என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆசனூர் அருகே கரும்பு துண்டுகளைத் தேடி வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு
- வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஆசனூர் வனப்பகுதியில் சாலையோரம் உலா வந்தது.
- வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக யானைகள் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதைப்போல் கரும்பு லோடுகளை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளையும் ருசிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று ஒன்று கடந்து சில நாட்களாக சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லோடுகளை ஏற்றி வரும் லாரியை வழிமறித்து கரும்புகளை ருசித்து வருகிறது.
இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஆசனூர் வனப்பகுதியில் சாலையோரம் உலா வந்தது. அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி கரும்பு கட்டுதல் உள்ளதா என தேடியது. ஒவ்வொரு வாகனத்தையும் வழிமறித்து சாலையின் நடுவே நின்றதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
அப்போது அந்த வழியாக கரும்பு லோடுகளை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி தனது தும்பி கையால் கரும்பு கட்டிகளை கீழே போட்டு அந்த ஒற்றை யானை கரும்பை சுவைத்தது. ஒரு மணி நேரமாக சாலையில் நின்று கொண்டிருந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே அந்தப் பகுதியில் போக்குவரத்து சீரானது. சமீப காலமாக ஆசனூர் வனப்பகுதியில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.






