என் மலர்tooltip icon

    ஈரோடு

    பள்ளியின் ஆண்டு முடிவில் 5 மரங்கள் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #TNMinister #Sengottaiyan
    ஈரோடு:

    பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டி பாளையம் பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இயற்கை மாற்றத்தை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் பல்வேறு இடங்களில் மரம் நடும் விழாக்களை நடத்தி வருகிறோம்.

    அதன்படி பள்ளிப் பருவத்திலேயே ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றினை நட்டு பேணிக்காத்து வளர்க்க வேண்டும்.

    பள்ளியின் ஆண்டு முடிவில் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பின் அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5 மரங்கள் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    பள்ளிக் கல்வித்துறையில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மிக விரைவில் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


    தமிழ்நாடு முழுவதும் 9 கல்லூரிகளில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சுமார் 3145 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 20 ஆயிரம் பள்ளிகளுக்கு இணையதள வசதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    பவானி அருகே தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    பவானி:

    பவானி அருகே உள்ள ஆர்.என்.புதூர் அடுத்த சூர்யா நகரை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 51). தொழில் அதிபரான இவர் தனது குடும்பத்தினருடன் திருமண விழாவில் பங்கேற்க கேரளா சென்றார்.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டமர்ம ஆசாமிகள் வீட்டு கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் புகுந்த அவர்கள் பீரோவையும் உடைத்தனர். பிறகு அங்கிருந்த 45 பவுன் நகைகளை சுருட்டினர். மேலும் பீரோவில் இருந்த 47 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்தனர். பிறகு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    சார்லஸ் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு  திறக்கப்பட்டு கிடந்ததை பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கேரளாவில் உள்ள சார்லசுக்கு தகவல் கொடுக்க உடனே அவர் குடும்பத்தினருடன் ஊருக்கு விரைந்தார்.

    வீட்டில் வந்து பார்த்த போது கொள்ளையர்கள் புகுந்து நகை-பணம் கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து சார்லஸ் சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக கொள்ளை சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டது.

    வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நாயக்கு மயக்க மருந்து தெளித்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கைவரிசை காட்டியிருப்பது வடமாநில கொள்ளையர்களாக இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கி கொள்ளையர்களை தேடிவருகிறார்கள். #Tamilnews
    அதிகாரிகள் தயவு இல்லாமல் குட்கா தொழிற்சாலையை நடத்தி இருக்க முடியாது என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Eswaran #gutkha

    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.-

    கோவை சூலூரில் குட்கா தயாரிப்பு தொழிற்சாலை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் இப்படிப்பட்ட தொழிற்சாலைகளை கண்டுபிடித்து வெளிக்கொணர தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குட்கா ஊழல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட உடன் இந்த குட்கா ஆலை கண்டுபிடிக்கப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் ஒரு தொழிற்சாலை தொடர்ந்து நடத்த முடியாது.

    அவ்வளவு பெரிய தொழிற்சாலை தொடர்ந்து நடந்து கொண்டு இருந்திருக்கிறது. அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். யார் நம்மை கேட்க போகிறார்கள்? என்ற தைரியத்தில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதித்திருக்கலாம்.

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உடன் பயந்து கொண்டு தாங்களே கண்டுபிடிப்பது போல கண்டுபிடித்திருக்கிறார்களோ...? என்ற சந்தேகம் வலுக்கிறது. தமிழகம் முழுவதும் இப்படிப்பட்ட தொழிற்சாலைகள் அரசாங்கத்தில் உள்ள ஒருசிலரின் ஆதரவோடு செயல்பட்டுக் கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

    இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டிய கடமை தமிழக அரசிற்கு இருக்கிறது. தமிழகம் முழுவதும் பரிசோதனையை தீவிரப்படுத்தி குட்கா ஆலைகளை கண்டுபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். #Eswaran #gutkha

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பவானிக்கு 13-ந் தேதி வருகை தருகிறார். இதை முன்னிட்டு கால்கோள் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    ஈரோடு:

    பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி நடக்கிறது. விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பவானி வருகிறார். இதை முன்னிட்டு கால்கோள் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு கால்கோள் நாட்டி மேடை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர், அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 13-ந் தேதி பவானி வருகிறார் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிற ஆண்டு விழாவில் அவர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். பின்னர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

    விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, விலையில்லா தையல் எந்திரங்கள், விலையில்லா சலவைப்பெட்டி, விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்கருவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் எனது (அமைச்சர் கே.சி.கருப்பணன்) முன்னிலையில் முதல்-அமைச்சர் வழங்க உள்ளார். தொடர்ந்து முதல்-அமைச்சர் காலிங்கராயன் மணிமண்டபத்தினை திறந்து வைக்க உள்ளார்.

    மேலும் விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்ட துறை அமைச்சர் வெ.சரோஜா, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    எம்.பி.க்கள் எஸ்.செல்வகுமாரசின்னையன் (ஈரோடு), சத்யபாமாவாசு(திருப்பூர்), சி.கோபாலகிருஷ்ணன் (நீலகிரி), எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம்(ஈரோடு மேற்கு), தோப்பு என்.டி.வெங்கடாசலம்(பெருந்துறை), கே.எஸ்.தென்னரசு(ஈரோடு கிழக்கு), வி.பி.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா(அந்தியூர்), எஸ்.ஈஸ்வரன்(பவானிசாகர்), உ.தனியரசு (காங்கேயம்) ஆகியோர் பேசுகிறார்கள்.

    இவ்வாறு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

    முன்னதாக நடந்த கால்கோள் நாட்டும் நிகழ்ச்சியில் பவானி நகர அ.தி.மு.க. செயலாளர் என்.கிருஷ்ணராஜ், ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி துணை செயலாளர் ஏ.சி.முத்துசாமி, மாவட்ட அச்சுக்கூட தலைவர் சித்தையன், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    பெருந்துறை அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள கள்ளியம் புதூரை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 52). இவரது மகன் பிரகாஷ். பிரகாஷ் ஈரோட்டில் ‘‘கார் டெக்கரே‌ஷன்’’ நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று ஒரு திருமணத்துக்காக பிரகாஷ் தனது தாயாரை அழைத்து கொண்டு ஸ்கூட்டரில் சின்னத்தாள் கோவில் திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு வீட்டுக்கு செல்ல மீண்டும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.

    கள்ளியம்புதூர் பைபாஸ் ரோட்டில் வந்த போது பின்னால் வந்த ஒரு கார் எதிர் பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது.

    மோதிய வேகத்தில் ஸ்கூட்டரை 100 அடி தூரம் இழுத்து சென்று ரோட்டோர பள்ளத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் பாக்கியலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மகன் பிரகாஷ் படுகாயத்துடன் துடித்தார். அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. மனைவி பெயர் அருள் செல்வி.

    விபத்தில் பலியான பாக்கியலட்சுமி உடல் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ் பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது. அந்த காரை போலீசார் தேடி வருகிறார்கள். விபத்து நடந்த பகுதியிலும் மேலும் பைபாஸ் ரோட்டில் உள்ள காஞ்சிக்கோவில் ரோடு, பெத்தாம்பாளையம் பைபாஸ் ரோடு, துடுப்பதி பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 3 மேம்பாலங்கள் அமைத்தால் விபத்துகள் அடியோடு தடுத்து நிறுத்தப்படும்.

    இதனால் இந்த இடங்களில் உடனடியாக மேம்பாலங்கள் அமைத்து உயிர் பலியை தடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளார். திருப்பூர் சத்யபாமா எம்.பி.யும் வலியுறுத்தி உள்ளார்.

    மேலும் அந்த பகுதி பொதுமக்களும் கடந்த 5 ஆண்டுகளாக மேம்பாலம் கட்ட கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை. இந்த பைபாஸ் ரோடுகளில் மட்டும் இதுவரை 250 பேர் விபத்துகளில் பலியாகி உள்ளனர். மேலும் 1800 பேர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர்.

    ஆகவே இனியும் காலம் தாழ்த்தாமல் பெருந்துறை பகுதியில் உள்ள பைபாஸ் ரோடுகளில் உடனடியாக மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர். 

    வேலைக்கான ஊதியத்தை தனியார் பயிற்சி நிறுவனம் தராததால் மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள ஒரு அடுக்கு மாடியில் 2-வது மாடி கட்டிடத்தில் தனியார் நர்சிங் பயிற்சி நிறுவனம் உள்ளது. இங்கு ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 30 மாணவிகள் படித்து வருகிறார்கள். முதலாம் ஆண்டில் 14 மாணவிகளும், 2-ம் ஆண்டில் 11 மாணவிகளும், 3-ம் ஆண்டில் 7 மாணவிகளும் படித்து வருகிறார்கள். பயிற்சி நிறுவனத்தின் மேலே உள்ள அறையில் இந்த மாணவிகள் தங்கி உள்ளனர்.

    நிறுவனத்தில் 3-ம் ஆண்டு படிக்கும் 7 மாணவிகள் 6 மாதம் பயிற்சி எடுத்து கொண்டு 6 மாதம் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் வேலையும் பார்த்து வருகிறார்கள். இந்த வேலைக்கான ஊதியத்தை ஆஸ்பத்திரி நிர்வாகம் அந்த தனியார் பயிற்சி நிறுவனத்திடம் கொடுத்து விடுவார்கள்.

    ஆனால் இந்த ஊதியத்தை எங்களுக்கு தர மறுக்கிறார்கள் என்று மாணவிகள் புகார் செய்துள்ளனர்.

    மேலும் இறுதி தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார்களாம்.

    இதை கண்டித்து இன்று மாணவிகள் தங்கள் பெற்றோருடன் நர்சிங் நிறுவனத்துக்கு வந்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நர்சிங் மாணவிகளின் இந்த திடீர் வாக்குவாதம்- போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து 3-ம் ஆண்டு மாணவிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் வெளியே ஆஸ்பத்திரியில் பணி புரியும் ஊதியத்தை கேட்டால் தர மறுக்கிறார்கள். நிறைய விடுப்பு எடுத்துள்ளீர்கள். அதனால் சம்பளத்தை பிடித்தம் செய்து விட்டோம் என்கிறார்கள்.

    மேலும் பயிற்சி நிறுவன (பெண்) முதல்வர் அவருக்கு தேவையான வேலைகளையும் செய்ய சொல்கிறார். கை-கால்களை அமுக்க சொல்கிறார். தலை சீவ சொல்கிறார். அவர் சொல்லும் வேலை செய்பவர்களுக்கு சலுகை கொடுக்கிறார். மறுப்பவர்களை பழி வாங்குகிறார். மேலும் பயிற்சிக்கான மார்க்கை குறைத்து விடுவதாக கூறுகிறார்.

    இவ்வாறு மாணவிகள் கூறினர். #tamilnews

    பெருந்துறை சிப்காட் தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்த தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்தார். இறப்புக்கு காரணமானவர் மீது நடவடிகக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சிப்காட் பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஈரோடு ஆர்என் புதூர், மாயபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள் (50) என்பவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் இந்த நிறுவனத்தில் ஜெனரேட்டர் ரூமின் முன்பகுதியில் தலையில் காயமடைந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரது உடலை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்ககாக போலீசார் சேர்த்தனர்.

    அங்கு நடந்த பிரேத பரிசோதனையில் அவர் மின்சாரம் தாக்கி இறந்து போனது தெரிய வந்தது. இதனால் பெருமாளின் இறப்புக்கு காரணமான தொழிற்சாலையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், பெருமாளின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவும் உறவினர்கள் கூறினர்.

    இது தொடர்பாக சென்னிமலை போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனை அருகில் உள்ள ரவுண்டானா பகுதியில் திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மலையம் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, தொழிற்சாலை உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என் உறுதியளித்ததின் பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 

    யானை தந்தம்-நாட்டு துப்பாக்கியை விற்க முயன்ற வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் 3 பேரை விடுதலை செய்து சத்தியமங்கலம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கெம்பநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் கடந்த 27-1-2000 அன்று ஒரு மூட்டையை சுமந்தபடி வந்த 6 பேரை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்து பிடித்தார்கள். அந்த மூட்டையில் 12 யானை தந்தங்களும், ஒரு நாட்டு துப்பாக்கியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலம் அருகே உள்ள கொளத்தூரை சேர்ந்த சண்முகம், ஜவகர், ராஜேந்திரன், கோவிந்தராஜன், ஆறுமுகம், சந்திரகவுடா ஆகியோர் என்பது தெரியவந்தது.

    மேலும் வீரப்பன் கூட்டாளிகளான அவர்கள், வீரப்பன் உத்தரவுப்படி யானை தந்தங்களையும், நாட்டு துப்பாக்கியையும் கேரளாவுக்கு விற்க கொண்டு சென்றதும் தெரிந்தது.

    இதையடுத்து இவர்கள் 6 பேரையும் சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் அதிரடிப்படையினர் ஒப்படைத்தார்கள். இதுகுறித்து வனத்துறையினர் வீரப்பன் உள்பட 7 பேர் மீது சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இதில் வீரப்பன் சிக்கவில்லை. கோவிந்தராஜனும், ஆறுமுகமும் ஜாமீனில் வெளியே வந்தார்கள்.

    ஆனால் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே கோவிந்தராஜன், வீரப்பன், சந்திரகவுடா ஆகியோர் இறந்துவிட்டனர். இதனால் அவர்களுக்கு வழக்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆறுமுகம் தலைமறைவானார். அவரை வனத்துறையினர் தேடி வருகிறார்கள். மற்ற 3 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கு சம்பந்தமாக வனத்துறையினர் சரியான சாட்சிகளை சமர்ப்பிக்கவில்லை. எனவே சண்முகம், ஜவகர், ராஜேந்திரன் ஆகிய 3 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி குமரசிவம் உத்தரவிட்டார். #tamilnews #
    சத்தியமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த கொமரபாளையம் பாத்திமா நகரை சேர்ந்தவர் அப்துல்காதர் (வயது 25). சத்தியமங்கலம் அரசு கலை கல்லூரியில் படித்து வந்தார். அப்துல்காதரின் உறவுகாரப்பெண் சாஜிதா (35).

    இருவரும் சத்தியமங்கலம் அருகே டி.ஜி.புதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பிறகு திரும்பி வந்தபோது அரசு ஆஸ்பத்திரி அருகே எதிரே வந்த சரக்கு வேனும் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதியது.

    இதில் அப்துல்காதரும் சாஜிதாவும் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

    இந்த விபத்து நடந்து மோதிய சரக்கு வேன் நிற்காமல் சென்று விட்டது. விபத்து நடந்ததும் 108 ஆம்புலன்சுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். ஆனால் உடனே ஆம்புலன்சு வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து பேசி சமரசம் செய்த பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.

    2 பேரை பலி வாங்கிய வேன் அந்த இடத்தில் நிற்காமல் சென்றதை கண்டு பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். ஒரு பிரிவினர் சாலை மறியல் நடத்த மற்றொரு பிரிவினர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களில் அந்த வேனை விரட்டி சென்றனர்.

    சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் அந்த வேனை மடக்கினர். வேன் டிரைவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் இருவரின் உடல்கள் இன்று பரிசோதனை செய்யப்பட்டு பிறகு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது.

    அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி உருக்கமாக இருந்தது. #tamilnews
    கோபியில் சாலையோர மைல்கல்லில் மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோபி:

    கோபி சிவசண்முகம் வீதியை சேர்ந்தவர் காளிச்சாமி(வயது 32). கூலிதொழிலாளி.

    இவரது மனைவி தனலட்சுமியும், மகன் பிரதாப்பும் கோபி அருகே உள்ள கெட்டிச்செவியூருக்கு சென்றிருந்தனர். அவர்களை கோபிக்கு அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் காளிச்சாமி நேற்று இரவு சென்றார்.

    ஓலப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது நிலை தடுமாறி ஓடிய மோட்டார் சைக்கிள் சாலையோர மைல் கல்லில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட காளிச்சாமி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே காளிச்சாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோட்டில் நடத்தை சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு ஆசிரியர்காலனி அவ்வையார் வீதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் பிரபல கொசுவர்த்தி நிறுவனத்தில் பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தீபரஞ்சினி (வயது 25). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3½ வயதில் கனிஷ்கா என்ற மகள் உள்ளாள்.

    விவேகானந்தனும், தீபரஞ்சினியும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்தனர். அவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பையும் மீறி விவேகானந்தனும், தீபரஞ்சினியும் திருமணம் செய்து கொண்டனர். ஆசிரியர் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் வசித்தனர்.

    கடந்த சில மாதங்களாக தீபரஞ்சினியின் நடத்தையில் விவேகானந்தனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் தீபரஞ்சினி வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போதும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தீபரஞ்சினியை விவேகானந்தன் தாக்கினார். இதனால் மாடியில் இருந்து தீபரஞ்சினி இறங்கி கீழே வந்தார்.

    வீட்டிற்கு வெளியே வீதிக்கு வந்த தீபரஞ்சினியை விவேகானந்தன் தலை, மார்பு, முதுகு உள்ளிட்ட 11 இடங்களில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தீபரஞ்சினி சரிந்து விழுந்தார்.

    அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர். அவர்கள் தீபரஞ்சினியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தீபரஞ்சினி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீபரஞ்சினியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய விவேகானந்தனை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நாயை மீட்கச்சென்ற அக்காள்-தம்பி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மொடக்குறிச்சி:

    ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடே‌ஷன் (வயது 55). இவருடைய மனைவி செல்வி (50). 2 பேரும் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கு குமரேசன் (28),சிலம்பரசன் (22) என 2 மகன்களும், சத்யா (25), ஜெகதீஸ்வரி(24), காஞ்சனா தேவி (21) என 3 மகள்களும் உள்ளனர்.

    இவர்கள் 5 பேரும் நேற்று மதியம் நண்பர்கள் 6 பேருடன் மொடக்குறிச்சி அருகே காங்கேயம்பாளையத்தில் காவிரி ஆற்றின் நடுவில் உள்ள நட்டாற்றீசுவரர் கோவிலுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர்.

    தங்கள் வீட்டில் வளர்த்த நாயையும் அழைத்து சென்றார்கள். கோவிலில் 11 பேரும் சாமி கும்பிட்டனர். நேற்று மாலை கோவிலுக்கு அருகே காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது ஜெகதீஸ்வரி வளர்த்து வரும் நாய் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது. இதனை கவனித்த சிலம்பரசனும், ஜெகதீஸ்வரியும் நாயை கரைக்கு தள்ளி விட்டார்கள்.

    ஆனால் அவர்கள் 2 பேரும் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கிக்கொண்டனர். இதனால் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினார்கள். இதனை கவனித்த நண்பர்கள் 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    சிலம்பரசனும், ஜெகதீஸ்வரியும் பிணமாகவே மீட்கப்பட்டனர். மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் 2 பேரின் உடலையும் மீட்டனர்.

    பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 பேரின் உடல்களையும் பார்த்து அவர்களுடைய சகோதரர், சகோதரிகள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    அக்காளும், தம்பியும் பலியான பகுதியில் இதுவரை 30 பேர் ஆற்றில் மூழ்கி பலியாகி இருக்கிறார்கள். இங்கு சூழல் இருப்பதால் அதில் சிக்கியவர்கள் உயிர் பிழைக்க முடியாது.

    எனவேதான் கோவிலை ஒட்டி தடுப்பு அமைக்கப்பட்டு அந்த தடுப்புக்குள் நின்று மக்கள் குளிப்பார்கள். ஆனால் தற்போது அந்த தடுப்புக்கும் கீழேதான் தண்ணீர் செல்கிறது.

    அந்த தண்ணீரில் இறங்கி குளிக்க சென்று ஆபத்தான இடத்துக்கு செல்வதால் இதுபோன்ற பலி ஏற்பட வாய்ப்பு உருவாகி விடுகிறது. கடந்த வருடம் கூட ஒருவர் இந்த இடத்தில் ஆற்றில் மூழ்கி பலியானார்.

    எனவே அந்த பகுதியில் சுழல் இருப்பதை மக்கள் அறிந்து அங்கு அவர்கள் குளிக்க செல்லாமல் இருக்க எச்சரிக்கை பலகை வைப்பது அவசியம் என்று கோரிக்கை எழுந்துள்ளது. #tamilnews
    ×