என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கருமுட்டை விவகாரம்- திருவனந்தபுரம், திருப்பதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிறுமியை அழைத்து சென்றது யார்?
- சிறுமியிடம் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருமுட்டை எடுக்கப்பட்டது.
- 3-வது முறையாக ஈரோட்டில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி அதிரடி விசாரணை நடத்தினார்.
ஈரோடு:
ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுதொடர்பாக ஏற்கனவே சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர், போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஈரோட்டில் சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய 2 ஆஸ்பத்திரிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். அந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள், நிர்வாக இயக்குனர்கள் டாக்டர்கள் என 2 கட்டமாக போலீசார் விசாரணையை விரிவாக நடத்தி முடித்துள்ளனர்.
மேலும் சென்னையில் இருந்து வந்த மருத்துவக்குழு பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆஸ்ப த்திரிக்கு நேரடியாக சென்று அதிரடி விசாரணையை மேற்கொண்டது.
சிறுமியிடம் கருமுட்டை எடுத்த ஈரோட்டில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரி, சேலம், ஓசூரில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். மேலும் இது தவிர திருவனந்தபுரம், திருப்பதியிலும் 2 தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும், ஆந்திர மாநிலம் திருப்பதியிலும் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் கருமுட்டை எடுக்க சிறுமியை அழைத்து சென்றது யார்? என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமியிடம் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருமுட்டை எடுக்கப்பட்டது. இதனால் அடிக்கடி அந்த சிறுமி அந்த ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றுள்ளார். அப்போது பெருந்துறை மருத்துவமனைக்கு நெருங்கிய தொடர்பில் இருக்கும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கருமுட்டை தேவைப்பட்டது.
இதுகுறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம் பெருந்துறை மருத்துவமனையிடம் கேட்டு உள்ளது. இதையடுத்து பெருந்துறை மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாட்டில் இந்த சிறுமியை அங்கு அழைத்து சென்று உள்ளனர்.
முன்னதாக அந்த சிறுமிக்கு பெருந்துறை மருத்துவமனையிலேயே அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு கருமுட்டை எடுக்க தயாரான நிலையில் அவரை திருவனந்தபுரம் மருத்துமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அங்கு சிறுமியை அனுமதித்து மயக்க ஊசி செலுத்தி கருமுட்டை எடுக்கப்பட்டது.
இதேபோல் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை மூலம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்டு கருமுட்டை எடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த 2 ஆஸ்பத்திரிகள் மூலம் எத்தனை முறை சிறுமி அழைத்து செல்லப்பட்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 3-வது முறையாக ஈரோட்டில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி அதிரடி விசாரணை நடத்தினார்.
நேற்று மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 4 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடைபெற்றது. ஏற்கனவே இந்த 2 ஆஸ்பத்திரிகள் அளித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் நேற்று 3-வது முறையாக விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் சேலம், ஓசூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்த விவகாரம் தொடர்பாக இன்று அல்லது நாளை நேரில் வந்து ஆஜராக ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதில் சிறுமிக்கு எந்தெந்த நாட்களில் கரு முட்டை எடுக்கப்பட்டது. எந்த ஆவணங்கள் அடிப்படையில் கருமுட்டை எடுக்கப்பட்டது.
அந்த ஆவணங்களில் கையொப்பம் இட்டது யார்? கடந்த 4 ஆண்டுகளில் ஆஸ்பத்திரிகளில் எத்தனை பேருக்கு கருமுட்டை எடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் குறித்து கேட்டு விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஆஸ்பத்திரி தரப்பில் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளனர். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் இந்த 2 ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர், டாக்டர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடைபெறும் என தெரியவந்துள்ளது.
இதன் மூலம் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாக வாய்ப்புள்ளது. இதனால் இந்த விவகாரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.






