என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • இளைஞர் பள்ளத்தில் விழுந்தது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், பள்ளத்தில் விழுந்த இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த தன்ராஜ் என்பவர் டால்ஃபின் நோஸ் பகுதியில் நடந்து சென்றபோது 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

    இளைஞர் பள்ளத்தில் விழுந்தது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், பள்ளத்தில் விழுந்த இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, சிறு காயங்களுடன் இளைஞரை பத்திரமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

    • மக்கள், பெரியவர்கள் என அனைவரும் கையில் கருப்பு கொடியை ஏந்தி கோவில் முன்பாக அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் சிங்காரக்கோட்டை அருகே எஸ்.பாறைப்பட்டியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் வருடம் தோறும் இங்குள்ள காளியம்மன், விநாயகர், கருப்பண்ணசாமி மற்றும் முனியாண்டி கோவில் திருவிழாவை நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை 2 நாட்கள் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கருணாநிதி, தனபால், முருகன். ஆகிய 3 பேர் தூண்டுதலின் பேரில் ஊர் திருவிழாவை நடத்த விடாமல் சிலர் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து விட்டு ஊரை காலி செய்யப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.

    மேலும் இந்த நிலையில் ஊர் பொதுமக்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கையில் கருப்பு கொடியை ஏந்தி கோவில் முன்பாக அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது. ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதன் வரிசையில் பாறைப்பட்டி கிராமமும் இணைந்துள்ளது.

    • நான் விஜயகாந்த் இல்லாமல் பொது செயலாளராகவும் வந்து உள்ளேன். கூட்டணி தர்மத்தை மதிக்க வந்துள்ளேன்.
    • தொப்பூர் மேம்பாலம் ரூ.770கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை உறுதியாக கொண்டு வருவோம்.

    தருமபுரி:

    தருமபுரி, கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி கூட்டணி கட்சி வேட்பா ளர்களை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

    தருமபுரி மாவட்டம் காரி மங்கலம் மற்றும் நல்லம் பள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் டாக்டர் அசோகனை ஆதரித்து தே.மு.தி.க. பொது செயலாளர் பிரமேலதா திறந்தவெளி வேனில் நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பொதுமக்களிடையே பிரேமலதா பேசியதாவது:-

    எடப்படி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இல்லாமல் பொது செயலாராகவும், நான் விஜயகாந்த் இல்லாமல் பொது செயலாளராகவும் வந்து உள்ளேன். கூட்டணி தர்மத்தை மதிக்க வந்துள்ளேன்.

    எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டம்.ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் போல விஜயகாந்த் பெயரில் வாழ்நாள் முழுவதும் விஜயகாந்த் நினைவிடத்தில் உணவு அளித்து வருகிறோம். விஜயகாந்த் நினைவு இடத்தில் தினந்தோறும் அன்னதானம் செய்து வருகிறோம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விஜயகாந்தின் ஆசையை நிறைவேற்றியே தீருவோம்.

    தொப்பூர் மேம்பாலம் ரூ.770கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை உறுதியாக கொண்டு வருவோம். தொடர் உயிர் சேதங்களை தடுக்க டெல்லியில் குரல் கொடுப்போம். ஒகேனக்கல் காவிரி உபரி நீர்திட்டம் உறுதியாக நிறைவேற்றி தருவோம்.

    தருமபுரி மொரப்பூர் ரெயில் பாதை திட்டம் உறுதியாக பெறுவோம். தருமபுரி மாவட்டம் வறண்ட பூமியாக உள்ளது. அதனை கலைத்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். நெல் மூட்கைள் பாதுகாக்க உறுதியாக கிடங்குகள் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பாதுகாப்போம்.

    தி.மு.க. அறிவித்த எந்த திட்டமாவது நிறைவேற்றியுள்ளதா? நீட் தேர்வு ரத்து, நகை கடன் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி என எதுவும் செய்யவில்லை. அனைவருக்கும் வேலை வாய்பபை தந்தார்களா? இல்லை. மாறாக விலைவாசி, மின் கட்டணம் உயர்த்தியுள்ளனர். தெருவுக்கு ஒரு டாஸ்மாக் கடை திறந்துள்ளனர்.

    லாட்டரி விற்பனை, பாலியல் வன்கொடுமை அனைத்தும் இங்கு நடக்கிறது. தமிழகத்தில் எல்லா இடத்திலும் கஞ்சா நடமாட்டம் தலைவிரித்தாடுகிறது. அதனை தடுக்க நீங்கள் அளிக்கும் ஒற்றை ஓட்டில்தான் மாற்ற முடியும்.

    தேர்தலில் அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும். 40 தொகுதிகளிலும் கூட்டணி தர்மத்தோடு சரித்திர சாதனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயப்பிரகாசை ஆதரித்து, ஓசூர் ராம் நகரில், தே.மு.தி.க. பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோரின் ஆசியுடன் அமைக்கப்பட்டுள்ள எங்கள் கூட்டணி, வெற்றிக்கூட்டணி, ராசியான கூட்டணி ஆகும். மக்கள் நலனுக்காக இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இன்று, தமிழகத்தில் டாஸ்மாக், பெருகிவிட்ட கஞ்சா விற்பனை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை அதிகரித்து, போதை தமிழகமாக மாற்றிய பெருமை, ஆளும் தி.மு.க. அரசின் வரலாறாக மாறியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என்ற நிலையை மாற்றி இந்த தமிழகத்தை மக்களுக்கான தமிழகமாக நிச்சயம் மாற்றிக் காட்டு வோம். ஜிஎஸ்டி வரி விதிப்பால், அனைத்து வியாபாரிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி.யை திரும்ப பெற, டெல்லியில் குரல் கொடுப்போம்.

    தேர்தலுக்கு முன்பு, அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்றனர். ஆனால் தேர்தலுக்கு பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்கின்றனர். அப்படியானால் தகுதிவாய்ந்த பெண்கள் யார்? மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் இணைந்து நிச்சயமாக போராடும். அ.தி.மு.க. தலைமையிலான இந்த ராசிக் கூட்டணி, 40 இடங்களிலும் அமோக வெற்றி பெறுவது உறுதி.

    இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

    • வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஏரி பகுதியில் முகாமிட்டு படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
    • போக்குவரத்து போலீசார் போதிய அளவு இல்லாததால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வழக்கமாக சுற்றுலா பயணிகள் வருகை கோடை காலத்தில் அதிகரித்து காணப்படும்.

    தற்போது பள்ளி இறுதி தேர்வு முடிந்துள்ளதாலும் தொடர் விடுமுறை காரணமாகவும், சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாகவும் கொடைக்கானலை நோக்கி தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    கொடைக்கானலிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஏரி பகுதியில் முகாமிட்டு படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். ஏரியின் நடுவே செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு அதன் அருகே செல்லும்போது ஷவர் பாத்தில் குளிப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதால் சுற்றுலா பயணிகள் அதிகமாக படகு சவாரி செய்து வருகின்றனர்.

    குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வரும் சுற்றுலா பயணிகள் ஒரே படகில் குழுவாக சென்று இதுபோன்ற குதூகலத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குணா குகை பகுதியிலும் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிந்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். அதன் அருகே நின்று குணா படத்தில் வரும் பாடலை பாடி சமூக வலைதலங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சுற்றுலா இடங்களான தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு பைன்பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்தும் குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பின் காரணமாக பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் போதிய அளவு இல்லாததால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    வரும் வாரங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து காவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெண்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கி வந்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
    • ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    பழனி:

    முருகபெருமானின் 3-ம் படை வீடான பழனியில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருவிழா கடந்த 18ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் கடந்த 24-ந் தேதி நடந்தது. 27ந் தேதியுடன் பங்குனிஉத்திர திருவிழா நிறைவு பெற்றது.

    திருவிழா நிறைவடைந்த நிலையிலும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பொதுவாக பங்குனி மாதம் முழுவதும் பக்தர்கள் வருகை தந்து தீர்த்தம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவார்கள். தற்போது தொடர் விடுமுறை காரணமாக இன்று காலை முதல் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி கிரேனில் பறவைக்கா வடியாக வந்தனர். வழக்கமாக இதுபோன்ற பறவை காவடியில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே வரும் நிலையில் தற்போது பெண்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கி வந்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

    மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் ஆடிப்பாடி உற்சாகமாக கிரி வீதியை சுற்றி மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணியை சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவிலில் சாமி தரிசனத்துக்கு சுமார் 2 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டது. கடும் வெயிலை யும் பொருட்படுத்தாது பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகரிப்பால் ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    • கார் பழனி அருகே வந்தபோது அதனை சுற்றி வளைத்தனர்.
    • காரில் வந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு காரில் வந்து மர்ம நபர் திருடிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வந்தது. அவர் வந்த காரின் எண்ணை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே பதிவெண் கொண்ட கார் திருப்பூரிலும் நடமாடி வந்தது. மேலும் அந்த காரில் இருந்த மர்மநபர் திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு வீடுகளில் கைவரிசை காட்டி வந்துள்ளார். இவரை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் பழனி டி.எஸ்.பி. தனஞ்செயன் மேற்பார்வையில் பழனி தாலுகா இன்ஸ்பெக்டர் தென்னரசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் கார்த்திகேயன், முபாரக் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது சம்மந்தப்பட்ட பதிவெண் கொண்ட கார் பழனி அருகே வந்தபோது அதனை சுற்றி வளைத்தனர். காரில் வந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்ததில் அவர் சிவகங்கை மாவட்டம் தெற்கு தமராக்கி பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் அதிபதிராஜா (வயது 23) என தெரியவந்தது.

    இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விதவிதமான கார் பதிவெண்களை கொண்டு பகல் நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரிடமிருந்து 2 கார்கள், போலி பதிவெண்கள், கையுறை, முகமுடி, பூட்டை உடைக்க பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் ஆகியவற்றை கைப்பறினர்.

    மேலும் அதிபதிராஜாவை பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காட்டை சேர்ந்த பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சுள்ளான் அகிலன், நித்தீஸ், கேடி கண்ணன், மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த அராத் என்ற பாசில் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • பசுமாட்டு பாலை குப்புசாமி குடும்பத்தினர் விற்பனை செய்ததில்லை.
    • முதலாவதாக பிறந்த கன்று குட்டியையும் பெருமாள் கோவிலுக்கு கொடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல்:

    குஜிலியம்பாறை அருகே கரிக்காலி கோமுட்டிபட்டியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது51). இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு கண்ணன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. கண்ணன் நீண்ட நாட்களாக வாய் பேச முடியாமல் இருந்துள்ளார்.

    இதற்காக வழிபாடு நடத்திய குப்புசாமி கரூர் தாந்தோன்றி மலை பெருமாள் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக பசு மாட்டை வளர்த்து வந்தார். ஒவ்வொரு ஆண்டும் பெருமாள் கோவிலுக்கு குடும்பத்துடன் பசுமாட்டை அழைத்து சென்று வழிபாடு செய்துள்ளார்.

    இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணன் வாய் பேச தொடங்கி உள்ளார். இதனால் குப்புசாமி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் அப்பகுதி கிராம மக்கள் பசுமாட்டை கோவில் மாடாக நினைத்து வணங்கி வந்தனர். இந்த நிலையில் அந்த பசு திடீரென உயிரிழந்தது கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குப்புசாமி வீட்டு முன்பு ஏராளமான மக்கள் ஒன்று திரண்டு பசுமாட்டை குளிப்பாட்டி அலங்காரம் செய்து பூமாலையிட்டு இறுதிச்சடங்குகள் செய்தனர்.

    முன்னதாக தாந்தோன்றி மலை பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பல்வேறு அர்ச்சனைக்கு பின்னர் தோட்டத்து நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறந்த பசுமாடு இதுவரை 10 கன்றுகளை ஈன்றுள்ளது. இந்த பசுமாட்டு பாலை குப்புசாமி குடும்பத்தினர் விற்பனை செய்ததில்லை.

    கன்று குட்டிகளுக்கே கொடுத்து விடுவார். மேலும் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு பசுமாட்டு பாலை இலவசமாக கொடுத்து வந்துள்ளார். முதலாவதாக பிறந்த கன்று குட்டியையும் பெருமாள் கோவிலுக்கு கொடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பசுமாடு இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    • இது குறித்து ராமுத்தாய் தல்லாக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குளிச்சிபட்டியைச் சேர்ந்தவர் ராமுத்தாய் (வயது 72). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் நடராஜன். கப்பலில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு மதுரை ஆத்திகுளம் குறிஞ்சி நகரில் உள்ளது.

    இந்த வீட்டில்தான் ராமுத்தாய் தங்கி இருந்தார். நடராஜன் அனுப்பிய ரூ.15 கோடியே 62 லட்சத்து 35 ஆயிரத்து 236 பணம் ராமுத்தாயின் சகோதரி மகன் பாலமுருகனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன் மூலம் மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டது.

    இந்த சொத்துக்களுக்கு பாலமுருகன் காப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும் ராமுத்தாய் வசம் இருந்த நகை மற்றும் சொத்துக்களை பாலமுருகன் மற்றும் அவரது மனைவி சேர்ந்து வெற்றுத்தாளில் கையெழுத்து போடுமாறு மிரட்டி வந்துள்ளனர். இதனால் ராமுத்தாய் சொத்து ஆவணங்கள் அனைத்தையும் மதுரையில் உள்ள முகவரிக்கு மாற்றியுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்த பாலமுருகன் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் ராமுத்தாயிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் ரூ.1000 பவுன் தங்கம், வைர நகைகளை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

    இது குறித்து ராமுத்தாய் தல்லாக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இந்த வழக்கு மதுரை மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பாலமுருகன் என்ற வைகை பாலன் ஓ.பி.எஸ். அணியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள இவரது மனைவியை தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் இருந்து பணத்தை திருடி தனது மனைவிக்கு அனுப்பி விடுவது வழக்கம்.
    • கடந்த சில நாட்களாக இவர் போடியில் தங்கி இருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள ஜக்கமநாயக்கன்பட்டி ராமநாதன் நகரை சேர்ந்தவர் தம்பிராஜ் (வயது46). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மீது பல்வேறு ஏ.டி.எம். திருட்டு வழக்குகள் உள்ளது.

    ஏ.டி.எம். மையங்களில் நின்று கொண்டு அங்கு வரும் கிராமப்புற பெண்கள் மற்றும் மூதாட்டிகளிடம் பணம் எடுத்து தருவதாக அவர்களது கார்டை வாங்கி அந்த பணத்தை திருடிச் சென்றார். இவர் மீது தேனியில் 3 வழக்குகளும், திண்டுக்கல்லில் 3, ராஜபாளையத்தில் 2, வாலந்தூரில் 2, செக்காணூரணியில் 2, திருமங்கலத்தில் 3, சென்னையில் 1, ஆந்திராவில் 2, கேரளாவில் 1, கர்நாடகாவில் 4 வழக்குகள் உள்ளன. இவரை பல்வேறு போலீஸ் நிலையங்களில் போலீசார் தேடி வந்தனர்.

    இவர் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் இருந்து பணத்தை திருடி தனது மனைவிக்கு அனுப்பி விடுவது வழக்கம்.

    கடைசியாக அவர் கைவரிசை காட்டிய ஏ.டி.எம். மையத்தில் இருந்து அவரது புகைப்படத்தை கைப்பற்றி தேனி உள்பட பல்வேறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக இவர் போடியில் தங்கி இருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கோவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜ் தலைமையில் 3 பேர் கொண்ட தனிப்படை போலீசார் போடி வந்து தம்பிராஜை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    4 மாநிலங்களில் கைவரிசை காட்டிய பிரபல ஏ.டி.எம். கொள்ளையன் கைது செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. 

    • இருசக்கர வாகனங்கள் கூட செல்லமுடியாது என்பதால் இங்கு விளைவிக்கப்படும் விவசாய பொருட்கள் அனைத்தும் குதிரை மற்றும் கழுதைகள் மூலமாகவும், தலைச்சுமையாகவும் கொண்டு செல்லப்படுகிறது.
    • ஒருசில இடங்களில் சோலார் மின்வசதி செய்யப்பட்டிருந்தாலும் அது முழுமையாக கிடைப்பதில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு மலை கிராமங்களில் தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு பயன்படும் உபகரணங்கள் ஆகியவை குதிரை, கழுதைகள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது.

    தேனி மாவட்டம் போடி குரங்கனி செல்லும் சாலையில் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. காரிப்பட்டி மற்றும் ராசிமலை கிராமம். கேரளாவுக்கு நிகராக இப்பகுதியில் ஏலக்காய், காப்பி, மிளகு போன்ற பணப்பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் இந்த கிராமத்திற்கு செல்ல சாலை வசதி கிடையாது. இருசக்கர வாகனங்கள் கூட செல்லமுடியாது என்பதால் இங்கு விளைவிக்கப்படும் விவசாய பொருட்கள் அனைத்தும் குதிரை மற்றும் கழுதைகள் மூலமாகவும், தலைச்சுமையாகவும் கொண்டு செல்லப்படுகிறது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மேம்பட்டு வரும் நிலையில் நிலவில் சந்திராயன் தரையிறங்கிய நிலையிலும் கூட இதுபோன்ற மலை கிராமங்கள் இன்னும் தமிழகத்தில் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கக்கூடிய பெரும்பாலான பகுதிகளில் மின்சார வசதி கிடையாது. ஒருசில இடங்களில் சோலார் மின்வசதி செய்யப்பட்டிருந்தாலும் அது முழுமையாக கிடைப்பதில்லை.

    தற்போது இந்த கிராமங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளன. இந்த கிராமங்களுக்கு முதல்நாளே குதிரைகளை தயார்படுத்தி எடுத்துச்செல்ல வேண்டும். அதேபோல தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களும் முதல்நாளே அங்கு சென்று இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால் இதுபோன்ற சிரமத்தை தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் சந்தித்து வருகின்றனர்.

    இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களான அடுக்கம், வெள்ளக்கவி உள்ளிட்ட பல கிராமங்களிலும் சாலைவசதி இல்லாததால் தற்போது வரை குதிரைகள் மூலமே வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது.

    தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சியினரிடம் மலைகிராம மக்கள் தங்களது அடிப்படை பிரச்சனையான சாலை, குடிநீர் வசதிகளையாவது செய்து தரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • திண்டுக்கல் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் திண்டுக்கல்லில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியினரின் அறிமுகக் கூட்டம் நடந்தது. அந்த மேடையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

    அங்கு பேசிய முபாரக், "என்னுடைய அப்பா 2015-ல் தவறிப்போய்விட்டார். என்னுடைய தாயார் 2022-ல் இறந்துபோய்விட்டார். தாயும் தந்தையுமில்லாத எனக்கு தாயாக தந்தையாக எனக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தோடு நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். ஒரு அப்பா என்னுடைய திண்டுக்கல்லார் (திண்டுக்கல் சீனிவாசன்) இன்னொரு அப்பா நத்தம் ஐயா (நத்தம் விஸ்வநாதன்) இருக்கிறார், இதற்கு மேல், என்ன வேண்டும் என்று நான் கேட்கிறேன்.

    காலையில் போன் பண்ணும்போதுகூட, அப்பா (திண்டுக்கல் சீனிவாசன்) என்னுடைய பிள்ளையை மாதிரி உன்னை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று சொன்னார். ஆயிரக் கணக்கான அப்பாக்கள், ஆயிரக் கணக்கான அம்மாக்கள், லட்சக் கணக்கான சகோதரர்கள், லட்சக் கணக்கான சகோதரிகள், லட்சக் கணக்கான மாமன்மார்கள், லட்சக் கணக்கான மாமிமார்கள் லட்சக் கணக்கான சித்தப்பா, சித்திக்களைக் கொண்டிருக்கிற நான் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

    இங்கே கிடைக்கிற வெற்றி என்பது வரலாற்று வெற்றியாக நான் கருதுகிறேன். ஒருபோதும் திண்டுக்கல்லையும் என்னையும் பிரிக்க முடியாது என்று சொல்லுகிற ஒரு புனிதமான உறவு நம் இருவருக்கும் இடையில் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே, திண்டுக்கல்லை விட்டு என்னைப் பிரிக்க முடியாது" என்று நெல்லை முபாரக் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

    நெல்லை முபாரக், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதனை அப்பாக்கள் என்று குறிப்பிட்டு பேசியபோது, திண்டுக்கல் சீனிவாசன் உணர்ச்சி வசப்பட்டு அடக்கமுடியாமல் விம்மி அழுதார்.

    • ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா.
    • 2-வது படையல் திருவிழா இன்று நடந்தது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி கிராமத்தில் ஊரணிக்கரையில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழா 2 வாரம் நடைபெறும்.

    அதன்படி முதல் திருவிழா கடந்த செவ்வாயன்று நடந்தது.இந்நிலையில் இந்த வருடத்திற்கான 2-வது படையல் திருவிழா இன்று நடந்தது. இதில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா தொடங்கியது.

    பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் வேட்டைக்காரனுக்கு பலியிடப்பட்டது. அதன்பின் நள்ளிரவு முழுவதும் பக்தர்களால் ஏராளமான அண்டாக்களில் அசைவ உணவு சமைக்கப்பட்டது.

    பின்னர் இன்று காலை சுவாமிக்கு அந்த உணவு படையல் போடப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதனையடுத்து நீண்ட வரிசையில் கூடியிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு அந்த உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் நத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. விடிய விடிய நடந்த இந்த திருவிழாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    ×