என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு நாளை முதல் தண்ணீர் திறப்பு
- தண்ணீர் திறப்பு மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.
- பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் டிசம்பர் இறுதி வரையிலும் நன்செய் பாசனத்துக்கு உட்பட்ட 1 லட்சத்து 3500 ஏக்கர் நிலங்களுக்கும், ஜனவரி முதல் வாரத்தில் இருந்து ஏப்ரல் 30ம் தேதி வரை புன்செய் பாசனத்துக்குட்பட்ட 1 லட்சத்து 3500 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தண்ணீர் திறப்பு மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.
நடப்பாண்டில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் குந்தா, அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, மசினகுடி, மாயாறு போன்ற பகுதிகளிலும், வட கேரள மாநிலத்தில் உள்ள முக்காலி, அகளி போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதில் மேல் பவானி அருகே உற்பத்தியாகும் பவானி ஆற்று நீர் கேரளா வழியாக பாய்ந்து தமிழக- கேரள எல்லையில் உள்ள அத்திக்கடவு வழியாக பில்லூர் அணைக்கு பவானி ஆற்று நீர் வந்து சேருகிறது. தற்போது பில்லூர் அணையும் நிரம்பியதால் பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு பவானிசாகர் அணையை வந்தடைகிறது.
இதேபோல நீலகிரி மாவட்டத்தின் பைகாரா, கிளன்மார்க்கன், கூடலூர், சிங்காரா, மசினகுடி வழியாக பாயும் மாயாறு ஆற்று நீர் மோயாறு பள்ளத்தாக்கு வழியாக பாய்ந்து பவானிசாகர் அணையை வந்தடைகிறது. பவானி, மாயாறு ஆகிய 2 ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பவானிசாகர் அணை அதன் முழுக் கொள்ளளவையும் எட்டும் நிலையில் உள்ளது.
எனவே பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி உபரிநீர் பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எனவே பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே அதாவது ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்க அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் ஆகியோரும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர். தற்போது கீழ்பவானி வாய்க்கால் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் தண்ணீர் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என நீர்வளத் துறை அதிகாரிகள் கூறி வந்தனர். இந்நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று முன்கூட்டியே தண்ணீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் இன்று காலை நிலவரப்படி 100.04 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணையில் தற்போது 28.75 டிஎம்சி நீர் இருப்பு உள்ள நிலையில் அணைக்கு சராசரியாக 4509 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 3600 கன அடி நீர் பவானி ஆற்றின் வழியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.
நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு கீழ்பவானி பிரதான வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை அநேகமாக இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் வர வாய்ப்புள்ளது. எனவே, நாளை 31ம் தேதி மாலை 6 மணி முதல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.






