என் மலர்
ஈரோடு
சென்னையை சேர்ந்த ஒரு தம்பதி தன்னுடைய 2 மகள்கள், ஒரு மகன் மற்றும் உறவினர்களுடன் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றனர். அங்கு திருமண விழா முடிந்த பிறகு, அவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு புறப்பட்டனர். அதற்காக திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்கள் ஏறினார்கள். மொத்தம் 10 பேர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர்.
அந்த ரெயில் திருப்பூரை கடந்து ஈரோடு நோக்கி நள்ளிரவில் வந்துகொண்டு இருந்தது. அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த ஒருவர், அந்த தம்பதியின் 9 வயது மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கூச்சலிட்டாள். அவளுடைய சத்தத்தை கேட்டு அருகில் தூங்கிக்கொண்டு இருந்த சிறுமியின் பெற்றோரும், சக பயணிகளும் திடுக்கிட்டு எழுந்தனர்.
அப்போது அந்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். இதனால் அவர்கள் சக பயணிகள் உதவியுடன் அந்த நபரை பிடித்துவைத்தனர். இதற்கிடையே அந்த ரெயில் ஈரோட்டிற்கு வந்தது. உடனடியாக அந்த நபரை ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சென்னை பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த பிரேம்ஆனந்த் (வயது 57) என்பதும், அவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பிரேம்ஆனந்தை போலீசார் கைது செய்தனர். #tamilnew
பவானி ஒன்றியத்திற்குட்பட்ட ஜம்பை பேரூராட்சி, நல்லிபாளையம் பகுதியில் கால்நடை மருத்துவமனை கிளை திறப்புவிழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார்.
விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இதுவரை 8 லட்சத்து 85 ஆயிரம் விலையில்லா ஆடுகளும் 78 ஆயிரம் கறவை மாடுகளையும் வழங்கபட்டுள்ளது.
இந்த ஆண்டு 1 லட்சம் கறவை மாடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட மாவட்டங்களில் கறவை மாடுகளும் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் பூச்சி மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை. யாரையும் யாரும் தவறாக பேச கூடாது அது நாகரீகம் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், எஸ்.எம்.தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். #UdumalaiRadhakrishnan
ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு ஈரோட்டில் இருந்து மைசூர் செல்லும் கர்நாடக மாநில அரசு பஸ் நின்று கொண்டிருந்தது.
அப்போது நாமக்கல் மாவட்டம் கலியனூரை சேர்ந்த மூர்த்தி (வயது 32) என்பவர் அங்கு வந்தார்.
திடீரென அவர் பஸ்சின் முகப்பு கண்ணாடியை உடைத்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பஸ் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.
இதை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரை கைது செய்த விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அவர் கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் லேசான மழை பெய்தது.
மழை அதிகமாக பெய்யாமல் சூறாவளி காற்று சுழட்டி...சுழட்டி வீசியதால் ஆயிரக்கணக்கான வாழைகள் வெட்டுண்ட மரங்கள் போல சாய்ந்து முறிந்தன.
சத்தி அடுத்த பெரியகுளம், நாடாகாலனி பகுதியில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான செவ்வாழை, தேன்வாழை, கதளி போன்ற வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது.
அறுவடைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தண்ணீர் இல்லாத சூழ்நிலையிலும் கஷ்டப்பட்டு வளர்த்த வாழைகள் எல்லாம் நாசமாகி விட்டதே என விவசாயிகள் கண்ணீர் மல்க கூறினர்.
சேதமான வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த சூறாவளி காற்றில் சத்திய-மைசூர் ரோட்டில் பழமையான ராட்சத புங்கமரம் முறிந்து நடு ரோட்டில் விழுந்தது. இதனால் தமிழகம்-கர்நாடகா ஆகிய 2 மாநிலங்களுக்கு இடையே சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
உடனடியாக நெஞ்சாலை துறையினர் துரிதமாக செயல்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் அந்த ராட்சத மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.அதன் பிறகு போக்குவரத்து சீரானது.
சத்தி அருகே உள்ள பெரியகுளத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீடு, வெங்காய குடோன் பலத்த காற்றில் இடிந்து தரைமட்டமானது. #tamilnews
ஈரோடு, கஸ்பாபேட்டை பகுதியை சேர்ந்த மாரப்பன் என்பவரது மனைவி அன்புமதி(57). இவர் கோவையில் உள்ள பெண்கள் மத்திய சிறையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பேங்க் லாக்கரில் இருந்து நகைகளை எடுத்துக் கொண்டு தனது தாய், மகள் மற்றும் பேத்தியுடன் ஊருக்கு செல்வதற்காக வந்துள்ளார்.
அப்போது, பெருந்துறை பழைய பஸ் நிலைய ரோட்டில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு சென்று பொருட்களை வாங்கி கொண்டு அங்கிருந்து, பெருந்துறை புதிய பஸ்நிலையம் வந்துள்ளார்.
அங்கு தனது பேக்கில் இருந்த பர்ஸ் காணாமல் போனது தெரிய வந்தது. காணாமல் போன அந்த பர்சில் பேங்க் லாக்கரில் இருந்து எடுத்து வந்த 12 பவுன் தங்கநகைகள், அடையாள அட்டை மற்றும் 9 ஆயிரம் பணம் ஆகியவை இருந்தது.
அன்புமதியிடம் இருந்த பணப்பையை மர்ம ஆசாமி யாரோ நூதன முறையில் பறித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மீண்டும் அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு திரும்பி வந்து அங்குள்ளவர்களிடம் விசாரித்து பார்த்தும், பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காமல் போகவே, பெருந்துறை போலீசில் இது தொடர்பாக புகார் கொடுத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டு நேற்றுடன் பள்ளிக் காலம் நிறைவு பெற்றது. இந்த நாளை நிறைவு செய்து மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் வீடுகளுக்கு திரும்பினர்.
அப்போது ஒருவர் மீது ஒருவர் மையை எரிந்தும் கலர் பொடிகளை (ஜிகினா) முகத்தில் பூசியும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இப்படி மாணவர்கள் ‘குஷி’யுடன் விடுமுறையை கொண்டாடப் போகும் சமயத்தில் மேலும் மாணவர்களை மேலும் குஷிப்படுத்த ஒவ்வொரு பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நினைவு பரிசுகளை கொடுத்தனர்.
இதையெல்லாம் மிஞ்சும் வகையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டின் இறுதி நாளையொட்டி அந்தப் பள்ளி ஆசிரியர்களே அசைவ விருந்து கொடுத்து அசத்தி விட்டார்கள்.
நேற்று மதியம் பள்ளியில் நடந்த இந்த விருந்தில் மாணவ- மாணவிகளுக்கு நாட்டுக்கோழி பிரியாணி, நாட்டுக்கோழி வறுவல், முட்டையுடன் சாப்பாடு பரிமாறப்பட்டது.
ஆசிரியர்-ஆசிரியைகளே மாணவ-மாணவிகளுக்கு இந்த அசைவ விருந்தை பரிமாறினார்கள்.
இந்த அசைவ உணவை பள்ளியில் ஆசிரியர்- ஆசிரியைகளே சமைத்தது குறிப்பிடத்தக்கது. அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் பலர் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு வாய்க்கு ருசியாக அசைவ விருந்தை ஆசிரியர்கள் வழங்கியது அந்த கிராம மக்களை ஆச்சரியப்பட வைத்ததோடு ஆசிரியர்களையும் பாராட்டினர். #tamilnews
ஈரோடு தெப்பக்குள வீதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 72).
இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் அங்கு வந்தனர்.
அவர்கள் 2 பேரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர். திடீரென அவர்கள் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர்.
அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி திருடன்... திருடன்... என்று சத்தமிட்டார். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்த பகுதியில் சரஸ்வதியின் சத்தம் கேட்டு யாரும் உடனே வரவில்லை.
இதனால் யாரிடமும் பிடிபடாமல் அந்த மர்ம நபர்கள் நகையுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் வெயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை உள்ளது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகிறார்கள்.
கடும் வெயில் காரணமாக முட்டை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 300 முட்டைக் கோழி பண்ணைகள் உள்ளன. வாரந்தோறும் திங்கள், வியாழன், சனிக்கிழமை ஆகிய நாள்களில் நாமக்கலில் உள்ள தேசிய முட்டை விலை ஒருங்கிணைப்புக் குழு மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் வரலாறு காணாத அளவாக முட்டை விலை ரூ.5.16 ஆகி விலை உயர்ந்து காணப்பட்டது. பின்னர் படிபடியாக விலை குறைந்து கடந்த வாரம் ரூ.3.50 ஆகவும், திங்கட்கிழமை 10 காசு அதிகரித்து ரூ.3.60 ஆக விலை இருந்தது.
முட்டை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் கட்டுபடியான விலை கிடைக்கவில்லை என முட்டை கோழி பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து முட்டை கோழி பண்ணை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது.-
முட்டைக் கோழிக்கு தேவையான தீவனங்கள் பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்டு போன்ற மாநிலங்களில் இருந்து வருகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியாலும், வெயின் தாக்கத்தாலும் சூடு காரணமாக கோழிகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
எனவே கோழிகளை பாதுகாக்க கோழி பண்ணை சுற்றிலும் காட்டன் தார்ப்பாய்கள் அமைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, ஏர்கூலர் வைத்துள்ளோம்.
இதன் மூலம் வெயிலின் தாக்கம் குறைந்து முட்டை கோழிகளின் இறப்பு தவிர்க்கப்படும். எனினும் இவற்றையும் மீறி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் கோழிகளின் இறப்பு அதிகமாக உள்ளது. வறட்சியால் முட்டை உற்பத்தியும் குறைந்துள்ளது.
உற்பத்தி குறைந்துள்ள நிலையில் ஒரு முட்டைக்கு கொள் முதல் விலையாக ரூ.4 கிடைத்தால் தான் கட்டுபடியாகும். ஆனால் முட்டை வாங்குபவர்களிகன் எண்ணிக்கை குறைந்துள்ளதால் முட்டை விலை உயரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாள் விழா ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே ஓடாநிலையில் உள்ள அவருடைய நினைவு மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் விலை உயர்ந்து உள்ளதாக செய்திகள் வெளியாகின. அது முற்றிலும் தவறு. தரமான பாடப்புத்தகங்கள் மதிப்பு கூட்டப்பட்ட விலையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாகவே பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது.
டெல்லியில் இருந்து வந்த மத்திய குழுவினர் 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களை பார்த்து வியந்தனர். அந்த அளவுக்கு பாடப்புத்தகங்கள் தரமாக தயாரிக்கப்பட்டு உள்ளன. இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு இருக்கிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாடப்புத்தகங்களை காட்டிலும் தமிழக அரசு தயாரித்துள்ள பாடப்புத்தகங்கள் தரம் வாய்ந்தவை.
தனியார் பள்ளிகளில் கட்டண விவரங்கள் குறித்து தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும். அவ்வாறு எழுதாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் திருத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஆசிரியர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஒரு சில ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு:
ஈரோடு நகரில் மட்டும் 150 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இந்த ஏ.டி.எம்.களில் எப்போது வேண்டுமானாலும் சென்று பணத்தை எடுக்கலாம் பணத் தட்டுப்பாடு இல்லாமலும் இருந்தது.
ஆனால் கடந்த 2 நாட்களாக ஈரோடு நகரில் உள்ள பல ஏ.டி.ஏம்.களில் பணம் இல்லை. இதனால் பணம் எடுக்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இன்று காலை கூட ஈரோடு காந்திஜி வீதி, பெருந்துறை ரோடு, கரூர் ரோடு, பவானி ரோடு, சத்தியமங்கலம் ரோடு போன்ற முக்கிய இடங்களில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு சில வங்கி ஏ.டி.எம்.மை தவிர பல ஏ.டி.எம்.களில் பணம் இல்லை. இதனால் மக்கள் குழப்பத்துடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பணம் இருக்கும் ஏ.டி.எம்.களில் 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் மட்டும் தான் வருகிறதே தவிர 2 ஆயிரம் பணம் மிகவும் குறைவாகவே கிடைத்தது.
மேலும் முக்கிய தேசிய உடமையாக்கப்பட்ட ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கிகளில் எல்லாம் பணம் செலுத்த கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இதேபோல் பணத்தை செலுத்தும் ஏ.டி.எம்.களிலும் முன்னே போல் பணம் டெபாசிட் செய்ய யாரும் ஆர்வம் காட்டவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. #CashCrunch
ஈரோடு அருகே உள்ள அரச்சலூர் ஓடாநிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் நடந்த தீரன் சின்னமலை பிறந்தநாள் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார்.
தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கரூரில் நாளை( இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆனால் எங்கள் ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. எனினும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தே தீரும்.
ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொள்வார்.
வீரத்துக்கு பெயர் பெற்ற தீரன் சின்னமலை மண்ணுக்கு சொந்தமான ஒருவருக்கு (அமைச்சர் செங்கோட்டையன்) சின்னம்மா சசிகலாவும், தினகரனும் முக்கிய அமைச்சர் பதவியை கொடுத்தார்கள். ஆனால் அவர் துரோகம் செய்துவிட்டார்.
துரோகம் செய்த அவரை வாக்காளர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.
ஈரோடு:
ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 59). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி பரிமளாதேவி.
இவர்கள் 2 பேரும் நேற்று இரவு வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் தூங்கினர். இன்று காலை பரிமளாதேவி எழுந்து மாடியில் இருந்து கீழ் பகுதிக்கு வந்து பார்த்தார்.
அப்போது வீட்டின் முன் பக்க கதவு பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்தது. இதனால் பரிமளாதேவி அதிர்ச்சி அடைந்தார்.
ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்த பரிமளா தேவி வீட்டின் அறைகளை பார்த்தார். அப்போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது.
அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் பணத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் கதவை பெயர்த்தெடுத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.






