என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் சூறாவளி காற்றுடன் விடிய விடிய சாரல் மழை: மின்சாரம் துண்டிப்பு
    X

    கொடைக்கானலில் சூறாவளி காற்றுடன் விடிய விடிய சாரல் மழை: மின்சாரம் துண்டிப்பு

    கொடைக்கானலில் சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    பெருமாள்மலை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்ய வில்லை. இதனால் மலைப் பகுதியில் வறட்சி நிலவியது.

    குடிநீரை விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டது. இந்த ஆண்டு கோடை மழை கைகொடுத்ததால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    கடந்த சில நாட்களாகவே கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கொடைக்கானல் மற்றும் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் 12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு பகுதிக்கு இடையே ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது.

    இதனை வனத்துறையினர் விரைந்து வந்து அகற்றினர். மேலும் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

    பல இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை மின்சாரம் வரவில்லை. இதனால் விடிய விடிய இருளில் பொதுமக்கள் தவித்தனர்.

    இன்று காலையிலும் சில இடங்களில் மின்சாரம் வினியோகம் செய்யப்பட வில்லை. மேலும் ஒரு சில இடங்களில் மின்சாரம் வருவதும் உடனே தடைபடுவதுமாக இருந்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் முட்டைகோஸ், உருளைகிழங்கு, பட்டாணி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்ட விவசாயிகள் இந்த மழையால் அவை பாதிக்கப்படும் என்பதால் கவலையில் உள்ளனர்.

    Next Story
    ×