என் மலர்
ஈரோடு
- திருவிழாவில் மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளின் சந்தை பிரபலமாக உள்ளது.
- பல்வேறு மாநிலங்களில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்படுகிறது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா வரும் 13-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்காக அந்தியூர் பகுதியில் கோவில், கடைகள், கேளிக்கை அரங்குகள், குதிரை மற்றும் மாட்டு சந்தைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
திருவிழாவில் மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளின் சந்தை பிரபலமாக உள்ளது. குறிப்பாக இசைக்கு ஏற்ப நடமாடும் குதிரை உலக புகழ் பெற்றது. சந்தைக்கு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சைஜா என்பவர் 24 குதிரைகளை சந்தைக்கு கொண்டு வந்தார். குதிரையின் பாதுகாவலராக பைரஸ் என்பவர் இருந்தார். நேற்று இரவு குதிரைக்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருந்து வாளியின் மூலம் தண்ணீர் கொண்டு வைத்தார். வாளியில் யூரியா இருந்துள்ளதை கவனிக்காமல் தண்ணீர் எடுத்து வைத்ததில் 6 குதிரைகள் தண்ணீரை குடித்துள்ளது. யூரியா தண்ணீரை குடித்த 6 குதிரைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்து இறந்தன. மற்ற குதிரைகள் வேறு வாளியில் இருந்த தண்ணீரை குடித்ததால் உயிர் தப்பியது.
திருவிழாவை முன்னிட்டு சந்தையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்ட குதிரைகளில் 6 குதிரைகள் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பல்வேறு வடிவமைப்புடன் கூடிய போர்வைகள் தயாரிக்கப்படுகிறது.
- கைத்தறி மூலம் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை போர்வையில் நெய்யப்பட்டது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கைத்தறி மூலம் தயாரிக்கப்படும் போர்வை உலக அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
கைத்தறி மூலம் பல்வேறு வடிவமைப்புடன் கூடிய போர்வைகள் தயாரிக்கப்படுகிறது. கைத்தறி மூலம் காந்தி, கிரிக்கெட் வீரர் டோனி மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை போர்வையில் நெய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னிமலையின் பாரம்பரியத்தின் அடையாளமான கைத்தறி போர்வையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம், மேஜர் முகுந்த் வரதராஜனின் படமும் இணைந்து கைத்தறி நெசவாளர் அப்புசாமி என்பவரால் நெய்யப்பட்டது.
இந்த போர்வையை சென்னிமலை ஒன்றிய தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் சார்பிலும், நெசவாளர்கள் அப்புசாமி இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து கைத்தறி போர்வையை பரிசாக வழங்கினர்.
- நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை செய்தியாளர்களுக்கு காண்பித்தார்.
- செல்போனில் காட்ட வேண்டாம், ஆதாரமாக கொடுங்கள் என்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் 3 முறை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணி தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகா நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக 6 முறை அழைத்தும் நயினார் நாகேந்திரன் அழைப்பை ஏற்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு நயினார் நாகேந்திரன், ஓ பன்னீர்செல்வம் என்னை அழைக்கவில்லை, நான் தான் அவரை செல்போனில் அழைத்தேன். ஓ.பன்னீர்செல்வம் சொல்வதுதான் ஆதாரமாக இருக்குமே தவிர அவரிடம் ஆதாரம் ஏதும் இருக்காது. அவர் என்னை குறை கூறுகிறார். நான் அவரைப்பற்றி குறை கூற மாட்டேன். ஏற்கனவே ஏற்பட்ட தொடர்பை அடுத்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். ஒரு முடிவு எடுத்துவிட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் ஒரு காரணத்தை கூறுகிறார் என்றார்.
இதனை தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் காண்பித்தார். அதில் கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி மற்றும் ஏப்.12 ஆகிய தேதிகளில் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை செய்தியாளர்களுக்கு காண்பித்தார்.
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் காட்டிய குறுஞ்செய்தி தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, செல்போனில் காட்ட வேண்டாம், ஆதாரமாக கொடுங்கள் என்று கூறி மேலும் பேச முற்பட்டபோது பிறகு பேசலாம் என கூறி நயினார் நாகேந்திரனை அண்ணாமலை அழைத்து சென்றார்.
- தண்ணீர் திறப்பு மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.
- பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் டிசம்பர் இறுதி வரையிலும் நன்செய் பாசனத்துக்கு உட்பட்ட 1 லட்சத்து 3500 ஏக்கர் நிலங்களுக்கும், ஜனவரி முதல் வாரத்தில் இருந்து ஏப்ரல் 30ம் தேதி வரை புன்செய் பாசனத்துக்குட்பட்ட 1 லட்சத்து 3500 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தண்ணீர் திறப்பு மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.
நடப்பாண்டில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் குந்தா, அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, மசினகுடி, மாயாறு போன்ற பகுதிகளிலும், வட கேரள மாநிலத்தில் உள்ள முக்காலி, அகளி போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதில் மேல் பவானி அருகே உற்பத்தியாகும் பவானி ஆற்று நீர் கேரளா வழியாக பாய்ந்து தமிழக- கேரள எல்லையில் உள்ள அத்திக்கடவு வழியாக பில்லூர் அணைக்கு பவானி ஆற்று நீர் வந்து சேருகிறது. தற்போது பில்லூர் அணையும் நிரம்பியதால் பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு பவானிசாகர் அணையை வந்தடைகிறது.
இதேபோல நீலகிரி மாவட்டத்தின் பைகாரா, கிளன்மார்க்கன், கூடலூர், சிங்காரா, மசினகுடி வழியாக பாயும் மாயாறு ஆற்று நீர் மோயாறு பள்ளத்தாக்கு வழியாக பாய்ந்து பவானிசாகர் அணையை வந்தடைகிறது. பவானி, மாயாறு ஆகிய 2 ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பவானிசாகர் அணை அதன் முழுக் கொள்ளளவையும் எட்டும் நிலையில் உள்ளது.
எனவே பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி உபரிநீர் பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எனவே பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே அதாவது ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்க அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் ஆகியோரும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர். தற்போது கீழ்பவானி வாய்க்கால் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் தண்ணீர் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என நீர்வளத் துறை அதிகாரிகள் கூறி வந்தனர். இந்நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று முன்கூட்டியே தண்ணீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் இன்று காலை நிலவரப்படி 100.04 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணையில் தற்போது 28.75 டிஎம்சி நீர் இருப்பு உள்ள நிலையில் அணைக்கு சராசரியாக 4509 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 3600 கன அடி நீர் பவானி ஆற்றின் வழியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.
நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு கீழ்பவானி பிரதான வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை அநேகமாக இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் வர வாய்ப்புள்ளது. எனவே, நாளை 31ம் தேதி மாலை 6 மணி முதல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.
- போலீசார் மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- மூன்று பேரும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்துள்ளதாக தகவல்.
ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் என மூன்று பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில், தந்தை நாகேந்திரன் (55) புற்றுநோயால் பாதிப்பு, தாய் சுஜிதா (45) தைராய்டு நோயால் பாதிப்பு, மகள் தான்ய லட்சுமி (20) மனநலம் பாதிப்பால் மூன்று பேரும் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மூன்று பேரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூன்று பேரும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- வேதனை அடைந்த விஜயகுமார் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.
- இறந்த சரோஜாவின் உடலை நல்லடக்கம் செய்யும் ஏற்பாட்டில் உறவினர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கொல்லம் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( 65). கிராம உதவியாளராக பணிபுரிந்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்று விட்டார். இவரது மனைவி சரோஜா பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் வேதனை அடைந்த விஜயகுமார் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். இந்நிலையில் இறந்த சரோஜாவின் உடலை நல்லடக்கம் செய்யும் ஏற்பாட்டில் உறவினர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்த விஜயகுமார் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அவர் வீட்டின் அருகே சற்று தொலைவில் மயானத்தில் விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மயானத்தில் தேடிய போது அங்கு ஒரு பகுதியில் ஒருவரது உடல் தீயில் எரிந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மயானத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது. அதில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை விஜயகுமார் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தனது மனைவியின் இறப்பை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் நான் இந்த விபரீத முடிவை எடுக்கப் போகிறேன். இதற்கு யாரும் பொறுப்பில்லை என்று எழுதப்பட்டிருந்தது.
இதனை அடுத்து மயானத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது விஜயகுமார் என தெரிய வந்தது. மனைவியின் பிரிவை தாங்க முடியாத துக்கத்தில் விஜயகுமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
மனைவி இறந்த துக்கத்தில், உடல் நல்லடக்கம் செய்வதற்குள் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கொல்கத்தாவில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது.
- கொல்கத்தாவில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது.
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையத்தில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் ஈரோடு வழியாக வந்து செல்கின்றன.
சமீப காலமாக வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு ரெயில் நிலையத்தில், மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பது குறித்து, ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொல்கத்தாவில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது.
அந்த ரெயிலின் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியை சோதனை செய்த போது அங்குள்ள கழிப்பறை அருகே கேட்பாரற்று ஒரு சாக்கு பை இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த சாக்கு பையை திறந்து பார்த்தபோது அதில் 6.50 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதனை யார் கொண்டு வந்தது? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். சமீப காலமாக ஈரோட்டில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தும் கும்பல் அதிகரித்து வருகிறது.
இதேபோன்று, ஈரோடு குயவன்திட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, ஈரோடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அப்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த ஒருவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அந்த நபரை விரட்டிப் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மரப்பாலத்தைச் சேர்ந்த முகேஷ் ( 23) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 3.450 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்கும் சம்பவம் அதிகரித்து வருவது போலீசாரையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
- வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஆசனூர் வனப்பகுதியில் சாலையோரம் உலா வந்தது.
- வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக யானைகள் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதைப்போல் கரும்பு லோடுகளை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளையும் ருசிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று ஒன்று கடந்து சில நாட்களாக சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லோடுகளை ஏற்றி வரும் லாரியை வழிமறித்து கரும்புகளை ருசித்து வருகிறது.
இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஆசனூர் வனப்பகுதியில் சாலையோரம் உலா வந்தது. அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி கரும்பு கட்டுதல் உள்ளதா என தேடியது. ஒவ்வொரு வாகனத்தையும் வழிமறித்து சாலையின் நடுவே நின்றதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
அப்போது அந்த வழியாக கரும்பு லோடுகளை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி தனது தும்பி கையால் கரும்பு கட்டிகளை கீழே போட்டு அந்த ஒற்றை யானை கரும்பை சுவைத்தது. ஒரு மணி நேரமாக சாலையில் நின்று கொண்டிருந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே அந்தப் பகுதியில் போக்குவரத்து சீரானது. சமீப காலமாக ஆசனூர் வனப்பகுதியில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும்.
- வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.
சத்தியமங்கலம்:
தமிழகத்தில் 4 புலிகள் காப்பகங்களில் அதிக பரப்பளவு கொண்ட வனப்பகுதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் இரவு கடம்பூர் அருகே கே.என்.பாளையம் வழியாக செல்லும் நெடுஞ்சாலையில் வாகன ஒட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நெடுஞ்சாலையில் புலி ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றது. கிட்டத்தட்ட 15 நிமிடத்திற்கு மேலாக அந்த புலி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது. பின்னர் அந்த புலி வனப்பகுதிக்குள் சென்றது. புலி நெடுஞ்சாலையில் நடந்து சென்றதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். பொதுவாக இந்த வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். ஆனால் தற்போது புலி நடமாட்டமும் உறுதி செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது,
தற்போது வனப்பகுதியில் மழை பெய்து மரம் செடிகள் நன்கு வளர்ந்து பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால்வன விலங்குகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகிறது. தற்போது கடம்பூர் அடுத்த கே.என் பாளையம் செல்லும் வனப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளது. எனவே இந்த வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- பங்களாபுதூர் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்
- ஒரு மூட்டை மணல் 120 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்தது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்துள்ள கள்ளிப்பட்டி காந்திசிலை அருகே பங்களாபுதூர் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் வாகனத்தின் உள்ளே ஏராளமான ஆற்று மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து மணல் கடத்தி வந்த வேன் மற்றும் அதில் வந்த நான்கு பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கள்ளிப்பட்டி அடசப்பாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரன்(35) ,கணக்கம்பாளையம் புதுகாலனியை சேர்ந்த சுரேந்திரன்(45), சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சசிக்குமார்( 28), அடசப்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வன்(21) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் நான்குபேரும், கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் மீன்பிடிப்பதற்காக செல்வதுபோல இரவு நேரத்தில் பரிசலுடன் சென்று ஆற்றில் உள்ள மணலை திருட்டுத்தனமாக அள்ளி வந்து அதை மூட்டைகளாக கட்டி வாகனத்தில் கடத்தி சென்றதும், அதை ஒரு மூட்டை மணல் 120 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்தது.
மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் ,75 மணல் மூட்டைகளுடன் ஆற்றில் மணல் அள்ளப்பயன்படுத்திய பரிசல் மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பங்களாபுதூர் போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மணல் கடத்தல் சம்பவத்தில் கைதாகியுள்ள சந்திரசேகரன் என்பவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், இவர் பல ஆண்டுகளாக தொடர்ந்து பவானி ஆற்றில் மீன் பிடிப்பதாக கூறி பரிசலில் மணலை அள்ளி வந்து மூட்டைகளாக கட்டி விற்பனை செய்து வருவதாகவும் தெரியவருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறு உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோதமாக திருடி விற்பனை செய்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கல்லீரல் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை செயல்பட தடை விதித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கல்லீரல் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
- நபர் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நபர் குறித்த அடையாளம் தெரியவந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கர்நாடகம்-தமிழகம் இடையே நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ள இந்த பகுதியில் யானை, சிறுத்தை, புலி சர்வ சாதாரணமாக சாலையை கடந்து செல்லும். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் ஒற்றை யானை ஒன்று நின்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக காரில் வந்த நபர் அந்த ஒற்றை யானைக்கு வாழைப்பழத்தை கொடுக்க முயன்றார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த யானை அந்த நபரை துரத்த தொடங்கியது. அந்த நபர் அலறியடித்து கொண்டு தான் வந்த காரில் உயிர் தப்பினார்.
இந்த காட்சியை அங்கிருந்த சில வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நபர் குறித்த அடையாளம் தெரியவந்தது.
வனத்துறை விசாரணையில் கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (58) என தெரிய வந்தது. அவருக்கு வனத்துறை சார்பில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் அவரிடம் இதுபோன்று வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.






