என் மலர்
ஈரோடு
- நல்லூர் ஊராட்சி சார்பாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
- போராட்டம் காரணமாக அந்த வழியாக சாலையின் இரு புறம் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நல்லூர் ஊராட்சி சார்பாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். ஆனாலும் முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று காலை அந்த பகுதி சேர்ந்தயை 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் புளியம்பட்டி-சத்தியமங்கலம் ரோடு பகுதியில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக அந்த வழியாக சாலையின் இரு புறம் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் புளியம்பட்டி போலீசார் மற்றும் பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரி இந்திராணி, உங்கள் பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட அங்கிருந்து கலந்து சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரமாக நடந்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- சில வாகன ஓட்டிகள் சிறுத்தையும் நடமாட்டத்தை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.
- திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் திம்பம் மலைப்பகுதி தமிழக - கர்நாடகவை இணைக்கும் முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதி மத்தியில் அமைந்துள்ள திம்பம் மலைப்பகுதியை 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். திம்பம் மலைப்பகுதியில் யானை, சிறுத்தை நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து உள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பாதையில் உள்ள சாலையோரம் அடர்ந்த பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையோரம் உலா வந்தது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்தினர்.
சில வாகன ஓட்டிகள் சிறுத்தையும் நடமாட்டத்தை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். சிறிது நேரம் சாலையோரம் உலா வந்த சிறுத்தை சாலை தடுப்பு சுவரை தாண்டி பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
இதன் பிறகு வாகன ஓட்டிகள் அங்கிருந்து இருந்து கிளம்பிச் சென்றனர். சமீபகாலமாக திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
எனவே திம்பம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- வீட்டில் உள்ள தொட்டியில் மகன் ஆதிரன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு, காந்திநகரை சேர்ந்தவர் கவின் பிரசாத். இவரது மனைவி அமராவதி (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 1 வயதில் ஆதிரன் என்ற மகன் இருந்தார். கவின் பிரசாத் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு வழக்கம் போல் வேலை முடிந்து கவின் பிரசாத் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் மனைவி, குழந்தையுடன் சாப்பிட்டு தூங்கு சென்று விட்டனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் பிரசாத் எழுந்து பார்த்தபோது மனைவி அருகில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது மனைவி தூக்குப்போட்டு கொண்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அமராவதியை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே வரும் வழியிலேயே அமராவதி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனைக் கேட்டு கவின் பிரசாத் கதறி அழுதார். பின்னர் மகன் ஞாபகம் வந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள தொட்டியில் மகன் ஆதிரன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வெள்ளோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குழந்தை ஆதிரனை கொன்று தாய் அமராவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப தகராறில் அமராவதி மகனை கொன்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதனிடையே, திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அமராவதி கணவரே மனைவியையும், குழந்தையையும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவர் கவின் பிரசாத்திடம் நடத்திய விசாரணையில் மனைவி அமராவதியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் இருவரையும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதை அடுத்து குழந்தையையும், மனைவியையும் கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் கவின் பிரசாத்தை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
- கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு அருகே கவின் பிரசாத் என்பவரின் மனைவி அமராவதி தனது குழந்தையை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை கொல்லப்பட்டது தொடர்பாகவும், தாய் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீலகிரி, கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தாலும் மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. நீலகிரி, கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91.06 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து உள்ளது. நேற்று காலை அணைக்கு 4, 966 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 15 ஆயிரத்து 199 கன அடியாக அதிகரித்து வருகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி நீரும், தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 450 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீரும் என மொத்தம் 1,355 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தாலும் மற்ற அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.50 அடியாக உள்ளது. இதே போல் வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 22.47 அடியாக சரிந்து உள்ளது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.35 அடியாக சரிந்து உள்ளது.
- சில வியாபாரிகள் சாலையோரம் காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
- சாலையோரம் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோபி-சத்தி மெயின் ரோட்டில் பெரியார் திடலில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிகாலையிலேயே வந்து தாங்கள் விளைவித்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
சில வியாபாரிகள் சாலையோரம் காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் காலை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து போலீசாருக்கும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையம், போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ஒருங்கிணைந்து சாலையோரம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரமாக தேங்காய் வியாபாரி ஒருவர் கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் கடையில் இருந்த பொருட்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வியாபாரி கோபி ஈரோடு-சத்தி ரோட்டில் தேங்காயை போட்டு உடைத்து போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் சமாதானம் அடைந்த வியாபாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிறுவியது. தொடர்ந்து சாலையோரம் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.
- சண்டைக்கா மட்டும் அல்லாமல் இறைச்சிக்காவும் சண்டை சேவல் வளர்ப்பு உள்ளது.
- சேவலை கையில் எடுக்கும் போது காலில் செருப்பு அணிய மாட்டோம் இது சண்டை கோழி வளர்ப்பில் ஒரு வரைமுறையாக உள்ளது.
சென்னிமலை:
சேவல் சண்டை விளையாட்டு தமிழகத்தில் மட்டும் அல்லாமல் கர்நாடக, அந்திரா, தெலுக்கான, மஹாராட்ரா, உள்ளிட்ட மாநிலங்களில் கிராம புறங்களில் பண்டிகை காலங்களில் சிறப்பாக நடக்கிறது. தமிழகத்தில் சேவல் சண்டை சூதாட்டமாக மாறி விட்ட நிலையில் அரசு அதற்கு தடை விதித்துள்ளது.
ஆனால், மற்ற மாநிலங்களில் நடந்து வருகிறது. அதுவும், தமிழ்நாட்டு சேவலுக்கு மற்ற மாநிலங்களில் அதிக மவுசும், விற்பனை வாய்ப்பு, நல்ல விலையும் கிராக்கியும் உள்ளதால் தற்போது இந்த சண்டை கோழி வளர்ப்பு தொழில் சூடு பிடித்துள்ளது. சென்னிமலை சுற்றுவட்டார பகுதியில் மட்டும் சிறிதும், பெரிதுமாக 50க்கும் மேற்பட்ட சண்டை சேவல் பண்ணைகள் உருவாகி உள்ளது. அதிக படியான வாலிபர்கள் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர்.
சண்டை சேவல் குஞ்சு தேர்வில் இருந்து தொடங்கி அதை வளர்பதற்கு பெரும் முக்கியதுவம் கொடுத்து சண்டைகோழி வளர்ப்பில் வாலிபர்கள் ஆர்வமுடன் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில், காகம், வல்லூறு, ஆந்தை, கீரி, மயில், செங்கருப்பு, கோழிக்கறிப்பு, ஜல்லிக்கருப்பு என பல்வேறு ரகங்கள் உள்ளது. கேராள மாநில மக்கள் அழகுக்காக வீடுகளில் சேவல் வளர்க்க வாங்குகின்றனர் அதில், கிளி மூக்கு, கட்ட மூக்கு, விசிறி வால், மீட்டர் வால் என்ற ரகங்கள் அங்கு விற்பனை ஆகிறது அதுவும் ஒரு சேவல் ரூ.10 ஆயிரம் தொடங்கி ரூ.30 ஆயிரம் வரை விலை போகிறது.
அதே போல் சேவல் சண்டையானது, சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை, கத்தி கால் சண்டை என ஒவ்வொறு மாநிலத்திலும் வெவ்வேறு விதிகளோடு பல்வேறு பெயர்களில் நடத்தப்படுகின்றன.

சண்டை சேவல் வளர்ப்பு சாவல் மிகுந்த வேலை தான் என்கிறார் சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவில் சண்டை சேவல் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சீனிவாசன், (46), இது குறித்து அவர் கூறும் போது:
பொதுவாகவே, சேவல்களுக்கு சக சேவல்களை அடக்கி ஆளவேண்டும் என்ற மனநிலை உண்டு. ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட சேவல்களாக இருந்தாலும் கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி குணம் இருக்கும். அதனால் அவற்றைச் சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை. சண்டைப் பயிற்சி யோடு, நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி என சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவல்களுக்கு கொடுக்கப்படுகிறது.
சண்டை கோழிவளர்ப்பில் உணவு முக்கியம் வழக்கமான உணவை விட உடலை வலிமைப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி, அத்தி பழம் போன்றவை கொடுக்கப்படும். சண்டைக்குத் நன்கு தயாராகிய சேவல்களைப் சண்டை ஒத்திகை பார்த்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். ஒரு கோழி குறைந்தது ரூ.5 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை சண்டை திறனை பொறுத்து விலை போகிறது. மேலும், சண்டை கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.1,200 வரை விலை போகிறது. சண்டைக்கா மட்டும் அல்லாமல் இறைச்சிக்காவும் சண்டை சேவல் வளர்ப்பு உள்ளது.
தமிழக பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிகட்டுக்கு தடைவிதித்த போது தமிழகத்தில் வாலிபர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி போன்று சூதாட்டம் இல்லாத சேவல் சண்டை வேண்டும் என்கிற கோரிக்கை வாலிபர்கள் மத்தியில் வலுவாகி கொண்டே வருகிறது. சேவலை கையில் எடுக்கும் போது காலில் செருப்பு அணிய மாட்டோம் இது சண்டை கோழி வளர்ப்பில் ஒரு வரைமுறையாக உள்ளது.
'சேவல் சண்டையை போட்டியாகப் பார்க்காமல், இதை ஒரு பாரம்பரிய விளையாட்டாகப் பார்க்க வேண்டும். இந்த வீர விளையாட்டு ராஜாக்கள் காலத்தில் இருந்தே நடத்தப்பட்டு வருகிறது''எப்படி ஜல்லிகட்டு விளையாட்டுக்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டதோ அதே போல் சேவல் சண்டை அழியாமல் தடுக்க போராட்டம் நடத்தி அழிந்து வரும் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டையை மீட்டெடுக்க வேண்டும்' என்கிறார்.
- 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டும்.
- தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் ஊது குழலாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
ம.தி.மு.க. 31-வது பொதுக்குழு இன்று காலை 10 மணி அளவில் ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மகாலில், அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப்பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழுவில் 28 நிறைவேற்றப்பட்டன.
* 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டும்.
* 2026 சட்டப்பேரவை தேர்தலில் கழகம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும். இந்த ஆண்டு அறிஞர் அண்ணா 117-வது பிறந்த நாள் விழா மாநாட்டை திருச்சியில் நடத்துவது.
* பல்வேறு சதிகளின் மூலமாக தமிழ் மொழியையும், தமிழரின் தொன்மை வரலாற்றையும் இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை ஆகும்.
* கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். வக்ப் திருத்த சட்டத்தையும் திரும்பப் பெறுவதற்கு ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து போராட வேண்டும்.
* தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் ஊது குழலாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக கட்டமைப்புகளை மேம்படுத்தி ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களின் கல்வி நலனை பேணி பாதுகாக்க வேண்டும்.
* மருத்துவ காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். முழு மதுவிலக்கு என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில் படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும்.
* பருத்திக்கு விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத இறக்குமதி வரியை ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் மாத இறுதி வரையாவது நீக்க வேண்டும். பருத்தி விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. செயற்கை இழை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு விதிமுறை ஏற்புடையதல்ல. அவற்றை நீக்கினால் செயற்கை இழை ஜவுளித்தொழில் மிக சிறப்பான வளர்ச்சி பெறும்.
* ரசாயன கழிவு நீரை காகித ஆலைகள் பவானி நதியில் கலப்பதால் பவானி ஆற்றில் வரும் நீர் ரசாயன கழிவுநீராக மாறி உள்ளது. இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக புற்றுநோய் மற்றும் இதர தோல் நோய்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
* இதனை ம.தி.மு.க.வும், இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் செய்தி ஊடகங்களும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், தமிழக அரசின் கவனத்திற்கும் எடுத்துச்சென்று உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இதனைக் கருத்தில் கொண்டு பவானி நதியைக் காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையின் கழிவு நீரால் சேதமடைந்துள்ள நிலத்தடி நீர்வளத்தை சீர்செய்திட அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தைப் போல ஒரு சிறப்பு திட்டத்தை பெருந்துறை வட்டத்தில் செயல்படுத்திட வேண்டும்.
* ஈரோட்டின் மாசு கட்டுப்பாட்டை உறுதி செய்து இயல்பு நிலையை மீட்டெடுக்க வேண்டும். பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி, கொங்கு மண்டலத்தின் நீராதாரத்தை மேம்படுத்தி வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியையும் மேம்படுத்திட வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தின் பழமையான காளிங்கராயன் கால்வாய் உட்பட மாசடைந்துள்ள கால்வாய்கள், ஆறுகள் உள்ளிட்டவற்றை மாசின்றி தூய்மையாகப் பராமரிக்க சிறப்புத் திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வரும் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
- 3.30 மணியளவில் வைகோ செய்தியாளர்களை சந்திக்கிறார்.
ஈரோடு:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பல்வேறு கட்சிகள் இப்போதே வியூகம் வகுத்து வருகின்றன. அதன்படி ம.தி.மு.க.வும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.
இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ம.தி.மு.க.வின் 31-வது மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூடுகிறது. ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு பொதுக்குழு கூடுகிறது. அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் தலைமை தாங்குகிறார்.
பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி, துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என தமிழக முழுவதும் இருந்து 1,700 பேர் பங்கேற்கிறார்கள். காலை 11:30 மணிக்கு பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மதியம் வைகோவும், அதைத்தொடர்ந்து துரை வைகோ பேசுகின்றனர்.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வரும் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இதே போல் சில முக்கிய தீர்மானங்கள், அறிவிப்புகள் வெளியிட வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மதியம் 3.30 மணியளவில் வைகோ செய்தியாளர்களை சந்திக்கிறார்.
இதுபற்றி, கொங்கு மண்டல ம.தி.மு.க., மூத்த நிர்வாகி கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ம.தி.மு.க.,வின் பொதுக்குழுவை பிரமாண்டமாக நடத்துவதுடன், கட்சி நிர்வாகம், கூட்டணி, தேசிய அரசியலில் முக்கிய முடிவுகளை அங்கு அறிவிப்பு செய்வார்கள். கட்சியின் நிர்வாகிகள் மாற்றம், பதவி அறிவிப்பு கூட அப்போது நடக்கும். கடந்த, 30-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில், 2024 ஆகஸ்ட் 4-ல் நடந்தது. அக்கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, 'நீட்' தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடன் நடத்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் மத்திய அரசை முன்வைத்து நிறைவேற்றினர். அதை மையமாக கொண்டு ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டம் திட்டமிடப்பட்டது.
இச்சூழலில், ஈரோட்டில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் வரும், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் எத்தனை தொகுதிகளை பெறுவது, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், வி.சி.க., போன்ற கட்சிகள் 'கூடுதல் இடம் கேட்போம்' என குரல் கொடுக்கும் நிலையில், ம.தி.மு.க.,வின் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிப்பார்கள்.
ஈரோடு உட்பட கொங்கு மண்டலத்தில் மறைந்த எம்.பி., கணேசமூர்த்திக்கு பின், வலுவான ஒருங்கிணைப்பாளர் இல்லை என்பதால், வரும், 2026 சட்டசபை தேர்தலில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் ம.தி.மு.க.வுக்கு 'சில தொகுதிகளை வழங்கி' முக்கியத்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்த வாய்ப்புள்ளது. ஏற்கனவே கணேசமூர்த்தி எம்.பி., எம்.எல்.ஏ.,வாக இப்பகுதியில் இருந்ததால், தங்களுக்கான அங்கீகாரத்தை பெற வலியுறுத்துவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் காரணமாக நாளை நடைபெறும் மாநில பொதுக்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தினமும் ஏராளமான மக்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
- இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, புலி, மான், கரடி காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அருகே வனப்பகுதி உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் வனப்பகுதியில் மத்தியில் அமைந்து உள்ளது. ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, கோயம்புத்தூர் போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான மக்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது. இதனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார்.
சிறிது தூரம் சாலையோரம் நின்று கொண்டிருந்த சிறுத்தை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது,
தற்போது பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் சக்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வரும் சிறுத்தை வந்து செல்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.
குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- ஒரு சில நேரங்களில் யானைகள் கூட்டமாக வந்து லாரிகளில் உள்ள கரும்புகளை ருசித்தும் வருகின்றன.
- அந்தியூர் மற்றும் பர்கூர் பகுதிகளில் பலாபபழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளன.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் 33 குட் கிராமங்கள் உள்ளன. இந்த வனப் பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள்வசித்து வருகின்றன.
இந்த வனப்பகுதிகளில் உள்ள யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறி ரோட்டில் சுற்றி திரிகிறது. இதே போல் மலைலப்பகுதி வழியாக வரும் வாகனங்களை வழி மறித்து கரும்பு உள்ளிட்ட உணவுகள் உள்ளதா எனவும் யானைகள் தேடி வருகிறது. ஒரு சில நேரங்களில் யானைகள் கூட்டமாக வந்து லாரிகளில் உள்ள கரும்புகளை ருசித்தும் வருகின்றன.
மேலும் பலாப்பழங்களை யானைகள் அதிகளவில் உண்டு வருகிறது. வனப்பகுதிகளில் வாகனங்களில் பலாப்பழங்கள் எடுத்து சென்றால் அவைகளை ருசிப்பதற்காக யானைகள் கூட்டம், கூட்டமாக குவிய தொடங்கி விடுகிறது. இதே போல் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளில் பலா பழங்கள் உள்ளன. கிராம பகுதிகளில் யானைகள் புகுந்து அவற்றை தின்று வருகிறது.
தற்போது பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளது. இந்த சீசன் ஆனி மாதம் கடைசி வரை இருக்கும். இந்த நிலையில்ஆனி மாதம் தொடங்கி உள்ள நிலையில் அந்தியூர் மற்றும் பர்கூர் பகுதிகளில் பலாபபழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளன. பலாப்பழம் வாசனைக்காக வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் பலாப்பழங்களை ருசிப்பதற்காக யானைகள் வந்து பலாபழத்தை ருசித்து செல்கிறது.
இந்த நிலையில் பர்கூரை அடுத்த துருசன்னம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் பலா மரத்தில் பலாப்பழங்கள் பழுத்து தொங்கிக்கொண்டு இருந்தன. இதனை ருசிப்பதற்காக வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக வருகிறது. இதை தொடர்ந்து யானைகள் பலாப்பழத்தை அங்கேயே பறித்து உண்டு ருசித்துச் சென்றது.
அப்போது யானை மிகுந்த சத்தத்தோடு பிளிரிய படி சென்றது. இதனால் பர்கூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்கள் குடியிருப்புக்குள் யானை வந்துவிடுமோ என்ற ஒரு வித அச்சத்தோடு இருந்து வருகிறார்கள்.
- யானைகள் உணவு தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் கூட்டமாக சுற்றி வருகின்றன.
- கடந்த சில நாட்களாகவே ஆசனூர் மலை கிராமம் பகுதியில் ஒற்றை யானை உலா வந்து கொண்டிருக்கிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது ஆசனூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக ஆசனூர் அருகே யானைகள் உணவு தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் கூட்டமாக சுற்றி வருகின்றன.
இந்நிலையில் பழைய ஆசனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜ கண்ணா என்பவரது விவசாய தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த ஒற்றை யானை தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை சேதப்படுத்தியது. அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை முட்டி தள்ளிவிட்டு சென்றது. மேலும் அங்கிருந்த தண்ணீர் தொட்டியை பார்த்ததும் தண்ணீர் குடித்து சென்றது. பின்னர் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்து அந்த ஒற்றை யானையை மீண்டும் வனபகுதிக்குள் விரட்டினர் இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. யானை நடமாட்டாம் காரணமாக ஆசனூர் மலை கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மலை கிராம மக்கள் கூறியாவது:-
கடந்த சில நாட்களாகவே ஆசனூர் மலை கிராமம் பகுதியில் ஒற்றை யானை உலா வந்து கொண்டிருக்கிறது. திடீரென விவசாய தோட்டத்திற்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதங்கள் ஏற்படுத்தி வருகின்றன. பொதுமக்கள் ஒன்றிணைந்து பட்டாசுகளை வெடிக்க வைத்து விரட்டி வருகிறோம். இருந்தாலும் பயிர்கள் தொடர்ந்து சேதம் அடைந்து வருவதால் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். மனித உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






