என் மலர்tooltip icon

    சென்னை

    • உண்மையாகவே காமராஜர் ஆட்சி வேண்டுமென்று பேசும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வரத் தயாரா?- அண்ணாமலை
    • காமராஜர் விவகாரம் முடிந்து போன விசயம். நேற்றே முற்றுப்புள்ளி வச்சாச்சு- செல்வப்பெருந்தகை

    கர்மவீரர் காமராஜரை பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு அருகதை இல்லை. வரலாற்றை மாற்றி, திரித்து ஆளும் தி.மு.க., கர்மவீரர் காமராஜரை கேவலப்படுத்தி உள்ளனர். இதை கண்டிக்கிறேன். இதற்காக காங்கிரஸ் தலைவரின் வெறும் கண்டன அறிக்கை மட்டும் போதுமா?. உண்மையாகவே காமராஜர் ஆட்சி வேண்டுமென்று பேசும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வரத் தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்ற தனித்துப்போட்டியிடத் தயாரா?. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என விமர்சித்தவர் காமராஜர் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். முதலமைச்சர் சந்தித்தப்பின் காமராஜர் விவகாரம் மற்றும் அண்ணாமலை தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு செல்வப்பெருந்தகை பதில் அளித்து கூறியதாவது:-

    காமராஜர் விவகாரம் முடிந்து போன விசயம். நேற்றே முற்றுப்புள்ளி வைச்சாச்சு. ஆடு நனைகிறது என்று ஓநாய் கண்ணீர் விடுமாம். அதேபோல் எங்களை பற்றி அண்ணாமலைக்கு எவ்வளவு பெரிய கவலை.

    பெருந்தலைவர் காமராஜரை கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் யார்?. அவருடைய மூதாதையர்கள், அவர் (அண்ணாமலை) ஏற்றுக்கொண்டிருக்கிற கொள்கைவாதிகள் டெல்லியில் பெருந்தலைவர் காமராஜரை வீட்டோடு வைத்து எரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.

    செய்து விட்டு வாக்குகளுக்காக அவருக்கு பிறந்த நாள் விழா எடுப்பது, இறந்த தினம் அனுசரிப்பது என்ற வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ். கோஷத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    இவ்வாறு செல்வப்பெருந்தகை பதில் அளித்தார்.

    • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருகிற 22-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.
    • புயல் சின்னம் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும்.

    சென்னை:

    நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருகிற 22-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வங்காளதேசம், மேற்கு வங்காள கடற்கரை பகுதியில் வருகிற 24-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

    மேலும், இந்த புயல் சின்னம் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தமிழ்நாட்டுக்கான கல்வி - நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்.
    • ஏழை - எளிய மக்களைப் பாதிக்கும் ரெயில் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளையும் தி.மு.க. சார்பில் பாராளுமன்றத்தில் எழுப்புவது.

    சென்னை:

    முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சகத்தை பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி - நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்.

    ஒன்றிய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 விழுக்காடு வரிப் பகிர்வு", "15-வது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி தர வேண்டிய 41 விழுக்காடு வரி வருவாய் பங்கிற்குப் பதிலாக 33.16 விழுக்காடு பங்கு மட்டுமே அளித்து மாநிலங்களுக்கு இழைக்கப்படும் நிதி அநீதி", "ஒன்றிய அரசும் - மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்கு தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏற்பட்டு வரும் நிதி நெருக்கடி" ஆகியவற்றை பாராளுமன்றத்தில் அழுத்தமாக எடுத்துரைப்பது.

    தமிழர்களின் தனித்துவமிக்க பண்பாட்டை அறிவியல்பூர்வமாக நிரூபித்த இரும்பின் தொன்மை குறித்து ஒன்றிய அரசு மவுனம் காப்பது, கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுப்பது, தமிழ்நாட்டிற்குரிய ரெயில் திட்டங்களுக்கு நிதியளிக்காமல் வஞ்சிப்பது, உழைக்கும் கிராமப்புற மக்களுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நிதியை முறையாக வழங்காமல் தாமதிப்பது, மாநிலத்தின் நிதி தன்னாட்சிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கான நிதியுரிமையைப் பறிப்பது எனத் தமிழ்நாடு தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து, நமக்கான உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்பது.

    தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து கைது செய்யப்படுவது, கச்சத்தீவு மீட்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது, திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பது, தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளைப் புறக்கணித்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பது, ஏழை - எளிய மக்களைப் பாதிக்கும் ரெயில் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராளுமன்றத்தில் எழுப்புவது.

    இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • கிராமங்களில் உள்ள நிலங்களில் அங்குள்ள மக்கள் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகின்றனர்.
    • மக்களைக் காக்க வேண்டிய அரசு, தொழிலதிபர்களின் முகவராக மாறி மக்களுக்கு எதிராக செயல்படுவது நியாயமல்ல.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடலூரை அடுத்த கொடுக்கன்பாளையத்தில் பொதுமக்கள் வாழும் குடியிருப்புகளையும், அவர்கள் வளர்த்த முந்திரி மரங்களையும் அகற்றி விட்டு, தோல் அல்லாத காலனி தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருப்பதும், அவர்கள் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது.

    கடலூர் மாவட்டம் கொடுக்கன்பாளையம், பெத்தாங்குப்பம், மலையடி குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முந்திரி சாகுபடி செய்து வாழ்ந்து வந்தனர். கடந்த ஜனவரி மாதத்தில் காவல்துறை உதவியுடன் அந்த நிலங்களில் இருந்து அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்; அங்கு வளர்க்கப்பட்டிருந்த முந்திரி மரங்களில் பெரும்பாலானவை பிடுங்கி எறியப்பட்டன. அப்போதே, தனியார் தொழில் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காகவே பொதுமக்கள் வெளியேற்றப்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றஞ்சாட்டி வந்தது. இப்போது அந்த நிலங்கள் காலனி தொழிற்சாலை அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு உண்மையாகியிருக்கிறது.

    கொடுக்கன்பாளையம், பெத்தாங்குப்பம், மலையடி குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நிலங்களில் அங்குள்ள மக்கள் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகின்றனர். அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவற்றில் தீர்ப்பு வராத நிலையில், அங்குள்ள நிலங்களை தனியாருக்கு தாரைவார்க்க முயல்வது நியாயமல்ல.

    கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஏராளமாக உள்ளன. தமிழக அரசு நினைத்தால் அந்த இடங்களை காலனி தொழிற்சாலை அமைக்க ஒதுக்கலாம். அதை விடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலங்களைப் பறித்து தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்க முயல்வது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். மக்களைக் காக்க வேண்டிய அரசு, தொழிலதிபர்களின் முகவராக மாறி மக்களுக்கு எதிராக செயல்படுவது நியாயமல்ல.

    கொடுக்கன்பாளையம் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் காலனி தொழிற்சாலை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அந்தப் பகுதியில் தலைமுறை தலைமுறைகளாக முந்திரி சாகுபடி செய்து வரும் மக்களுக்கு அங்குள்ள நிலங்களை பட்டா செய்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
    • 20 மற்றும் 21-ந்தேதிகளில் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.

    20 மற்றும் 21-ந்தேதிகளில் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

    • தேர்தல் ஆணையம் பதிலளிக்க அவகாசம் வழங்கி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போலியான பான் எண் கொடுத்து சொத்து விவரங்களை மறைத்தது தெரிய வந்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்களை குறைத்து தவறான தகவல்களை தெரிவித்ததாகக் கூறி, வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

    அதன் அடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திருப்பத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து இருந்தது.

    இந்த வழக்கு, கடந்த ஜூன் 13-ந்தேதி நீதிபதி பி.வேல்முருகன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் பதிலளிக்க அவகாசம் வழங்கி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில்,

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போலியான பான் எண் கொடுத்து சொத்து விவரங்களை மறைத்தது தெரிய வந்துள்ளது. வேட்புமனுவில் அவர் தெரிவித்த சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் பொய் என விளக்கம் அளித்தது.

    இதையடுத்து தேர்தல் ஆணையம் கூறியதை ஏற்று கே.சி.வீரமணி மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    • ஓசூர் அருகே சூளகிரியில் 1,882 ஏக்கரில் ரூ.1,003 கோடி முதலீட்டில் புதிய தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
    • சூளகிரியில் புதிதாக அமையும் தொழில் பூங்கா மூலம் 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.

    ஓசூர் அருகே சூளகிரியில் 1,882 ஏக்கரில் ரூ.1,003 கோடி முதலீட்டில் புதிய தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. சூளகிரியில் புதிதாக அமையும் தொழில் பூங்கா மூலம் 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    • விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. பேசுவதாக தகவலை பரப்புகிறார்கள்.
    • சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள கையாளும் தந்திரங்களையும், வியூகங்களையும் வெளியில் அனைவருக்கும் தெரியும் வகையில் சொல்ல முடியாது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

    சமீபகாலமாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. பேசுவதாக தகவலை பரப்புகிறார்கள்.

    எங்களை பொறுத்தவரை சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் கையாளும் தந்திரங்களையும், வியூகங்களையும் வெளியில் அனைவருக்கும் தெரியும் வகையில் சொல்ல முடியாது என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணி குறித்து எழும் விமர்சனங்களுக்கு த.வெ.க. நிர்வாகிகள் யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

    • த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று த.வெ.க.வில் இணைக்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட உள்ளனர்.

    சென்னையில் நாளை மறுநாள் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் மதுரையில் நடைபெற உள்ள மாநாடு தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.

    இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வாக்காளர் பட்டியலுடன் கூடிய புதிய செயலியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளார். இதையடுத்து பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று த.வெ.க.வில் இணைக்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட உள்ளனர்.

    அதிக உறுப்பினர்களை த.வெ.க.வில் இணைக்கும் நிர்வாகியின் இல்லத்திற்கே சென்று விஜய் கௌரவிப்பார் என கூறப்படுகிறது.

    • பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டது தொடர்பாக வெங்கடாசலம் ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளித்தார்.
    • வெங்கடாசலத்தின் வீட்டில் கொள்ளைபோனதற்கான எந்த அடையாளங்களும் இல்லை.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் வேலஸ் கார்டன் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடாசலம். ஓய்வு பெற்ற ரெயில்வே தலைமை பொறியாளரான இவரது வீட்டில் ரூ.1 கோடி ரொக்கப்பணம் மற்றும் தங்க வளையல்கள் திருட்டு போயுள்ளது.

    பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டது தொடர்பாக வெங்கடாசலம் ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெங்கடாசலத்தின் வீட்டில் கொள்ளைபோனதற்கான எந்த அடையாளங்களும் இல்லை.

    வீட்டில் இருந்தவர்களே நகை-பணத்தை சுருட்டி இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டது யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொள்ளை போன இடத்தில் பதிவாகி உள்ள கைரேகைகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ரெயில்வே அதிகாரி வீட்டுக்கு சமீபத்தில் யார்-யார் வந்து சென்றார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அதிமுக இப்போது வலுவாகவும் துடிப்பாகவும் உள்ளது.
    • மற்ற கட்சிகளின் செயல்பாடுகளில் அதிமுக ஒருபோதும் தலையிடுவதில்லை.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் முழு விவரம் வருமாறு:-

    * 2024 பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் ஏன் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை?

    அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து தேர்தல் உத்திகள் வகுக்கப்படுகின்றன. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திமுகவை வீழ்த்த வேண்டும். எனவே, ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைப்பது அவசியமாகிவிட்டது. 2024 பாராளுமன்றத் தேர்தலின் போது இதுபோன்ற சூழ்நிலை ஏற்படவில்லை.

    * யார் வலுவான கூட்டாளி - பாஜகவா அல்லது தவெகவா?

    பாஜக ஒரு தேசியக் கட்சி. அது பல மாநிலங்களில் ஆளும் கட்சி. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த பலம் உள்ளது. கட்சிகளை நாம் ஒப்பிட முடியாது. மக்கள் விரோத திமுகவை எதிர்கொள்ள அனைத்து ஒத்த கருத்துடைய கட்சிகளும் கைகோர்க்க வேண்டும்.

    * 2026 தேர்தலுக்காக அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக கூட்டணி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சித்ததா?

    திமுக அரசை வீழ்த்த எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவோரை நாங்கள் வரவேற்கிறோம். அதில் என்ன தவறு?

    * பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான உங்கள் முடிவு, அண்ணாமலை அதன் மாநிலத் தலைவராகத் தொடராமல் இருப்பதற்கும், ஏதாவது தொடர்பு உள்ளதா?

    மற்ற கட்சிகளின் செயல்பாடுகளில் அதிமுக ஒருபோதும் தலையிடுவதில்லை.

    * முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவைப் போல அதிமுக தலைமைக்கு சுறுசுறுப்பு இல்லை என்ற விமர்சனத்தைப் பற்றி?

    அவர்கள் ஒப்பற்ற தலைவர்கள். அவர்களை யாருடனும் ஒப்பிடுவது முட்டாள்தனம். கட்சி அவர்களால் வளர்க்கப்பட்டது, அவர்களின் வழிகாட்டுதல் எப்போதும் இருக்கும். அதிமுக இப்போது வலுவாகவும் துடிப்பாகவும் உள்ளது. கட்சியினர் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்.

    * சட்டம் ஒழுங்கு குறித்து கருத்து தெரிவிக்க அதிமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கருணாநிதியின் மகன் என்ற ஒரே தகுதியுடன் முதலமைச்சராகி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த ஸ்டாலினை விட, மக்கள் நலனுக்காக பாடுபடும் அதிமுகவுக்கு அதிக உரிமை உண்டு. திறமையற்ற திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு மவுனமாக இருப்பதற்கு நாம் கூட்டாளிகளா?

    ஒரு ஜனநாயகத்தில், ஒவ்வொரு குடிமகனுக்கும் யாரையும் கேள்வி கேட்க உரிமை உண்டு. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் அந்த உரிமை இருப்பதாகத் தெரியவில்லை. இதுதான் ஜனநாயகம் பற்றிய ஸ்டாலினின் புரிதல்.

    • சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் ஆகியோர் மதுபான பழக்கத்திற்கு உட்படுவது அதிகமாகி வருகிறது.
    • குடிபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து மதுபாட்டிலால் ஆசிரியரை தாக்கியதில் ஆசிரியர் படுகாயமடைந்து உள்ளார்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் மதுக்கடைகளை படிப்படியாக மூடி தமிழக மக்கள் மதுவால் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற நிலையை காலம் தாழ்த்தாமல் ஏற்படுத்த வேண்டும். காரணம் சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் ஆகியோர் மதுபான பழக்கத்திற்கு உட்படுவது அதிகமாகி வருகிறது.

    தற்போது கூட விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து மதுபாட்டிலால் ஆசிரியரை தாக்கியதில் ஆசிரியர் படுகாயமடைந்து உள்ளார். இந்த அசம்பாவிதத்திற்கு அடிப்படைக் காரணம் மதுபானமே.

    சமூகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு தீமைகளுக்கு மதுபானங்கள் காரணமாக அமைகின்றன. எனவே ஏழைக்குடும்ப சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் உடல்நலனிலும், எதிர்கால சமுதாயத்தினரின் நல்வாழ்க்கையிலும் அக்கறை இருக்குமேயானால் தமிழக அரசு மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×