என் மலர்
சென்னை
- சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ. வரை கட்டணம் உயர்வு இல்லை.
- பெரிய அளவிலான செலவுகளை சமாளிக்க இந்த ரெயில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாக ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தொலைதூரப் பயணிகளின் முதல் தேர்வாக ரெயில் சேவை உள்ளது. பயணம் செய்வதற்கு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. நடப்பாண்டில் முதல் முறையாக கடந்த ஜூலை மாதம் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், 4 மாத இடைவெளியில் டிசம்பர் 26-ந்தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக ரெயில்வே வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, நேற்று நாடு முழுவதும் புதிய ரெயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
இந்த புதிய அறிவிப்பின்படி, மின்சார ரெயில் மற்றும் சீசன் டிக்கெட்டுகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ. வரை கட்டணம் உயர்வு இல்லை.

பயணிகள் ரெயில்களில், சாதாரண 2-வது வகுப்பு, படுக்கை வசதி பெட்டிகள், முதல் வகுப்பு பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டது. அதாவது, 216 கிலோ மீட்டர் முதல் 750 கிலோ மீட்டர் வரையில் ரூ.5-ம், 751 கிலோ மீட்டர் முதல் 1,250 கிலோ மீட்டர் வரையில் ரூ.10-ம், 1,251 கிலோ மீட்டர் முதல் 1,750 கிலோ மீட்டர் வரை ரூ.15-ம், 1,751 கிலோ மீட்டர் முதல் 2,250 கிலோ மீட்டர் வரையில் ரூ.20-ம் உயர்ந்துள்ளது.
இதேபோல, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. மற்றும் ஏ.சி. அல்லாத முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிநவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத், சதாப்தி, ராஜ்தானி, அந்தியோதியா, அம்ரித் பாரத் உள்ளிட்ட அனைத்து ரெயில்களுக்கும் கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டண உயர்வு பொருந்தும் என ரெயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடிக்கு கூடுதலாக ரூ.10-ம், சென்னையில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு ரூ.15-ம் கூடுதலாகி இருக்கிறது. சென்னையில் இருந்து டெல்லிக்கு ரூ.45 அதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான செலவுகளை சமாளிக்க இந்த ரெயில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாக ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
ஒரே ஆண்டில் 2 முறை ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் 2026-ம் ஆண்டு ரெயில் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என ரெயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

- கழகத்தினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
- வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் எழும்பூர் மேற்கு பகுதி செயலாளர் பொறுப்பில் புரசை எம்.கிருஷ்ணன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்திற்கு களங்கமும் அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் லண்டன் வெங்கடேஷ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி முன்னாள் செயலாளர் விசு (எ) விசுவாசி துறைமுகம் கிழக்கு பகுதி இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஏ.ஏ.கலையரசு ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழகத்தினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
எழும்பூர் மேற்கு பகுதி கழக செயலாளர் ஏ.சம்பத் குமார், பகுதி மகளிர் அணி செயலாளர் எம்.இளவரசி, பகுதி மாணவர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வன், பொதுக் குழு உறுப்பினர் புரசை கிருஷ்ணன் ஆகியோர் இன்று முதல் அவரவர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் எழும்பூர் மேற்கு பகுதி செயலாளர் பொறுப்பில் புரசை எம்.கிருஷ்ணன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
29-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
30-ந்தேதி தென்கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
31 மற்றும் 01-ந்தேதிகளில் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையே இன்று முதல் 28-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை:
இன்று முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- திமுக ஆட்சிக்கு வந்த பின் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
- ஒருவர் கூட இந்த துறையில் பாதிக்கப்படக் கூடாது என தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
பொங்கலுக்கு முன்பு 1000 ஒப்பந்த செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என மக்கள் நல சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:-
ஒப்பந்த செவிலியர்களுக்கு தொடர்ச்சியாக பணிநிரந்தரம் முதலை்மச்சரின் வழிகாட்டுதலின்படி செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்த பின் 4,825 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மீதமுள்ள 8000க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றதை தொடர்ந்து, பொங்கலுக்கு முன்பு 1000 ஒப்பந்த செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.
ஒருவர் கூட இந்த துறையில் பாதிக்கப்படக் கூடாது என தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற சென்னது பாஜக அல்ல நீதிமன்றம்.
- விரைவில் டெல்லி சென்று பியூஷ் கோயலை சந்திக்க உள்ளேன்.
சென்னை:
சுனாமி நினைவு தினத்தையொட்டி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் பா.ஜ.க. சார்பில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பா.ஜ.க. துணைத்தலைவர் குஷ்பு, செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் கடலில் பால் ஊற்றி வழிபட்டார்கள்.
பின்னர் குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடுமா என விசிக தலைவர் திருமாவளவன் கேட்டுள்ளார்.
திருமாவளவன் மனநிலை இதுதான், இதுவே கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடினால் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடுமா என அவரால் கூற முடியுமா? இந்து மெஜாரிட்டி அதிகமாக உள்ளதால் தொடர்ந்து மண்டையில் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களது கூட்டணியில் இருப்பவர்கள் கோவிலுக்கு போவார்கள், பட்டை பூசுவார்கள், தீபம் ஏற்றுவார்கள், வீட்டில் பூஜை நடத்துவார்கள் இதையெல்லாம் நாலு சுவற்றுக்குள் நடக்கும் மக்களுக்கு தெரியாது என நினைப்பார்கள்.
வருகிற தேர்தலில் எந்த கோவிலுக்கும் போக வேண்டாம், எந்த சர்ச், மசூதி பள்ளிவாசலிலும் திருமாவளவன் நிற்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற சென்னது பாஜக அல்ல நீதிமன்றம். மகாத்மா காந்தி பெயர் மாற்றம் குறித்து ப.சிதம்பரம் விமர்சிக்கிறார்.
அவர்கள் ஆட்சி காலத்தில் ராஜீவ்காந்தி பெயரில் திட்டங்களை கொண்டு வந்தார்கள். ஆனால் நாங்கள் மோடி பெயரை எந்த திட்டத்துக்காவது சூட்டினோமா? ராகுல் காந்தி வாக்கு இயந்திரத்தில் தவறு உள்ளது என கூறினார் ஆனால் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அப்படி எதுவும் இல்லை என கூறினார். காங்கிரசில் உள்ள பல நபர்கள் வாக்கு இயந்திரத்தில் எந்த குளறுபடிகளும் இல்லை என கூறி வருகிறார்கள். சொல்வதற்கு வாய் உள்ளது என வாய்க்கு வந்தபடி எதையும் கூற கூடாது. யோசித்து பேச வேண்டும்.
விஜயும் சீமானும் ஆர்.எஸ்.எஸ் பிள்ளைகள் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறுகிறார்.
அப்போ திருமாவளவன் யாரின் பிள்ளை, தி.மு.க. வின் பிள்ளையா, காங்கிரஸ் பிள்ளையா? அ.தி.மு.க. கூட்டணியில் பாஜகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது என்ற வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. விரைவில் டெல்லி சென்று பியூஷ் கோயலை சந்திக்க உள்ளேன். விரைவில் பா.ஜ.க. மாநில தலைவர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவார்கள். பா.ஜ.க. கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக வந்த கணக்குகள் வதந்தி மட்டுமே என்றார்.
- சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
- போராட்டத்தில் ஈடுபட்டபோது ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வாளகத்தை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் வாகனத்தை ஏற மறுத்து இடைநிலை ஆசிரியைகள் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2009ம் ஆண்டுக்குப்பின் பணி வழங்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் தரப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டபோது ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- முன்பதிவு மூலம் மட்டுமே பார்வையாளர்கள் விக்டோரியா பொது அரங்கத்தினைப் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
- விக்டோரியா பொது அரங்கின் கலை அரங்கமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-ந்தேதி திறந்து வைத்தார்.
சென்னையின் அடையாளமாகத் திகழும் விக்டோரியா பொது அரங்கம் 1887-ம் ஆண்டு ராணி விக்டோரியாவின் வைர விழாவை நினைவு கூர்ந்து கட்டப்பட்டது. இந்த அரங்கம் சென்னையின் சமூக, பண்பாட்டு வரலாற்றின் முக்கிய சாட்சியாக விளங்குகிறது. முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த அரங்கம், தற்போது அருங்காட்சியகமும், கலை மேடையும் கொண்ட ஒரு பொது பண்பாட்டு தளமாக மாற்றப்பட்டுள்ளது.
விக்டோரியா பொது அரங்கத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியானது, அரங்கம் கட்டுவதற்கு உதவிய ஆதரவாளர்கள், கட்டிடக் கலைஞர், ஒப்பந்ததாரர், இங்கு உரையாற்றிய தலைவர்கள், நீதிக்கட்சியின் எழுச்சி, நாடகமும் சினிமாவும், விளையாட்டுகளின் வரலாறு ஆகியவற்றை விரிவாகப் பதிவு செய்கிறது. வெளிப்புறப் பகுதியில் டிராம் வண்டி, தொல்லியல் காட்சிப் பகுதி ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
* பொதுமக்கள் அனுமதி : விக்டோரியா பொது அரங்க அருங்காட்சியகக் கண்காட்சியை இன்று முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்.
* முன்பதிவு முறை: சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான [https://chennaicorporation.gov.in/gcc/] மூலம் VICTORIA PUBLIC HALL என்பதைத் தேர்வு செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.
* கட்டணம்: இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட எவ்விதக் கட்டணமும் இல்லை.
* முக்கிய நிபந்தனை: இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
* நேரம்: காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையிடலாம்.
* பார்வையாளர்கள் எண்ணிக்கை: ஒவ்வொரு ஒன்றரை மணி நேர இடைவெளிக்கும் அதிகபட்சமாக 60 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
* கலை அரங்கம்: விக்டோரியா பொது அரங்கின் கலை அரங்கமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
* நிகழ்ச்சிகளுக்கான அனுமதி: கலை மற்றும் பொதுவான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பதிவு செய்த பிறகு, நிகழ்ச்சியின் நோக்கத்தைப் பொறுத்து அனுமதி உறுதி செய்யப்படும்.
- 2026-ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 20-ந்தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும்.
- தமிழ்நாடு சட்டசபை கூட்டம் மரபுகளுடன் நடைபெறும்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
2026-ம் ஆண்டுக்கான முதல் சட்டசபைக் கூட்டத் தொடரை ஜனவரி மாதம் 20-ந்தேதி கூட்டுவதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருக்கிறார். அன்றைய தினம் (20-ந்தேதி) காலை 9.30 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவியின் உரையுடன் சட்டசபை தொடங்கும்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அன்றைய தினம் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது நிருபர்கள், 2025-ம் ஆண்டு கூட்டத்தொடரில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் கவர்னர் ஆர்.என்.ரவி, தனது உரையை புறக்கணித்தது தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில் தமிழக சட்டமன்றத்தின் மரபு எதுவும் மீறப்படாது. அதனை கவர்னர் ஆர்.என்.ரவி மதித்து நடப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.
தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி வந்ததில் இருந்து சட்டசபையில் கவர்னர் உரை சர்ச்சையில்தான் முடிந்து உள்ளது.
2023-ம் ஆண்டு நடைபெற்ற முதல் கூட்டத்தொடரில் கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையில் பல வரிகளை வாசிக்காமல் தன்னுடைய கருத்துக்களை சேர்த்து பேசினார்.
குறிப்பாக பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும், திராவிட மாடல் போன்ற வார்த்தைகளையும் உச்சரிக்காதது ஆளும் தரப்பை ஆவேசப்படுத்தி கவர்னருக்கு எதிரான தீர்மானம் ஒன்றை அவர் முன்னிலையிலேயே வாசிக்க வழி வகுத்தது. அப்போது தேசிய கீதம் இசைக்கும் முன்பே கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து அவசரமாக வெளியேறினார்.
அதே போல் கடந்த 2024-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் போதும், தமிழ்நாடு அரசு அளித்த உரையை வாசிப்பதை தவிர்த்த கவர்னர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் குறித்த சில கருத்துக்களை மட்டும் தெரிவித்து விட்டு உரையை நிறைவு செய்கிறேன் என்று கூறி இருக்கையில் அமர்ந்தார். இதனால் சட்டசபையில் சலசலப்பு உருவானது.
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, கவர்னர் உரையை தமிழில் வாசித்தார். மத்திய அரசை விமர்சித்தும் மாநில அரசை பாராட்டியும் இருந்த உரையை கவர்னர் வாசித்ததாக கருதி அவைக் குறிப்பில் ஏற்றப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அப்போது அறிவித்தார்.
இதே போல் 2025-ம் ஆண்டு தொடக்கத்திலும் ஜனவரி மாதம் சட்டசபை தொடங்கிய போது சட்டசபையில் தேசிய கீதத்திற்கு பதிலாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதால் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமலேயே சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே கவர்னர் மாளிகை சார்பில் எக்ஸ் வலைதள பக்கத்தில், இது தொடர்பாக ஒரு பதிவு வெளியிடப்பட்டது.
அந்த பதிவில் தமிழக சட்டப் பேரவையில் இன்று மீண்டும் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டமும், தேசிய கீதமும் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்திற்கு மதிப்பளிப்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படை கடமைகளில் ஒன்று.
ஆனால் கவர்னர் சட்டசபைக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. தேசிய கீதம் பாடுமாறு வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.
அரசியலமைப்பு சட்டத்தையும், தேசிய கீதத்தையும் அவமதிக்கும் நடவடிக்கைக்கு உடந்தையாக இருக்க கூடாது என்பதற்காக கவர்னர் மிகுந்த வேதனையுடன் அவையை விட்டு வெளியேறினார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கவர்னருக்கும்-அரசுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இந்த நிகழ்வுகள் தொடர்ச்சியான சர்ச்சைகளில் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் 20-ந் தேதி கூடும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக வாசிப்பாரா? அல்லது ஏதாவது கருத்து தெரிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த சட்டசபை கூட்டம் தேர்தலுக்கு முன்பு நடைபெற உள்ள கூட்டத்தொடர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் கிளப்ப தயாராக உள்ளன. இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்து தக்க பதில்கள் அளிக்கப்படும் என்பதால் சட்டசபை கூட்டத்தில் பரபரப்பு விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது.
- ஏராளமானோர் விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் வழங்கி உள்ளனர்.
- அ.தி.மு.க. நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் 4 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த 15-ந் தேதி முதல் 23-ந் தேதி 8 நாட்கள் தொடர்ச்சியாக விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டன. அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்தோடு தலைமை கழகத்துக்கு வந்து விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கினார்கள். 8 நாட்களில் 9 ஆயிரம் பேர் வரையில் விருப்ப மனுக்களை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் மேலும் 4 நாட்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தங்களுடைய விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் கடந்த 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி ஏராளமானோர் விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் வழங்கி உள்ளனர்.
இந்நிலையில், கழகத்தின் சார்பில் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 31-ந் தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் அப்படிவங்களை வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி விவாதித்தது.
- கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.
சென்னை:
பா.ம.க.வில் அந்த கட்சியின் நிறுவன தலைவரான டாக்டர் ராமதசுக்கும், அவரது மகனான அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நீடித்து வருகிறது.
இருவரும் தனித்தனியாக பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகிறார்கள். டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்தபடியும், அன்புமணி சென்னையில் இருந்தபடியும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இப்படி இரு பிரிவாக பா.ம.க. செயல்பட்டு வரும் நிலையில், தற்போது உள்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
டாக்டர் ராமதாசின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் ஜி.கே.மணி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
எனது மீது அன்புமணி கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனவும், ஜி.கே.மணி கூறி இருந்தார்.
இந்த நிலையில் ஜி.கே.மணியை பா.ம.க.வில் இருந்து நீக்குவதாக அன்பு மணி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30-ன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவால் கடந்த 18-ந் தேதி அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே.மணியிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது.
கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், கட்சியின் அமைப்பு விதி 30-ன்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை நீக்கலாம் என்று கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசுக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது. அதை ஏற்று ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (26-ந் தேதி) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் நூற்றாண்டு நாயகர்.
- நல்லகண்ணு ஐயா நல்ல உடல்நலத்துடன் நீண்டநாட்கள் நிறைவாழ்வு வாழ்ந்திட விழைகிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 100 வயதை நிறைவு செய்து 101-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தியாகத்தின் பெருவாழ்வு: தோழர் நல்லகண்ணு ஐயா 101-ஆவது பிறந்ததாள்
விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் நூற்றாண்டு நாயகர், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சியான, எண்ணற்ற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான தாங்கள் - நல்ல உடல்நலத்துடன் நீண்டநாட்கள் நிறைவாழ்வு வாழ்ந்திட விழைகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல கண்ணுவை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
- தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.
- வெள்ளி இன்று ஒரே நாளில் கிராமுக்கு 9 ரூபாய் உயர்வு.
சென்னை:
தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிடுமோ? என பதறி இருந்த நிலையை எல்லாம், கடந்துவிட்டோம். கடந்த 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி இமாலய உச்சத்தை தொட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.
அந்த வகையில் இன்றும் தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,890-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரம் 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 254 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளியும் வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,560
24-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400
23-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,160
22-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,560
21-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
25-12-2025- ஒரு கிராம் ரூ.245
24-12-2025- ஒரு கிராம் ரூ.244
23-12-2025- ஒரு கிராம் ரூ.234
22-12-2025- ஒரு கிராம் ரூ.231
21-12-2025- ஒரு கிராம் ரூ.226






