என் மலர்
ஈரோடு
- வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும்.
- வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும்.
சத்தியமங்கலம்:
தமிழகத்தில் 4 புலிகள் காப்பகங்களில் அதிக பரப்பளவு கொண்ட வனப்பகுதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் இரவு கடம்பூர் அருகே கே.என்.பாளையம் வழியாக செல்லும் நெடுஞ்சாலையில் வாகன ஒட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நெடுஞ்சாலையில் புலி ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றது. கிட்டத்தட்ட 15 நிமிடத்திற்கு மேலாக அந்த புலி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது. பின்னர் அந்த புலி வனப்பகுதிக்குள் சென்றது. புலி நெடுஞ்சாலையில் நடந்து சென்றதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். பொதுவாக இந்த வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். ஆனால் தற்போது புலி நடமாட்டமும் உறுதி செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது,
தற்போது வனப்பகுதியில் மழை பெய்து மரம் செடிகள் நன்கு வளர்ந்து பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால்வன விலங்குகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகிறது. தற்போது கடம்பூர் அடுத்த கே.என் பாளையம் செல்லும் வனப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளது. எனவே இந்த வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- பங்களாபுதூர் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்
- ஒரு மூட்டை மணல் 120 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்தது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்துள்ள கள்ளிப்பட்டி காந்திசிலை அருகே பங்களாபுதூர் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் வாகனத்தின் உள்ளே ஏராளமான ஆற்று மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து மணல் கடத்தி வந்த வேன் மற்றும் அதில் வந்த நான்கு பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கள்ளிப்பட்டி அடசப்பாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரன்(35) ,கணக்கம்பாளையம் புதுகாலனியை சேர்ந்த சுரேந்திரன்(45), சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சசிக்குமார்( 28), அடசப்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வன்(21) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் நான்குபேரும், கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் மீன்பிடிப்பதற்காக செல்வதுபோல இரவு நேரத்தில் பரிசலுடன் சென்று ஆற்றில் உள்ள மணலை திருட்டுத்தனமாக அள்ளி வந்து அதை மூட்டைகளாக கட்டி வாகனத்தில் கடத்தி சென்றதும், அதை ஒரு மூட்டை மணல் 120 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்தது.
மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் ,75 மணல் மூட்டைகளுடன் ஆற்றில் மணல் அள்ளப்பயன்படுத்திய பரிசல் மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பங்களாபுதூர் போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மணல் கடத்தல் சம்பவத்தில் கைதாகியுள்ள சந்திரசேகரன் என்பவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், இவர் பல ஆண்டுகளாக தொடர்ந்து பவானி ஆற்றில் மீன் பிடிப்பதாக கூறி பரிசலில் மணலை அள்ளி வந்து மூட்டைகளாக கட்டி விற்பனை செய்து வருவதாகவும் தெரியவருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறு உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோதமாக திருடி விற்பனை செய்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கல்லீரல் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை செயல்பட தடை விதித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கல்லீரல் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
- நபர் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நபர் குறித்த அடையாளம் தெரியவந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதியில் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கர்நாடகம்-தமிழகம் இடையே நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ள இந்த பகுதியில் யானை, சிறுத்தை, புலி சர்வ சாதாரணமாக சாலையை கடந்து செல்லும். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் ஒற்றை யானை ஒன்று நின்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக காரில் வந்த நபர் அந்த ஒற்றை யானைக்கு வாழைப்பழத்தை கொடுக்க முயன்றார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த யானை அந்த நபரை துரத்த தொடங்கியது. அந்த நபர் அலறியடித்து கொண்டு தான் வந்த காரில் உயிர் தப்பினார்.
இந்த காட்சியை அங்கிருந்த சில வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நபர் குறித்த அடையாளம் தெரியவந்தது.
வனத்துறை விசாரணையில் கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (58) என தெரிய வந்தது. அவருக்கு வனத்துறை சார்பில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் அவரிடம் இதுபோன்று வனவிலங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
- வனப்பகுதியில் உள்ள யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடமாடுவது வழக்கம்.
- தேங்காய்மட்டை பாரம் ஏற்றி வந்த லாரியையும் தடுத்து நிறுத்தி கரும்பு உள்ளதா என அந்த யானை தேடியது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம்-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
வனப்பகுதியில் உள்ள யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடமாடுவது வழக்கம்.
இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் விளையும் கரும்புகள் வெட்டப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டு வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
லாரியில் இருந்து சிதறி கீழே விழும் கரும்பு துண்டுகளை தின்பதற்காக யானைகள் சாலையை நோக்கி படையெடுக்கின்றன. இந்த நிலையில் பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் கரும்பு துண்டுகளை தின்று பழகியதால் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து கரும்பு கட்டுகளை தேடுவது தொடர்கதை ஆகி வருகிறது.
இந்நிலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே திம்பம் மலை அடிவாரத்தில் சாலையில் நடமாடிய ஒற்றை யானை அந்த வழியாக வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி கரும்பு கட்டு இருக்கிறதா? என ஒவ்வொரு வாகனங்களை நிறுத்தி பார்த்து வந்தது.
அப்போது அந்த வழியாக கர்நாடகாவில் இருந்து கரும்பு கட்டுகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை இந்த ஒற்றை யானை வழிமறித்து தடுத்து நிறுத்தியது. பின்னர் தனது தும்பிக்கையால் கரும்பு கட்டுகளை ருசி பார்த்தது. யானை பக்கவாட்டில் சென்றதும் ஓட்டுநர் லாபகரமாக லாரியை இயக்கி யானையிடமிருந்து தப்பினார். தொடர்ந்து அந்த வழியாக வந்த தேங்காய்மட்டை பாரம் ஏற்றி வந்த லாரியையும் தடுத்து நிறுத்தி கரும்பு உள்ளதா என அந்த யானை தேடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரம் சாலையில் நின்ற அந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதியில் சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- 124 திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
- ரூ. 414கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
ஈரோடு திண்டல் மலையில் வேலாயுத சாமி கோவில் உள்ளது. இந்து அறநிலைதுறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தற்போது ராஜகோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து கோவில் முன்பு 186 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திராவிட மாடல் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு திருக்கோவில் திருப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்து சமய அறநிலையத்துறை சட்டம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து நடைபெறாத எண்ணிக்கையில் திருப்பணிகள் நடந்து வருகிறது.
மன்னர் ஆட்சி காலத்தை விட திராவிட மாடல் ஆட்சியில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3,500 கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு விழா நடைபெறும்.
இந்த ஆக்கபூர்வமான பணிக்கு துறையின் சார்பில் கேட்கப்படும் நிதிகள் வழங்கப்படுகிறது. இதுவரை 1,120கோடி ரூபாய் அரசிடம் இருந்து மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 124 திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
பழனி இரண்டாம் கட்ட திருப்பணிக்கு ரூ. 58 கோடி அரசே வழங்கி 54 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் கோவில் 14 ஆண்டுகளுக்கு பிறகு பெரு திட்டத்தின் கீழ் ரூ. 414கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் செப்டம்பர், நவம்பர் மாதம் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
திருத்தணி கோவிலுக்கு ஆந்திர மாநில பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் கோவிலுக்கு மாற்று பாதை உருவாக்க ரூ. 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான சாமிமலைக்கு 100 படிகள் இருப்பதால் படி ஏறும் பக்தர்கள் சிரமம் கருதி மின் தூக்கி அமைக்கவும், மருதலை கோவிலும் படி கட்டுகள் இருப்பதால் மின் தூக்கி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆட்சியில் அனைத்து சைணவம், வைணவம் கடவுளுக்கும் சிறப்பு சேர்ப்பதுடன் முருகனுக்கு மாநாடு நடத்தி பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்.
ஆசியாவில் மிக உயரமான 186 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணிகள் ஈரோடு திண்டல் கோவிலில் அமைக்கப்பட்ட உள்ளது.
உலக அளவிலான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காலம் கடந்து நிற்கும் வகையில் ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் சிலை அமைக்கப்படும்.
இந்த ஆட்சியில் மட்டும் 1,400கோடி ரூபாய் வரை உபயதாரர்கள் நிதி வந்துள்ளது,
கடந்த எந்த ஆட்சியில் இதுபோன்ற உபயதாரர்கள் நிதி வந்ததில்லை. உபயதாரர்கள் நிதி பயன்படுத்தப்பட வில்லை. இந்த ஆட்சியில் அனுமதி அளித்ததால் உபயதாரர்கள் நிதி வழங்க அதிகமாக முன் வந்தனர்.
இந்த ஆட்சியில் உபயதாரர்கள் நிதி எண்ணத்திற்கு ஏற்ப திருப்பணிகள் செலவு செய்யப்படுகிறது. மனம், எண்ணம் நிறைவடைந்ததால் உபயதாரர்கள் நிதி வழங்கி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தாளவாடி வனத்துறையினர் கரும்பு காட்டுக்குள் புகுந்த மூன்று யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
- கரும்பு தோட்டத்தை சுற்றி சுற்றி அந்த மூன்று யானைகளும் ஓடி வந்தன.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, போன்ற வ னவிலங்குகள் வசித்து வருகின்றன.
சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட மரூர் செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள அந்தோணி என்பவரது கரும்பு தோட்டத்தில் 3 யானைகள் புகுந்தது. பட்டப்பகலில் யானைகள் கரும்பு தோட்டத்தில் புகுந்ததால் விவசாய கூலி தொழில் பணிகள் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் இதுபற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி வனத்துறையினர் கரும்பு காட்டுக்குள் புகுந்த மூன்று யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 3 யானைகளும் கரும்பு காட்டை விட்டு வெளியே செல்லாமல் தொடர்ந்து கரும்பு காட்டுக்குள் உலா வந்தது. கரும்பு பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது. யானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டனர்.
ஆனாலும் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி கரும்பு காட்டுக்குள்ளேயே பதுங்கிக் கொண்டது. கரும்பு தோட்டத்தை சுற்றி சுற்றி அந்த மூன்று யானைகளும் ஓடி வந்தன.
பொதுமக்களும் வனத்துறையினரும் இணைந்து தோட்டத்தில் பதுங்கி இருக்கும் யானையை விரட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். ஒருபுறம் வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். மறுபுறம் பொதுமக்கள் சத்தங்களை எழுப்பியும், பட்டாசுகளை வெடித்தும் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒரு வழியாக இரவு 11 மணி அளவில் அந்த மூன்று யானைகளும் கரும்பு தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றன. கிட்டத்தட்ட 12 மணி நேரமாக வனத்துறையினரையும், பொதுமக்களையும் அந்த மூன்று காட்டு யானைகளும் அலறவிட்டன.
எனினும் வனப்பகுதியில் இருந்து எந்நேரமும் மீண்டும் அந்த யானை கூட்டம் தோட்டத்துக்குள் வர வாய்ப்பு உள்ளதால் வனத்துறையினர் அந்த பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன
- யானை கூட்டமாக சாலையை கடக்கும் காட்சியை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் உணவு தண்ணீர் தேடி சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வருவதும், கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
இந்நிலையில் ஆசனூர் அருகே அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைக் கூட்டங்கள் குட்டிகளுடன் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றன. யானை கூட்டமாக சாலையை கடக்கும் காட்சியை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் சற்று தொலைவிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டனர். சிலர் யானைகள் கடக்கும் காட்சியை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் சாலையை கடந்து சிறிது நேரம் நெடுஞ்சாலை ஓரம் சுற்றி திரிந்து கொண்டிருந்தன. பின்னர் மீண்டும் அந்த யானை கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து தொடங்கியது.
யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகிறது. யானைகள் கூட்டமாக செல்லும்போது வாகன ஓட்டிகள் சுற்றுலா பயணிகள் அவைகளுக்கு எந்த ஒரு தொந்தரவும் செய்யக்கூடாது. ஆசனூர் வழியாக யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்.
குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் தங்களது வாகனத்தை வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
- யானை காரை துரத்தும் காட்சியை வாகன ஓட்டி செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
- சாலையில் செல்லும் யானைகளுக்கு வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் அளிக்கக்கூடாது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
தமிழகம்-கர்நாடக இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சாலையின் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. சமீபகாலமாக பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் சென்று வருகின்றன. இதனால் இந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு பண்ணாரி அடுத்த சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டி ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை நெடுஞ்சாலையில் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. அந்த வாகன ஓட்டி ஹாரனை அடித்ததால் திடீரென ஆவேசம் அடைந்த அந்த ஒற்றை யானை அந்த காரை துரத்த தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாகன ஓட்டி காரை பின்னோக்கி வேகமாக இயக்கினார். சிறிது தூரம் அந்த காரை விரட்டி சென்ற அந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னர் வாகன ஓட்டி அங்கிருந்து சென்றார். யானை காரை துரத்தும் காட்சியை இந்த வாகன ஓட்டி செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் ஒரே இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ந்து வருகிறது. சாலையில் செல்லும் யானைகளுக்கு வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் அளிக்கக்கூடாது. இதை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன.
- வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தை ஒன்று தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் ஆசனூர் அருகே கடந்த சில நாட்களாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தை ஒன்று கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டை ஆடி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆசனூர் சோதனை சாவடி அருகே அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை சாலையோரம் சென்ற குதிரையை துரத்த தொடங்கியது. சிறுத்தையை பார்த்து பயந்து குதிரை ஓட தொடங்கியது. ஆனால் சிறுத்தை விடாமல் சென்று துரத்தி அந்த குதிரையை தாக்கி கழுத்தில் கடித்து கொன்றது. பின்னர் மீண்டும் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் ஆசனூர் கிராம மக்கள் மீண்டும் பீதியில் உள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது,
எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே அடர்ந்த வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தை ஒன்று தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இதனால் எங்கள் கிராம மக்கள் குறிப்பாக குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் ஏற்கனவே தகவல் தெரிவித்து விட்டோம். அவர்கள் இனியும் தாமதிக்காமல் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
- அக்கடிதம் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 7 தளங்களில், மாவட்ட வழங்கல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 7 தளங்கள் உள்ளடக்கிய கூடுதல் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு தினமும் நூற்று க்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு கலெக்டருக்கு நேற்று மாலை தபால் வந்தது. அதனை கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
அதில், கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு சிலர் திட்டமிடுவதாகவும், இந்த மாதத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், அந்த நபர்கள் குறித்த தகவல் தனக்கு தெரியும் என்றும், தனது உயிருக்கு பாதுகாப்பு அளித்தால் அவர்கள் குறித்த விபரத்தை தெரிவிப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.
அனுப்பியவர் முகவரியில் வக்கீல் ஒருவரின் பெயர் இடம் பெற்று இருந்தது. இக்கடிதத்தை அடிப்படையாக கொண்டு, ஈரோடு சூரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன், ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், அடையாளம் தெரியாத நபர் கடிதம் எழுதியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அக்கடிதம் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் தென்காசியில் இருந்து அந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் இன்று காலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு செயலிழப்பு தடுப்பு பிரிவு நிபுணர்கள், மோப்பப்படை பிரிவினர் வந்து சோதனையிட்டனர். மோப்பப் படை பிரிவு பவானி நாய் வரவழைக்கப்பட்டது. முதலில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில், கார் பார்க்கிங் பகுதி, ஒவ்வொரு அலுவலகமாக சென்று சோதனையிட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் இன்று பரபரப்பாக காட்சியளிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொருத்தரமாக சென்று வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.
- மக்கள் காலி குடங்களுடன் இன்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், ஜீவா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கே குடிநீர் குழாய் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீப காலமாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் புளியம்பட்டி ரோடு அண்ணா நகர் பஸ் நிறுத்தம் இன்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உங்கள் பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து களைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.






