என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா? - முழு விவரம்
- சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ. வரை கட்டணம் உயர்வு இல்லை.
- பெரிய அளவிலான செலவுகளை சமாளிக்க இந்த ரெயில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாக ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தொலைதூரப் பயணிகளின் முதல் தேர்வாக ரெயில் சேவை உள்ளது. பயணம் செய்வதற்கு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. நடப்பாண்டில் முதல் முறையாக கடந்த ஜூலை மாதம் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், 4 மாத இடைவெளியில் டிசம்பர் 26-ந்தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக ரெயில்வே வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, நேற்று நாடு முழுவதும் புதிய ரெயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
இந்த புதிய அறிவிப்பின்படி, மின்சார ரெயில் மற்றும் சீசன் டிக்கெட்டுகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ. வரை கட்டணம் உயர்வு இல்லை.
பயணிகள் ரெயில்களில், சாதாரண 2-வது வகுப்பு, படுக்கை வசதி பெட்டிகள், முதல் வகுப்பு பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டது. அதாவது, 216 கிலோ மீட்டர் முதல் 750 கிலோ மீட்டர் வரையில் ரூ.5-ம், 751 கிலோ மீட்டர் முதல் 1,250 கிலோ மீட்டர் வரையில் ரூ.10-ம், 1,251 கிலோ மீட்டர் முதல் 1,750 கிலோ மீட்டர் வரை ரூ.15-ம், 1,751 கிலோ மீட்டர் முதல் 2,250 கிலோ மீட்டர் வரையில் ரூ.20-ம் உயர்ந்துள்ளது.
இதேபோல, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. மற்றும் ஏ.சி. அல்லாத முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிநவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத், சதாப்தி, ராஜ்தானி, அந்தியோதியா, அம்ரித் பாரத் உள்ளிட்ட அனைத்து ரெயில்களுக்கும் கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டண உயர்வு பொருந்தும் என ரெயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடிக்கு கூடுதலாக ரூ.10-ம், சென்னையில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு ரூ.15-ம் கூடுதலாகி இருக்கிறது. சென்னையில் இருந்து டெல்லிக்கு ரூ.45 அதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான செலவுகளை சமாளிக்க இந்த ரெயில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாக ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
ஒரே ஆண்டில் 2 முறை ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் 2026-ம் ஆண்டு ரெயில் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என ரெயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.






