என் மலர்
சென்னை
- போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து தி.நகர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
- அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய சட்டதிருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த மசோதாவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். த.வெ.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று த.வெ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர்புஸ்சி ஆனந்த் தலைமையில் இன்று அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற புஸ்சி ஆனந்த் உள்பட ஆயிரக்கணக்கானோர் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை சாலையில் இருந்து போலீசார் கலைந்து போகச் சொல்லி அறிவுறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையோரமாக சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சென்னை முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் 16 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என்று ஏற்கனவே போலீஸ் தரப்பில் அறி வுறுத்தப்பட்டு இருந்தது. இப்படி அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமையில் அம்பத்தூர் பஸ் நிலையம் அருகே போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பங்கேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
'இஸ்லாமியர் பாதிக்கப்படும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை உடனே திரும்பப்பெற வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் வலி யுறுத்தலின் பேரில் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உங்களது சொத்தில் இன்னொருவர் பெயரை சேர்த்தால் ஏற்றுக் கொள்வீர்களா? சிறுபான்மையினரின் குரலை நெறிக்கும், ஜனநாயகத்துக்கு விரோதமான இந்த சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள். மகளிர் அணியினர் பங்கேற்றனர்.
சென்னை (தெ) வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் தி.நகர் க.அப்புனு தலைமையில் தி.நகர் தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து தி.நகர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டர்களை திடீரென இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்தெறிந்தனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்களிடம் மற்ற அரசியல் கட்சி போஸ்டர்கள் எல்லாம் அப்படியே இருக்கும்போது த.வெ.க. போஸ்டரை மட்டும் ஏன் கிழித்து எறிகிறீர்கள்? என த.வெ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- நீட் தேர்வு வந்த பின்னர் ஏழை எளியவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாது.
- மருத்துவ துறையில் நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
சென்னை:
நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்ட பூர்வமான நடவடிக்கைகள் குறித்து நடைபெறவுள்ள அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் தொடர்பாக தமிழக சட்ட சபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது:-
மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே முன்னோடியாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. நமது மாநிலத்தில் பல்லாண்டுகளாக பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை முறையே இந்த சாதனைகளுக்கு அடிப்படை.
2006-ம் ஆண்டில், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழிற்பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து, பள்ளிகளில் 12 ஆண்டுகள் பயிலக்கூடிய பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் சமூகநீதியையும், அனைத்துப் பிரிவு மாணவர்களுக்குச் சம வாய்ப்பையும் உறுதி செய்யக்கூடிய முன்னோடி சேர்க்கை முறையை தலைவர் கலைஞர் உருவாக்கினார்.
சமூகநீதியை நிலைநாட்டி, கிராமப்புறங்களில் வாழக்கூடிய ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கக்கூடிய இந்த முறையால் தான் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் பயனாக, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறோம்.
ஆனால், நீட் தேர்வு முறை செயல்படுத்தப்பட்ட பின்னர் இந்தத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற இயலாத கிராமப்புற மாணவர்களுக்கும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பு எட்டாக்கனி ஆகிவிட்டது.
மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளிலும் - பின்தங்கிய பகுதிகளிலும் வழங்கப்படும் மருத்துவச் சேவைகளையும் எதிர்காலத்தில் இந்த முறை பாதிக்கும்.
நீட் தேர்வானது பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது என்பதிலும், இந்தத் தேர்வின் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை முறை சமூகநீதிக்கு எதிரானதாக உள்ளது என்பதிலும், தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சிகள், சமூகச் சிந்தனையாளர்கள் என அனைவரிடமும் உள்ள கருத்தொற்றுமையின் அடிப்படையில், சரியான மாற்று மருத்துவ மாணவர் சேர்க்கை முறை குறித்து பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனின் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழுவினை இந்த அரசு அமைத்தது.
அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இந்தச் சட்டமன்றப் பேரவையில் 13.9.2021 அன்று, தமிழ்நாடு மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021 என்ற சட்டமுன்வடிவு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டும், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகும் கவர்னரால் ஒப்புதல் வழங்கப்படாமல் மறுபரிசீலனைச் செய்திட திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நிலையில் என் தலைமையில் 5.2.2022 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, இந்தச் சட்டமுன்வடிவினை மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, 8.2.2022 அன்று சட்டமுன்வடிவு மீண்டும் தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், கவர்னர் மூலம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து, ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை - ஆயுஷ் துறை - உள்துறை உயர்கல்வித் துறை என பல்வேறு அமைச்சகங்கள் கோரிய அனைத்து விளக்கங்களுக்கும் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய விளக்கங்களையும் வழங்கியது.
ஆனால் இவற்றையெல்லாம் ஏற்காமல், நமது மாணவர்களுக்குப் பெரும் பேரிடியாக ஒன்றிய அரசு நமது நீட் விலக்குச் சட்டத்திற்கு ஒப்புதலை மறுத்துள்ளது என்ற வருந்தத்தக்க செய்தியை இந்தப் பேரவையில் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றத்தின் மாண்பினை அவமதித்துள்ள ஒன்றிய அரசின் இத்தகைய எதேச்சாதிகார போக்கு, அரசமைப்புச் சட்டம் தந்துள்ள கூட்டாட்சிக் கருத்தியல் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களையும், இந்தப் பேரவையின் தீர்மானங்களையும் ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளவே இல்லை. இதனை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒன்றிய அரசு நமது கோரிக்கையை நிராகரித்து இருக்கலாம்; ஆனால், நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்து விடவில்லை என்பதையும் இந்தப் போராட்டத்தின் அடுத்தக் கட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய சட்ட பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடமும் கலந்தாலோசிக்கப்படும்.
மேலும், இதுதொடர்பாக அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களிடமும் ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் வரும் 9-ந்தேதி அன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட உள்ளது. அதில் நமது சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு இந்தத் தருணத்தில் தங்கள் வாயிலாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி கனவோடு பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக, அவர்களின் கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு உறுதியோடு சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதை இந்தப் பேரவையில் தங்கள் வாயிலாகத் தெரிவித்துக் கொண்டு, அமைகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- எங்கு பார்த்தாலும் தெய்வ கோசத்தோடு ஆன்மிக ஆட்சியாக இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
- திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டதும் தேவைப்படும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
சென்னை:
தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல்கள் தொடங்கின. அப்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது, சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ. அசோகன் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு, புவிசார் குறியீடு பெற வேண்டுமானால் அந்த பொருள் குறிப்பிட்ட பகுதியில் தோன்றியிருப்பதற்கான சான்றுகள் இருக்க வேண்டும். ஆனால், வரலாறு ஆவணங்கள் இல்லாததால் புவிசார் குறியீடு பெற சிரமம் உள்ளது. ஆவணங்கள் கிடைத்ததும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரன் பதில் அளித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாட்டில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த 3 கோவில்கள், 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5 கோவில்கள் என மொத்தம் 22 கோவில்களில் இன்று ஒரே நாளில் குடமுழுக்கு நடைபெறுகிறது. 350-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் மூலம் தமிழிலேயே குடமுழுக்கு நடைபெறுகிறது. எங்கு பார்த்தாலும் தெய்வ கோசத்தோடு ஆன்மிக ஆட்சியாக இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
இதனிடையே பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் எழுப்பிய கேள்விக்கு, இந்தியா முழுவதுமிலிருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருகை தருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தீர்க்க, கொடைக்கானல் பகுதியில் மாற்றுப்பாதை பணிகள் ஆய்வு செய்துள்ளேன். திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டதும் தேவைப்படும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
- எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
- பட்டினப்பாக்கத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
வக்பு வாரிய திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஏப்.4-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்து இருந்தது.
அதன்படி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று த.வெ.க. போராட்டம் நடத்த உள்ளது.
இந்நிலையில் த.வெ.க. போராட்டத்தை முன்னிட்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பட்டினப்பாக்கத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்திற்காக மேடை போட த.வெ.க.வினர் அனுமதி கேட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
- நுழைவுத்தேர்வுகள் மாணவர்களின் உயர்வுக்கு வகை செய்ய வேண்டும்.
- மாணவர்களைக் கொல்லும் நீட் தேர்வை இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பெரிய முத்தையம்பட்டியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்ற அச்சம் காரணமாக நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி சத்யாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவி சத்யா ஏற்கனவே 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதுடன், நீட் தேர்வையும் எழுதியுள்ளார். அதில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில் மீண்டும் நீட் தேர்வு எழுதுவதற்காக சேலம் ஜலகண்டாபுரத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், இம்முறையும் தம்மால் அதிக மதிப்பெண் பெற முடியாதோ என்ற அச்சத்தில் கடந்த 31-ஆம் தேதி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சத்யா நேற்று உயிரிழந்திருக்கிறார்.
நீட் தேர்வு மருத்துவப்படிப்பை ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாற்றுகிறது என்பது மட்டுமின்றி, அவர்களின் தன்னம்பிக்கையையும் சிதைக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்ததற்கு இது தான் காரணம் ஆகும். நடப்பாண்டில் மட்டும் கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி முதல் நேற்று வரையிலான ஒரு மாதத்தில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.
இந்தியாவில் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட பயன்கள் என்ன? பாதிப்புகள் என்ன? என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்திருந்தால், மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவோ, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை உனர்ந்து அதை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்திருக்கும்.
ஆனால், மத்திய அரசு அத்தகைய ஆய்வு எதையும் மேற்கொள்ளவில்லை. அதேபோல், தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அதன் மீது தொடர் நடவடிக்கை எடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சி செய்யவில்லை.
நுழைவுத்தேர்வுகள் மாணவர்களின் உயர்வுக்கு வகை செய்ய வேண்டும். மாறாக மாணவர்களின் உயிர்களை பறிப்பதாக இருக்கக்கூடாது. மாணவர்களைக் கொல்லும் நீட் தேர்வை இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதே நேரத்தில், கல்வியை விட உயிர் பெரிது என்பதை உணர்ந்து தற்கொலை முயற்சிகளை மாணவச் செல்வங்கள் கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
- வக்பு அமைப்புக்கு சொந்தமான பணம் ஏழை முஸ்லிம்களை சென்றடையும், இடைத்தரகர்களால் கொள்ளயைடிக்கப்பட்டது.
- வக்பு சொத்துகளை முறையாக பராமரித்து சட்டப்பூர்வமாக பயன்படுத்துவதை உறுதி செய்வது அவசியம்.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்கும் , எதிராக 232 வாக்கும் பதிவாகின.
இதைதொடர்ந்து, மாநிலங்களவையிலும் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்பிறகு, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பின்னர் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றி வரலாறு படைத்துள்ளது.
வக்பு சட்டத் திருத்த மசோதா சிறுபான்மை சமூகத்தின் வளர்ச்சிக்கும் வக்பு சொத்துகளின் பாதுகாப்புக்கும் உதவும்.
வக்பு அமைப்புக்கு சொந்தமான பணம் ஏழை முஸ்லிம்களை சென்றடையும், இடைத்தரகர்களால் கொள்ளயைடிக்கப்பட்டது.
வக்பு சொத்துகளை முறையாக பராமரித்து சட்டப்பூர்வமாக பயன்படுத்துவதை உறுதி செய்வது அவசியம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நேற்று தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
- வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியில் இருந்து தாறுமாறாக அதன் விலை எகிறி வருகிறது. கடந்த 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 480 ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தையும், 31-ந்தேதி ரூ.67 ஆயிரத்தையும் தாண்டியது.
அதன் தொடர்ச்சியாக மேலும் விலை உயர்ந்து, கடந்த 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.68 ஆயிரம் என்ற புதிய உச்சத்தையும் கடந்தது. நேற்று முன்தினம் விலை மாற்றம் இல்லாமல் சற்று ஆறுதலை கொடுத்த நிலையில், நேற்று மீண்டும் விலை உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 80-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,400-க்கும் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ரூ.67,200-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், கிலோவுக்கு நான்காயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
03-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480
02-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080
01-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080
31-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,600
30-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
03-04-2025- ஒரு கிராம் ரூ.112
02-04-2025- ஒரு கிராம் ரூ.114
01-04-2025- ஒரு கிராம் ரூ.114
31-03-2025- ஒரு கிராம் ரூ.113
30-03-2025- ஒரு கிராம் ரூ.113
- பள்ளிகளில் திரைப்பட படங்கள் ஒளிபரப்புவது, சாதி ரீதியிலான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனவும் புகார் மனு அலுவலகத்துக்கு வந்தது.
- பள்ளி ஆண்டு விழாவில் இதுபோன்ற புகார் தவிர்க்கப்பட வேண்டும்.
சென்னை:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
அதில், 'கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சோப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திரைப்பட பாடலுக்கு 5 மாணவர்கள் நடனம் ஆடியும், ஒரு மாணவர் வீரப்பன் படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை கையில் பிடித்து காட்டியதோடு, 2 மாணவர்கள் கட்சித் துண்டுகளை அணிந்து நடனம் ஆடியுள்ளதாகவும், அரசு பள்ளிகளில் இத்தகைய திரைப்பட படங்கள் ஒளிபரப்புவது, சாதி ரீதியிலான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனவும் புகார் மனு அலுவலகத்துக்கு வந்தது.
எனவே பள்ளி ஆண்டு விழாவில் இதுபோன்ற புகார் தவிர்க்கப்பட வேண்டும். அப்படி நடந்தால், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதியின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2.64 மில்லி கிராம் எடை கொண்ட செம்பினால் செய்யப்பட்ட "அஞ்சன கோல்" கிடைக்கப்பெற்றுள்ளது.
- அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் செம்பினால் செய்யப்பட்ட அஞ்சன கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட அகழாய்வில், 13 சென்டிமீட்டர் ஆழத்தில் 29.5 மில்லி மீட்டர் நீளமும், 6.6 மில்லி மீட்டர் சுற்றளவும், 2.64 மில்லி கிராம் எடையும் கொண்ட செம்பினால் செய்யப்பட்ட "அஞ்சன கோல்" கிடைக்கப்பெற்றுள்ளது.
பண்டையத் தமிழரின் செழிப்பான வாழ்க்கை முறையையும், அவர்கள் அன்றாடம் வேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்களைப் பயன்படுத்தியதையும் இக்கண்டுபிடிப்புகள் உலகிற்குப் பறைசாற்றுகின்றன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுச்சேரியில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் மாலை புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக முண்டியம்பாக்கத்தில் இருந்து மாலை 3.55 மணிக்கு புறப்படும்.
- எழும்பூரில் இருந்து வரும் 9, 16 ஆகிய தேதிகளில் காலை புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரெயில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, விழுப்புரத்தில் நிறுத்தப்படும்.
சென்னை:
திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* தாம்பரத்தில் இருந்து வரும் 9, 16 ஆகிய தேதிகளில் காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் விக்கிரவாண்டி-விழுப்புரம் இடையே பகுதி நேர ரத்துசெய்யப்பட்டு, விக்கிரவாண்டியில் நிறுத்தப்படும்.
* சென்னை எழும்பூரில் இருந்து வரும் 9, 16 ஆகிய தேதிகளில் காலை 6.35 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரெயில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, விழுப்புரத்தில் நிறுத்தப்படும்.
* விழுப்புரத்தில் இருந்து வரும் 9, 16 ஆகிய தேதிகளில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக விக்கிரவாண்டியில் இருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும்.
* விழுப்புரத்தில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக சேர்ந்தனூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.48 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும்.
* புதுச்சேரியில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக முண்டியம்பாக்கத்தில் இருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16127), அதற்கு மாற்றாக எழும்பூரில் இருந்து காலை 11.50 மணிக்கு (1 மணி நேரம் 30 நிமிடம் தாமதம்) புறப்பட்டு குருவாயூர் செல்லும்.
* திருச்சியில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (22676), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மதியம் 12 மணிக்கு (1 மணி நேரம் தாமதம்) புறப்பட்டு எழும்பூர் வரும்.
* புதுச்சேரியில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயில் (12868), அதற்கு மாற்றாக புதுச்சேரியில் இருந்து மாலை 3.05 மணிக்கு (50 நிமிடம் தாமதம்) புறப்பட்டு ஹவுரா செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிளஸ்-2 தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர்.
- மே 19-ந்தேதி தேர்வு முடிவை வெளியிடும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடக்கின்றன.
சென்னை:
பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி நிறைவு பெற்ற நிலையில், தற்போது எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி ஆரம்பித்து 25-ந்தேதியுடன் முடிவடைந்தது. அந்த தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க இருக்கின்றன.
இதற்காக மாநிலம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட இருப்பதாகவும், ஏற்கனவே திட்டமிட்டபடி, மே 19-ந்தேதி தேர்வு முடிவை வெளியிடும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடக்கின்றன.
- தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஆரம்ப விசாரணையை நடத்தி முடிப்பதற்கு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்.
- சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.
அதிமுக சின்னம் மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் "அதிமுக சின்னம் மற்றும் உட்கட்சி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஆரம்ப விசாரணையை நடத்தி முடிப்பதற்கு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.






