என் மலர்
சென்னை
- எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது என்பது உணர்வுபூர்வமான விஷயம், இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தெரியாது.
- கலைஞர் இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்.
'கலைஞரின் கனவு இல்லம் திட்டம்' என்ற பெயரில், தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் 2022ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஏற்கனவே வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கியவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வீடு பெற தகுதியில்லை என்று அரசு ஒரு திருத்த அரசாணையை பிறப்பித்தது. இதன் காரணமாக, ஏற்கனவே வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட பல எழுத்தாளர்களின் வீடுகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த ரத்து உத்தரவை எதிர்த்து கவிஞர் திலகவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அரசின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், "தமிழுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது வாழ்நாள் இறுதி வரை கவுரவப்படுத்தினார். தற்போது அரசு பிறப்பித்துள்ள திருத்த அரசாணை, கருணாநிதியின் விருப்பத்துக்கு முரணானது" என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்க தொடர்பாக ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில்,
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இணையான ஒரு அரசாங்கத்தை நடத்துவது துரதிஷ்டவசமானது.
எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது என்பது உணர்வுபூர்வமான விஷயம், இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தெரியாது. கலைஞர் இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
- 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' தவிர 'ஸ்போக்கன் தமிழ்' மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும்.
- அங்கன்வாடி மையங்களுக்கு 'தாய்-குழந்தை பராமரிப்பு மையங்கள்' என பெயரிட வேண்டும்.
சென்னை:
தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் வெளியிட்டார்.
மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவினர் பல்கலைக் கழக துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்தனர்.
அதன்படி சுமார் 650 பக்கங்கள் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 2023-ம் ஆண்டு அக்டோபரில் தயாரானது. ஆனாலும் வெள்ளப் பாதிப்புகள், பாராளுமன்றத் தேர்தல் பணிகளால் வரைவு அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின் மாநில கல்விக் கொள்கை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் 2024 ஜூலை 1-ந்தேதி தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர்.
பள்ளி கல்வித்துறைக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் உடன் இருந்தனர்.
மாநில பள்ளி கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கல்விக்கொள்கை மற்றும் மொழி
மொழி: பள்ளிக்கல்வியில் தமிழ் முதல் மொழியாக இருக்க வேண்டும். தொடக்கநிலை முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் வழிக்கல்வியை வழங்குதல் அவசியம்.
இருமொழிக்கொள்கை: தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக்கொள்கையை பின்பற்ற வேண்டும்.
'ஸ்போக்கன் தமிழ்': 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' போலவே 'ஸ்போக்கன் தமிழ்' மீதும் கவனம் செலுத்த வேண்டும்.
தேர்வு மற்றும் மதிப்பெண்
பொதுத்தேர்வு: 3, 5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் இருக்கக் கூடாது.
நீட்: நீட் தேர்வு இருக்கக் கூடாது. நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
11 மற்றும் 12-ஆம் வகுப்பு: 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர வேண்டும். கல்லூரி சேர்க்கையின்போது 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன் 11-ஆம் வகுப்பு மதிப்பெண்களும் இடம்பெற வேண்டும்.
நிர்வாகம் மற்றும் கட்டணம்
மாநிலப் பட்டியல்: கல்வி, மாநிலப் பட்டியலில் வர வேண்டும்.
கட்டணக் குழு: சி.பி.எஸ்.இ மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான கட்டணங்களை சீரமைக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.
கண்காணிப்பு: தனியார் விளையாட்டுப் பள்ளிகள், முன் தொடக்கப் பள்ளிகள் போன்றவற்றை கண்காணிக்க விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்பட வேண்டும்.
மாணவர் சேர்க்கை
வயது வரம்பு: 5 வயது பூர்த்தியானவர்கள் 1-ஆம் வகுப்பில் சேரலாம்.
இடஒதுக்கீடு: இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் 1% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி
அங்கன்வாடி மையங்கள்: அங்கன்வாடி மையங்களுக்கு 'தாய்-குழந்தை பராமரிப்பு மையங்கள்' என பெயரிட வேண்டும்.
பல்கலைக்கழகங்கள்:
எம்.ஜி.ஆர்., அண்ணா, மற்றும் தமிழ் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வேண்டும்.
தமிழ் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும்.
தமிழ்ச்சங்கம் நடத்தும் கல்லூரிகளுக்கு தமிழ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
கிராமப்புறப் பள்ளிகள்: கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள், முறையான பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
சமூக பிரச்சனைகள்
போதைப்பொருள் ஒழிப்பு: ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அக்குழுவில் மனநல ஆலோசகர், சுகாதார அதிகாரி, போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் ஆகியோர் இடம்பெறுவர்.
- நேற்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,200-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்சிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், புதன்கிழமை சவரனுக்கு 80 ரூபாயும், நேற்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,200-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,470-க்கும், சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,760-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 127 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,200
06-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,040
05-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,960
04-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360
03-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-08-2025- ஒரு கிராம் ரூ.127
06-08-2025- ஒரு கிராம் ரூ.126
05-08-2025- ஒரு கிராம் ரூ.125
04-08-2025- ஒரு கிராம் ரூ.123
03-08-2025- ஒரு கிராம் ரூ.123
- ஆளுநர் இல.கணேசன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- அப்பல்லோ மருத்துவமனையில் இல.கணேசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் இல.கணேசன். இவர் தற்போது நாகாலாந்து மாநில கவர்னராக பதவி வகித்து வருகிறார். சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் அவருக்கு வீடு உள்ளது. தற்போது சென்னைக்கு வந்திருந்த அவர் தனது வீட்டில் தங்கி இருந்தார்.
இன்று அதிகாலையில் இல.கணேசன் வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இன்று காலை 6.45 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மயங்கிய நிலையிலேயே அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
- பா.ஜ.க. தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்க உள்ளார்.
- கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் அமைக்கப்படுகிறது.
சென்னை:
சட்டசபை தேர்தலை அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ஜ.க. சந்திக்க தயாராகி வருகிறது. இதையொட்டி கட்சிக்கு புதிய நிர்வாகிகள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, கட்சியின் சட்டசபை தேர்தல் ஆலோசனை கூட்டம் வரும் 10-ந்தேதி தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடக்க உள்ளது.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்க உள்ளார். மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் அமைக்கப்படுகிறது.
மாநிலத்தலைவரின் தேர்தல் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டங்கள், தேசிய தலைவர்களின் தமிழக வருகை மற்றும் சுற்றுப்பயண ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணி ஆற்றுவது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது.
- மின்கட்டண உயர்வு குறித்து பேசுவதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் வெட்கப்பட வேண்டும்.
- சொந்த மண்ணின் வளர்ச்சியை பார்த்து பொறாமை படுபவர்களுக்கு என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது?
சென்னை:
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டு மக்களும் அவர்களின் முழு நம்பிக்கைக்குரிய முதலமைச்சர் கடுமையாக உழைத்ததன் விளைவாக, தமிழ்நாடு விரைவாக வளம் பெற்று இன்று 11.19% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது !
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்து நமது மக்கள் அனைவரும் பெருமைப்படுகின்ற இந்த வேளையில், ஒரு தமிழனாக அதைக் கண்டு பெருமைப்படுவதற்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் வயிற்றெரிச்சலில் புலம்பிவருகிறார். பா.ஜ.கவைப் போலவே தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதை அதன் கூட்டாளியான அ.தி.மு.க.வும் வாடிக்கையாக வைத்துள்ளது.
தமிழ்நாட்டைப் பற்றிய எந்தவொரு நல்ல செய்திக்கும் அவர்களின் எதிர்வினை இப்படித்தான் அமைந்துள்ளது என்பது வேதனைக்குரியதாகவும், அவர்களின் உள்ளக்கிடக்கை என்ன என்பதைக் காட்டும் விதத்திலும் உள்ளது.
இந்த வளர்ச்சிக்கு தமிழ்நாட்டு மக்களின் அயராத உழைப்பும், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசின் அனைவருக்குமான வளர்ச்சிக் கொள்கையுமே காரணமாகும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது, நிலம் வாங்கி விற்றல் (ரியல் எஸ்டேட்), உணவு விடுதிகள் (ஹோட்டல்) ஆகியவற்றால் நிகழ்ந்தவை என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். அவரது இந்த அரைவேக்காடு வாதத்தின்படி பார்த்தால்கூட, இத்தொழில்கள் செழிக்க, தமிழ்நாட்டு மக்கள் இவற்றில் செலவிட வேண்டுமல்லவா? அவர்களுக்கு அந்த வருமானம் எங்கிருந்து வருகிறது என்று அவர் சிந்திக்க மாட்டாரா ! இந்தக் கேள்வி அவருக்குத் தோன்றாதது வியப்பளிக்கிறது. பொறாமையினால் அவரது எண்ணம் மழுங்கிப் போய் இருப்பதை அறிய முடிகிறது.
மாநிலப் பொருளாதாரத்தில் குன்றா வளர்ச்சி, பரவலாக்கப்பட்ட வளர்ச்சி, எல்லாரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் திராவிட மாடல் அரசினால் தான் இந்த வளர்ச்சி சாத்தியமாகிறது. முதலீடுகளை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதால் ஏற்பட்டதுதான் இந்த வளர்ச்சி.
மகளிர் நலனை அடிப்படையாகக் கொண்ட திராவிட மாடல் அரசின் கொள்கைகளினால் மக்கள் தொகையில் சரிபாதியினர் அதிகாரம் பெற்று, பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெறுவதால், தமிழ்நாட்டின் பொருளாதாரம் உறுதித்தன்மையுடன் வளர்கிறது.
மின்கட்டண உயர்வு குறித்து பேசுவதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் வெட்கப்பட வேண்டும். உதய் திட்டத்தில் கண்மூடித்தனமாக கையொப்பமிட்டு தமிழ்நாட்டை அடகு வைத்தவர் இது குறித்து வாய் திறக்கலாமா? குனியச் சொன்னால் தவழ்பவரின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் டெல்லியிடம் அடமானம் வைக்கப்பட்டதை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.
புரிந்துகொள்ளக் கூடியவர்களுக்கு இன்னும் விளக்கமாகப் பதில் சொல்லலாம். ஆனால் சொந்த மண்ணின் வளர்ச்சியை பார்த்து பொறாமை படுபவர்களுக்கு என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது?
இது மக்களுக்கான நம் விளக்கம் என்று கூறியுள்ளார்.
- மதுரையில் நடக்கும் 2-வது மாநில மாநாட்டின் மீது விஜய் கவனம் செலுத்தி வருகிறார்.
- மாற்றத்தை நோக்கியே என் பயணம் இருக்கிறது.
சென்னை:
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் முழுவீச்சில் தயாராகி வருகிறார். தற்போது, மதுரையில் நடக்கும் 2-வது மாநில மாநாட்டின் மீது அவர் கவனம் செலுத்தி வருகிறார். இந்தநிலையில் விஜய் ஒரு தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளரிடம் கலந்துரையாடியுள்ளார். அதன் விவரம் வெளியாகி உள்ளது.
அந்த கலந்துரையாடலில் விஜய் கூறியதாவது:-
எனக்கு எதிராக வரும் எந்த விமர்சனத்தை கண்டும் நான் கலங்குவதில்லை. மாற்றத்தை நோக்கியே என் பயணம் இருக்கிறது. அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டேன். த.வெ.க. முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் நாங்கள் எந்த சமரசமும் இல்லாமல் உறுதியாக இருக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தெரு நாய்களுக்கு மெகா ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்குகிறது.
சென்னை மாநகராட்சி முழுவதும் 50 நாட்களில் 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவக்குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவார்கள்.
நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்படும் நாய்களுக்கு அடையாள மை வைக்கப்படும்
முன்னதாக தெரு நாய்களை பிடித்து கருத்தடை மையத்திற்குக்கொண்டு சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- 16,73,333 குடும்ப அட்டைகளுக்கு நேரடியாக பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 12ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27.797 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு. கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.
70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம். நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.8.2025 அன்று இத்திட்டத்தை சென்னையில் தொடங்கிவைக்கும் வேளையில், மாவட்டங்களில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டில் ஆகஸ்ட் 31 வரை ஊபர் 50% அறிமுக தள்ளுபடியை வழங்குகிறது.
- ஆட்டோ, கார் முன்பதிவு செய்யும் ஊபர் செயலிலேயே மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ பயணச்சீட்டுகளை தற்போது Uber App மூலம் எளிதாகபெரும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், UBER மற்றும் ONDC நெட்வொர்க் உடன் இணைந்து, UBER செயலி மூலம் மெட்ரோ இரயில் பயணத்திற்கான பயணச்சீட்டு பெரும் வசதியை, சென்னை மெட்ரோஇரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸில் இன்று (07.08.2025) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. மு.அ.சித்திக், இ.ஆ.ப., அறிமுகப்படுத்தினார்.
இன்று முதல், சென்னையில் உள்ள UBER பயனாளர்கள், தங்களது மெட்ரோ பயணங்களை திட்டமிடவும், QR அடிப்படையிலான பயணச்சீட்டுகளை பெறவும், நேரடி மெட்ரோ பயண தகவல்களையும் UBER செயலியில் தெரிந்துக்கொள்ளலாம். இதன் அறிமுக சலுகையாக 2025-ல் ஆகஸ்ட் மாதம் முழுவதும் UBER செயலியை பயன்படுத்தி மெட்ரோ பயணச்சீட்டுகளை வாங்கும் பயணிகள் பயணச்சீட்டுகளில் 50% தள்ளுபடியை பெறலாம். இந்த சலுகை UBER செயலியில் மட்டுமே கிடைக்கும். இது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வழங்கும் பிற மெட்ரோ பயணச்சீட்டு சேவை தளங்களில் பொருந்தாது. UBER செயலியைபயன்படுத்தி மெட்ரோ பயணச்சீட்டு பெறுவதற்கு UPI முறையே பயன்படுத்தப்படும். இது டிஜிட்டல் பயன்பாட்டை மேம்படுத்துகிறது.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு. மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்), தலைமை ஆலோசகர் திரு. கோபிநாத் மல்லையா, (இயக்கம் மற்றும்பராமரிப்பு), ஆலோசகர் திரு.கே.ஏ.மனோகரன் (தானியங்கி கட்டண வசூல் அமைப்பு மற்றும் தொழில்நுட்பம்), UBER நிறுவனத்தின் உயர் இயக்குநர் திரு. மணிகண்டன் தங்கரத்தினம், ONDC நிறுவனத்தின் உயர் துணைத் தலைவர் திரு.நிதின் நாயர், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் UBER நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐஏஎஸ் தீரஜ் குமாருக்கு உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது
- ஐஏஎஸ் அமுதாவுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது
தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் நியமனம். செய்யப்பட்டுள்ளனர்
தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் ஆகியவற்றை செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் 4 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்யகுமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம், மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.






