என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழ்நாடு அரசு ஊழியர்களில் பெரும்பான்மையினர் நான்காம் தொகுதி பணியாளர்கள் தான்.
    • தமிழக அரசுத் துறைகளில் 6.25 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கூறியிருக்கிறது.

    குரூப் 4 பயிணிடங்கள் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    லட்சக்கணக்கில் காலியிடங்கள் உள்ள நிலையில் வெறும் 3935 பேரை தேர்வு செய்வதா? தொகுதி 4 பணியிடங்கள் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த வேண்டும்!

    தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகளுக்கு 215 கிராம நிர்வாக அலுவலர்கள், 1099 தட்டச்சர்கள் உள்ளிட்ட நான்காம் தொகுதி பணியாளர்கள் 3935 பேரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது.

    தமிழக அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 3935 பேரை மட்டும் தேர்வு செய்ய அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு அரசு ஊழியர்களில் பெரும்பான்மையினர் நான்காம் தொகுதி பணியாளர்கள் தான். தமிழக அரசுத் துறைகளில் 6.25 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கூறியிருக்கிறது.

    அவர்களில் மூன்றில் ஒரு பங்கு நான்காம் தொகுதி பணியிடங்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட குறைந்தது 2 லட்சம் நான்காம் தொகுதி பணியிடங்கள் காலியிடங்களாக இருக்கக்கூடும்.

    அவ்வாறு இருக்கும் போது அதில் வெறும் 2 விழுக்காடு பணியிடங்களை மட்டும் நிரப்புவது எந்த வகையில் நியாயம்?

    2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மூன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவை அனைத்தும் நிரப்பப்படுவதுடன், கூடுதலாக 2 லட்சம் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. காலியாக இருப்பதாக திமுகவால் குறிப்பிடப்பட்ட மூன்றரை லட்சம் காலியிடங்களில் குறைந்தது ஒரு லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.

    அவற்றுடன் கடந்த நான்காண்டுகளில் குறைந்தது 30 ஆயிரம் நான்காம் தொகுதி பணியாளர்களாவது ஓய்வு பெற்றிருக்கக் கூடும். அதன்படி நிரப்பப்பட வேண்டிய காலியிடங்களில் வெறும் 15 விழுக்காட்டை மட்டும் தான் திமுக அரசு நிரப்பியிருக்கிறது.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2022-ல் நடைபெற்ற தொகுதி 4 தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022-23, ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கு 10,139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

    2024-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுகளின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு சேர்த்து 8,932 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

    ஒட்டுமொத்தமாக இதுவரை 19,071 நான்காம் தொகுதி பணியாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது வெறும் 3935 பேரை மட்டும் தேர்ந்தெடுப்பது போதுமானதல்ல. இது கடந்த நான்காண்டுகளில் புதிதாக ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்குக் கூட போதாது.

    தமிழக அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அது வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக அது குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது.

    2021-ஆம் ஆண்டில் திமுக அரசு பதவியேற்ற போது மொத்த அரசுப் பணியிடங்கள் எத்தனை? காலியிடங்கள் எத்தனை? கடந்த நான்காண்டுகளில் காலியான இடங்கள் எத்தனை? கடந்த நான்காண்டுகளில் நிரப்பப்பட்ட இடங்கள் எத்தனை? இப்போது ஒவ்வொரு துறையிலும் காலியாக இருக்கும் இடங்கள் எத்தனை? என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

    அதுமட்டுமின்றி, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நான்காம் தொகுதி பணியாளர் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை குறைந்தது 10 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாலியல் புகார் அளித்த சிறுமியை பாபு அரிவாளால் வெட்டி உள்ளார்.
    • பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் மதன்குமார் மீது பாலியல் புகார் அளித்த சிறுமியை அவரது சகோதரன் பாபு அரிவாளால் வெட்டி உள்ளார். சிறுமியின் முகம், கண், கை, கால், தலை ஆகிய பகுதிகளில் அரிவாளால் பாபு வெட்டி உள்ளார்.

    பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கூட்டாளிகளுடன் சேர்ந்து சிறுமியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய மதன்குமாரின் சகோதரன் பாபுவை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகார் தெரிவித்தார்.
    • மகளின் திருமணம் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி மாநாட்டில் பங்கேற்கவில்லை.

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார்.

    உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.

    துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகார் தெரிவித்தார்.

    துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க கூடாது என சிறப்பு குழு வைத்து மிரட்டி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில், தமிழக அரசின் எந்த அதிகாரிகளாலும் நாங்கள் மிரட்டப்படவில்லை என துணை வேந்தர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக துணை வேந்தர்கள் கூறுகையில், தமிழக அரசை பகைத்துக்கொண்டு ஆளுநர் அழைக்கும் மாநாட்டிற்கு செல்ல எங்களுக்கு விருப்பமில்லை.

    மகளின் திருமணம் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி மாநாட்டில் பங்கேற்கவில்லை.

    சேலம் பெரியார் பல்கலைக்கழகம் துணை வேந்தர் ஜெநாதன் வழக்கு விசாரணைக்கு ஆஜரானதால் மாநாட்டிற்கு செல்ல முடியவில்லை என்று தெரிவித்தனர்.

    • கடலூர் கோர்ட்டு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
    • உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை:

    கருணாநிதி தலைமையில் கடந்த 1996-2001 மற்றும் 2006-2011-ம் ஆண்டுகளில் நடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூர் கோர்ட்டு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி வேல் முருகன் முன் விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், வழக்கில் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கையை மேற்கோள் காட்டி வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

    எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் தரப்பில், குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து கடலூர் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சரி என்றும் வாதிடப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல் முருகன், லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல் முருகன், அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    மேலும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து 6 மாதங்களில் விசாரணையை முடிக்கும் படி, கடலூர் சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டார்.

    • 1.14 கோடி பேருக்கு கலைஞர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
    • 9000 இடங்களில் நடைபெறும் முகாம்களில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

    கலைஞர் உரிமைத்தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்தால் தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் கூறியதாவது:

    * மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியான அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும்.

    * 1.14 கோடி பேருக்கு கலைஞர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    * மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்.

    * கலைஞர் உரிமைத்தொகை பெற ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்.

    * மக்களுடன் முதல்வர் திட்டத்தின் அடிப்படையில் ஜூனில் 4-ம் கட்டமாக 9000 இடங்களில் முகாம் நடத்தப்படும்.

    * 9000 இடங்களில் நடைபெறும் முகாம்களில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

    * தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநில அரசுகளுக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் பெருமிதம்.
    • சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அறிவித்தனர்.

    குறிப்பாக, அந்த மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாக கருதப்படுவதாகவும் தனது தீர்ப்பில் கூறினார்கள்.

    இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுகளுக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் கவர்னர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தஹி, அபிஷேக் சிங்கி, ராகேஷ் திவேதி, வில்சன் எம்.பி. ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தேநீர் விருந்து அளிக்கிறார்.

    வருகிற 27-ந்தேதி மாலை 5 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவு தேடல் மற்றும் வாசிப்பு திறன்கள் மேம்படுத்தப்படும்.
    • கடந்த ஆண்டை விட குறைந்தபட்சம் 50 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசினார் அப்போது அவர் 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:-

    அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் 13 லட்சம் மாணவர்களின் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணித திறன்களை மேம்படுத்தும் வகையில் வரும் கல்வி ஆண்டில் பள்ளி வேலை நேரத்தில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களின் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்படும். இந்த திட்டம் ரூ.19 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இதன் மூலம் 13 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள்.

    பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவு தேடல் மற்றும் வாசிப்பு திறன்கள் மேம்படுத்தப்படும். இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பின் கீழ் தேச தலைவர்கள் அறிவியல் அறிஞர்கள் விளையாட்டு வீரர்கள் பிடித்த விளையாட்டுகள் சுற்றுச்சூழல் நடப்பு நிகழ்வுகள் முதலியவற்றில் பேச்சுப்போட்டி கதை சொல்லுதல் நடித்துக் காட்டுதல் ,குழு விவாதம் பட்டிமன்றம் ஆகியவற்றின் மூலம் வாசிப்பு திறன்கள் மேம்படுத்தப்படும் .

    பள்ளி மாணவர்களிடம் வாழ்வியல் திறங்கள் விழுமியங்கள், பாலின சமத்துவம், நேர்மறை எண்ணங்கள், போதைப் பொருட்களின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றில் விரும்பத்தக்க நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வு கட்டகம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் .

    இதற்காக பள்ளிகளின் வாராந்திர கால அட்டவணையில் வகுப்புக்கு ஒரு பாடவேளை ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் .

    அரசு பள்ளி மாற்று திறன் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்த 46 ஆயிரம் மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தகுந்த விளையாட்டு சாதனங்கள் பயிற்சிகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

    10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் அரசு பள்ளிகளுக்கும் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    கடந்த ஆண்டை விட குறைந்தபட்சம் 50 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 8 வது மாடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய 300 இருக்கைகள் கொண்ட கருத்தரங்க கூடம் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படும்.

    இசை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்க்கை பெரும் பொருட்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் அறிவித்தார்.

    • பாகிஸ்தானியர்களையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
    • மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் மட்டும் 29-ந்தேதி வரை தங்கி இருக்கலாம்.

    சென்னை:

    காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    வருகிற 27-ந்தேதி வரை மட்டுமே பாகிஸ்தானியர்கள் வைத்துள்ள விசா செல்லு படி ஆகும் என்றும், மருத்துவ சிகிச்சைக்காக வந்திருப்பவர்கள் மட்டும் 29-ந்தேதி வரை தங்கி இருக்கலாம் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

    இதன்படி அனைத்து மாநிலங்களிலும் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    வருகிற 27-ந் தேதிக்குள் தமிழகத்தில் தங்கி உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

    பாகிஸ்தானில் இருந்து மருத்துவ விசாவை பெற்றுக் கொண்டு சென்னையில் உள்ள 2 பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அந்நாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாகவே வந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இதுபோன்று சிகிச்சையில் இருப்பவர்கள் மட்டும் 29-ந்தேதி வரை தங்கி இருக்கலாம் என்றும் அதன் பின்னர் அவர்களும் சென்னையை விட்டு வெளி யேறிவிட வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 200 பாகிஸ்தானியர்கள் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னையில் இருப்பதும் தெரியவந்து உள்ளது. அதே நேரத்தில் வேலூர் பகுதியிலும் சிலர் சிகிச்சைக்காக வந்து தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் கண்டிப்பாக வருகிற 29-ந்தேதிக்குள் வெளியேறிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    இதன் பிறகும் வெளியேறாத பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • தமிழக அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாக நினைத்து ஆளுநர் செயல்படுகிறார்.
    • மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய அமைச்சர் சிவராஜ் பட்டேல் பதவி விலகினார்.

    தமிழக அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

    * ஆளுநரின் துணை வேந்தர்கள் மாநாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சி.

    * தமிழக அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாக நினைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.

    * ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு யார் காரணமாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * பஹல்காம் தாக்குதலுக்கு அமித்ஷா பொறுப்பேற்க வி.சி.க. கூறியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது.

    * மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய அமைச்சர் சிவராஜ் பட்டேல் பதவி விலகினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநாட்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பங்கேற்கவில்லை.
    • தமிழ்நாட்டில் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் மங்கையர்கரசி (பொறுப்பு) மாநாட்டில் பங்கேற்கவில்லை.

    தமிழக அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டை பல்வேறு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    * மாநாட்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் பங்கேற்கவில்லை.

    * கோவை வேளாண் பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தர் தமிழ்வேந்தன் பங்கேற்கவில்லை.

    * தமிழ்நாட்டில் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் மங்கையர்கரசி (பொறுப்பு) மாநாட்டில் பங்கேற்கவில்லை.

    * மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் இல்லாத நிலையில் அதிகாரிகளும் மாநாட்டை புறக்கணித்ததாக தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில், ஆளுநர் மாநாட்டில் 52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்கின்றனர்.

    ஒட்டுமொத்த துணை வேந்தர்களும் மாநாட்டை புறக்கணித்ததாக தகவல் வெளியான நிலையில் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
    • செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

    சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

    2022-ம் ஆண்டு முதல் கூடுதலாக 'மார்க்ஸ் மாமணி" விருதும் வழங்கி வருகிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    முத்தமிழறிஞர் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், கர்நாடக முதல்-மந்திரி சித்தா ராமையா, கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததிராய், து.ராஜா, குமரி அனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காசி ஆனந்தன், ஆ.சக்தி தாசன், வை.பாலசுந்தரம், காதர்மொய் தீன், ஜவாஹி ருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இது வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

    அந்தவரிசையில் 2025-ம் ஆண்டுக்கான வி.சி.க. விருதுகள் பெறும் சான்றோர் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.

    இந்த ஆண்டுக்கான 'அம்பேத்கர் சுடர்' விருதினை திராவிடப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கே.எஸ்.சலம், பெரியார் ஒளி விருதினை திரைப்படக் கலைஞர் சத்யராஜ்க்கு வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.

    விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் பின்வருமாறு:-

    அம்பேத்கர் சுடர்-கே.எஸ்.சலம், பெரியார் ஒளி-சத்யராஜ், திரைப்படக் கலைஞர். மார்க்ஸ் மாமணி-தியாகு பொதுச் செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், காமராசர் கதிர்-வெ.வைத்தி லிங்கம் முன்னாள் முதல்-அமைச்சர், புதுச்சேரி.

    அயோத்திதாசர் ஆதவன்-பா.ஜம்புலிங்கம், காயிதே மில்லத் பிறை-பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாக்கவி, செம்மொழி ஞாயிறு-அ.சண்முகதாஸ்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இன்று முதல் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.
    • 3,935 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.

    சென்னை:

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படுகிறது. 3,935 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.

    இந்த தேர்வு வருகிற ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    தேர்வர்கள் இன்று முதல் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிசி தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

    ×