என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் த.வெ.க. போராட்டம்
- போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து தி.நகர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
- அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய சட்டதிருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த மசோதாவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். த.வெ.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று த.வெ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர்புஸ்சி ஆனந்த் தலைமையில் இன்று அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற புஸ்சி ஆனந்த் உள்பட ஆயிரக்கணக்கானோர் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை சாலையில் இருந்து போலீசார் கலைந்து போகச் சொல்லி அறிவுறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையோரமாக சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
சென்னை முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் 16 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என்று ஏற்கனவே போலீஸ் தரப்பில் அறி வுறுத்தப்பட்டு இருந்தது. இப்படி அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமையில் அம்பத்தூர் பஸ் நிலையம் அருகே போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பங்கேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
'இஸ்லாமியர் பாதிக்கப்படும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை உடனே திரும்பப்பெற வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் வலி யுறுத்தலின் பேரில் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உங்களது சொத்தில் இன்னொருவர் பெயரை சேர்த்தால் ஏற்றுக் கொள்வீர்களா? சிறுபான்மையினரின் குரலை நெறிக்கும், ஜனநாயகத்துக்கு விரோதமான இந்த சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள். மகளிர் அணியினர் பங்கேற்றனர்.
சென்னை (தெ) வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் தி.நகர் க.அப்புனு தலைமையில் தி.நகர் தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து தி.நகர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டர்களை திடீரென இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்தெறிந்தனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்களிடம் மற்ற அரசியல் கட்சி போஸ்டர்கள் எல்லாம் அப்படியே இருக்கும்போது த.வெ.க. போஸ்டரை மட்டும் ஏன் கிழித்து எறிகிறீர்கள்? என த.வெ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.