என் மலர்tooltip icon

    சென்னை

    • எழும்பூர்-புதுச்சேரி இடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பயணிகள் ரெயில் ஆகஸ்டு 3-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக சென்னை கடற்கரை சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் எழும்பூர்-புதுச்சேரி இடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரெயில் ஆகஸ்டு 4-ந் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும். இந்த ரெயில் சென்னை பூங்கா மற்றும் கோட்டை ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். இதே போல, புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பயணிகள் ரெயில் ஆகஸ்டு 3-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக சென்னை கடற்கரை சென்றடையும்.

    அதே போல, வருகிற 19-ந் தேதி முதல் ஆகஸ்டு 17-ந் தேதி வரை சென்னை எழும்பூருக்கு வரும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16102), மதுரை தேஜஸ் ரெயில் (22672), மன்னார்குடி மன்னை ரெயில் (16108), செந்தூர் அதிவிரைவு ரெயில் (20606), குருவாயூர் ரெயில் (16128) ஆகிய ரெயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

    மறுமார்க்கமாக, 20-ந் தேதி முதல் ஆகஸ்டு 18-ந் தேதி வரை எழும்பூரிலிருந்து கொல்லம் (16101), மதுரை (22671), மன்னார்குடி (16107), திருச்செந்தூர் (20605) மற்றும் குருவாயூருக்கு (16128) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • த.வெ.க. தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.
    • முதலிடத்தை பெற்ற மாணவிகளுக்கு வைரக் கம்மல் பரிசாக வழங்கப்பட்டது.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.

    2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 2 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முதலிடத்தை பெற்ற மாணவிகளுக்கு வைரக் கம்மல் பரிசாக வழங்கப்பட்டது.

    தொகுதிவாரியாக 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 3-ம் கட்ட பரிசளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. த.வெ.க. தலைவர் விஜய் இன்று 3-ம் கட்டமாக பரிசு வழங்குகிறார்.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் 51 சட்டசபை தொகுதிகள் வாரியாக மாணவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

    • எரிந்த விமானம் பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழ முடியாது.
    • நாம் மீண்டெழலாம் தவறுகளிலிருந்து என பதிவிட்டுள்ளார்.

    சென்னை:

    அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    கருப்புப் பெட்டி தேடுவார்கள்

    விமானம் விபத்தானால்

    ஒரு விமானமே

    கருப்புப் பெட்டியாய்க்

    கருகிக் கிடக்கையில்

    எந்தக் கருப்புப் பெட்டியை

    இனிமேல் தேடுவது?

    பறிகொடுத்தோர்

    பெருமூச்சுகள்

    கரும்புகையாய்...

    தீப்பிடித்த கனவுகளின்

    சாம்பல்களை

    அள்ளி இறைக்கிறது

    ஆமதாபாத் காற்று

    அவரவர் அன்னைமாரும்

    கண்டறிய முடியாதே

    அடையாளம் தெரியாத

    சடலங்களை

    புஷ்பக விமானம்

    சிறகு கட்டிய

    பாடையாகியது எங்ஙனம்?

    கடைசி நிமிடத்தின்

    கதறல் கேட்டிருந்தால்

    தேவதைகள் இறந்திருக்கும்;

    மரணம் முதன்முதலாய்

    அழுதிருக்கும்

    எரிந்த விமானம்

    பீனிக்ஸ் பறவையாய்

    மீண்டெழ முடியாது

    நாம் மீண்டெழலாம்

    தவறுகளிலிருந்து' என பதிவிட்டுள்ளார்.

    • ராமாபுரம் டி.எல்.எப் அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்தது.
    • இந்த விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.

    இதில் பூந்தமல்லி-போரூர் இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில், சென்னை போரூர் டி.எல்.எப் - எல் அண்ட் டி அருகே மெட்ரோ ரெயில் பணியின்போது இரண்டு மெட்ரோ தூண்களுக்கு இடையே தண்டவாள டிராக் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    மெட்ரோ தூண்கள் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்துள்ள நிலையில், இதுவரை 204 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் மிகுந்த வருத்தம்.

    துயரப்படும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 29 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு கட்சியினர் ஆயத்தமாக வேண்டும்.

    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கட்சி நிர்வாகிகளுடன் நேற்று முதல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    வருகிற 14-ந்தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தின் முதல் நாளான நேற்று தென் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இன்று இரண்டாவது நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேற்கு மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். கொங்கு மண்டலத்தை சார்ந்த நீலகிரி, கோவை, திருப்பூர், மற்றும் ஈரோடு, ஊட்டி, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டா முத்தூர், கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, தாராபுரம், காங்கேயம், அவிநாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி செட்டிபாளையம், பவானிசாகர் உள்பட 29 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா, கட்சி வளர்ச்சி பணிகளை முடுக்கிவிடுமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு கட்சியினர் ஆயத்தமாக வேண்டும் என்றும், கூட்டணியை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    நீலகிரி, கோவை, தென்காசி மாவட்டங்களுக்கு நாளை மிககனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, நெல்லை, குமரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு பெய்யும்.

    14-ந்தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    15-ந்தேதி கோவை, தென்காசி, நெல்லை, தேனியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • வேளச்சேரி மெயின்ரோடு, சுவாமி தெரு, ராமசாமி தெரு, மறைமலை அடிகள் தெரு, அவ்வையார் தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (13.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    ரெட்ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு பகுதி, அல்லிமேடு, மேட்டு சூரப்பேடு, பாளையம், ஒரக்காடு பகுதி.

    கிழக்கு முகப்பேர்: மோகன்ராம் நகர், பாரதிதாசன் நகர், கொங்கு நகர், விஜிபி நகர், பன்னீர் நகர், 6-வது பிளாக் மெயின் ராடு, சாதல்வார் தெரு, வெள்ளாளர் தெரு பகுதி.

    குன்றத்தூர்: அழகேசன் நகர், பெரியார் நகர், சரஸ்வதி நகர், கோதண்டம் சாலை, அம்பேத்கர் நகர், ராஜீவ்காந்தி நகர், பாரதியார் நகர், புதுப்பேர், நந்தம்பாக்கம், திருமுடிவாக்கம் சம்பந்தம் நகர், தேவகி நகர், லட்சுமி நகர், தாய் சுந்தரம் நகர், கொல்லர் தெரு, விஜயராஜா நகர், வழுதாளம்பேடு கிராண்ட் சிட்டி.

    கே.கே.நகர்: காவேரி ரங்கன் நகர், கே.கே.சாலை, லோகயா காலனி, ஆற்காடு சாலை, பாலாஜி நகர், அருணாச்சலம் சாலை, குமரன் காலனி, காந்தி நகர், தேவராஜ் நகர், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை, பரணி காலனி, காவேரி மருத்துவமனை தெரு, 80 அடி சாலை, எம்.ஜி. சக்ரபாணி தெரு, சக்கரபாணி தெரு, காமராஜர் சாலை, வெங்கடேச நகர்.

    கோவூர்: அம்பாள் நகர், ராம் நகர், அண்ணா தெரு, கங்காச்சி தெரு, ஆனந்த விநாயக தெரு, குன்றத்தூர் மணி ரோடு, அம்பேத்கர் தெரு.

    சோழிங்கநல்லூர் பிரிவு: கௌரிவாக்கம்- ஆதிநாத் நகர், பாலாஜி நகர், சுசீலா நகர், விஜயநகர, வேளச்சேரி மெயின் ரோடு, ஜெயலட்சுமி நகர், விக்னராஜபுரம், பெல் நகர் 1 முதல் 5-வது தெரு, பரசுராம் அவென்யூ, வடக்குப்பட்டு மெயின் ரோடு, பில்லாபாங் பள்ளி, வெள்ளம்மாள் பள்ளி, அல்ஃபாஸ் அவென்யூ, யுனைடெட் காலனி, சாய்ராம் நகர் மெயின் ரோடு மற்றும் பூங்கா, சித்தார்த் குடியிருப்புகள், அண்ணாமலை தெரு.

    ராஜகீழ்பாக்கம்: பதிவு அலுவலகம் சேலையூர், வெங்கட்ராமன் தெரு, மாருதி நகர் 2-வது மெயின்ரோடு, வேளச்சேரி மெயின்ரோடு, சுவாமி தெரு, ராமசாமி தெரு, மறைமலை அடிகள் தெரு, அவ்வையார் தெரு.

    திருவான்மியூர்: இந்திரா நகர், பெரியார் நகர் கிழக்கு மற்றும் மேற்கு, காமராஜ் நகர், எல்பி சாலை, திருவள்ளூர் சாலை, சாஸ்திரி நகர், அவ்வை நகர், ராஜாஜி நகர், நேதாஜி நகர், கண்ணப்பா நகர், ஏஜிஎஸ் காலனி, சுவாமிநாதன் நகர், களத்துமேட்டு பகுதி, பிடிசி காலனி, வெங்கடேசன் அவென்யூ, ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர்.

    பல்லாவரம்: இந்திரா காந்தி சாலை, தண்டு மாரியம்மன் கோவில் தெரு, ஜிஎஸ்டி சாலை, பம்மல் மெயின் ரோடு முதல் ஏ2பி ஓட்டல், மாலிக் தெரு, நாகரத்தின் தெரு, கண்ணபிரான் கோவில் தெரு, சென்னை சில்க்ஸ் ஒலிம்பியா மற்றும் அதுல்யா டவர்ஸ். 

    • மர்ம நபர் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளார்.
    • மருத்துவமனையில் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நபர் போலி மருத்துவர் என்பது அம்பலமானது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் என கூறிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் நோயாளியிடம் இருந்து நகை, செல்போனை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போலவே உடை அணிந்து கொண்டு மர்ம நபர் ஒருவர் ஒவ்வொரு நோயாளியிடமும் கேஸ் ஷீட்டுகளை சரி பார்த்துள்ளார்.

    கடந்த 6-ந்தேதி அந்த மர்ம நபர் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளார். காப்பீடு திட்டம் இருக்கிறதா என கேட்டுவிட்டு மின்னஞ்சலையும் அவர் கொடுத்துள்ளார்.

    நோயாளி ஒருவரை ஸ்கேன் எடுக்க அழைத்து சென்ற அவர், ஸ்கேன் எடுக்கும்போது நகை போடக்கூடாது எனக்கூறி நகைகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

    இந்த சம்பவத்தையடுத்து மருத்துவமனையில் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நபர் போலி மருத்துவர் என்பது அம்பலமானது.

    இதையடுத்து நகை திருட்டு தொடர்பாக நோயாளி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில், 3 சவரன் தங்க நகை மற்றும் செல்போனை மருத்துவர் என கூறிக்கொண்டு வந்தவர் திருடி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

    மர்மநபர் ஒருவர் மருத்துவரை போன்று அரசு மருத்துவமனையில் வலம் வந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன்.
    • தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் நான் முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் UPSC முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர்!

    முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன்.

    இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்! தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்து வருகிறார்.
    • பா.ம.க. சமூக நீதி பேரவை தலைவர் நியமனத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

    சென்னை:

    பா.ம.க.வில் தந்தை -மகனுக்குமான மோதலால் நிர்வாகிகள் பெரும் கவலையில் உள்ளனர். மோதலை தொடர்ந்து அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்து வருகிறார். அந்த வகையில், பா.ம.க. சமூகநீதி பேரவை தலைவராக இருந்த பாலுவை நீக்கி கோபுவை ராமதாஸ் அண்மையில் அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், வழக்கறிஞராக இருக்க தகுதியே இல்லாதவர் பா.ம.க. சமூகநீதி பேரவை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், பா.ம.க. சமூக நீதி பேரவை தலைவர் நியமனத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ராமதாஸால் நியமிக்கப்பட்ட கோபுவுக்கு வழக்கறிஞருக்கான எந்த தகுதியையும் பார்த்தது இல்லை என்று பனையூரில் நிர்வாகிகளுடனான ஆலோசனையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    • நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அந்த வகையில், கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. இதன்பின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,100-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையாகிறது. இரு தினங்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 119 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    11-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160

    10-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

    09-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,640

    08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    07-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    11-06-2025- ஒரு கிராம் ரூ.119

    10-06-2025- ஒரு கிராம் ரூ.119

    09-06-2025- ஒரு கிராம் ரூ.118

    08-06-2025- ஒரு கிராம் ரூ.117

    07-06-2025- ஒரு கிராம் ரூ.117

    ×