என் மலர்tooltip icon

    ஈரோடு

    விடைத்தாளை திருத்தும் பணியை பார்வையிடவந்த தலைமை ஆசிரியர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புஞ்சைபுளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்தவர் ஏசுராஜ் (வயது 53) இவர் புளியம்பட்டி அரசு மேல்நிலை (கே.வி.கே.) பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    தற்போது பிளஸ்-2 தேர்வு முடிந்து விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் நடந்து வரும் தேர்வு தாள் திருத்தும் பணியை பார்வையிடும் மார்க் சரி பார்க்கும் அலுவலகராக சென்று வந்தார்.

    அந்த வகையில் தலைமை ஆசிரியர் ஏசுராஜ் நேற்று மாலை கோபியில் உள்ள பழனியம்மாள் பள்ளியில் நடக்கும் தேர்வுதாள் திருத்தும் பணியை பார்வையிடவும், சரி பார்க்கவும் சென்றார்.

    கோபி பள்ளியில் மாடிப் படியில் அவர் ஏறி சென்ற போது திடீரென மயங்கி விழுந்துவிட்டார். அங்கு இருந்த சக ஆசிரியர்கள் பதட்டத்துடன் ஓடிவந்தனர். ஏசுராஜை மீட்டு கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால்அங்கு சிகிச்சை பலனின்றி தலைமை ஆசிரியர் ஏசுராஜ் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இறந்த தலைமை ஆசிரியர் ஏசுராஜுக்கு ஜெஷீலா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

    இதில் ஒரு மகளான ஜெனீபர் துபாயில் உள்ளார். இவரது கணவர் அங்கு விஞ்ஞானியாக உள்ளார். கணவருடன் புஞ்சை புளியம்பட்டிக்கு வந்திருந்த ஜெனீபர் நேற்று முன்தினம் தான் துபாய்க்கு திரும்பி சென்றுள்ளார்.

    இந்த நிலையில் தந்தை இறந்த செய்தி அவருக்கு பேரிடியாக இருந்தது. கதறி அழுதார். மீண்டும் கணவருடன் புறப்பட்டு புளியம்பட்டிக்கு வருகிறார்.

    இன்று மாலை அவர் வந்ததும் தலைமை ஆசிரியர் உடல் தகனம் செய்யப்படுகிறது.

    தலைமை ஆசிரியர் ஏசுராஜ் உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    புளியம்பட்டி கே.வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளும் திரண்டு வந்து தலைமை ஆசிரியர் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். #tamilnews

    பள்ளி பாடபுத்தக விலையை கூட்ட பாடநூல் கழகம் முடிவெடுத்துள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    தமிழக அரசின் பாடநூல் கழகம் சார்பில் பள்ளி பாட புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன. இந்நிலையில், பாட புத்தகங்களில் விலையை கூட்ட சமீபத்தில் பாடநூல் கழகம் முடிவெடுத்தது. தீரன் சின்னமலை பிறந்தநாளை முன்னிட்டு ஓடாநிலை மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மரியாதை செலுத்தினர்.



    அப்போது பாட புத்தகங்கள் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு புத்தகங்கள் இலவசமாகவே வழங்கப்படும். தனியார் பள்ளிகள் மட்டும் கட்டணம் செலுத்தி புத்தகங்களை வாங்கும் நிலை உள்ளது. அச்சிடும் செலவு அதிகரித்துள்ளதால் பாட புத்தகங்களின் விலை சற்று அதிகரித்துள்ளது” என்று கூறினார். #TamilNews
    ஈரோடு அருகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பொதுமக்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர்.

    ஈரோடு:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

    ஈரோட்டிலும் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் பொதுமக்களே இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

    ஈரோடு பெருமாள் மலை பகுதி மக்கள் இன்று காலை அந்த பகுதியில் திரண்டனர். பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அந்த பதாகைகளில் ‘காவிரி நீர் உயிர் நீர்’, ‘காவிரி எங்கள் பிறப்புரிமை’, ‘காவிரி உனக்குன்னா நெய்வேலி எனக்கு’, ‘உழவு இல்லை உணவு இல்லை’, ‘வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தமிழகத்தை வஞ்சிக்காதே’, ‘மக்கள் போராட்டமே எதை ஒன்றையும் மாற்றக்கூடியது’ என்பது உள்பட பல வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

    ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

    முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தீக்குளித்து இறந்த சித்தோடு வாலிபர் தர்மலிங்கத்துக்கு பொது மக்கள் அஞ்சலி, வீரவணக்கம் செலுத்தினர். 

    ஈரோடு பஸ் நிலையம் அருகே ஓடும் பஸ்சில் பயணிடம் ஜேப்படி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல் பாளையம், காமராஜ் நகரை சேர்ந்தவர் குப்புராஜ். இவர் சம்பவத்தன்று பன்னீர் செல்வம் பார்கில் இருந்து ஈரோடு பஸ் நிலையம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.

    குப்புராஜ் அருகில் இரண்டு வாலிபர்கள் இருந்தனர். பஸ் ஈரோடு பஸ் நிலையம் அருகே வந்த போது அந்த இரண்டு வாலிபர்கள் குப்புராஜ் பையில் இருந்த பணத்தை திருடி கொண்டு ஓட முயன்றனர்.

    குப்புராஜ் கூச்சல் போட்டதால் பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அந்த இரண்டு வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்தி தெருவை சேர்ந்த கார்த்தி என்கிற கார்த்திகேயன்(வயது23), காளியம்மா கோவில் தெருவை சேர்ந்த பசுபதி(23) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன், பசுபதி இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை அருகே விபத்தில் டோல்கேட் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள நாகப்பகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் அம்மாசை. இவரது மகன் கார்த்தி (வயது 30).

    இவர் விஜயமங்கலம் அருகே உள்ள டோல்கேட்டில் வேலை பார்த்து வந்தார். நேற்று அவர் பணியில் இருந்தார். பணி முடிந்து நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு கிளம்பினார். புறப்பட்ட சிறிது நேரத்தில் சேலம் மார்க்கத்தில் இருந்து வந்த வேனும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.

    இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்தி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கார்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறையை சேர்ந்தவர் உதயகுமார் (வயது37) தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் முள்ளாம்பரப்பு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத வகையில் உதயகுமார் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த உதயகுமார் உயிருக்காக போராடினார். அருகில் இருந்தவர்கள் இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உதயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி உதயகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் குறைவில்லாத தண்ணீர் செல்வம் கிடைக்க அட்சய திருதியை அன்று தண்ணீர் வைத்து பூஜை செய்யுமாறு ‘வாட்ஸ் அப்’-ல் தகவல் பரவி வருகிறது.
    ஈரோடு:

    அட்சய திருதியை வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஒரு குண்டு மணி அளவு நகை வாங்கினால்கூட குடும்பத்தில் மேலும் மேலும் நகையும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.

    எனவே அன்றைய தினத்தில் நகை வாங்கி அதை வைத்து பூஜை செய்வதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

    ஆனால் காவிரி நீர் பிரச்சனை, தண்ணீர் பற்றாக்குறை என நிலவும் இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் குறைவில்லாத தண்ணீர் செல்வம் கிடைக்க அட்சய திருதியை அன்று தண்ணீர் வைத்து பூஜை செய்யுமாறு ‘வாட்ஸ் அப்’-ல் தகவல் பரவி வருகிறது.

    அந்த ‘வாட்ஸ்-அப்’ தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அட்சய திருதியை அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம், வெள்ளி என்பது அவரவருடைய தனிப்பட்ட விருப்பம்.

    ஆனால் இன்றைய உடனடி தேவை என்பது தண்ணீர். எனவே அட்சய திருதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு சொம்பு நிறைய தண்ணீரை இறைவன் முன்பு வைத்தும் குறைவில்லாத தண்ணீர் செல்வத்தை வழங்குமாறு பிரார்த்தனை செய்யுங்கள்.

    இவ்வாறு அந்த ‘வாட்ஸ்- அப்’ தகவலில் கூறப்பட்டு உள்ளது.
    அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் விவசாயிகள் பயிரிப்பட்டிருந்த வாழைகள் சேதம் அடைந்தன.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. மழை அதிகமாக பெய்யா விட்டாலும் சூறாவளி காற்று சுழட்டி..சுழட்டி அடித்தது.

    அந்தியூர் அடுத்த பருவாச்சி காந்தி நகர் மற்றும் குழி தோட்டம் ஆகிய பகுதிகளில் 20 ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிரிட்டிருந்தனர்.

    கதளி, செவ்வாழை, நேந்திரம் போன்ற வாழைகள் பயிரிடப்பட்டு விளைந்து இன்னும் 2 மாதத்தில் அறுவடை ஆக இருந்தது.

    இந்நிலையில் அப்பகுதியில் விசிய சூறாவளி காற்றில் லட்சுமி, டாக்டர் சிவரஞ்சனி, சுப்பிரமணி உள்பட விவசாயிகள் பயிரிட்டிருந்த சுமார் 10 ஆயிரம் வாழைகள் சட..சட..வென முறிந்து விழுந்து நாசம் ஆனது. இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

    சேதம் அடைந்த வாழைகளை பார்த்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்தனர். உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சிறப்பாசிரியர்கள் தேர்வு முடிவு மே மாதத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    கோபி:

    கடந்த 23.09.17-ந் தேதி சிறப்பாசிரியர்கள் போட்டி தேர்வுகள் நடந்தது. இந்த போட்டிதேர்வில் 35 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

    கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் இதன் முடிவுகள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் தெரிவிகப்பட்டிருந்தது. இது 7 மாதம் கடந்த நிலையிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

    இதையடுத்து ஈரோடு, சென்னை, விழுப்புரம், மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிறப்பாசிரியர்கள் தேர்வு எழுதிய 18 பெண்கள் உள்பட 150 பேர் இன்று காலை கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை சந்திக்க அவரது சொந்த ஊரான கோபிக்கு வந்து கொண்டிருந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர் செங்கோட்டையன் கோபி வெள்ளாளபாளையம் வந்த அவர்களை, “கோபியில் உள்ளஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு சென்று இருங்கள் அங்கு நானே வருகிறேன்” என்று கூறினார்.

    இதையொட்டி பஸ்களில் வந்த ஆசிரியர்கள் கோபியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு சென்றனர்.

    சொன்னபடி அங்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம், “மேமாதத்தில் தேர்வு முடிவுகள் வெளிவரும் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் நேர்மையான முறையில் அனைவருக்கும் பணி கிடைக்கும்“ என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் கோபியில் இருந்து தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
    கோடைவிடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    கடத்தூர்:

    ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 21-ந் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை விடப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி திறக்கப்படும்.

    அதற்கு முன்னதாக வருகிற 2-ந் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் புகார் அளிக்கலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க அரசு ரூ.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுதவிர 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.463 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிக்கூடங்களில் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடை வழங்கப்படும். அதேபோல் அனைத்து வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் பள்ளிக்கூடங்கள் திறந்ததும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    கர்நாடகத்துக்கு எதிராக பேசும் ரஜினி, கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினர் தமிழக-கர்நாடக மாநில எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    தாளவாடி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகத்தில் அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு எதிராக தமிழக கர்நாடக எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் கன்னட சேனா படை அமைப்பின் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் 17 பேர் சாம்ராஜ்நகரில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

    தமிழக-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பின்னர் தமிழக எல்லையில் நுழைய முயன்ற போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் டி.எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.

    அப்போது அமைப்பின் மாவட்டத் தலைவர் சீனிவாசன் கூறியதாவது:-

    கர்நாடகத்துக்கு எதிராக பேசும் ரஜினி, கமலை கர்நாடகத்துக்குள் நுழைய விடமாட்டோம். காவிரி நீர் கன்னட நாட்டுக்குதான் சொந்தம். கமல், ரஜினி படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கமாட் டோம். இதனை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    காவிரி விவகாரத்தில் தமிழகம் தலையிடுவதை எதிர்க்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு நிர்ப்பந்திக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரு மாநில எல்லையில் நடந்த இந்த போராட்டத்தால் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.பாதுகாப்பு கருதி ஆசனூர் சோதனைச்சாவடியில் தமிழக-கர்நாடக இடையே போக்குவரத்தை தடை செய்தனர். 1 மணி நேரத்திக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இந்த போரட்டதால் தமிழக-கர்நாடக எல்லையில் பரபரப்பு நிலவியது. #tamilnews
    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தான் நினைத்திருந்தால் முதல்வர் ஆகி இருக்க முடியும் என்று ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார். #TTVDhinakaran
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பட்டம் நடந்தது.

    கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்.

    ஜீவாதார பிரச்சனையாக காவிரி பிரச்சனை உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. பிப்ரவரி 14-ந்தேதி வந்த தீர்ப்பு உங்களுக்கு நன்றாகவே தெரியும். 6 வார காலத்துக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இதை செய்யாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    தற்போது மத்திய அரசுக்கு நீதிமன்றம் வருகிற மே மாதம் 3-ந்தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளது. ஆனால் கர்நாடாகவில் தேர்தல் நடக்க உள்ளதால் குறிப்பிட்ட காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    எனவே மத்திய அரசு 7½ கோடி மக்களின் பிரச்சனையாக உள்ள இந்த பிரச்சனையை விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையாக உள்ள இந்த பிரச்சனையை ஆராய்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

    ஓ.பன்னீர்செல்வம் யாரால் அரசியலுக்கு வந்தார்?. யாரால் முதல்வரானார்? என்பது தமிழக மக்களுக்கு தெரியும். அவர் பதவி ஏற்றதும் அவரது சுயரூபம் தெரிய வந்தது. மத்திய அரசுக்கு அவர் காவடி தூக்கி வந்ததால் அவரை பதவியில் இருந்து விலக்கினோம்.

    அதன் பின்னர் தொண்டர்கள் விரும்பியதால் சசிகலாவை முதல்வராக்க விரும்பினோம். நீதிமன்ற தீர்ப்பால் அவர் முதல்வராக முடியாமல் போனது. அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பெயரில் போலி யுத்தம் தொடங்கினார்.

    அவருக்கு ஆதரவாக 11 எம்.எல்.ஏ.க்களும், 12 எம்.பி.க்களும் அவர் பின்னால் சென்றனர். ஆனால் இன்று அவர்கள் நடுரோட்டில் நிற்கிறார்கள். அதேபோன்று ஈ.பி.எஸ்.சை முதல்வராக்கியது சசிகலாதான். ஓ.பி.எஸ் மாதிரியே ஈ.பி.எஸ்.சும் சசிகலாவுக்கு துரோகம் செய்தார். குதிரை குப்புற தள்ளியது மட்டுமல்லாமல் குழிதோண்டி புதைத்தது போல் என்னையும் பதவியில் இருந்து தூக்க முயற்சி செய்தார்கள்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நான் தொடங்கினேன். அந்த கட்சி கொடியில் ஜெயலலிதா உருவம் உள்ளது. அதை பார்த்து ஆளும் கட்சியினர் பயப்படுகிறார்கள். நாங்கள் இந்த கட்சியையும், கொடியையும் பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தஞ்சையில் உண்ணாவிரதம் நடந்தது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் 3-ந்தேதி திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டோம். விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைய ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அம்மா முதல்வராக இருந்தபோதும் இல்லாத போதும் மக்கள் விரும்பாத திட்டங்களை தடுத்து நிறுத்தினார். தனது இறுதி மூச்சு இருந்தவரை இயக்கத்துக்காக வாழ்ந்தார். தனக்கு பிறகும் இந்த இயக்கம் 100 ஆண்டு வாழும் என கூறினார்.

    அம்மா இறந்ததும் சின்னம்மா நினைத்திருந்தால் முதல்வராகி இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் பதவிக்கு அப்பாற்பட்டு இருந்தார். அதேபோன்று ஜெயலலிதாவால் அரசியலுக்கு வந்தவன் நான். நான் நினைத்திருந்தால் முதல்வராகி இருக்க முடியும். ஆனால் நானும் அவ்வாறு செய்யவில்லை. நாங்கள் அவ்வாறு செய்யாமல் ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் முதல்வராக்கினோம். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் சுயரூபத்தை காட்டியதால் அவரை பதவியில் இருந்து விலக்கினோம். ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்த இடத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினோம். ஆனால் 2 பேரும் அதை மறந்து எங்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.

    18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் நிச்சயம் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். அந்த தீர்ப்பு வந்ததும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எங்களுக்கு துரோகம் செய்தவர்களை நாங்கள் விரட்டி அடிப்போம்.

    காவல்துறையை எங்களுக்கு எதிராக ஆளும் கட்சியினர் ஏவுகின்றனர். ஆனால் வரலாறு மாறும். எந்த காவல்துறையை நீங்கள் ஏவி விடுகிறீர்களோ.... அந்த காவல்துறையே உங்களை கைது செய்யும் நிலை ஏற்படும்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran
    ×