என் மலர்
ஈரோடு
ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.
பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கும், கீழ்பவானி வாய்க்காலுக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் வறட்சி காரணமாகவும், எதிர்பார்த்த மழை பெய்யாததாலும் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் வரத்து குறைந்து வந்தது.
அவ்வபோது பெய்யும் மழையாலும், பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் பெய்யும் மழையாலும் அணைக்கு நீர்வரத்து உள்ளது.
தற்போது கீழ்பவானி பாசனத்துக்காக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த 29-ந்தேதி இருந்து ஆயிரம் கனஅடி வீதம் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஆனால் நேற்று அணைக்கு 300 கனஅடி வீதம் தான் தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று 54.52 அடியாக இருந்தது.
இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 54.05 அடியாக உள்ளது. அணைக்கு 216 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இன்று முதல் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்தை காட்டிலும், நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு தாளவாடி, பவானி, கவுந்தப்பாடி உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. தாளவாடி அருகே உள்ள தலமலை, கோடிபுரம், சூசைபுரம், தொட்டாபுரம், தொட்டகாஜனூர், ஒசூர், சிக்கள்ளி மற்றும் வனப்பகுதியில் சூறை காற்றுடன் இரவு 9.45 மணி முதல் 10.15 மணி வரை மழை பெய்தது.
பயங்கர இடியுடன் பெய்த இந்த மழையால் தொட்டகாஜனூர், சூசை புரம் பகுதியில் 15-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் செல்போன் சார்ஜர்கள் பழுதாகின.
ஈரோடு:
ஈரோடு, கச்சேரி வீதியில் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான சைக்கிள் குடோன் உள்ளது. இங்கு சைக்கிள் தயாரிக்கும் உதிரி பாகங்கள், பழைய அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த குடோனின் பின் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் குடோனில் பழைய அட்டை வைத்திருந்த இடத்தில் இருந்து கரும்புகை வெளி வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து டவுன் போலீசாருக்கும், ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் மாடி பகுதியில் அடுக்கி வைத்திருந்த அட்டை பெட்டிகள் எரிந்து நாசமாகின.
குடோனின் பின் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பின்பக்க கதவும் தீயில் கருகியது. அதற்குள் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் தீ விபத்தில் இருந்து வங்கி தப்பியது. பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது.
விபத்து நடந்ததும் வங்கி அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. எனினும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் சரண்யா (வயது17). இவர் பவானி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இரவு இவர் பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.
இன்று அதிகாலை பெற்றோர் எழுந்து பார்த்தனர். அப்போது சரண்யாவை காணவில்லை. பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.
இதையடுத்து சரண்யாவின் தந்தை சுப்பிரமணியன் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகளை பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் சதீஷ்குமார் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டதாக கூறி உள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கோவில் குண்டம் விழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டு தலுடன் தொடங்கியது. கடந்த 19-ந் தேதி கம்பம் நடப்பட்டது. 12 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பெரிய அளவிலான கம்பத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். குண்டத்துக்கு தேவையான விறகுகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். நேற்று இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா இன்று (புதன்கிழமை) காலை நடந்தது. முதலில் கோவில் தலைமை பூசாரி கோகுல் குண்டம் இறங்கி தீ மிதித்தார். அவரை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு தீக் குண்டம் இறங்கினர்.
இதில் பெண்கள் மற்றும் ஆண்கள் என 5 ஆயிரத்துக் கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மா... தாயே... மாரியம்மா... என பக்தி கோஷம் முழங்க தீ மிதித்தனர். சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நாளை (வியாழக் கிழமை) கிடாய் வெட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு கம்பம் பிடுங்கப்பட்டு ஆற்றில் விடப்படுகிறது. 5-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 10-ந் தேதி மறு பூஜையும் நடக்கிறது.
ஈரோடு, கருங்கல் பாளையம் வண்டியூரான் கோவில் வீதி முதல் காவிரிகரை பாலம் வரை சாலையில் நடுபகுதியில் 14 மின்கம்பங்களில் புதிதாக 28 உயர்மின் கோபுர விளக்குகள் ரூ.9 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன.
இதனை பொது மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் தலைமை தாங்கி புதிய உயர்மின் கோபுர விளக்குகளை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், கோவிந்த்ராஜ், முருகுசேகர், அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் மாதையன், அண்ணா போக்குவரத்து இணை செயலாளர் ஜீவா ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மே தினமான நேற்று பல்வேறு இடங்களில் தடையை மீறி மது விற்ற 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடம்பூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கோட்டமாளத்தில் மது விற்ற வெங்கட்டய்யன்(வயது59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போன்று கடத்தூர் பாப்பத்தி காட்டு தோட்டத்தில் மது விற்ற முத்துசாமி(49), கோபி, குளத்துக்கடையில் மது விற்ற மணிகண்டன் (30), சத்தியமங்கலம், காளிகுளம் பகுதியில் மது விற்ற தங்கவேல்(32),
ஈரோடு, சூரம்பட்டியில் மது விற்ற கமலநாதன்(31), சூரம்பட்டி வலசில் மது விற்ற வேல்முருகன்(34), கவுந்தப்பாடி, குஞ்சரமடையில் மது விற்ற பிரகாஷ்(31), பவானிசாகர், பார்க்ரோட்டில் மதுவிற்ற ராஜ்குமார்(34), சிறுவலூர், அம்மாசை கவுண்டர் குட்டையப்பாளையத்தில் மது விற்ற சுப்பிரமணி (51) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதே போன்று ஆப்பக்கூடல், சத்திநகரில் மது விற்ற பாலகிருஷ்ணன்(29), ஆப்பக்கூடல் ஏரி பகுதியில் மது விற்ற கவுதமன்(28), திங்களூர், காசுக்காரன் பாளையத்தை சேர்ந்த பழனிசாமி(42), பவானி காமராஜ்நகரை சேர்ந்த சம்பத்குமார்(47), பவானி, சேர்வராயன் பாளையத்தை சேர்ந்த ஜானகிராமன்(36),
வரப்பாளையம், கொளத்துகாடை சேர்ந்த ராசன்(43), சித்தோடு நாகேந்திரபாபு(42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் மாவட்டம் முழுவதும் 16 பேர் கைதானார்கள். இவர்களிடம் இருந்து 184 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- ஈரோடு:
தொழிலாளர் தினமான நேற்று அனைத்து நிறுவனங்களிலும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அவசரம் காரணமாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது 7 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்குவதற்கான முன்அறிவிப்பு கொடுத்து இருக்க வேண்டும்.
சென்னை தொழிலாளர் ஆணையாளர் நந்தகோபால் உத்தரவின்பேரில் ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம், பொறுப்பு) ஆர்.மாதேஸ்வரன் தலைமையில் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது தொழிலாளர்களுக்கு முறையாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதா? அல்லது பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் கொடுக்கப்படுகிறதா? என்றும் ஆய்வு நடத்தப்பட்டது.
ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 77 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டதில் 54 நிறுவனங்களிலும், 69 உணவு நிறுவனங்கள் ஆய்வு செய்ததில் 62 நிறுவனங்களிலும், 11 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 4 நிறுவனங்களிலும் விடுமுறை அளிக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த 120 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம், உணவு நிறுவனச்சட்டம், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காங்கயம்:
காங்கயம் அருகே உள்ள பழைய கோட்டை மன்றாடியார் நகரை சேர்ந்தவர் தங்கவேலு(வயது42). சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து டிரைவராக உள்ளார்.
இவரது மகளுக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் பூபதிக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு திடீரென குடும்ப தகராறு எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது தங்கவேலுவை முருகேசன் கத்தியால் குத்தினார்.
இதில் தங்கவேலு பரிதாபமாக இறந்தார். இந்த கொலை குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.
முருகேசன் கொலை செய்து விட்டு தப்பி ஓட உடந்தையாக இருந்ததாக பூபதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பூபதி கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அம்மா மக்கள் முள்னேற்ற கழகம் சார்பில் தொழிற்சங்க தொடக்க விழா மற்றும் மே தின பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மேற்கு மண்டல அமைப்பாளருமான செந்தில்பாலாஜி கொடியேற்றி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-
தற்போது அம்மா அணி என ஆரம்பித்துள்ள திவாகரனுடன் நிர்வாகிகள் யாரும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்த திவாகரன் தற்போது வெளிப்படையாக செயல்பட்டு வருகிறார்.

திவாகரன் எத்தனை முறை பொதுச் செயலாளர் சசிகலாவை சிறையில் சந்தித்து உள்ளார்?. ஆலோசனைகள் கேட்டு இருப்பார்? என்பதை விளக்க வேண்டும். பொய்யான கருத்துகளை மக்கள் மத்தியில் கூறி குழப்பி வருகிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்காக திவாகரன் பணியாற்றவில்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்துள்ள போக்குவரத்து தொழிலாளர்களை பழிவாங்கும் விதமாக பணியிட மாற்றம் செய்வது உள்ளிட்ட செயல்களில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #EdappadiPalanisamy #OPanneerselvam #senthilBalaji #Divakaran
சத்தியமங்கலம்:
விவசாயத்தில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 100 நாட்கள் விழிப்புணர்வு பயணம் மேற கொண்டு வருகிறார்கள்.
இந்த விழிப்புணர்வு பயணம் இன்று சத்தியமங்கலத்தில் நடந்தது. அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் இதில் கலந்து கொண்டு கடை வீதியில் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு நோட்டீசுகளை கொடுத்தனர்.
அப்போது அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
கள் உப்பு வேண்டாம் என்று அயோடின் உப்பில் அலுமினிய தூள்களை சேர்த்து விற்கிறார்கள். இதனால் 10 வயதிலேயே பெண் குழந்தைகள் பருவம் அடைந்து வருகிறார்கள்.
பன்றி கொழுப்பை ஜெர்சி மாட்டு பாலுடன் சேர்த்து பிராய்லர் கோழிகளுக்கு செலுத்துவதால் அதை சாப்பிடும் ஆண்களுக்கு ஆன்மை குறைபாடு ஏற்படுகிறது. 100-ல் 10 பேர் இப்படி பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் கூடலூர் பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. அந்த தண்ணீர் முழுவதும் கர்நாடக அணைகளுக்கு செல்கிறது. 50 முதல் 100 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகாவுக்கு செல்கிறது. ஆனால் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள்.
எனவே ஊட்டியில் இருந்து செல்லும் தண்ணீரை குழாய் மற்றும் தடுப்பு அமைத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக பவானி சாகர் அணைக்கு கொண்டு வரவேண்டும். அப்படி இல்லையென்றால் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் செய்வோம். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த உண்ணாவிரதம் இருப்போம்.
வரும் 3-ந் தேதி காவிரி மேலாண்மை வாரியம் குறித்து தீர்ப்பு வர இருக்கிறது. அதில் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் டெல்லியில் விவசாயிகளை திரட்டி சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #Ayyakkannu #Cauveryissue
ஈரோடு:
பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் மே தினத்தையொட்டி மே தின ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி ஈரோட்டிற்கு வந்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-
மே தினம் தொழிலாளர் தினமாக உலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. உழைக்கும் உன்னததை போற்றும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
உழைப்பாளர்கள், உற்பத்தி செய்வதால் நாட்டில் வளர்ச்சி ஏற்படுகிறது. 1890-ல் மே 1 அன்று உழைப்பாளர்களுக்கான உரிமை பெறப்பட்டது. தொழிலாளர்கள் சட்டங்கள், தொழிலாளர் நல அமைப்புகள் ஏராளமாக இருந்தாலும் தொழிலாளர்களுக்காக உரிமை பெற முடியாத சூழ்நிலை தான் உள்ளது.
தொழிற்சாலை தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் இவர்களும் தொழிலாளர்கள் தான். மத்திய-மாநில அரசுகள் இவர்களின் நிலையை உயர செய்ய வேண்டும்.
மத்திய-மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொழிலாளர்கள் நிரந்தர பணி இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் நிலை தான் உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் வேலை இருக்கக் கூடாது. நீதிமன்றம் வலியுறுத்தியும், இந்த நிலை தொடர்கிறது. எனவே ஒப்பந்த தொழில் முறை ஒழிக்கப்பட வேண்டும்.
தற்போது ஒரு கோடி இளைஞர்கள் வேலை இன்றி உள்ளனர். 86 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து சி.என்.சி.கல்லூரியில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. மாநில துணை பொதுச் செயலாளர் பொ.வை.ஆறுமுகம், மாநில துணை தலைவர்கள் வடிவேல், எஸ்.எல்.பரமசிவம், மாநில துணை பொதுச்செயலாளர் வேலுசாமி, மாவட்ட செயலாளர் கிருபாகரன் மற்றும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஜி.கே.மணி ஊர்வலத்தில் நடந்து சென்றார். ஊர்வலம் கிருஷ்ணா தியேட்டரில் முடிந்தது. #GKMani #MayDay #LabourDay






