பட்டியில் லாரி டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி, சுபிஷ்கா கார்டனை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). லாரி டிரைவர்.

    இவரது மனைவி புஷ்பா (46). இவர்களுக்கு நந்தகுமார் (28) என்ற மகன் உள்ளார். அவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கார் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.

    ராஜேந்திரனும், புஷ்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். ராஜேந்திரன் திருப்பூரில் தங்கி இருந்து லாரி ஓட்டி வந்தார்.

    நந்தகுமாரும் பெருமாநல்லூரில் தங்கி உள்ளார். எனவே புஞ்சைபுளியம்பட்டியில் புஷ்பா மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் ராஜேந்திரன் நேற்று இரவு புஞ்சை புளியம்பட்டிக்கு வந்தார். அப்போது ராஜேந்திரனுக் கும், புஷ்பாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் புஷ்பா வீட்டின் முன்புள்ள காலி இடத்தில் பனியன் துணியால் சுற்றப்பட்டு ஒருவரது பிணம் கிடப்பதையும், பிணத்தின் அருகில் ஒரு கயிறும் கிடப்பதையும் அந்த பகுதி மக்கள் பார்த்தனர்.

    எனவே அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முகம், உடல் முழுவதும் துணியால் சுற்றப்பட்டு இருந்ததால் பிணமாக கிடப்பது யார்? என்று தெரியாமல் இருந்தது.

    இது குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணத்தை சுற்றியிருந்த துணியை அகற்றி போலீசார் பார்வையிட்டனர்.

    அப்போது துணிக்குள் அரை நிர்வாண நிலையில் ஒருவரது பிணம் இருப்பதும், அவரது தலையில் யாரோ பலமாக அடித்திருக்கும் காயம் இருந்ததும் தெரியவந்தது.

    எனவே அந்த நபரை யாரோ கொலை செய்து பிணத்தை துணியில் சுற்றி போட்டிருப்பது உறுதியானது. ஆனால் கொலை செய்யப்பட்டது யார்? என தெரியாததால் போலீசார் அது பற்றிய விசாரணையில் இறங்கினர்.

    புஷ்பாவின் வீட்டுக்கு முன்பு பிணம் கிடந்ததால் புஷ்பாவிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் பிணமாக கிடப்பது யார் என எனக்கு தெரியாது என்று புஷ்பா கூறி விட்டார்.

    எனினும் புஷ்பாவின் நடவடிக்கையில் போலீசார் சந்தேகம் அடைந்தனர். எனவே அவரை பற்றி அக்கம் பக்கத்தினர் விசாரித்தனர்.

    அப்போது புஷ்பாவுக்கு பெருமாநல்லூரில் ஒர்க் ஷாப் வைத்திருக்கும் மகன் இருப்பது தெரியவந்தது.எனவே போலீசார் பெருமாநல்லூருக்கு சென்று புஷ்பாவின் மகன் நந்தகுமாரை கண்டுபிடித்தனர்.

    இன்று காலை அவர் புஞ்சை புளியம்பட்டிக்கு அழைத்து வரப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தனது தந்தை ராஜேந்திரன் என்று அடையாளம் காட்டினார்.

    இதைத்தொடர்ந்து மீண்டும் புஷ்பாவிடம் போலீசார் கேட்டனர். அப்போது தான் புஷ்பாவும் கொலையுண்டது தனது கணவர் என போலீசாரிடம் தெரிவித்தார்.

    கொலை செய்யப்பட்ட ராஜேந்திரன் தனது கணவராக இருந்தும் அவர் யார் என்று தனக்கு தெரியாது என கூறியதால் புஷ்பா மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. எனவே புஷ்பாவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை அருகே இன்று அதிகாலை லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சிலேட்டர் நகரை சேர்ந்த 15 பேர் ஒரு வேன் ஏற்பாடு செய்து கேரள மாநிலம் அங்கமாலி அருகே உள்ள குரூஸ்மலை கத்தோலிக் சர்ச்சுக்கு புறப்பட்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து அதே வேனில் அவர்கள் திரும்பி ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். வேனை ஈரோட்டைச் சேர்ந்த பொன்னுசாமி (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். அருகே மற்றொரு டிரைவர் சிவா (30) உட்கார்ந்து வந்தார். வேனில் சிலேட்டர் புரம் மற்றும் சுள்ளியம்புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் சென்றனர்.

    சுள்ளியம்புதூர் வந்ததும் அந்த பகுதுயை சேர்ந்த 8 பேர் இறங்கி விட்டனர். மற்ற 7 பேர் மட்டும் உட்கார்ந்திருந்தனர். இவர்கள் சிலேட்டர்புரத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இன்று அதிகாலை 5.30மணியளவில் அந்த வேன் பெருந்துறை அடுத்த துடுப்பதி-சீனாபுரம் பிரிவு அருகே வந்தபோது எதிரே கோவையிலிருந்து துணி பண்டல் பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை தேனி மாவட்டம் கண்டமனூரை சேர்ந்த உதயசூரியன் (55) ஓட்டி வந்தார். அருகில் உறவினர்கள் பன்னீர் செல்வம், ஜெகநாதன் இருந்தனர்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் வேனின் முன் பகுதி லாரிக்குள் புகுந்தது.


    வேனில் தொங்கியபடி இறந்த டிரைவர் பொன்னுசாமி.

    இந்த கோர விபத்தில் வேன் டிரைவர் பொன்னுசாமி அருகே இருந்த கூடுதல் டிரைவர் சிவா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் இந்த விபத்தில் வேனில் வந்த துடுப்பதியை சேர்ந்த ராம்குமார் (19) சிலேட்டர் நகரை சேர்ந்த சகுந்தலா (48), தீபா (53), பிரிசில்லா (35), ஆதிரா (27), இவரது மகள் ஜியா (5), ரேவதி (22) மற்றும் லாரி டிரைவர் உதயசூரியன் அருகே இருந்த அவரது 2 உறவினர்கள் உள்பட 10 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இவர்கள் அனைவரும் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை- ஈரோடு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து பற்றி பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து லாரிக்குள் புகுந்த வேனை வெட்டி எடுத்து மீட்டனர். #Tamilnews
    ஈரோடு பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் போலீசார் நேற்று இரவு ஈரோடு பஸ் நிலைய பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த டவுன் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் பவானிசாகரில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் ரவி(வயது29) என்பதும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்பதும் தெரிய வந்தது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் ஒரு மோட்டார் சைக்கிளை ரவி திருடி வந்தது தெரிய வந்தது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த டவுன் போலீசார் ரவியை கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ரவி வேறு எங்காவது கைவரிசை காட்டி உள்ளாரா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

    கன்னட ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்த சம்பவம் தாளவாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் கர்நாடக மாநில எல்லையில் உள்ள தாளவாடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தி.மு.க. உள்பட எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    தாளவாடி பஸ் நிலையம் எதிரே தி.மு.க. கம்யூனிஸ்டு நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அப்போது நாம் தமிழர் கட்சியினர் மட்டும் தனியாக பிரிந்து தாளவாடி தபால் நிலையம் அருகே திடீரென பிரதமர் மோடியின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதை சிறிதும் எதிர்பாராத போலீசார் அங்கு ஓடி சென்றனர்.

    அங்கு எரிந்து கொண்டிருந்த மோடி உருவ பொம்மை மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அப்போது மோடியை கண்டித்து கோ‌ஷங்களை முழங்கிய நாம் தமிழர் கட்சி பொன்குமார் உள்பட 10 பேரை கைது செய்தனர்.

    கன்னட ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்த சம்பவம் தாளவாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன் தி.மு.க பிரமுகர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையொட்டி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் சாலை மறியல் போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு பஸ் நிலையம் அருகே தி.மு.க.வினர் இன்று மறியல் நடத்தினர். மறியல் நடத்திய 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் தி.மு.க.வினர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த தி.மு.க.வினர் அங்கும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது 59-வது வட்ட செயலாளர் ஆறுமுகம் என்பவர் திடீரென தான் கொண்டு வந்த மண்எண்ணையை உடல் முழுவதும் ஊற்றினார். பிறகு தீக்குளிக்க முயன்ற அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பாய்ந்து சென்று தடுத்து நிறுத்தினர்.

    இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், முருகையன் ஆகியோர் தீக்குளிக்க முயன்ற ஆறுமுகம் மற்றும் மறியல் நடத்திய 50 பேரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

    கலெக்டர் அலுவலகம் முன் தி.மு.க பிரமுகர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும் ஈரோடு காளை மாட்டு சிலை முன்பும் நூற்றுக்கணக்கான தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காவிரி மேலாண்மை வாரிய போராட்டத்தை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி திசை திருப்பி விடக்கூடாது என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பிரச்சனைக்காக இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் இளைஞர்களும் மாணவர்களும் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் இந்த தொடர் போராட்டங்கள் நிற்காது.

    தமிழக அரசே உண்ணாவிரதம் போன்ற அறவழி போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

    இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த உள்ளார்கள். வரும் 10-ந்தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த விடக்கூடாது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் ஒரு கொண்டாட்டம். இதை கொண்டாடுகின்ற மனநிலையில் இப்போது தமிழர்கள் இல்லை. இதற்கு உடனடியாக தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் நடக்கிற காவிரி உரிமை போராட்டத்தை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி திசை திருப்பி விடக்கூடாது. இதில் ஒவ்வொருவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு ஈஸ்வரன் கூறி உள்ளார். #tamilnews
    தமிழகத்தில் இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் 5000 ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. #CauveryMangementBoard #TNBandh
    ஈரோடு:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே மறியல் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் ஒருசில கடைகளை தவிர மற்ற கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டுசேலை கடை, ராஜாஜி மார்க்கெட் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் 95% வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை காய்கறி சந்தை முழு அளவில் அடைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரியில் பெரும்பாலான கடைகள் மற்றும் உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.



    போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால், குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. அ.தி.மு.க. உள்ளிட்ட சில தொழிற்சங்கத்தினர் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். எனினும் அரசுப் பேருந்துகளை இயக்கக் கூடாது என தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலிருந்து புதுச்சேரி சென்ற, 4 தமிழக அரசுப் பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 10 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 5,000-க்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட பின்னலாடை நிறுவனம் மற்றும் பாத்திர தொழிலாளர்கள் சங்கத்தினர் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக ரூ.31.50 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே, முழு அடைப்புக்கு ஆதரவாக பெட்ரோலிய டேங்கர் லாரி சங்கத்தினரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #CauveryIssue  #CauveryMangementBoard #TNBandh
    ரெயில்வே தண்டவாளத்தில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்தது . அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்துக்கும், தொட்டியபாளையம் ரெயில் நிலையத்துக்கும் இடையே தண்டவாளத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். முதியவரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்த முதியவர் வெள்ளை நிற அரைக்கை சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்திருந்தார். அவரது வலது மார்பில் இடது பக்கம் ஒரு மச்சம் உள்ளது.

    இடது மார்பின் விலா எலும்பில் ஒரு மச்சமும், வலது பக்க தொடையில் காயத்தழும்பும் உள்ளது. அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து கிடந்த முதியவர் ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதன் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குரங்கணி மலை தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கையை இன்னும் 2 மாதத்தில் அரசிடம் சமர்ப்பிப்போம் என்று அரசு முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா கூறினார்.
    ஈரோடு:

    தேனி மாவட்டம் குரங்கணி மலை தீ விபத்தில் 22 சுற்றுலா பயணிகள் பலியாகினர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் இதில் அடங்குவர்.

    இந்த தீ விபத்து குறித்து அரசு முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா அரசு சார்பில் விசாரணை நடத்தி வருகிறார். குரங்கணி மலை பகுதியில் விசாரணை மேற்கொண்ட அதுல்ய மிஸ்ரா இன்று ஈரோட்டுக்கு வந்தார்.

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவர் குரங்கணி மலை தீவிபத்து குறித்து பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்துகள் கேட்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    குரங்கணி மலை பகுதிக்கு பலியானவர்கள் எப்படி சென்றார்கள்? எப்படி அனுமதி வாங்கினார்கள்? என்று விசாரணை நடந்து வருகிறது.

    கடந்த 21 மற்றும் 22-ந் தேதி தீ விபத்து நடந்த குரங்கணி மலை பகுதியில் முழுமையாக ஆய்வு செய்தோம். டிரக்கிங்கில் என்னென்ன தவறு செய்தார்கள்? எனவும் ஆராய்ந்தோம்.

    தீ விபத்தில் தப்பியவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளோம். ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த நேகா, சுவேதா ஆகியோரை விசாரணைக்கு அழைத்தோம். ஆனால் அவர்கள் விசாரணைக்கு வரவில்லை.

    தேவைப்பட்டால் நாங்கள் அவர்களின் வீட்டுக்கு சென்று விசாரணை செய்வோம். குரங்கணி மலை தீ விபத்து பற்றி ஏற்கனவே கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. நாங்களும் தனியாக விசாரணை நடத்தி வருகிறோம்.

    தீ விபத்து நடந்தால் அந்த பகுதியில் வெப்பம், ஆக்சிஜன், எரிபொருள் இருந்திருக்கும். தீ விபத்து நடந்த குரங்கணி மலையில் வெப்பம், ஆக்சிஜன் இருந்துள்ளது. இதனால் தீப்பொறி ஏற்பட்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

    இன்று ஈரோட்டில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகிறோம். அடுத்து பொள்ளாச்சி செல்கிறோம். இன்னும் 2 மாதத்தில் எங்கள் விசாரணை முடிந்து விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்போம்.

    இவ்வாறு முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா கூறினார்.  #KuranganiForestFire
    சென்னிமலை அருகே உள்ள கிராமத்தில் இறந்தவரின் உடலை சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் 6 மணி நேரம் பிணத்துடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள குமாரவலசு ஊராட்சியை சார்ந்த தொட்டிபாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் குருசாமி (வயது 65).

    இவருக்கு நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தார். நேற்று காலை 9 மணிக்கு வெள்ளோட்டில் இருந்து அனுமன்பள்ளி செல்லும் சாலையில் உள்ள ஊர் நத்தம் பகுதியில் இப்பகுதி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சுடுகாட்டில் புதைப்பதற்காக உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர்.

    அப்போது இந்த இடத்தில் சுடுகாடு அமையக்கூடாது என நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றதாகவும், அங்கே புதைக்க கூடாது என அப்பகுதியை சார்ந்தவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்படவே பெருந்துறை டி. எஸ்.பி. பொறுப்பு ரமேஷ், பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம், தாசில்தார் வீரலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    காலை 9 மணி முதல் தொடர்ந்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் அடக்கம் செய்ய வந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டது.

    பின்னர் அப்பகுதியை சார்ந்த சென்னிமலை திமுக ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் என்கிற மணி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மதியம் 2:00 மணியளவில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இந்த முறை நெடுஞ்சாலை ஓரத்தில் பிணத்தை தற்காலிகமாக புதைப்பது எனவும், விரைவில் நீதிமன்ற விவகாரங்களை முடித்து ஊர் நத்தம் பகுதியை சுடுகாடாக மாற்றி தருவது என தாசில்தார் வீரலட்சுமி உறுதியளித்ததை ஏற்றுக்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது. காலை முதல் இறந்தவர் உடலை வைத்து 6 மணி நேரம் போராட்டம் நடத்தியதால் வெள்ளோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்மிக்க கோவில் பண்ணாரி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்மிக்க கோவில் பண்ணாரி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் விழா சிறப்பாக நடக்கும்.

    விழாவில் தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த மாதம் 20-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று வீதி உலா வந்தார்.

    சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், புதுவட வள்ளி, புது குய்யனூர், புது பீர்கடவு உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்மன் சப்பரம் வீதி உலா சென்றது.

    வீதி உலாவை முடித்துக் கொண்டு கடந்த 29-ந் தேதி நள்ளிரவில் அம்மன் சப்பரம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து கம்பம் சாட்டப்பட்டது. அன்று முதல் அம்மன் புகழ்பாடி மலை பகுதி மக்கள் கலை நிகழ்ச்சி நடத்தினர்.

    நேற்று இரவு கோவில் முன் உள்ள குண்டத்தில் எரி கரும்புகள் எரியூட்டப்பட்டு குண்டம் வார்க்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு மங்கல வாத்தியங்களுடன் அம்மன் சப்பரம் கோவில் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளத்துக்கு சென்று அம்மன் அழைப்பு நடந்தது.

    சரியாக 3.45 மணிக்கு அம்மன் சப்பரம் மற்றும் படை கலத்துடன் குண்டத்தை வந்தடைந்தது. 10 அடி நீளம் 4 அடி அகலத்தில் தயார் செய்யப்பட்ட குண்டத்தின் முன்பு பூ உருட்டப்பட்டு வரம் பெறுதல் நிகழ்ச்சி நடந்தது.


    குண்டம் இறங்க காத்திருந்த பக்தர்கள்.


    பிறகு குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் பற்ற வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை 3.56 மணிக்கு பூசாரி ராஜேந்திரன் குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டியபடி முதலில் குண்டம் இறங்கினார்.

    பிறகு கோவில் பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் குண்டம் இறங்கினர். இதைத்தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்தனர்.

    ஆண்கள், பெண்கள், வய தானவர்கள், சிறியவர்கள் என அனைத்து தரப்பினரும் தீ மிதித்தனர். மேலும் போலீஸ் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், திருநங்கைகள் என பலரும் தீ மிதித்தனர்.

    கர்நாடக மாநில பக்தர்களும் ஆயிரக்கணக்கான பேர் திரண்டு வந்து பயபக்தியுடன் அம்மனை வேண்டி குண்டம் இறங்கினர்.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே குண்டம் இறங்க காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்தனர். மேலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் காத்திருந்த பக்தர்கள் வரிசையாக வந்து தீ மிதித்த நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர். குண்டம் விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மேற்பார்வையில் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மூலம் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

    உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது :-

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

    இதற்காக எங்கள் (அ.தி.மு.க.) எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து பாராளுமன்றத்தையே முடக்கினார்கள். பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி அழுத்தம் கொடுத்தனர்.

    இதன் தொடர்ச்சியாக இப்போது அ.தி.மு.க.வினர் பொதுமக்களுடன் இணைந்து இன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறோம்.

    இங்கே கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பொது மக்களும் பலர் இங்கே வந்து கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள்.

    அந்த வகையில் இந்த உண்ணாவிரத போராட்டம் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கொண்டிருக்கிறோம்.

    இனி அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம்? என்று முதல்வருடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.

    இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #Tamilnews
    ×