search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hurricane wind"

    • மழை கிட்டத்தட்ட 45 நிமிடம் வரை நீடித்தது. சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
    • கொங்கலம்மன் வீதியில் மழை நீருடன் கழிவு நீர் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் 100 டிகிரி வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை 5.30 மணி அளவில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் பயங்கர சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை கிட்டத்தட்ட 45 நிமிடம் வரை நீடித்தது. சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    இதேபோன்று மரங்களும் வேரோடு சாய்ந்தன. விளம்பர தட்டிகள், பேனர்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்தடையும் ஏற்பட்டது.

    ஈரோடு புதுமை காலனியில் உள்ள பழமையான மரம் வேரோடு சாய்ந்து அங்கிருந்த காளியம்மன் கோவில் கோபுரத்தில் விழுந்தது. இதில் கோபுரம் சேதம் அடைந்தது. மரக்கிளைகள் அங்கிருந்த டீ கடை மீது விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேப்போல் ஈரோடு ஐஸ்வர்யா ஓட்டல் அருகே இருந்த மரம், பெரியண்ணா வீதியில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    மூலப்பட்டறையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பெரியார் நகர் மற்றும் ஏ.பி.சி, மருத்துவமனை பகுதியில் தலா ஒரு மரம் விழுந்தது. ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சிறிய மரம் ஒன்று விழுந்தது. பழைய மோப்பநாய் பிரிவு பகுதியில் இருந்த மரக்கிளை முறிந்து விழுந்தது.

    இதேபோல் அந்த பகுதியில் உள்ள பல்வேறு மரக்கிளைகள் முடிந்து விழுந்தன. ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ஈரோடு தாலுகா அலுவலகத்திலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மணிக்கூண்டு எல்லை மாரியம்மன் கோவில் அருகே இருந்த பழமையான மரம் கீழே விழுந்தது. ஈரோடு அண்ணாமலை லேஅவுட் பகுதியில் வேருடன் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேபோல் ஈரோடு கால்நடை மருத்துவமனை ரோட்டில் சுவர் இடிந்து விழுந்தது. ஈரோடு கொங்கலம்மன் வீதியில் மழை நீருடன் கழிவு நீர் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு இருந்தன. நேற்று மழை பெய்த கனமழையால் குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஒரே நாளில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. 100-க்கும் மேற்பட்ட மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஈரோடு மாநகராட்சி பணியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ரோட்டில் விழுந்து கிடக்கும் மரம் மரக்கிளைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

    இதேபோல் நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தபோது ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பஸ்சில் ஏறி தீயணைப்பு நிலைய பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.

    அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் அங்கு இருந்த சாக்கடை கால்வாய் முழுவதும் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத அவர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தார்.

    இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அந்த நபர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 45 நிமிடம் பெய்த மழையால் ஈரோடு மாநகரம் ஸ்தம்பித்தது.

    இதேப்போல் கவுந்தப் பாடி, மொடக்குறிச்சி, கோபி போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-40, கவுந்தப்பாடி-26.80, மொடக்குறிச்சி-9, கோபி-4.20, சென்னிமலை, அம்மாபேட்டை-3 பெருந்துறை-2.

    • மணப்பாறை அருகே சூறாவளி காற்றில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன
    • தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. மரவனூர், பாலப்பட்டி பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக சூறாவளிக் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மேற்கூரைகள் காற்றில் பறந்தது. சில இடங்களில் மரங்களும் சாய்ந்தது.இந்நிலையில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பட்டி பிரிவு சாலையோரத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்த ஒரு மின்கம்பம் பாதி சாய்ந்தது.இதனால் மின்கம்பிகள் கீழே தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. பின்னர் தகவல் அறிந்த மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை நிறுத்தி விட்டு மின்கம்பிகளை அப்புறப்படுத்தினர். பின்னர் வாகனங்கள் வழக்கமாக இயக்கப்பட்டது. மேலும் அணைக்கருப்ப கோவில்பட்டி அருகே பனைமரத்தின் மீது மின்னல் தாக்கியதில் திடீரென மரம் தீ பற்றி எரிய ஆரம்பித்தது.சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எரிந்த தீயால் மரம் கருகியது. இதே போல் துவரங்குறிச்சியை அடுத்த தெத்தூர் பகுதியில் வீசிய பலத்த காற்றால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டுள்ளது.

    • சூறாவளி காற்றால் 10க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.
    • வீட்டுமனை சுற்றுச்சுவா் சுமாா் 200 மீட்டா் தூரத்திற்கு முழுமையாக இடிந்து விழுந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். வீடுகளுக்கு அருகே தனியாா் வீட்டுமனை அமைத்து அதைச் சுற்றி சுற்றுச்சுவா் கட்டியுள்ளனா். இந்நிலையில் இப்பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதில் வீட்டுமனை சுற்றுச்சுவா் சுமாா் 200 மீட்டா் தூரத்திற்கு முழுமையாக இடிந்து விழுந்தது. இதில் அருகே இருந்த முத்தம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டின் மீது சுவா் விழுந்ததில் வீடும் முழுவதுமாக சேதமடைந்தது. இதில் அதிா்ஷ்டவசமாக மூதாட்டி உயிா் தப்பினாா். மேலும் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் 2 வீடுகள், 5 கழிப்பறைகள், 2 மாட்டு கொட்டகைகள் சேதமடைந்தன. மேலும் சூறாவளி காற்றால் 10க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன. இது பற்றி தகவலறிந்த பல்லடம் வட்டாட்சியா் ஜெய்சிங் சிவகுமாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டாா். 

    கூடலூர் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுக்கு 5,000 ஏக்கர் வாழை முறிந்து நாசமானது. வீட்டின் மேற்கூரைகளும் பறந்தன.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே வெட்டுக்காடு, வேளாங்காடு, சீனியர்குளம் படுகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் தென்னை மற்றும் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக இப்பகுதியில் நாழிபூவன், செவ்வாழை, நேந்திரம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகள் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது அனைத்து வாழைகளும் குலை தள்ளி பலன் தரும் நிலையில் இருந்தன. ரம்ஜான் நோன்பு காலம் தொடங்கியுள்ளதால் முஸ்லிம்கள் அதிக அளவில் வாழைப்பழங்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால் தேவை அதிகரித்து விலை ஓரளவு கிடைத்தது. எனவே லாபம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கூடலூர் லோயர் கேம்ப் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றுக்கு அப்பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த சுமார் 5,000 ஏக்கர் வாழை முறிந்து நாசமானது.

    இதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் விட்டனர். இது குறித்து வி.ஏ.ஓ. மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து கணக்கிட்ட பிறகுதான் விவசாயிகளின் நஷ்ட கணக்கு தெரிய வரும். ஆனால் அதிகாரிகள் வர தாமதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக வறட்சியின் காரணமாக நஷ்டத்தை சந்தித்து வந்த விவசாயிகளுக்கு இது மேலும் ஒரு பேரிடியாக உள்ளது.

    மேலும் அப்பகுதியில் இருந்த குடியிருப்புகளின் மேற்கூரைகளும் சூறாவளி காற்றுக்கு தூக்கி வீசப்பட்டன. இதனால் பொதுமக்களின் வீடுகளும் சேதமடைந்தன. இரவு முழுவதும் இருளில் தவித்து வந்தனர்.
    மணப்பாறை பகுதியில் வீசிய சூறைக்காற்றில் மரம் முறிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிந்து பின்பும் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மதிய நேரத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன் லேசான தூரலுடன் மழை பெய்தது. இருப்பினும் பலத்த மழை பெய்யாததால் பொது மக்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் சூறைக்காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள், கம்பங்கள் சாய்ந்தன.

    நேற்று 2-வது நாளாகவும் திருச்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சூறைக்காற்று வீசியது. மாவட்டத்திற்குட்பட்ட மணப்பாறை பகுதியில் வீசிய சூறைக்காற்றில் மரம் முறிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தா நத்தம் அருகே உள்ள கம்பளியம்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜூ (வயது 43), கனவாய்பட்டியை சேர்ந்த விவசாயி மனோகர் (41) ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கருமலை நோக்கி சென்று கொண்டிருந் தனர்.

    மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் புத்தாநத்தத்தை அடுத்த கருஞ்சாலைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது பலத்த சூறைக்காற்று வீசியது. அப்போது சாலையோரத்தில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது.

    இதில் மரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட 2 பேரும் உடல் நசுங்கினர். அந்த வழியாக வந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்சு வேனில் அவர்களை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் சூறைக்காற்று வீசி வருவதில் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். #tamilnews
    கொடைக்கானலில் சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    பெருமாள்மலை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்ய வில்லை. இதனால் மலைப் பகுதியில் வறட்சி நிலவியது.

    குடிநீரை விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டது. இந்த ஆண்டு கோடை மழை கைகொடுத்ததால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    கடந்த சில நாட்களாகவே கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கொடைக்கானல் மற்றும் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் 12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு பகுதிக்கு இடையே ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது.

    இதனை வனத்துறையினர் விரைந்து வந்து அகற்றினர். மேலும் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

    பல இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை மின்சாரம் வரவில்லை. இதனால் விடிய விடிய இருளில் பொதுமக்கள் தவித்தனர்.

    இன்று காலையிலும் சில இடங்களில் மின்சாரம் வினியோகம் செய்யப்பட வில்லை. மேலும் ஒரு சில இடங்களில் மின்சாரம் வருவதும் உடனே தடைபடுவதுமாக இருந்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் முட்டைகோஸ், உருளைகிழங்கு, பட்டாணி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்ட விவசாயிகள் இந்த மழையால் அவை பாதிக்கப்படும் என்பதால் கவலையில் உள்ளனர்.

    ரிஷிவந்தியத்தில் சூறாவளி காற்றுடன் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு 5 மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ரிஷிவந்தியம்:

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    பலத்த சூறாவளி காற்றினால் சங்கராபுரம், திருக்கோவிலூர் சாலையில் உள்ள அத்தியூரில் பெரிய மரம் ரோட்டில் வேரோடு சாய்ந்தது.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர்கள் குணபாலன், ராஜாராமன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.

    இதேபோல் கள்ளக்குறிச்சியில் இருந்து பகண்டை கூட்டுரோடு வழியாக ஏந்தல் பகுதிக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அரசு பஸ்சின் முன்னால் புளிய மரம் ஒன்று சாய்ந்தது. இதனால் அந்த பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாணாபுரம் கூட்டு சாலை டாஸ்மாக் கடை முன்பு இருந்த 3 மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் மரத்தின் அடியில் நிறுத்தி இருந்த 2 மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்தன.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள மின்சார வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

    மேலும் ரிஷிவந்தியம், சங்கராபுரத்தை அடுத்த எஸ்.குளத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை மற்றும் சூறை காற்று வீசியது. இதனால் நெல் பயிர்கள் மற்றும் கரும்புகள் சேதம் அடைந்தன.

    திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான கூட்டேரிப்பட்டு, ஒலக்கூர், மயிலம், கோனேரிக்குப்பம், எண்டியூர், தென்கோடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. அடுத்த சில நிமிடங்களில் இடி- மின்னலுடன் கூடிய பலத்த மழையாக கொட்டியது.

    இந்த மழை இடைவிடாமல் ½ மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதேபோல் திருக்கோவிலூர், விக்கிரவாண்டி பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    அப்போது திருக்கோவிலூர் அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த அதேஊரை சேர்ந்த வடிவேல் என்பவருக்கு சொந்தமான 2 மாடுகள் மின்னல் தாக்கி செத்தன. இந்த மழையினால் வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த காற்று வீசியது.

    ×