என் மலர்tooltip icon

    சென்னை

    • 12 மாவட்டங்களில் 5,021 கி.மீ. நீளத்திற்கு பாசன கால்வாயை தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.98 கோடி ஒதுக்கப்பட்டு கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளன.

    மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் என சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில்,

    * 12 மாவட்டங்களில் 5,021 கி.மீ. நீளத்திற்கு பாசன கால்வாயை தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.

    * சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.98 கோடி ஒதுக்கப்பட்டு கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளன.

    * மே மாதம் இறுதிக்குள் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டு வரும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்தது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த 22-ந்தேதி, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.9 ஆயிரத்து 290-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில், சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்தது.

    இனி, தங்கம் விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், மறுநாளே அர்ந்தர் பல்டி அடித்தது. 23-ந்தேதி சவரனுக்கு ரூ.2, 200-ம், ஒரு கிராம் ரூ.275-ம் ஏறிய வேகத்திலேயே சரிந்தது. நேற்றும் தங்கத்தின் விலை சற்று குறைந்தது. ஒரு கிராம் ரூ.10-ம், ஒரு சவரன் ரூ.80-ம் குறைந்து, கிராம் ரூ.9 ஆயிரத்து 5-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை. தங்கம் விலை சவரன் ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராம் ரூ.9,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    24-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    23-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    22-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    21-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    20-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    24-04-2025- ஒரு கிராம் ரூ.111

    23-04-2025- ஒரு கிராம் ரூ.111

    22-04-2025- ஒரு கிராம் ரூ.111

    21-04-2025- ஒரு கிராம் ரூ.111

    20-04-2025- ஒரு கிராம் ரூ.110

    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
    • அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஏப்.25-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

    அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு 150 டன் மாம்பழங்கள் வருகின்றன.
    • தரம் குறைந்த மாம்பழங்கள் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை குறைவாக விற்பனை செய்யப்படும்.

    சென்னை:

    முக்கனிகளில் முதன்மையானதும், பழங்களின் அரசன் என்றும் போற்றப்படும் மாம்பழம் சீசன் களைகட்டத் தொடங்கி உள்ளது. கோடை காலம் என்றாலே மாம்பழம் சீசன் அதிகரித்து விற்பனை அமோகமாக காணப்படும். அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழ விற்பனை விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

    மாம்பழம் சீசன் கோடையில் அதிகரித்தாலும், ஜனவரி மாதம் முதலே சேலத்தில் இருந்து மல்கோவா, அல்போன்சா, இமாம்பசா, களப்பாடி போன்ற மாம்பழங்கள் வரத்து தொடங்கிவிடும். அடுத்தபடியாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கேரளாவில் இருந்து பங்கனப் பள்ளி, செந்தூரா போன்ற மாம்பழங்கள் வரத்து அதிகரித்து விடும்.

    அதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், தென்காசி, தேனி, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இருந்து நாட்டு மாம்பழங்கள் வரத் தொடங்கிவிடும். இதனால் சீசன் களைகட்டும்.

    மே மாதத்தில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து மல்லிகா, ருமானி, ஜவாரி மாம்பழங்கள் வரத் தொடங்கும். அப்போது மாம்பழங்கள் வரத்து அதிகரித்து மாம்பழங்களின் விலை இன்னும் குறையும். ஜூன், ஜூலை மாதம் வரை மாம்பழம் சீசன் நீட்டிக்கும்.

    இந்த ஆண்டு சேலம் மாவட்டப் பகுதிகளில் மாம்பழம் விளைச்சல் வழக்கத்தைவிட 10 சதவீதம் அதிகரித்து உள்ளதால் மாம்பழங்கள் வரத்து அதிகமாக காணப்படுகிறது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு 150 டன் மாம்பழங்கள் வருகின்றன.

    வரும் மே, ஜூன் மாதங்களில் இந்த மாம்பழம் வரத்தானது 250 டன் முதல் 350 டன் வரை அதிகரிக்கும். முன்பெல்லாம் பெரிய லாரிகளில் வந்த மாம்பழங்கள் தற்போது டெம்போக்களில் அதிக அளவில் வருகின்றன.

    கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகும் மாம்பழங்களின் விலை நிலவரம் குறித்து மாம்பழ வியாபாரி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    அல்போன்சா மாம்பழம் மொத்தமாக கிலோ ரூ.120 -க்கும், சில்லரைக்கு கிலோ ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பங்கனப்பள்ளி கிலோ ரூ.90-க்கும் (மொத்தம்), ரூ.150-க்கும் (சில்லரை) விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போன்று செந்தூரா, இமாம்பசந்த் மாம்பழங்கள் முறையே ரூ.60, ரூ.150 மொத்தமாகவும், ரூ.80, ரூ.180-க்கு சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது முதல் ரக மாம்பழங்களின் விலை ஆகும். இதைவிட தரம் குறைந்த மாம்பழங்கள் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை குறைவாக விற்பனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் மாம்பழங்களை உற்சாகமாக வாங்கிச் செல்கின்றனர்.

    • முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் உடல்நலக் குறைவால் காலமானார்.
    • அவரது மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சென்னை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் உடல்நலக் குறைவால் காலமானார்.

    இந்நிலையில், அவரது மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர், செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா கணவர் சந்திரசேகர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

    கணவரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் கோகுல இந்திராவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இந்த துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், சந்திரசேகர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • நாங்கள் கடந்த காலங்களிலும் இதே மாதிரியான நிலையில் இருந்திருக்கிறோம்.
    • ஆனால் பிரச்சனைகளை சரிசெய்து அடுத்த ஆண்டே சாம்பியனும் ஆகியிருக்கிறோம்.

    சென்னை:

    ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அடுத்து வரும் 6 போட்டிகளையும் வென்று பிளே ஆப் சுற்றுக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இப்படியொரு நிலையிலிருந்து எப்படி வெல்வது என்பதற்கான புளூ பிரிண்டை ஆர்சிபி அணி கடந்த ஆண்டு அமைத்துக் கொடுத்துள்ளது.

    ஒருவேளை நாங்கள் தகுதிபெறாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம்.

    கடந்த காலங்களிலும் இதே மாதிரியான நிலையில் இருந்திருக்கிறோம். பிரச்சனைகளை சரிசெய்து அடுத்த ஆண்டே சாம்பியனும் ஆகியிருக்கிறோம்.

    அடுத்து வரும் அத்தனைப் போட்டிகளையும் எங்களை சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறோம். எந்த வாய்ப்பையும் தவறவிடமாட்டோம் என தெரிவித்தார்.

    • பஹல்காம் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மேலும், பலர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன்

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், மருத்துவர் பரமேஸ்வரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்பேசியில் தொடர்பு கொண்டு மருத்துவர் பரமேஸ்வரனுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

    பரமேஸ்வரன் மனைவியிடம் முதலமைச்சர் பேசினார். அப்போது அவர், தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு வழங்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

    • தமிழகத்தில் ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் னெ்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
    • தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

    தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் னெ்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    2025-2026ம் கல்வியாண்டில் அனைத்து அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், "தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி முடியும் நிலையில் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது.

    விடைத்தாள் திருத்தும் பணி, தேர்வு முடிவு வெளியிடும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இறுதி வேலை நாள்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை வெற்றிப்பெற செய்ய வேண்டும்.
    • தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தனிப்பெரும் சங்கமாக வரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

    என்எல்சியில் நடக்கும் வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் எண் 6க்கு வாக்களித்து தனிப்பெரும் சங்கமாக உருவாக்குங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடக்க உள்ள ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை வெற்றிப்பெற செய்ய வேண்டும்.

    தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை எண் 6ல் வாக்களித்து தனிப்பெரும் சங்கமாக உருவாக்கி தர வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர், "முக்கிய கோரிக்கைகளை வென்றெடுக்க தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தனிப்பெரும் சங்கமாக வரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

    தொழிலாளர் வாரிசுகள், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை போன்றவை உறுதி செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்றும்" அவர் கூறினார்.

    • யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவதும், வெற்றி பெறுவதும் எளிதானது அல்ல.
    • பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளோ அல்லது லஞ்சம் போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது.

    சென்னை:

    யு.பி.எஸ்.சி. குடிமைப் பணி தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் தமிழகத்தை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த நிலையில் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆளுநர் மாளிகைக்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி. பேசியதாவது:-

    யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவதும், வெற்றி பெறுவதும் எளிதானது அல்ல. உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள்.

    நீங்கள் தொடர்ந்து புத்தகங்கள் வாசித்து கொண்டே இருங்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். புத்தகங்களை தொடர்ந்து வாசித்து வந்தால் மற்றவர்களிடம் கலந்துரையாடும் போது பெரிய அளவில் உதவும்.

    உடல் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும். தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.

    பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளோ அல்லது லஞ்சம் போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆட்டோ மொபைல் சார்ந்த தொழில் விஷயமாக பாகிஸ்தானில் இருந்து தொழில் அதிபர்கள் பலரும் இந்தியாவுக்குள் வருகிறார்கள்.
    • பட்டியலை தயாரித்து அவர்களை வெளியுறவுத்துறை மூலமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி அனைத்து மாநிலங்களிலும் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களையும் நாளைக்குள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

    பாகிஸ்தானில் இருந்து மருத்துவ விசாவை பெற்றுக்கொண்டு சென்னையில் உள்ள 2 பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அந்நாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாகவே வந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்று சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், அவர்களோடு தங்கி இருக்கும் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு தனித்தனி விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்று சிகிச்சைக்காக வருபவர்கள் 2 அல்லது 3 மாதங்கள் வரையில் சென்னை, வேலூர் போன்ற நகரங்களில் உள்ள பிரபல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதை வழக்கமாகவே வைத்துள்ளனர்.

    இது தவிர ஆட்டோ மொபைல் சார்ந்த தொழில் விஷயமாக பாகிஸ்தானில் இருந்து தொழில் அதிபர்கள் பலரும் இந்தியாவுக்குள் வருகிறார்கள். இதுபோன்று டெல்லிக்கும் அதிக அளவில் பாகிஸ்தானியர்கள் வருகை புரிவது தெரிய வந்துள்ளது. பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் இருந்து பாகிஸ்தானில் பெண் எடுப்பது, பெண் கொடுப்பது போன்ற திருமண பந்தங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுபோன்று பாகிஸ்தானில் திருமண உறவு உள்ளிட்டவைகள் வைத்திருப்பவர்கள் யார் யார்? என்பது பற்றிய விவரங்களையும் அந்த மாநில அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் 24 மணி நேரத்துக்குள் தாங்கள் தங்கி இருக்கும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று பதிவு செய்ய வேண்டும்.

    இப்படி தான் 500 பேர் வரையில் தமிழகத்துக்கு வந்து செல்வதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இப்படி தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் தற்போது எத்தனை பேர் உள்ளனர்? என்பது பற்றிய விவரங்களை சேகரித்து வருவதாகவும் அதுபோன்ற நபர்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை தவிர்த்து அனைவரையும் நாளைக்குள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அந்த அதிகாரி, சிகிச்சையில் இருப்பவர்களை மனிதாபிமான அடிப்படையில் அணுகுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்து வருபவர்களும் தாங்கள் வேலை செய்யும் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருகை தருவார்கள். பாகிஸ்தானியர்கள் பலர் துபாயில் தங்கி இருந்து அங்குள்ள அமெரிக்க நிறுவனங்களில் வேலை செய்வார்கள்.

    அவர்கள் நிறுவனத்தின் சார்பில் சென்னைக்கு வேலை விஷயமாக அனுப்பி வைக்கப்படுவதும் உண்டு. இதுபோன்ற நபர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்பது பற்றிய பட்டியலை தயாரித்து அவர்களை வெளியுறவுத்துறை மூலமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதன் மூலம் தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
    • எதிர்காலத்தில் புதிய கூட்டணியை அமைத்து இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்தே போட்டியிட தயாராகி வருகிறது.

    இருப்பினும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் சீமானை சேர்ப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பா.ஜ.க., அ.தி.மு.க. தலைவர்கள் நடத்தி வரும் இந்த ரகசிய பேச்சுவார்த்தை பலன் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பேசியுள்ளனர்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இதுபோன்ற சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை சீமான் சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இருவரும் எதிர்காலத்தில் புதிய கூட்டணியை அமைத்து இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஓ.பன்னீர்செல்வத்துடனான இந்த சந்திப்பு பற்றி சீமானிடம் கேட்டபோது, எங்கள் இருவருக்குமிடையேயான உறவு தந்தை-மகன் உறவு போன்றது. அடிக்கடி நான் அவரை சந்திப்பது வழக்கம். அந்த அடிப்படையிலேயே தற்போதும் சந்தித்துள்ளேன். அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றார்.

    ×