என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மீன் பிடிப்பதுபோல் மணல் திருட்டில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் உள்பட 4 பேர் கைது
    X

    மீன் பிடிப்பதுபோல் மணல் திருட்டில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் உள்பட 4 பேர் கைது

    • பங்களாபுதூர் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்
    • ஒரு மூட்டை மணல் 120 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்தது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்துள்ள கள்ளிப்பட்டி காந்திசிலை அருகே பங்களாபுதூர் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் வாகனத்தின் உள்ளே ஏராளமான ஆற்று மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    அதனைத்தொடர்ந்து மணல் கடத்தி வந்த வேன் மற்றும் அதில் வந்த நான்கு பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கள்ளிப்பட்டி அடசப்பாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரன்(35) ,கணக்கம்பாளையம் புதுகாலனியை சேர்ந்த சுரேந்திரன்(45), சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சசிக்குமார்( 28), அடசப்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வன்(21) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் நான்குபேரும், கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் மீன்பிடிப்பதற்காக செல்வதுபோல இரவு நேரத்தில் பரிசலுடன் சென்று ஆற்றில் உள்ள மணலை திருட்டுத்தனமாக அள்ளி வந்து அதை மூட்டைகளாக கட்டி வாகனத்தில் கடத்தி சென்றதும், அதை ஒரு மூட்டை மணல் 120 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்தது.

    மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் ,75 மணல் மூட்டைகளுடன் ஆற்றில் மணல் அள்ளப்பயன்படுத்திய பரிசல் மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பங்களாபுதூர் போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மணல் கடத்தல் சம்பவத்தில் கைதாகியுள்ள சந்திரசேகரன் என்பவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், இவர் பல ஆண்டுகளாக தொடர்ந்து பவானி ஆற்றில் மீன் பிடிப்பதாக கூறி பரிசலில் மணலை அள்ளி வந்து மூட்டைகளாக கட்டி விற்பனை செய்து வருவதாகவும் தெரியவருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறு உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோதமாக திருடி விற்பனை செய்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×