என் மலர்
ஈரோடு
- கடனை திருப்பி செலுத்த முடியாததால் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
- இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வில்லரசம்பட்டி பொன்னி நகர், முதல் வீதியை சேர்ந்தவர் அசோக் (30). ஆக்டிக் டிரைவர். இவரது மனைவி லலிதா (27). கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சொந்த வீடு கட்டுவதற்காக அசோக் வங்கி ஒன்றில் கடன் பெற்றிருந்தார்.
அதற்கு முறையாக லோன் கட்டி வந்து இருந்த போது கடந்த சில மாதங்களாக சரியாக வேலை இல்லாததால் அவரால் வங்கியில் லோனை குறிப்பிட்ட நேரத்திற்கு கட்ட முடியவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊருக்கு சென்றிருந்த லலிதா தனது அம்மாவுடன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் உள் அறையில் அசோக் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அசோக்கை மீட்டு சிகிச்சை க்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அசோக் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மன விரக்தியில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு எதுவும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எக்ஸல் பொறியியல் கல்லூரி ரூபிசினஸ் ஸ்கூல் தன்னாட்சி, காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர் ரூபிளானிங், எக்ஸல் கல்வியியல் கல்லூரி மற்றும் கந்தசாமி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
- சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் சதிஷ் மற்றும் தலைமை கேம்பஸ் ரெக்ரூட்மென்ட் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் சவுகட்ட சென் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எக்ஸல் பொறியியல் கல்லூரி ரூபிசினஸ் ஸ்கூல் தன்னாட்சி, காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர் ரூபிளானிங், எக்ஸல் கல்வியியல் கல்லூரி மற்றும் கந்தசாமி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
இதில் எக்ஸல் கல்வி நிறுவன தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மதன் கார்த்திக் முன்னிலை வகித்தார்.
எக்ஸல் பொறி யியல் கல்லூரி முதல்வர் பொம்ம ண்ண ராஜா, எக்ஸல் காலேஜ் ஆப் ஆர்கி டெக்சர் ரூபிளானிங் முதல்வர் பாலமுருகன், எக்ஸல் கல்வியியல் கல்லூரி முதல்வர் சைமன் அருண் பாரத்குமார் மற்றும் கந்தசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் கலை மகள் ஆகியோர் ஆண்ட றிக்கை வாசித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் சதிஷ் மற்றும் தலைமை கேம்பஸ் ரெக்ரூட்மென்ட் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் சவுகட்ட சென் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது சவுகட்டசென் பேசும் போது, மாணவர்கள் கல்லூரி படிப்பினை வெற்றி கரமாக முடித்து வேலை வாய்ப்பு தேர்வில் தேர்ச்சி பெறுவது குறித்து ஆலோசனைகள வழங்கினார்.
தெடர்ந்து நடிகர் சதிஷ் பேசும் போது சகஜமாகவும், யதார்த்தமாகவும் மாணவர்களுக்கு நற்பண்புகள், நற்கருத்துக்களையும், வாழ்வில் வெற்றி பெற சிறந்த அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து அவர் விடா முயற்சி நேர்மறையாக சிந்திக்க வும் கட்டாயம் பழகிக்கொள்ளவேண்டும் என்று பேசினார்.
தொடர்ந்து 2022-ம் ஆண்டில் பல்வேறு பிரபல நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்ற மாணவர்கள், விளையாட்டு துறையில் வெற்றி பெற்ற மாணவர்கள், மதிப்பெண் வரிசையில் முன்னிலை வகித்தவர்களுக்கான சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு வழங்கி னர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இதில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் எக்ஸல் பொறியியல் கல்லூரி அட்மினிஸ்ட ரேஷன் இயக்குனர் (பொறுப்பு) அன்பு கருப்புசாமி நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை எக்ஸல் பொறியியல் கல்லூரி ரூபிசினஸ் ஸ்கூல் தன்னாட்சி, காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர் ரூபிளானிங், கல்வியியல் கல்லூரி, கந்தசாமி கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் எக்ஸல் கல்வி குழும அலுவலர்கள் செய்தி ருந்தனர்.
- சிறுமியிடம் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருமுட்டை எடுக்கப்பட்டது.
- 3-வது முறையாக ஈரோட்டில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி அதிரடி விசாரணை நடத்தினார்.
ஈரோடு:
ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுதொடர்பாக ஏற்கனவே சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர், போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஈரோட்டில் சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய 2 ஆஸ்பத்திரிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். அந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள், நிர்வாக இயக்குனர்கள் டாக்டர்கள் என 2 கட்டமாக போலீசார் விசாரணையை விரிவாக நடத்தி முடித்துள்ளனர்.
மேலும் சென்னையில் இருந்து வந்த மருத்துவக்குழு பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆஸ்ப த்திரிக்கு நேரடியாக சென்று அதிரடி விசாரணையை மேற்கொண்டது.
சிறுமியிடம் கருமுட்டை எடுத்த ஈரோட்டில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரி, சேலம், ஓசூரில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். மேலும் இது தவிர திருவனந்தபுரம், திருப்பதியிலும் 2 தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும், ஆந்திர மாநிலம் திருப்பதியிலும் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் கருமுட்டை எடுக்க சிறுமியை அழைத்து சென்றது யார்? என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமியிடம் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருமுட்டை எடுக்கப்பட்டது. இதனால் அடிக்கடி அந்த சிறுமி அந்த ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றுள்ளார். அப்போது பெருந்துறை மருத்துவமனைக்கு நெருங்கிய தொடர்பில் இருக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கருமுட்டை தேவைப்பட்டது.
இதுகுறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம் பெருந்துறை மருத்துவமனையிடம் கேட்டு உள்ளது. இதையடுத்து பெருந்துறை மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாட்டில் இந்த சிறுமியை அங்கு அழைத்து சென்று உள்ளனர்.
முன்னதாக அந்த சிறுமிக்கு பெருந்துறை மருத்துவமனையிலேயே அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு கருமுட்டை எடுக்க தயாரான நிலையில் அவரை திருவனந்தபுரம் மருத்துமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அங்கு சிறுமியை அனுமதித்து மயக்க ஊசி செலுத்தி கருமுட்டை எடுக்கப்பட்டது.
இதேபோல் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை மூலம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்டு கருமுட்டை எடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த 2 ஆஸ்பத்திரிகள் மூலம் எத்தனை முறை சிறுமி அழைத்து செல்லப்பட்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 3-வது முறையாக ஈரோட்டில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி அதிரடி விசாரணை நடத்தினார்.
நேற்று மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 4 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடைபெற்றது. ஏற்கனவே இந்த 2 ஆஸ்பத்திரிகள் அளித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் நேற்று 3-வது முறையாக விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் சேலம், ஓசூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்த விவகாரம் தொடர்பாக இன்று அல்லது நாளை நேரில் வந்து ஆஜராக ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதில் சிறுமிக்கு எந்தெந்த நாட்களில் கரு முட்டை எடுக்கப்பட்டது. எந்த ஆவணங்கள் அடிப்படையில் கருமுட்டை எடுக்கப்பட்டது.
அந்த ஆவணங்களில் கையொப்பம் இட்டது யார்? கடந்த 4 ஆண்டுகளில் ஆஸ்பத்திரிகளில் எத்தனை பேருக்கு கருமுட்டை எடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் குறித்து கேட்டு விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஆஸ்பத்திரி தரப்பில் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளனர். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் இந்த 2 ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர், டாக்டர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடைபெறும் என தெரியவந்துள்ளது.
இதன் மூலம் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாக வாய்ப்புள்ளது. இதனால் இந்த விவகாரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
- கோடை விடுமுறை முடிந்து 13-ந் தேதி திறப்பு பள்ளி வகுப்பறைகள் தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- இதேபோல் பள்ளி திறப்பை ஒட்டி மாணவ ர்களின் பள்ளி பேக், பள்ளி சீருடை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஈரோடு:
தமிழகத்தில் மாணவர்க ளுக்கு கோடை விடுமுறை முடிந்து வரும் 13-ந் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதை யடுத்து பள்ளி வளாகம், வகுப்பறைகளை சுத்தப்படு த்தும் பணி நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து பள்ளிகளை தயார்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
பள்ளி வளாகத்தில் படர்ந்திருக்கும் மரம், செடி கொடிகள் அகற்றப்பட்டு வருகிறது. வகுப்பறையில் கிருமி நாசினி தெளிக்க ப்பட்டு வருகிறது. மாணவ ர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் தூய்மை ப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மாணவர்கள் குடிநீர் வசதிக்காக நீர்த்தேக்க தொட்டியில் மருந்து தெளித்து அதை சுத்த மாக்கும் பணி நடை பெறுகிறது. அந்தந்த பள்ளி களில் அந்தந்த தலைமை யாசிரியர்கள் மேற்பா ர்வையில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் பள்ளி திறப்பை ஒட்டி மாணவ ர்களின் பள்ளி பேக், பள்ளி சீருடை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
- ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பரமேஸ்வரன், பொதுச்செயலாளர் தெய்வ சிகாமணி, பொருளாளர் சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் நலப் பணியாளர்கள் நல வாழ்வு கூட்டமைப்பு, தமிழ்நாடு மாநில மையம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் திரண்டு வந்து கோர்ட்டு தீர்ப்பின் அடிப்ப டையில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணி வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பரமேஸ்வரன், பொதுச்செயலாளர் தெய்வ சிகாமணி, பொருளாளர் சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
மக்கள் நலப்பணி யாளர்கள் சம்பந்தமாக தமிழக அரசு வெளி யிட்டுள்ள ஆணையை ரத்து செய்யக்கோரியும், கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி வழங்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நலப் பணியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுச்செயலாளர் தெய்வ சிகாமணி ஆகியோர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நல பணியாளர்கள் மொத்தம் 214 பேர் உள்ளனர். கல்வித்தகுதி அடிப்படையில் காலிப்பணி யிடங்களை மக்கள் நலப் பணியாளர்களை கொண்டு நிரப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்ற அரசு ஊழியர்களுக்கு என்ன சலுகை வழங்கப்படுகிறதோ அதை அவர்களுக்கு வழங்க கூறியுள்ளது.
தற்போது அரசு பிறப்பி த்துள்ள உத்தரவில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக மக்கள் நலப் பணியா ளர்களை பணியமர்த்த முடிவு எடுத்துள்ளது. இதன்படி தொகுப்பு ஊதியமாக ரூ.7500 மட்டும் கிடைக்கும். இந்த பணம் எங்களுக்கு காணாது.
தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்கப்படுவதாக அரசாணை வந்துள்ளது. வயது முதிர்ந்தவர்கள் உள்ளனர். பலர் பட்டப்படிப்பு, பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி படித்துள்ளார். கல்வித்தகுதி அடிப்படையில் நீதிமன்றம் கூறியபடி நிரந்தர பணியிடம் வழங்க வேண்டும். அப்போது தான் வருங்காலத்தில் பணியிலிருந்து எந்த அரசாலும் நீக்க முடியாது. இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இவர் அவர்கள் கூறினர்.
- ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.
- தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. கடந்த 5-ந் தேதி 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து 6-ந் தேதி மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 686 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மதிப்புக்கூட்டும் எந்திரங்களை மானிய விலையில் பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்
- ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது.
ஈரோடு:
வேளாண் பொறியியல் துறை மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அறுவடைக்கு பின் சார் தொழில் நுட்பம், மதிப்பு கூட்டும் எந்திரங்கள் மானியத்தில் வழங்குதல் திட்டம் செயல்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. தங்கள் பகுதியில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்பு கூட்டி அதிக விலைக்கு விற்று லாபம் பெற மதிப்பு கூட்டும் எந்திரங்கள் உதவும்.
வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான மாவரைக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரம், நிலக்கடலை செடியில் இருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம் போன்றவை அனைத்து விவசாயிகளுக்கும் 40 சதவீத மானியத்திலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் சிறு, குறு விவசாயிகளுக்கு, 60 சதவீத மானியமும் வழங்கப்படும்.
விருப்பம் உள்ள விவசாயிகள், mis.aed.tn.gov.in என்ற இணைய தளத்தில் விபரம் அறியலாம். மேலும் ஈரோடு உதவி செயற்பொறியாளரை 0424 2904843, கோபி உதவி செயற்பொறியாளரை 04285 290069 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.
- நம்பியூர் அருகே குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நம்பியூர்:
நம்பியூர் அருகே உள்ள இருகாலூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (21). அதே பகுதியில் தனது பாட்டியின் வீட்டில் தங்கி மரம் ஏறும் கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் தனது தாயார் ராசாத்தியுடன் அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று மதியம் வேலைக்கு சென்று விட்டு வந்து இரவு நீண்ட நேரமாக சாப்பிட வராததால் பாட்டி ராமாத்தாள் கார்த்திக்கை சாப்பிட கூப்பிட சென்று பார்த்த பொழுது கார்த்திக் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு மாட்டி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து ராமாத்தாள் உடனடியாக அக்கம்பக்கத்தினரிடம் தகவல் சொல்லி கார்த்திகை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கார்த்திக் இறந்து விட்டதாக கூறினர்.
அதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்து கார்த்திக்கின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கவுந்தப்பாடி அருகே வீட்டில் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு பிடிப்பட்டது.
- தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பையில் எடுத்து சென்றனர்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வி (40). இவர் மகள் மகாஸ்ரீ, மருமகன் விக்னேஷ் ஆகியோருடன் அதே பகுதியில் குடியிருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை விக்னேஷ், செல்வி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டானர். மகா ஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்பொழுது கட்டிலுக்கு அடியில் சத்தம் கேட்டுள்ளது. அப்போது மகா ஸ்ரீ கட்டிலுக்கு கீழ் பார்க்கும்போது நீளமான பாம்பு இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து மகாஸ்ரீ அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து கோபி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலை அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருமலைசாமி, கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் வீட்டின் கதவை திறந்து பார்க்கும்போது கட்டிலின் அடியில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பையில் எடுத்து சென்றனர்.
- ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ரூ.1½ லட்சம் கடனுக்கு ரூ.3 லட்சம் கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
- அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் கொங்கு நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு( 40). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு சம்பத் நகர் நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் முகமது ஷெரீப் (35) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருநாவுக்கரசிடம் வட்டிக்கு ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடன் தொகைக்கான தவணையை முறையாக செலுத்த முடியவில்லை. இதையடுத்து திருநாவுக்கரசு முகமது ஷெரீப்பிடம் வாங்கிய ரூ.1.50 லட்சத்திற்கு வட்டிக்கு வட்டி போட்டு ரூ.3 லட்சமாக கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். பணத்தை தர மறுத்தால் கொலை செய்வதாக திருநாவுக்கரசு மிரட்டியும் உள்ளார்.
இதுகுறித்து முகமது ஷெரீப் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திருநாவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கந்து வட்டி தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மறுநாளே ஈரோட்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த பைனான்ஸ் அதிபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
- அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
- மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்கி வாழ்த்து பெற்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1988-89, 1989-90 ஆகிய கல்வி ஆண்டில் படித்த அறிவியல் பிரிவு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அந்தியூர்-பவானி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களுக்கு சால்வை அணி–வித்து அவர்களுக்கு நினைவுப்பரிசினை வழங்கி வாழ்த்து பெற்றனர்.
இதில் அந்தியூர், நாகலூர், செம்புளிச்சாபாளையம், பச்சாம்பாளையம், அண்ணா மடுவு, கந்தம்பாளையம், தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பி பாளையம், சங்கராபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து படித்த மாணவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் இருந்து வருகின்றார்கள்.
அந்த மாணவர்கள் தங்களுடைய ஆசிரியருக்கு நினைவு பரிசினை வழங்கியதை பெற்று கொண்ட ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.
- வேன் மோதியதில் வாலிபர் பலி, 2 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் அன்பழகன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த தாட்டர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). இவர் தனது நண்பர்களான கவுந்தபாடியை சேர்ந்த வேதமூர்த்தி (15), பெருந்தலையூரை சேர்ந்த பிரதீப் (16) ஆகியோருடன் கேட்டரிங் வேலை விஷயமாக அந்தியூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
பிரதீப் மோட்டார் சைக்கிளை ஓட்ட நடுவில் வேதமூர்த்தியும், அவருக்கு பின்னால் சதீஷ்குமாரும் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிள் பவானி-அந்தியூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது நல்லிபாளையம் பிரிவு அருகே வந்த போது எதிரே வந்து கொண்டிருந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக பிரதீப் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தேவமூர்த்தி, சதீஷ்குமார் இருவருக்கும் கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரதீப் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரதீப்பை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரதீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த தேவமூர்த்தி, சதீஷ்குமார் 2 பேரும் பவனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் அன்பழகன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






