என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு சி.எஸ்.ஐ., காலனி பகுதியில் வசிப்பவர் விநாயகமூர்த்தி நெசவு தொழிலாளி. மனைவி பெயர் தங்கமணி.
இவரது 6 வயது மகள் பூஜா கடந்த 4 நாட்களுக்கு முன் காய்ச்சலால் அவதிப்பட்டார். பூஜாவை ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்று இரவு பூஜாவுக்கு உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இறந்த பூஜாவிற்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரிந்தது. டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த மகளின் சடலத்தை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
இறந்த பூஜாவின் அண்ணன் விக்ரம் வயது (13). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று குணமானது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளோடு பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த சுகாதார துறையும், ஊராட்சி நிர்வாகமும் போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு, அக். 21-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, பிரப் ரோட்டில் உள்ள கலைமகள் பள்ளி, செங்குந்தர் பள்ளி களில் படிக்கும் 852 மாணவ- மாணவிகளுக்கு இன்று மடி கணினி வழங்கப்பட்டது.
அமைச்சர் செங்கோட் டையன் இலவச மடி கணினிகளை வழங்கினார். மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி பாலமுரளி வரவேற்றார்.
எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, செல்வகுமார சின்னையன் எம்.பி. ஆகி யோர் முன்னிலை வகித்த னர். அ.தி.மு.க. பகுதி செய லாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கே.சி.பழனிசாமி, கேசவமூர்த்தி, ஜெகதீஸ், அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் மாது என்கிற மதையன், ஆவின் ராஜேந்திரன், ஆவின் ராஜ சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் அமைச் சர் செங்கோட்டையன் நிருபர் களிடம் கூறியதாவது:-
மாணவர்கள் நலன் கருதி அம்மா வழி நடக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. மாணவர்களின் அறவுத் திறனை அதிகரிக்கவும் அவர்களை சிறந்த விஞ் ஞானிகளாக்கவும் அட்டல் லேப் (அறிவியல் ஆய்வகம்) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தமிழகத் தில் 12 இடங்களில் செயல் படுத்தப் படும். அனைத்து இடங்களிலும் தொடங்க முயற்சி மேற்கொள் ளப்படும்.
இது அமைக்கப்பட்டால் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள விஞ்ஞானிகள் போல நமது மாணவர்களும் திகழ்வார்கள். 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் வகுப்பறைகள் ரூ.486 கோடி செலவில் கணினி மயமாக்கப்படும். மாணவர்களுக்கு விபத்து காப்பீடு ஏற்படுத்தப்படும்.
மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் எதிர் கொள்ளும் வகையில் 412 தேர்வு மையங்கள் அமைக் கப்படும். அந்த மையங்கள் நவம்பர் இறுதிக்குள் அமைக் கப்படும்.
அரச்சலூரில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகா ரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடி வில் சம்பந்தப் பட்டவர்கள் மீது அரசு உரிள நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
கவுந்தப்பாடி திரு.வி.க. வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக டிரைவர். இவரது மகன் கார்த்திகேயன் (வயது34). 108 ஆம்புலன்சில் டிரைவராக பணிபுரிந்தார்.
நேற்று இரவு கார்த்திகேயன் தனக்கு சொந்தமான காரில் பவானிக்கு சென்று கொண்டிருந்தார். கவுந்தப்பாடி அருகே சேவாகவுண்டனூர் தனியார் பள்ளிக்கூடம் பக்கத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கார்த்திகேயன் கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் கார்த்திகேயன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை சிதறி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கார்த்திகேயன் உடல் கோபி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த கார்த்திகேயனுக்கு மனைவி பிரேமா மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி அடுத்த கருப்பண்ணன் கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 76).
இவரது மனைவி நல்லம்மாள் (65). அதே பகுதியில் அவர்கள் தோட்டத்தில் விவசாயம் பார்த்தனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் உள்ளனர்.
கந்தசாமிக்கு கடந்த 10 ஆண்டுகளாக கால் வலி மற்றும் வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் மன வருத்தத்தில் இருந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த கந்தசாமி வீட்டில் இருந்த பூச்சிமருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார்.
இதனால் நுரையுடன் வாந்தி எடுத்தார். இதை கண்ட அவரது மனைவி நல்லம்மாள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து அவரை மீட்டு கருல்வாடி புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மேல் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கந்தசாமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது. இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
மாவட்டத்தின் பல பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பலர் பலியாகி வருகின்றனர். முக்கியமாக அந்தியூர், பவானி, சென்னிமலை பகுதிகளில் பலர் பலியாகி உள்ளனர். கடந்த 5-ந் தேதி வரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 27 ஆக இருந்தது.
ஈரோடு மாநகர பகுதியிலும் இந்த நோயின் தாக்கம் உள்ளது. ஈரோடு முத்தம்பாளையம் அவுசிங் யூனிட் அடுத்த ரெயில் நகரை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் ஷேக் ரிஸ்வானின் மனைவி சையது நிஷா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 6-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.
கடந்த 11-ந் தேதி சென்னிமலை அருகே உள்ள வடமுகம் வெள்ளோடு சென்னிமலை பாளையம் புதூரை சேர்ந்த பூபதி மகள் மாரியம்மாள் (வயது 12) என்ற 6-ம் வகுப்பு மாணவி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
12-ந் தேதி புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள காராப்பட்டி புதுக்காலனியை சேர்ந்த துரைசாமி மகள் ரச்சனா (5) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
கடந்த 13-ந் தேதி கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த விவேகானந்தன் மகள் அனுஸ்ரீ என்ற சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலியானாள்.
கடந்த 16-ந் தேதி கோபி அருகே உள்ள பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சரவணனின் மகள் எம்.பி.ஏ. பட்டதாரியான பிரியா (23) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
அதே நாளில் தாளவாடி அருகே உள்ள நெய்தாளபுரத்தை சேர்ந்த மாதே கவுடாவின் மனைவி சண்ணம்மா (50) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆக இருந்தது.
இந்த நிலையில் நேற்று அந்தியூர் அருகே சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். அந்தியூர் அடுத்துள்ள சின்னத் தம்பி பாளையம் அந்தியூர் காலனியை சேர்ந்த துரை சாமியின் மகள் தர்ஷினி (7).
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் காய்ச்சல் குணமாகாததால் ஈரோட்டில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தர்ஷினி பரிதாபமாக இறந்தார்.
இதனால் ஈரோடு மாவட் டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கும் விழா இன்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். கோபி கல்வி மாவட்ட அதிகாரி கலைச்செல்வன் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி முன்னிலை வகித்தார்.
இதில் 153 பேருக்கு அமைச்சர் செங்கோட்டையன் இலவச மடிகணினியை வழங்கி பேசியதாவது:-
இந்த அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை செயல்படுத்தி சிறப்பாக நடைபெற்று வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு புதிய சீருடைகள் 3 விதமாக மாற்றியமைக்கப்படும்.
மாணவ, மாணவிகள் பெற்றோர்களை நேசிக்க வேண்டும். அவருடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும். பெற்றோர்கள்- மகன்களிடையே பாசம் குறைந்து விட்டது. அவர்களுக்கு நேசகரம் நீட்ட வேண்டும்.
எதிர்காலத்தில் மாணவர்களை சிறந்து கல்வியாளராக உருவாக்குவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு பாடுபட்டு வருகிறது.
பிளஸ்-2 படித்து முடித்தவுடன் வேலை என்ற அடிப்படையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும். கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் தமிழகத்தில் 10 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களுக்கு தனியாக விரைவில் பயிற்சியளிக்கப்படும்.
நீட் தேர்வு பற்றி மாணவ, மாணவிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இதற்காக இலவசமாக பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிறந்த வல்லுனர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படும்.
எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் கொண்டு வர இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
இந்த அரசு முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வகுத்த பாதையில்தான் செயல்பட்டு வருகிறது. நாங்கள் இருமொழி கொள்கையைத்தான் கடைபிடிப்போம். இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை.
இந்த அரசு திராவிட இயக்கத்தை காக்கும் வகையில் வீறுநடை போடும் என் பதில் ஐயமில்லை. பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும்போதே மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்க இந்த அரசு திட்டமிட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் கல்வித்துறையில் மிகப்பெரும் மாற்றம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
விழாவில், சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், மாவட்ட மாணவரணி செயலாளர் பிரினியோ கணேஷ், கோபி கூட்டுறவு சங்க தலைவர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர்:
அந்தியூர் எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் துரையன் என்கிற அலாவுதீன் (வயது 55). தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சாப்பாடு வாங்க சென்றார். அங்கு வீட்டு முன் பகுதியில் அந்த உறவினரின் 24 வயது மகள் நின்றார்.
வீட்டுக்குள் அந்த இளம் பெண்ணின் தாயார் இருந்தார். அவரிடம் அலாவுதீன் சாப்பாடு கேட்டார். இதைத் தொடர்ந்து அந்த இளம் பெண்ணின் தாயார் சாப்பாடு எடுக்க வீட்டுக்குள் சென்றார்.
அந்த நேரத்தில் அந்த இளம்பெண்ணை அலாவுதீன் மானபங்கப்படுத்த முயற்சித்து கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஜலட்சுமி வழக்குப்பதிவு செய்து அலாவுதீனை கைது செய்தார்.
பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அலாவுதீன் பின்னர் பவானி ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தூரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் தேவயானி (வயது 17).
இவர் அரச்சலூர் கோபாலி பாறை என்ற இடத்தில் உள்ள தனது தாத்தா ராஜூ என்பவரது வீட்டில் தங்கியிருந்து அரச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த 9-ந் தேதி தேவயானி வாந்தி, வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டார். எனவே அவரை சிகிச்சைக்காக நத்தக்கடையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த போது தன்னை வேதியியல் ஆசிரியை செல்வலட்சுமி தன்னை கண்டித்து தாக்கியதாகவும், இதனால் மனம் உடைந்து கடந்த 8-ந் தேதி எலி மருந்து (விஷம்) குடித்ததாகவும் தேவயானி கூறினார்.
அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தேவயானி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அரச்சலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசம் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் ஆசிரியை செல்வலட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவி தேவயானியை தற்கொலைக்கு தூண்டியதாக (305-வது பிரிவு) வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ஆசிரியை செல்வலட்சுமி தலைமறைவானார்.
இந்த நிலையில் ஆசிரியை செல்வலட்சுமியை கைது செய்யக்கோரி மாணவி தேவயானியின் உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் அரச்சலூர் பள்ளி முன்பு திரண்டனர். அவர்கள் ஈரோடு-காங்கயம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் ஆர்.டி.ஓ. நர்மதாதேவி, பெருந்துறை போலீஸ் டி. எஸ்.பி. முருகன், அரச்சலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞான பிரகாஷ், சென்னிமலை போலீஸ் இன்ஸ் பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியையை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவில் தற்போது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் பறி போய் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாரதிய ஜனதா அரசு.
கலைத்துறையில் குறிப்பாக சிவாஜி, எம்.ஜி.ஆர், கமல், ரஜினி, விஜய், அஜித் போன்றோர் தங்கள் படங்களில் ஆளும் கட்சியினரின் குறைகளை தமாசாக கூறுவது வழக்கம்தான். ஆளும் கட்சி தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ, காங்கிரசோ எதுவாக இருந்தாலும் அவர்கள் தங்கள் எதிர் கருத்துக்களை கூறுவது இயல்பு தான்.
ஆனால் விஜய் நடித்து தற்போது வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றிய விமர்சனம் இடம் பெற்றுள்ளதை தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை குறை கூறி விமர்சித்து இருப்பது நியாயம் இல்லை.
விஜய் சம்பளம் பற்றி கேள்வி எழுப்பி உள்ள தமிழிசை அவரது கட்சியில் உள்ள ஹேமமாலினி உள்ளிட்டோரின் சம்பளம் குறித்து பேசாதது ஏன்? விஜய்க்கு எதிரான தமிழிசையின் கருத்து தனிப்பட்ட நபரின் கருத்து சுதந்தரத்தில் தலையிடுவது போல் உள்ளது.
டெங்கு காய்ச்சல் தமிழக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று கூட சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு நான் சென்றேன். அப்போது கொசுக்கள் அதிகமாக இருந்தது. கொசுக்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக ரெயில் நிலையம், பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் தனி நபர்களுக்கு நோட்டீசு வழங்கி அபராதம் விதிப்பதை வரவேற்கிறேன். அதே போன்று பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க தவறிய மத்திய, மாநில அரச அதிகாரிகளுகும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிலவேம்பு கசாயத்துக்கு எதிர்ப்பு உள்ளதாக நான் கருதவில்லை. டெங்கு காய்ச்சலுக்கு அது மருந்தாக இருக்கும் என நான் கருதுகிறேன். டெங்குவை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தை கூறுகிறார். அதை நாம் காதில் வாங்க கூடாது.
தற்போது பல கட்டிடங்கள் இவரது வாடிக்கையாக உள்ளது. இதற்கு காரணம் விதிமுறைகளை முறையாக கடை பிடிக்காததுதான். பணம் கொடுத்தால் போதும் எப்படியும் கட்டிடம் கட்டலாம் என்று ஆகி விட்டது.
ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். அரசு பூஜ்யம் அரசாக உள்ளது. ஜி.எஸ்.டி. வரியால் தீபாவளி வியாபாரத்தில் வியாபாரிகள் 60 சதவீதம் நஷ்டம் அடைந்துள்ளனர்.
நான் காங்கிரஸ் தலைவராக இருந்த போது நடிகை குஷ்புவுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. அந்த அட்டை இன்னும் 19 வரும் செல்லும். இது குறித்து கராத்தே தியாகராஜன்ட விபரம் தெரியாமல் பேசுகிறார்.
முதலில் சமூக வலைத்தளங்களில் மோடியை புகழ்ந்து தள்ளிய இளைஞர்கள் தற்போது வசைபாடி வருகிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தலில் நாங்கள் தி.மு.க.வை ஆதரிப்போம். ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் போட்டியிட்டால் தேர்தல் கமிஷன் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ஏனென்றால் பணம் பட்டு வாடா செய்ததாக அவர் மீது வழக்கு உள்ளது.
சசிகலாவை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளிவரும். மத்திய பா.ஜனதா அரசு இன்னும் ஒரு வருடத்தில் கவிழும். ஏனென்றால் மோடிக்கு அவ்வளவு எதிர்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் இனப்பெருக்க காலத்தில் வருவது வழக்கம். அப்படி வரும் பறவைகள் பட்டாசு சத்தத்தால் அச்சப்பட்டு விடாமல் இருக்க இங்கு பட்டாசு வெடிப்பது தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்கு கூட பட்டாசுகள் வெடிக்க முடியாத நிலையில் இருந்தனர்.
தீபாவளி பண்டிகை நேரத்தில் வனத்துறையின் சார்பில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம். இந்த வழக்கம் சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் வெள்ளோடு சரணாலய ஏரியில் தண்ணீர் வறண்டது. ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலையில் மரங்கள் அனைத்தும் பட்டுப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பருவநிலை சரி இல்லாததால் பறவைகளும் இங்கு வருவது இல்லை.
இந்தநிலையில் இந்த தீபாவளி பண்டிகையின் போது சரணாலயத்தில் பறவைகள் ஏதும் இல்லாததால் அந்த பகுதி பொதுமக்கள் பட்டாசு கொளுத்தி தீபாவளி பண்டிகையை கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி நேற்று சரணாலயத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈரோடு-வெள்ளோடு ரோடு பறவைகள் சரணாலய பிரிவு முனியப்பன் கோவில் அருகே பட்டாசுகள் வெடித்தனர்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கூறும்போது, ‘நாங்கள் சிறு வயதாக இருந்தபோது தீபாவளிக்கு பட்டாசு வெடித்து கொண்டாடினோம். பின்னர் பறவைகள் சரணாலயத்துக்கு அதிக அளவில் பறவைகள் வந்ததால் எங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பறவைகள் நலன் கருதி கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் வெடிகள் போடுவது இல்லை. தற்போது சரணாலயத்தில் பறவைகள் ஏதும் இல்லாதால் இந்த ஆண்டு பட்டாசு வெடித்தோம். அதுவும் சரணாலயத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் வெடித்து இருக்கிறோம்.
நீண்ட காலத்துக்கு பின்னர் பட்டாசு வெடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் சரணாலயத்துக்கு தண்ணீர் வந்து பறவைகள் வந்துவிட்டால் பட்டாசுகள் வெடிக்க மாட்டோம்‘ என்றார்.
ஈரோடு:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸடாலின் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று குளங்கள் தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
அவரே கட்சி தொண்டர்களுடன் குளங்களில் இறங்கி மண் வெட்டியால் வெட்டி தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
இதே போல் ஈரோடு பொத்தியாகாட்டில் உள்ள குளம் தூர் வாரும் பணி நடந்தது. ஈரோடு வந்திருந்த ஸ்டாலின் தூர் வாரும் பணியை தொடங்கி வைத்ததோடு மீண்டும் ஒரு தடவை ஈரோடு வந்து இந்த குளத்தை பார்வையிட்டார்.
9 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பொத்தியா காடு குளம் சமீபத்தில் பெய்த மழை நீரால் நிரம்பியது.
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தலைமையில் தி.மு.க. தொண்டர்கள் இந்த குளத்தை வெட்டி முட்புதர்களை அகற்றி தூர் வாரி இருந்தனர்.
பொத்தியா காடு குளம் நிரம்பியதையொட்டி அந்த பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஈரோடு கருங்கல்பாளையயம் வைராபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜீ. இவரது மனைவி சரோஜா (வயது 50). இவர்களது மகன் சுரேஷ் (30).
சரோஜா அவரது மகன் சுரேஷ் இருவரும் மோட்டார் சைக்கிளில் இன்று காலை அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடத்துக்கு உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். சுரேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அவரது அம்மா சரோஜா அவரது பின்னால் அமர்ந்திருந்தார்.
ஒலகடம் காந்தி சிலை அருகே வந்தனர். அப்போது அந்த வழியாக பட்லூரில் இருந்து பவானி நோக்கி வந்த ஒரு லாரி அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பின் பகுதியில் அமர்ந்திருந்த சரோஜா தவறி கீழே விழுந்தார்.
இதில் அவர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சுரேஷ் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






