என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மனு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்
- தேர்தல் ஆணையம் பதிலளிக்க அவகாசம் வழங்கி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
- அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போலியான பான் எண் கொடுத்து சொத்து விவரங்களை மறைத்தது தெரிய வந்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்களை குறைத்து தவறான தகவல்களை தெரிவித்ததாகக் கூறி, வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திருப்பத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து இருந்தது.
இந்த வழக்கு, கடந்த ஜூன் 13-ந்தேதி நீதிபதி பி.வேல்முருகன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் பதிலளிக்க அவகாசம் வழங்கி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில்,
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போலியான பான் எண் கொடுத்து சொத்து விவரங்களை மறைத்தது தெரிய வந்துள்ளது. வேட்புமனுவில் அவர் தெரிவித்த சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் பொய் என விளக்கம் அளித்தது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் கூறியதை ஏற்று கே.சி.வீரமணி மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.






