என் மலர்tooltip icon

    ஈரோடு

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் டி.டி.வி. தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்.

    இன்று ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி.டி.வி. தினகரன் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க டி.டி.வி. தினகரன் காலையிலேயே ஈரோடு வந்தார். அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர்.

    பின்னர் 11.15 மணிக்கு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார்.

    அவரும் அவருடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். #CauveryIssue
    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    ஈரோடு:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு அருகே உள்ள சித்தோடு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது25). இன்னும் திருமணம் ஆகவில்லை. பொம்மை வியாபாரம் செய்து வந்தார். அம்மா -அப்பா கிடையாது பாட்டி ஆதரவில் வசித்து வருகிறார்.

    இவர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு தனது வீட்டிலிருந்து மண் எண்ணை கேனுடன் வெளியே வந்தார். தனது வீட்டு சுவற்றில் “மத்திய அரசே கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர், எடப்பாடி திரு.பழனிசாமி நீங்கள் தமிழனா? இல்லையா? தமிழக மக்களிடம் துணிந்து சொல்லுங்கள் பார்க்கலாம், தமிழகம் வருகிற நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது”

    - பா.தர்மலிங்கம்.

    இவ்வாறு அந்த சுவற்றில் மஞ்சள் கலர் சாக்பீசால் எழுதி வைத்திருந்தார்.

    வாலிபர் தர்மலிங்கத்தின் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ள காட்சி.

    பிறகு தான் கொண்டு வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடலில் பற்றி எரிந்த தீயால் அவர் அலறினார். அவரது சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்த உறவினர்கள் ஓடிவந்தனர். மேலும் அக்கம்பக்கம் உள்ளவர்களும் ஓடிவந்தனர். தர்மலிங்கம் உடலில் எரிந்த தீயை அணைத்து உடனடியாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #CauveryIssue
    ஈரோட்டில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    பெருந்துறை:

    ஈரோடு காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன சுந்தரம். இவருக்கு திவ்யா (வயது 21) என்பவருக்கும் 3 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.

    திருமணத்துக்கு பிறகு தன் மனைவி திவ்யாவை பெருந்துறையில் உள்ள ஒரு கல்லூரியில் கணவர் படிக்க வைத்தார். அவர் பி.ஏ. வரலாறு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி கணவரிடம் கோபித்து கொண்டு கடந்த 19-ந் தேதி திவ்யா விஜயமங்கலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதற்கிடையே கடந்த 25-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற திவ்யா திடீரென மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான திவ்யாவை தேடி வருகிறார்கள்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசை கண்டித்து ஈரோட்டில் நாளை தினகரன் மற்றும் ஜெ.தீபா போட்டி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

    ஈரோடு:

    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சி, பொது அமைப்பினர், விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    முதல்கட்டமாக தஞ்சையில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பின்னர் திருச்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம் நடந்தது.

    இதை தொடர்ந்து 3-வது கட்டமாக காவிரி பாயும் மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு கடந்த 7-ந் தேதி தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

    அதன்படி நாளை (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.தலைமை தாங்குகிறார். மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்.

    முன்னாள் அமைச்சரும், கொங்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி முன்னிலை வகிக்கிறார். மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதேபோல் ஜெ.தீபாவும் ஈரோட்டில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.

    நாளை காலை 11 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் முன்பு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார். அவருடன் ஜெ.தீபா பேரவை நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

    காவிரிநீர் போராட்டம் எதிரொலியாக ஈரோடு ஜவுளி மார்க்கெட்டுக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை பெருமளவில் குறைந்தது.
    ஈரோடு:

    ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தைக்கு ஈரோடு மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மேலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநில வியாபாரிகள் வருவார்கள்.

    இவர்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் தங்களுக்கு தேவையான ஜவுளிகளை வாங்கி கொண்டு செல்வார்கள்.

    மேலும் உள்ளூர் பொது மக்களும் மலிவான விலைக்கு ஜவுளிகள் வாங்க கனி மார்க்கெட் ஜவுளி சந்தைக்கு வருவார்கள்.

    இதனால் கனி மார்க்கெட் ஜவுளி சந்தை காலை நேரத்திலேயே பரபரப்பாக காணப் படும். ஆனால் கடந்த சில நாட்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மிகவும் மந்தமாகவே உள்ளது. வெளியூர், மற்றும் வெளி மாவட்ட, வெளி மாநில வியாபாரிகள் வருகையும் மிகவும் குறைந்து உள்ளது.

    இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகளிடம் கேட்ட போது, ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் வெளி மாநில வியாபாரிகள் வருகை மிகவும் குறைந்து விட்டது. இதே போல் வெளியூர் வியாபாரிகள் வரத்தும் கணிசமாக குறைந்து விட்டது. கோடை கால ஜவுளிகள் வந்து குவிந்து உள்ளது. ஆனால் வியாபாரம் சூடு பிடிக்கவில்லை‘‘ என்று வேதனையுடன் கூறினர்.

    மேலும் பல வியாபாரிகள் கூறும் போது, வழக்கம் போல் 60 சதவீத வியாபாரம் நடக்கும். ஆனால் இன்று 20 சதவீத வியாபாரம் கூட நடக்கவில்லை என்று கூறினர்.


    புஞ்சை புளியம்பட்டி அருகே கர்நாடக அரசு பஸ் மீது நள்ளிரவில் கல் வீசிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    பெங்களூருவில் இருந்து சத்தியமங்கலம் வழியாக கோவைக்கு நேற்று இரவு கர்நாடக மாநில அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    இந்த பஸ் நள்ளிரவு 12 மணி அளவில் பு.புளியம்பட்டி அடுத்த புதுப்பாளையம் பிரிவில் வந்த போது இருளில் பதுங்கி இருந்த ‘மர்ம’ ஆசாமிகள் அந்த பஸ் மீது கற்கள் வீசினர்.

    இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. ஆனால் இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடைய வில்லை. இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு புஞ்சை புளியம்பட்டி போலீசார் விரைந்தனர். பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி பஸ் மீது கற்களை வீசிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக எல்லையில் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளன. #CauveryIssues
    சத்தியமங்கலம்:

    காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சி உள்பட பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    ஆளும் கட்சியான அ.தி.மு.க. சார்பில் கடந்த 3ந்தேதி உண்ணாவிரத போராட்டமும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கடந்த 5ந்தேதி முழு அடைப்பு போராட்டமும் நடந்தது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர்-நடிகைகள் கடந்த 8ந்தேதி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே மவுன அறவழி போராட்டம் நடத்தினார்கள்.  தொடர்ந்து தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.  நேற்று சென்னையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராகவும் சாலை மறியல், கண்டன போராட்டங்கள் நடந்தன.

    இந்த நிலையில், தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடக அரசு பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

    சத்தியமங்கலம் வழியாக கோவை, ஈரோடு செல்லும் கர்நாடக பதிவெண் கொண்ட பேருந்துகள் திம்பம் சோதனை சாவடியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன.  அவை பாதுகாப்பினை கருதி புளிஞ்சூர் சோதனை சாவடி வழியாக போலீசாரால் திருப்பி அனுப்பப்படுகின்றன.

    இன்று (புதன்கிழமை) காலை முதல் தமிழகம் வரும் கர்நாடக மாநில அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. பெங்களூரு, மைசூரு கொள்ளேகால் ஆகிய ஊர்களில் இருந்து தினமும் ஆசனூர், சத்தியமங்கலம் வழியாக கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு தினமும் பஸ்கள் வந்து செல்லும். இன்று காலை முதல் கர்நாடக மாநில அரசு பஸ்கள் வரவில்லை. இந்த பஸ்கள் கர்நாடக எல்லையான புளிஞ்சூர் வரை வந்து பயணிகளை இறக்கி விட்டு திரும்பி சென்று விடுகிறது.

    இதேபோல் ஈரோடு மாவட்டத்திலிருந்து செல்லும் பஸ்களும் எல்லை பகுதியான புளிஞ்சூர் வரை சென்று திரும்புகிறது.#tamilnews
    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் கணவரை கொன்று துணியில் கட்டி வீசிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி, சுபிஷ்கா கார்டனை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). லாரி டிரைவர்.

    இவரது மனைவி புஷ்பா (46). இவர்களுக்கு நந்தகுமார் (28) என்ற மகன் உள்ளார். அவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கார் ஒர்க்‌ஷாப் வைத்துள்ளார்.

    ராஜேந்திரனும், புஷ்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பிரிந்து வாழ்கின்றனர். ராஜேந்திரன் திருப்பூரில் தங்கி இருந்து லாரி ஓட்டி வந்தார்.

    நந்தகுமாரும் பெருமாநல்லூரில் தங்கி உள்ளார். எனவே புஞ்சைபுளியம்பட்டியில் புஷ்பா மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் புஷ்பாவின் வீட்டுக்கு முன்பு காலி இடத்தில் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடல் அரை நிர்வாண நிலையில் பனியன் துணியால் சுற்றப்பட்டு, கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. முகம் சாக்கு பையால் மூடப்பட்டு இருந்தது.

    இது குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜேந்திரனை கொலை செய்தது யார்? என்பது பற்றிய விசாரணையில் இறங்கினர்.

    புஷ்பாவின் வீட்டுக்கு முன்பு பிணம் கிடந்ததால் புஷ்பாவிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் பிணமாக கிடப்பது யார் என எனக்கு தெரியாது என்று புஷ்பா கூறினார்.

    அவரது மகன் நந்தகுமார் வந்து அடையாளம் காட்டிய பின்னர்தான் கொலையுண்டது தனது கணவர் ராஜேந்திரன் என்பதை புஷ்பா ஒப்புக்கொண்டார்.

    இதனால் புஷ்பா மீது போலீசாரின் சந்தேக கண் விழுந்தது. அவரை தங்களது விசாரணை வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்தனர்.

    போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. ராஜேந்திரனின் பிணத்தை மோப்பம் பிடித்த மோப்ப நாய் நேராக புஷ்பாவின் வீட்டுக்குள் ஓடியது. எனவே புஷ்பாவின் வீட்டுக்குள் தான் கொலை நடந்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

    எனவே புஷ்பாவை சுற்றியே போலீசாரின் விசாரணை இருந்தது. முதலில் நடந்ததை மறுத்தாலும் ஒரு கட்டத்தில் உண்மையை புஷ்பா ஒப்புக்கொண்டார். மது போதையில் அடிக்கடி வந்து தொல்லை கொடுத்ததால் கணவரை புஷ்பா கொன்றது விசாரணையில் தெரிய வந்தது.

    மதுவுக்கு அடிமையான ராஜேந்திரனுக்கும் புஷ்பாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் ஏற்பட்டு வந்த தகராறு காரணமாக கடந்த 15 வருடங்களுக்கு முன்பே இருவரும் பிரிந்தனர்.

    பின்னர் புஷ்பா மகனை வளர்த்து ஆளாக்கி அவரது வருமானத்தில் ஒரு நிலைக்கு வந்தார். ஆனால் ராஜேந்திரன் டிரைவராக வேலை பார்த்து தொடர்ந்து மதுவுக்கு அடிமையானவராகவே இருந்து வந்தார்.

    குடும்பத்துக்கு எந்த வகையிலும் உதவாதவராக இருந்து வந்த ராஜேந்திரனை புஷ்பா முற்றிலும் வெறுத்தார். ஆனால் சமீப காலமாக ராஜேந்திரன் புஞ்சைபுளியம்பட்டிக்கு அடிக்கடி வந்து புஷ்பாவுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

    குடும்பத்துடன் சேர்ந்து வாழ அவருக்கு ஆசை இருந்தது. ஆனால் புஷ்பா ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இருந்தாலும் மனைவியின் மனதை கரைக்க ராஜேந்திரன் முயற்சித்து வந்தார்.

    ஆனால் முடியாததால் நேற்று முன்தினம் இரவு சாணிப்பவுடர் குடித்து விட்டு புஞ்சை புளியம்பட்டிக்கு வந்தார். சாணிப்பவுடர் குடித்ததை புஷ்பாவிடம் கூறினார். ஆனால் அதை புஷ்பா நம்பவில்லை.

    எனவே புஷ்பாவிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் குளியலறைக்குள் சென்றார். அப்போது குழாயில் தண்ணீர் வராமல் புஷ்பா அடைத்துவிட்டார்.

    2 மணி நேரம் கழித்து சென்று பார்த்தபோது ராஜேந்திரன் மயக்க நிலையில் பாதி உயிருடன் கிடந்தார். அப்போதும் அவர் மீது ஆத்திரத்தில் இருந்த புஷ்பா சாக்கு பையை எடுத்து ராஜேந்திரனின் முகத்தை மூடினார்.

    இதில் மூச்சு திணறி ராஜேந்திரன் இறந்தார். அவரது உடல்கூட தனது வீட்டுக்குள் கிடக்கக்கூடாது என்ற வெறி புஷ்பாவிடம் இருந்தது.

    எனவே ராஜேந்திரனின் உடலை துணியால் சுற்றி, கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு போய் காலி இடத்தில் போட்டுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பிரேத பரிசோதனை அறிக்கையிலும் ராஜேந்திரன் மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து புஷ்பா மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கணவரை மனைவியே கொன்ற சம்பவம் புஞ்சை புளியம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்தியூர் அருகே மலைப்பகுதியில் நாயை 15 அடி நீள மலைப்பாம்பு இறுக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே பர்கூர் மலையை ஒட்டியுள்ள தட்டக்கரை கிராமம் உள்ளது. இந்த பகுதியில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

    இங்கு நேற்று காலை 2 நாய்கள் குறைத்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு நாயை 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சுற்றிக் கொண்டது. இதனை பார்த்த மற்றொரு நாய் விடாமல் குறைத்து சத்தமிட்டது.

    இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கம் உள்ள பொது மக்கள் அந்த பகுதிக்கு வந்து நாய் எதற்காக குரைக்கிறது? என்று பார்த்தனர். அப்போது மலைப்பாம்பு ஒன்று அந்த நாயை சுற்றியவாறு இறுக்கிக் கொண்டு இருந்தது. இதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து நாயை அதன் பிடியில் இருந்து விடுவிக்க முயன்றனர். பிறகு பாம்பு நாயை விட்டு விட்டு ஓர் பாறையின் இடுக்கு பகுதிக்கு சென்று விட்டது. பிறகு பொதுமக்கள் நாயை பார்த்தனர். அந்த நாய் இறந்த நிலையில் கிடந்தது. இது குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வந்து பார்த்த போது நாயை இறுக்கி கொன்ற பாம்பு அந்த இடத்தில் இல்லை. அது எங்கு சென்றது என தெரியவில்லை.

    இதனையடுத்து மீண்டும் ஊருக்குள் அந்த மலை பாம்பு வருமா? என்கிற அச்சத்துடன் அந்த பகுதி மக்கள் உள்ளனர். இதே போல் கடந்த 1 வருடத்திற்குள் இதே தட்டக்கரை பகுதியில் ஒரு மலைப்பாம்பு 3 முறை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இந்த பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இறந்து கிடந்த நாயை இப்பகுதி மக்கள் கண்ணீருடன் அப்பகுதியில் குழிதோண்டி புதைத்தனர்.
    கோபியில் அரசு பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 35). கூலி தொழிலாளி. அடி-தடி தகராறில் காயத்துடன் சிகிச்சை பெற பூபதி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    அவருடன் அவரது நண்பர் செல்ல பாண்டியன் என்பவரும் வந்திருந்தார். இவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    காயம் அடைந்த பூபதிக்கு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் மாலினி தையல் போட்டு சிகிச்சை அளித்தார்.

    அப்போது பெண் டாக்டர் மற்றும் அங்குள்ள ஊழியர்கள் கனகராஜ், சண்முக சுந்தரம், ஈஸ்வரன் ஆகியோருக்கும் பூபதி, செல்லபாண்டியன் ஆகியோருக்கும் இடையே திடீர் தகராறு- வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் பெண் டாக்டர் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஆஸ்பத்திரி ஊழியர் ஈஸ்வரன் கோபி போலீசில் புகார் செய்தார். போலீசார் பூபதி மற்றும் செல்ல பாண்டியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ஈரோடு அருகே 6 நாட்களாக செங்கோடம் பள்ளம் பஸ் நிறுத்தத்திலேயே அந்த வேன் நிற்பது பற்றி இன்னும் யாரும் கண்டு கொண்டதாகவே தெரிய வில்லை

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள திண்டல் அடுத்து செங்கோடம்பள்ளம் உள்ளது. பெருந்துறை ரோட்டில் உள்ள இப்பகுதி இரவும்-பகலும் என எப்போதும் பரபரப்பாகவும் போக்குவரத்து நெரிசலும் காணப்படும்.

    இந்த நிலையில் செங்கோடம்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் கடந்த 6 நாட்களாக சேலம் பதிவு எண் கொண்ட ஒரு ஆம்னி வேன் கேட்பாரற்று நிற்கிறது.

    மேலும் அந்த வேனின் கதவுகள் திறந்தபடியே உள்ளது. சம்பவத்தன்று இந்த வேனில் 5 பேர் வந்துள்ளனர்.

    ஆம்னி வேனை பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு 5 பேரும் இறங்கினர். பிறகு அங்கு ஒரு ஆட்டோவை அழைத்து ஆட்டோ வருமா? விஜயமங்கலம் வரை போக வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    அதற்கு அந்த ஆட்டோ டிரைவர் அவ்வளவு தூரத்துக்கு ஆட்டோ வராது என்று கூறி உள்ளார்.

    இதனால் அவர்கள் ஒரு பஸ்சை நிறுத்தி ஏறி சென்று விட்டனர். இதை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறினர்.

    விஜயமங்கலம் போக வேண்டிய அவர்கள் வேனிலேயே போய் இருக்கலாமே? எதற்காக ஆட்டோ கேட்டுள்ளனர்? பிறகு ஏன் வேனை நிறுத்தி விட்டு பஸ்சில் சென்றுள்ளனர்? என்பது மர்மமாக உள்ளது.

    வேனில் இருந்து வந்தவர்கள் அந்த வேனை எங்கிருந்தாவது கடத்தி கொண்டு வந்தார்களா? வழியில் ஈரோட்டில் நிறுத்தி விட்டு சென்றார்களா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.

    6 நாட்களாக செங்கோடம் பள்ளம் பஸ் நிறுத்தத்திலேயே அந்த வேன் நிற்பது பற்றி இன்னும் யாரும் கண்டு கொண்டதாகவே தெரிய வில்லை.

    எல்லைக்குட்பட்ட ஈரோடு தாலுகா போலீசாருக்கும் அந்த மர்ம ஆம்னி வேன் கண்ணில் படவில்லை. அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றால் கூட இந்த மர்ம வேன் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்திருப்பார்கள்.

    இனியும் காலம் தாழ்த்தாமல் போலீசார் அந்த மர்ம வேன் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மர்மத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.  #tamilnews

    வன் கொடுமை சட்டத்தை திருத்தம் செய்வதை கண்டித்தும், தலித் மக்கள் உரிமையை காக்க வலியுறுத்தியும் ஈரோட்டில் 2 இடங்களில் காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் மாநகர் மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. சமூக, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்த உண்ணாவிரதம் நடந்தது.

    மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    மாநில துணை தலைவர் நல்லசாமி, பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம், முன்னாள் தலைவர் ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் ஆயுப் அலி, திருச்செல்வம், விவேகானந்தன், ஜாபர் சாதிக், மாவட்ட துணை தலைவர் ராஜேஸ் ராஜப்பா, சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் பாஷா, முகமது சாதிக், மகிளா காங்கிரஸ் புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஈரோடு மூலப்பட்டறையில் உண்ணாவிரதம் நடந்தது. வன் கொடுமை சட்டத்தை திருத்தம் செய்வதை கண்டித்தும், தலித் மக்கள் உரிமையை காக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.

    தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். எம். பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செங்குளம் பழனிச்சாமி, சந்திரசேகர், வட்டார தலைவர்கள் முத்துக்குமார், கோபால கிருஷ்ணன், சிவக்குமார், நடராஜ், துணை தலைவர்கள் மோகன், சாதிக் பாட்ஷா, ரவி, உழவர் உழைப்பாளர் கட்சி தண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×